You are here
நூல் அறிமுகம் 

மதுரையை வரையும் சித்திரக்காரன்

கீரனூர்ஜாகிர்ராஜா

ஓவியர் ரஃபீக்கின் ‘‘சித்திரக்காரனின் குறிப்பிலிருந்து’’ எனும் இப்பிரதியை வாசிக்கக் கிடைத்த அனுபவம் சுவாரஸ்யமானது. இந்நூல் ரஃபீக் பிறந்து வளர்ந்த மதுரை மீனாட்சியம்மன் கோவில் பகுதி உருது முஸ்லிம்களின் வாழ்வியல் குறித்தும், இஸ்லாமியத் தொன்மங்கள் குறித்தும், நுண்கலை ஆர்வம் மிக்க இளைஞனொருவனின் மன இயல்புடன் பேச விழைகிறது. சுமார் 216 பக்கங்களில் விரியும் இப்பிரதியை நாவல் வகைமைக்குள் வைத்துப் பார்ப்பதில் நாவலாசிரியர்கள் பலருக்கும் தயக்கங்கள் இருக்கக்கூடும்.
இந்நூலை autofiction எனப்படும் சுயபுனைவு வகைமையில் சேர்க்கலாம். சமீபத்தில் வெளிவந்த சாரு நிவேதிதாவின் ‘எக்ஸைல்’ சுகுமாரனின் ‘வெல்லிங்டன்’ ரமேஷ் பிரதனின் ‘அவன் பெயர் சொல்’ போன்ற பிரதிகளை இதற்கு உதாரணமாகக் கூறமுடியும். ‘சித்திரக்காரனின் குறிப்பிலிருந்து’ என்னும் தலைப்பே கூட அத்தன்மையுடையதாகவே இருக்கிறது. பல பக்கங்களிலும் இடம் பெற்றுள்ள ரபீக்கின் ஓவியங்கள் இப்பிரதிக்கு கூடுதல் ஈர்ப்பை அளிப்பதாக உள்ளன.
தமிழில் இஸ்லாமிய இலக்கியங்கள் பெரும்பாலும் தமிழ் முஸ்லிம்களின் ஆக்கங்களே எனக்கருத வாய்ப்புண்டு. இவற்றுடன் ஒப்பிடும்போது உருது முஸ்லிம்களின் தமிழிலக்கியப் பங்களிப்பு சொற்பமே. உருது மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட கவிக்கோ அப்துல் ரகுமான் தமிழிலக்கியத்திற்கு செலுத்தியுள்ள பங்களிப்பு முக்கியமானது. ஆனால் நான் இவ்விடத்தில் கூறவிழைவது இன வரைவியலையே. இன்னும் குறிப்பாக உருதுமுஸ்லிம் வாழ்வியல் பதிவுகள் எதுவுமில்லாமல்தான் காலம் உருண்டோடிக் கொண்டிருந்தது. 2009ஆம் ஆண்டு எஸ்.அர்ஷியா தனது ‘ஏழரைப்பங்காளி வகையறா’ என்னும் நாவலின் மூலமாக  இந்த  மௌனத்தைக் கலைத்தார். அந்நாவலும் கூட மதுரை இஸ்மாயில்புரம் பகுதியில் வாழ்கின்ற உருது முஸ்லிம் தாயாதிகளின்-தலைமுறைக் கதையைப் பேசியது.  இப்போது  ஐந்தாண்டுக் கால  இடைவெளியில் ரஃபீக்கின் Ôசித்திரக்காரனின் குறிப்பிலிருந்து’ வெளிவந்துள்ளது. அர்ஷியா, ரபீக் போன்றோரைத் தொடர்ந்து இனவரைவியல் தரும் உருது முஸ்லிம் எழுத்தாளர் குழுமம் ஒன்று இங்கு உருவாக வேண்டுமென நான் விரும்புகிறேன்.
