You are here
நூல் அறிமுகம் 

வாசகனைச் சுயவிமர்சனத்திற்குத் தூண்டும் ஜாகிரின் சுயவிமர்சனம்

போப்பு

தன்னைத் தானே மறுபரிசீலனை செய்து பார்ப்பது, அதன் வாயிலாகத் தான் செய்த தவறுகளைத் திருத்திக் கொள்வது, ஒருவனுடைய ஆளுமை வளர்ச்சிக்கு முக்கியமான பங்காகும். இந்த அற்புதமான பண்பை தன் ஊழியர்களுக்குப் பயிற்றுவிக்கின்றன உலகளாவிய மார்க்சிய இயங்கங்கள். தான் இயக்கத்தில் கற்ற சுய விமர்சனப் பண்பினை இந்நூலின் வாயிலாகத் தான் பிறந்த சமூகத்திற்குப் பொருத்தி வைத்துப் பேசுகிறார் கீரனூர் ஜாகிர்ராஜா.
இந்த சுயவிமர்சனப் பண்பை கார்ப்பரேட்டுகளும் பின்பற்றுகின்றனர். தங்களது மூலதனப் பெருக்கத்திற்கு. கிருத்துவம் முன்வைக்கும் பாவமன்னிப்புக் கோருதலும் இத்தகையதே என்றாலும், இந்த ஒப்புக் கொடுத்தலானது தவறிழைத்தவன் தன் மன அழுத்தத்தை நீக்கி மீண்டும் தவறிழைப்பதற்கான விடுதலையுணர்வையே அளிக்கிறது. மார்க்சிய இயக்கங்கள் மட்டுமே முன்னோக்கிச் செல்வதற்குரிய ஆளுமையை வளர்த்தெடுக்கிறது.
காலப் புறச்சூழலால் ஒரு மார்க்சிய ஊழியர் இயக்கத்தை விட்டுச் சென்ற பின்னும் தான் அங்கிருந்து கற்ற அல்லது தன்னில் படிந்த நற்பண்புகளைக் கைவிடுவதில்லை. அந்த வகையில் சுயவிமர்சனம் என்ற பண்பு மார்க்சிய இயக்கத்தால் இந்த உலகிற்கு அளிக்கப்பட்ட மற்றுமொரு கொடையென்றே கூறலாம்.
சரி, ஜாகிரின் நூலுக்கு வருவோம். சுயவிமர்சனம் என்பதை அகத்துடன் தொடர்புபடுத்தியே பார்த்துள்ள நமக்கு இத்தலைப்பு கீரனூர் ஜாகிர்ராஜா, தன் கடந்த காலங்களைப் பற்றி அல்லது தன் படைப்புகளைப் பற்றிப் பேசியிருப்பாரோ என்று நினைக்கத் தோன்றியது. ஆனால் இது அவரைச் சார்ந்துள்ள மதத்தைப் பற்றிப் பேசுகிறது.
ஜாகிர் மார்க்சிய நெறிகளைப் பின்பற்றுகிறவர் என்றாலும் தன்னில் படிந்துள்ள அடையாளமான இஸ்லாம் மதத்தைப்பற்றி மிக நுட்பமாக அதே சமயத்தில் மிக அழுத்தமாகக் கூறுகிறார். ÔÔஇஸ்லாம் மட்டும்  தன் கட்டுகளைத் தளர்த்தியிருக்குமேயானால் அது இந்தியச் சூழலில் கிருத்துவத்தைக் காட்டிலும் வேகமாகப் பரவியிருக்கும்’’ என்கிறார். ÔÔசாதியப் படிநிலைகளும், தீண்டாமையும் மிக்க அதிகாரம் கொண்ட இந்துமதத்தின் பிடியில் சிக்குண்ட பெரும்பகுதி அடித்தட்டு மக்களுக்கு இஸ்லாத்தின் நல்லம்சங்கள் மிகப்பெரும் ஆத்மீக விடுதலையை அளிக்கக் கூடியவை’’ என்கிறார்.
மதத்தின்  நிழலில்  இளைப்பாற  விரும்புகிறவர்களுக்கு மட்டுமே இப்படிப் பரிந்துரைக்கிறாரே அன்றி, அவருக்கொன்றும் அம்மதத்தின் மீது ஈடுபாடோ பிரம்மையோ  இல்லை. இன்னொரு இடத்தில் மிகத் தெளிவாகச் சொல்கிறார் ÔÔஆன்மீகத்திற்கும் மதத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை’’ என்று.
இன்னும் சொல்லப்போனால் கிருத்துவத்தை ஏசுவோ, இஸ்லாத்தை நபியோ ஒரு மதமாக உருவாக்கவில்லை. தன் காலத்தின் சமூகம் மனிதப்பண்புகளைப் பின்பற்றவில்லை. பெரும்பகுதி மக்கள் படும் அல்லலில் இருந்து மக்களை மீட்க வேண்டும் என்று எழுப்பிய குரலுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. ஏசுவிற்கும், நபிக்கும் சீடர்கள் உருவாயினர். பிற்காலச் சீடர்கள் அதிகாரத்துடன் செய்து கொண்ட சமரச நிறுவனமே மதம் என்பது தெளிவு.
நாம் மீண்டும் ஜாகிரிடம் வருவோம்.
இஸ்லாத்தில் உள்ள நல்லம்சங்கள் என்று அவர் கூறுவது, ஏற்றத்தாழ்வற்ற சமநிலை சமூகத்தை முன்வைத்தல், பெண் தான் விரும்பியவனை மட்டுமே மணக்கும் உரிமை, கணவனை விட்டு விலகுவதற்கான உரிமை, பல கணவன்களை மணப்பதற்குரிய உரிமை, வட்டிக்குக் கொடுத்து வாங்குவதை அனுமதிக்காத விதிகள், சூதாட்டம், மதுப்போதை ஆகியவற்றிற்கு மத விலக்கம் போன்றவற்றை அங்கங்கே குறிப்பிட்டுச் செல்கிறார் கீரனூரார்.
அப்படியானால் முஸ்லிம் பெண்கள் ஏன் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார்கள் என்றால் அது பிற்கால அல்லது அவ்வக்கால உலம்மாக்களும், மௌலவிகளும், நிறுவனத்தின் மீது அதிகாரம் செலுத்தும் பணக்கார வஹாபிகளும் செய்த சதி, குரானில் அதற்கு இடமில்லை என்கிறார்.
இஸ்லாமை ஆய்வு செய்து எழுதப்பட்ட நூல் அல்ல சுயவிமர்சனம். வெவ்வேறு காலகட்டங்களில் தான் எழுதிய பதினைந்து கட்டுரைகளைத் தொகுத்து அளிக்கிறார். ஆனால் அவையனைத்தும் இஸ்லாம் குறித்துப் பேசுபவை.
இஸ்லாமிய சமூகத்தின் வாழ்வைப் பதிவு செய்யும் புனைவுகள் பற்றிய முன்னுரையும், மதிப்புரையும், ஹெச்.ஜி.ரசூலின் மைலாஞ்சி கவிதை பற்றிய மதிப்புரையும், தமிழக முஸ்லிம்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பது பற்றியும், தமிழிலக்கியத்தில் முஸ்லிம்களின் பங்கு என அனைத்தும் இஸ்லாம் தொடர்பானவைகளாகவே இருக்கின்றன. இதன் ஊடாகத் தன்னைப் பிறப்பின் வாயிலாக அடையாளப்படுத்தும் இஸ்லாம் குறித்த தனது பார்வையையும் அதன் நல்லம்சங்களையும் அதன் இறுக்கமான மூடுண்ட தன்மைகளையும் துல்லியமாகவும் நேர்த்தியாகவும் நிறுவுகிறார்.