ரபீக்கின் கதை கூறும் மொழி  கவித்துவமான சில தருணங்களை உள்ளடக்கியது. இயல்பிலேயே ஓவியரென்பதால்  விவரணைகளில் சித்தரிப்புகளில் கலாநுட்பம் கைகூடி வந்துள்ளது. வீரநல்லூர் கிராமத்தின் சாய்பு தெருவிலுள்ள ஒவ்வொரு வீடும், தம் கதையைக் கூறத் தயாராக இருக்கிறது. இவற்றுள் ஷான்தார் குடும்பத்தின் பேரன் சித்திரக்காரன் இம்ரான், தனது பாட்டன்மார்களின் நாட்குறிப்புகளைப் போல தனது கதையையும், தனது வம்சாவளிக் கதைகளையும் கூறத் தொடங்குகிறான். 1957ல் தொடங்கும் கதை பிறகு ஒரு நூற்றாண்டு பின்னகர்ந்து 1880க்குள் பிரவேசிக்கிறது. வேலைக்காரன் ஊர்செய்தி நூர்தாயா பேசுகிறான். இம்ரானின் பாட்டி  தாதி மைமூனா பேசுகிறாள். இவ்வாறு இரண்டு நூற்றாண்டுகளின் குறுக்கு வெட்டுச் சித்திரத்தை ரபீக் வாசகர்களுக்கு விளம்புகிறார். காலத்தையும், சம்பவங்களையும் முன்னும் பின்னுமாக நகர்த்திச் சொல்லும் கதை உத்தி, வாசக அயர்ச்சியை வெகுவாகத் தணிக்க உதவியிருக்கிறது. நிறையத் தகவல்களால் நிரம்பி வழிகின்ற பிரதியாகவும் இருக்கிறது. இதனால் சில பக்கங்களில் ஆவணத் தன்மை தெரிகிறது.
தாதா, தாதி, படுதாதா, மேக்கடா, புப்பு, ஜல்சா, சுல்வா, மங்சீனி, தாலாப்பு, தளடால், சிக்கந்தர் மண்டா, முண்டன், புட்டா, புட்டி, பொப்பாசி, காந்தன், ஆஸ்ரா, சுன்னார், ஹல்தி, அரீதா, ஷயாரி, ஆரஸ், மிஸ்ரி, ரோட்டு, சத்தர், கொந்தரி என தலைசுற்ற வைக்குமளவு  உருதுமொழிப்  பிரயோகங்கள் இப்பிரதியெங்கிலும்  சிதறிக் கிடக்கின்றன. ஏற்கெனவே அர்ஷியா தனது நாவலில் சில உருது வார்த்தைகளை அறிமுகப்படுத்தியிருந்தார். இவற்றை நாம் தொடர்ந்து புழங்குவதில்லை. ஆனால் இவ்வகைச் சொற்களைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியது முக்கியமானது. எதிர்காலத்தில் தமிழ்நாட்டிலுள்ள உருதுபேசும் முஸ்லிம்களுக்கான சொல்லகராதி ஒன்று தயாரிக்கப்படுமானால் அந்த ஆவணத்திற்கு இவை உதவக்கூடும்.
கதைக் களம் என்கிற அளவில் மதுரை நகரைக் குறித்த வித்தியாசமான வரைபடமொன்று  இப்பிரதியின் மூலமாக வாசகனுக்கு கிடைக்கிறது.  என் சிறு வயதில் எத்தனை தடவை மீனாட்சி கோவிலுக்குள் ஓடியோடி அதன் கம்பீரமான கோபுரங்களை ரசித்தேன். கோயில் மேல்விதானத்தில் விழுகின்ற வெளிச்சம் பல அர்த்தங்களைத் தரும். இவற்றைப் பல வருடங்களாக ஓவியங்களாக உருவாக்கியிருந்தேன்…. என்று ரபீக் முன்னுரையில் எழுதுவதிலிருந்து மதுரை மீனாட்சியம்மன் கோவில் மீதான அவருடைய அளப்பரிய காதல் வெளிப்படுகிறது. ‘மதுரையைச் சுற்றிய கழுதை, வேறு எங்கும் நிலை கொள்ளாது’ என்கிற பழமொழியையும் அவர் தனக்குதாரணமாகக் கூறிக்கொள்கிறார்.