இயங்கியல் வரலாற்றுப் பின்புலத்துடன் படைப்புகளையும், ஒரு சமூகத்தையும் அணுகத் தெரிந்திருக்கிறது என்பதோடு, கீரனூர் ஒரு படைப்பாளியாகவும் இருப்பதால் ஈர்ப்பான சொல்முறையையும் அபுனைவில் கையாண்டிருக்கிறார்.
இரண்டாயிரமாம் ஆண்டுகளின் பிற்பகுதியில்  தமிழ்ப் புதினஉலகிற்கு மிகப்பெரிய திறப்பு கிடைத்திருக்கிறது  என்பது  ஒருபுறம் இருக்க, ஜாகிரின் ‘மீன்காரத் தெரு’ நவீன இஸ்லாமியப் படைப்புலகில் மிகப் பெரிய பாதையைச் சமைத்துக் கொடுத்திருக்கிறது.
இறுக்கமான இஸ்லாமியச் சமூகம் அவரைப் படைப்பிற்கு இளக்கிக் கொடுத்திருக்கிறதென்றால் அதில் இன்னொரு முக்கியமான அம்சத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். Ôமீன்காரத் தெரு’ புதினம் வெளியானபோது எழுந்த ஆதரவு, எதிர்ப்புக்குரலுக்கு அப்பால், கீரனூரின் மெய்யான வாழ்க்கை நிலைதான் அதில் பதியப்பெற்றிருக்கிறதா என்று ஆய்வு செய்யச் சென்றுள்ளனர் முஸ்லீம்முரசு பத்திரிகைக் குழுவினர். அவர்கள் அளித்த ஒப்புதல் வாக்குமூலமும் சுயவிமர்சனத் தன்மை கொண்ட படைப்புகள் வெளியாவதற்கு ஒரு உந்து சக்தியாகத் திகழ்ந்துள்ளதாக நான் கருதுகிறேன்.
இத்தொகுப்பில்  இடம்பெற்றுள்ள  நூற்றாண்டுகளின் பயணங்களில்  தமிழ்  இஸ்லாமிய  இலக்கியம், அந்தக் காலத்தில் முஸ்லீம் பெண்கள் எழுதுவதில்லை,  தமிழ் முஸ்லிம்கள் எங்கிருந்து வந்தார்கள்,  இந்துத்துவ வாதிகளின் காட்டுமிராண்டித் தனமும் இஸ்லாமியர்களின் கலை இலக்கிய அறியாமையும் ஒன்றுதான் என்ற நேர்காணலும் காலத்திற்கு மிக அவசியமான ஒன்றாக இருக்கின்றன.
முஸ்லிம்களை  இந்தியச் சமூகத்தின் ஒரு அம்சமாகக் கருதுவதில்லை நம்மில் பலர். அதனால் தான் மத சகிப்புத் தன்மை, மத நல்லிணக்கம் என்ற சலுகைக் குரலை நாம் திரும்பத் திரும்ப ஒலித்துக் கொண்டே இருக்கிறோம். முஸ்லிம்களை மதச் சிறுபான்மையினர் என்பதையே மறுதலிக்கிறார் ஜாகிர். மதச் சிறுபான்மை என்று கூறினால் மதப் பெரும்பான்மை என்ற ஒன்றையும், அதன் ஆதிக்கத்தையும் ஒப்புக் கொள்வதாகவே அர்த்தம் ஆகும். அப்படியானால் மறைமுகமாக அதற்குள் அடங்கியே அப்பெரும்பான்மை அளிக்கும் சலுகைக்குள்ளாகவே வாழ்ந்து கொள்ள வேண்டும் என்பதாகத்தான் இருக்கும்.
இன்னொன்றையும் போகிற போக்கில் சொல்கிறார் ஜாகிர். 1947 பிரிவினையானது மதரீதியானது அல்ல. நிலவியல் ரீதியானது மட்டுமே. மதரீதியானது என்றால் இந்தியாவில் முஸ்லிம்கள் ஒருவரும் இருந்திருக்க மாட்டார்கள். இந்திய சமூகத்தை நம்பி பாகிஸ்தானுக்குப் போகாமல் இருந்தவர்களின் சந்ததியை இந்திய சமூகத்தின் ஒரு பகுதியாக ஏற்று அவர்களுக்கு அச்சவுணர்வற்ற வாழ்க்கையையும், அனைத்து உரிமைகளையும் (சலுகைகளை அல்ல) அரசியல்  ரீதியாக வழங்க வேண்டியது  இந்தியனுக்குள்ள கடமை. முஸ்லிம் அமைப்புகள் முன்வைக்கும் கோரிக்கைகள் (பல) நாமனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டியவை.
தமிழ் முஸ்லிம்கள்  தமிழ்ச்சமூகத்துடன் இரண்டறக் கலந்தவர்கள். விசேசங்களில்  பலகாரங்கள் பகிர்ந்து கொள்வதாலோ, பணக் கொடுக்கல் வாங்கல் வைத்துக் கொள்வதாலோ, மாமன், மச்சான் உறவு முறை கொண்டாடுவதாலோ மட்டுமல்ல. காலங்காலமாகவே பிடிப்பும்  பிணைப்பும் உண்டு என்பதற்கான இலக்கியச் சான்றுகளை முன்வைக்கிறார். முல்லைப் பாட்டில் (ஆறாம், ஏழாம் நூற்றாண்டு) இருந்தும், பல்சந்த மாலை, (13 ஆம் நூ.ஆ) ஆயிரம் மசலா (16 ஆம் நூ.ஆ)  சீறாப்புராணம்  (18 ஆம் நூ.ஆ) என்று சொல்லிக் கொண்டே போய்,  தமிழின் முதல் நாவலே 1858 ஆம் ஆண்டு மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களால் எழுதப்பட்ட  தாமிரப்பட்டணம் தான் என்கிறார். (ஆய்வாளர் காலஞ்சென்ற நா.கோவிந்தசாமியும் மகதூம் சாய்பு சிங்கையில் இருந்து 1890களில் எழுதிய கதை தான் முதல் தமிழ்ச் சிறுகதை என்று நிறுவியுள்ளார்)
குணங்குடி மஸ்தான் சாகிப்பிற்கும், சதாவதானி செய்குத் தம்பிப் பாவலருக்கும் இங்கு ஏன் உரிய இடம் அளிக்கப்படவில்லை என்று கேள்வி எழுப்புகிறார். சித்தி சுனைதா பேகம் பெயரை மட்டும் நான் கேள்விப்பட்டதுண்டு. ஆனால் 1938 இல் உ.வே.சா.வின்  முன்னுரையோடு வெளியிடப்பட்ட ‘காதலா கடமையா’ என்ற புதினத்தை அவர் எழுதியுள்ளார் (நாடோடி மன்னனின் மூலக்கதை) போன்ற அரிய தகவலை ஜாகிர்ராஜா தான் நமக்கு அறிவிக்க வேண்டியிருக்கிறது என்கிறபோதும், பலவற்றையும் தேடிப்படிக்கிற நாம் தமிழ் இஸ்லாமிய இலக்கியங்களுக்கு ஏன் போதிய முக்கியத்துவம் அளிக்காமல்  போனோம் என்பதை நினைக்கும் போதும் இஸ்லாமியர்கள் பால் நாம் காட்டும் பரிவு வெற்றுப் பாசாங்கோ, நமக்குள்ளே எங்கோ சுய மதாபிமானம் ஒட்டிக் கொண்டிருக்கிறதோ என்ற அவமானமும் ஏற்படுகிறது.
குறைந்தபட்சமாக கீரனூர் ஜாகிர்ராஜாவின் சுயவிமர்சனத்தையாவது படித்துவிட வேண்டியிருக்கிறது.

Related posts