மதுரையில் அந்தக் காலத்தில் நாடகங்களுக்கு இசையமைத்து வந்த பக்ருதீன்ஷா, நாடகக் கம்பெனிகளைக் குறித்து விலாவாரியாகப் பேசுகின்ற பாலுஆசாரி, நாடக நடிகை ராஜகுமாரியின் ஊமைப் பெண் மீனாகுமாரி, துவரிமானில் நடக்கின்ற கிடாச் சண்டை, மீ¦சையை முறுக்கிக் கொண்டு வேட்டியைத் தொடையில் ஏற்றிக்கட்டி பெருத்த கடாவுடன் களமிறங்கும் தேவம்மார்கள், மாசி வீதியிலிருந்த 30அடி உயரமுள்ள அவுலியா பள்ளிவாசல் மண்டபம், அவ்வீதியின் வழிவரும் அழகர் தேர், மேலமாசி வீதித் தெருக்கள், நகரின் வட பகுதியிலுள்ள கோரிப்பாளையம், அலாவுதீன், சம்சுதீன் சமாதிகள், ஜரிகைக்காரத் தெரு, தமுக்கம் மைதானம், அங்குள்ள சொரீஸ் பங்களாவில் கேளிக்கைகளை நடத்துகின்ற ஆங்கிலேயர்கள், பெருமாள் மேஸ்திரியும் அவர் பெயரிலமைந்த தெருக்களும், 20ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் வியாபார நிமித்தம் மதுரையில் வந்து குடியேறும் பஞ்சாபி லாலாக்கள், பெங்காலி பாபுக்கள், பாம்பே சேட்டுகள், பர்மாவிலிருந்து திரும்பிய நாட்டுக் கோட்டைச் செட்டியார்கள், முஸ்லிம் வீட்டு வாசல்களில் திரைச் சீலைகளாகத் தொங்கும் சாக்குக் கித்தான்கள், கிராதி ஓட்டைகளின் வழியே நோட்டமிடும் யுவதியரின் கண்கள், கான்சாபாளையம்,கான்சாகிப் மேட்டுத்தெரு, கான்சாகிப்புரம், பாதி சாய்புகளின் வீடுகளாகவும் பாதி கோனார் வீடுகளாகவும் இருக்கும் தெருக்கள், எருமைச் சங்கிலிகளின் இடைவிடாத சத்தம், சாணிவாடை, மொகரம் மாதத் தொடக்கத்தில் பித்தளைப் பாத்திரங்களுக்கு ஈயம் பூச வரும் குட்டையன் கருக்கன், சுங்கம் பள்ளியில் நடைபெறும் ஜல்ஷா மாநாடு, அதே மொகரத்தில் நிகழ்கின்ற பூ மிதித்தல், புலியாட்டம், கோரிப்பாளையம் சந்தனக் கூடு, நாகூர் ஆண்டவர் பள்ளி நிதிக்கான குஸ்தி சண்டைகள், மேம்பாலம், ஹார்வி மில்லின் சைரன் சத்தம், கூன் பாண்டியனின் பயமுறுத்தல்கள், ட்ரம் அடித்தவாறு நோட்டீஸ் விநியோகிக்கிற சினிமா வண்டி, பழமையான திரைஅரங்குகள், பொற்றாமரைக்குளம், அதைச் சுற்றிலும் வரையப்பட்டிருந்த மூலிகை ஓவியங்கள், ஆயிரங்கால் மண்டபம், ராணி மங்கம்மாள் அரண்மனை, ஹாஜி மூசா ஜவுளிக்கடை, காலேஜ் ஹவுஸ் காப்பி, போடி ஜமீன் பங்களாவிலுள்ள உடுப்பி ஹோட்டல், முதன்முதலாக புரோட்டாவை அறிமுகப்படுத்திய கோயா உணவகம், இந்திப் பாடல்கள் ஒலித்த டீக்கடைகள், குதிரை வண்டிகள், திருமலை நாயக்கர் மஹால், அங்கயற்கண்ணி அம்மை கோயில்..என மூச்சு முட்டுமளவிற்கு ரபீக் இந்த 200 பக்கங்கள் கொண்ட பிரதிக்குள் மதுரையின் உன்னதங்களைத் தன் ஞாபகத் தூரிகையால் சித்தரித்தவாறு செல்கிறார்.
மதுரையைப் போன்றதொரு புராதன நகரத்தின் மீது காலம் எத்தனை நவீன வண்ணங்களைத் தெளித்தாலும், பதிலுக்கு அதுவொரு சம்பிரதாயப் புன்னகையைச் செலுத்திவிட்டு, தன் பழமையின் வீச்சத்துடனும், தணியாத மர்மங்களுடனும் உறைந்தவாறே இருக்கும் வல்லமை கொண்டது. ரஃபீக் போன்ற கலைஞர்கள் அந்த மர்மங்களைத் தம் தூரிகைகளால் அகழ்ந்தெடுக்கின்றனர்.
‘‘உருது பேசும் முஸ்லிம்கள் தமிழ்பேசும் முஸ்லிம்களைக் காட்டிலும் உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் இஸ்லாமியர்களுக்குள்ளேயே உண்டு. அவ்வளவு ஏன்? அண்மைக் காலம் வரை உருது பேசும் முஸ்லிம்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலும், தமிழ் பேசும் முஸ்லிம்களை மிகவும் பிற்படுத்தோர் பட்டியலிலும் தமிழக அரசு வைத்திருந்தது என்பதையும் நாம் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும்”   எனக் கவிஞர் இந்திரன், இந்நூலின் முன்னுரையில் கூறுகிறார். நானறிந்தவரை, தமிழ்பேசும் முஸ்லிம்களில் இரு பிரிவினர்களாகிய ராவுத்தர் மற்றும் லெப்பையில் ராவுத்தரைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலும், லெப்பையை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலும் அரசு பாவித்தது. இவர்களுள் லெப்பை மாணவர்களுக்கு மட்டுமே கல்வி உதவித் தொகை கிடைத்து வந்தது. ராவுத்தர் பிரிவு மாணவர்கள் புறக்கணிக்கப்பட்டதை அனுபவப்பூர்வமாக நான் உணர்ந்திருக்கிறேன். பிறகானால்  இந்த  சலுகைகளுக்காக ராவுத்தர்களே லெப்பை என சான்றிதழில் தம்மைக் குறிப்பிட்டுக் கொண்டதையுமறிவேன். ‘‘உருது பேசும் முஸ்லிம்கள் மொழிவாரியாகவும், இனவாரியாகவும் தக்காணம் மற்றும் வட இந்திய முஸ்லிம்களின் சந்ததியினர். அவர்கள் ஒரு இந்தோ, ஐரோப்பிய மொழியைப் பேசுபவர¢கள். தமிழ்முஸ்லிம்களும், மலையாள முஸ்லிம்களும் பொதுவாக திராவிட மொழிகளைப் பேசும் மண்ணின் மைந்தர்கள்…’’ என்பார் ஆய்வாளர் ஜே.பி.பி.மோரே.
இப்பிரதியில் இயல்பாகக் கைகூடி வந்துள்ள நல்லிணக்க அம்சம் மிக முக்கியமானது. கிடாச் சண்டைக் கோதாக்களில் தொடை தட்டிக்கொண்டு இறங்கினாலும், இரு சமயத்தினரிடையே தென்படும் ஆத்மார்த்தமான பிணைப்பு, அப்பு என்றும் மகனே என்றும், மாமன் மச்சான் எனவும் உறவுமுறை பேணி வாழும் போக்கு ரபீக்கிடம் வெகுவாக வீவரணம் பெறுகிறது. மீனாட்சியம்மன் கோவிலைச் சுற்றிப் பெருவாரியாக வாழ்ந்தவர்கள் முஸ்லிம்களே ஆயினும், இந்துக்களின் வழிபாட்டுமுறைகளைக் கருத்தில் கொண்டு, அங்கிருந்து இடம் பெயர்ந்து மேலமாசி வீதித் தெருக்களமைத்துக் குடிபெயர்வதும், சின்னப் பள்ளிவாசல் வழியாக விழா நாட்களில் ஆரவாரமாகச் செல்லும் இந்து நண்பர்களிடம் மீசைப் பாண்டி ‘‘டேய் சீயாம்பள்ளிவாசல், வாடா கும்பிட்டுப் போங்கடா’’ என அதட்டிக் கூறுவதும், ‘‘சீயா, என் தலைவர் தேவருக்குத் தாய்ப்பால் குடுத்தது உங்க ஆச்சிதான் சீயா’’ எனக்கூறும் மீன் விற்கும் ஆயாவுமாக சொற்ப அத்தியாயங்களில் ரபீக் அதை வலுவாக நிறுவிவிடுகிறார்.
ரபீக் விவரிக்கின்ற திருமண விவரணைகள் நமக்கு முற்றிலும் புதியன. மங்னி என்றால் நிச்சயதார்த்தம் என்கிறார். சுக்ரானா என்பதைப் பெண்ணை அலங்கரித்தலுக்கான வார்த்தையாகவும், சக்பஸ் என்னும் ஊர்வலம், சுல்வா என்னும் பரிசளிப்புவிழா, ருஸ்சத்  என்னும் வழியனுப்புவிழா என திருமணவிழாவின் பல நிலைகளை அந்த அத்தியாயம் பேசுகிறது. நிச்சயதார்த்தம் அல்லது பரிசம், ஊர் சொல்வது, தலைப்பா கட்டு, கல்யாணம், விருந்து, மடிநிறப்புவது, மறுவீடு என்னும் தமிழ் முஸ்லிம் திருமண முறைகளிலிருந்து  இவை முற்றிலும் மாறுபட்டிருப்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.
சித்திரக்காரன் இம்ரானின் மனநிலையிலிருந்து ரபீக் பேசுகின்ற பலவும் புனைவும் யதார்த்தமுமான போக்கினைக் கொண்டுள்ளன. வாயைத் திறந்தவாறிருந்த  ஒரு காகத்தின் நிழல் கண்டு அஞ்சி தூக்கத்தில் நடக்கிற வியாதியால் அவர் அவதிப்பட்ட நாளிலிருந்து இது தொடங்குகிறது. மலக்குமார்கள் எனப்படும் வானவர்களைக் கண்டால் சேவல்கள் சிறகுகளை அடித்துக் கொண்டு பாங்குகூவும் என்கிற நம்பிக்கையும், சித்தப்பா பாதுஷா அவருடைய ஓவியங்களைப் பார்த்துவிட்டு ‘‘மனிதர்களின் கண்களை வரையும்போது கருப்புப் புள்ளி மட்டும் வைக்காதே, சைத்தான் உன்னைத் தூங்கவிடாது’’ என எச்சரிப்பதுமாக   விவரணம் கொள்வதனைத்தும் இம்ரானின் பால்யகால நினைவுகளே.
நூர்தாயா மாட்டுவண்டியினடியில் மறைத்து வைத்த தோல் புத்தகத்தைத் தெரியாமல் மொட்டைமாடிக்கு எடுத்துவந்து படிக்க, பலவிஷயங்களும், வரலாறுமாக அவை விரிகின்றன. பெரும்பாலும் முப்பாட்டன்மார் கதைகள்.  மேகங்கள் பல மிருகங்களின் உருவங்களாக மாறிக்கொண்டேயிருந்தன.. நகரம் அமைதியாகத் தூங்கிக் கொண்டிருந்தது. பக்கீர் ஒருவன் ‘‘இரவில் யதார்த்தங்கள் மாறுவதை யாரும் நம்புவதேயில்லை’’ என கூவிக்கொண்டே அடுத்த தெருவுக்குச் சென்றான்… என ரபீக் வித்தியாசமான மனநிலைகளை எழுதுகிறார்.
அடுத்து ஊர்ச்செய்தி நூர்தாயா பேசத் தொடங்குகிறான். அந்த அத்தியாயத்தில் மறைவான சக்திகளாகிய ஜின்களைக் குறித்த விளக்கங்கள் இடம் பெறுகின்றன. மாசிவீதி பள்ளி கபர்ஸ்தானில் நூறாண்டுகளாக ஒற்றைப் பனைமரமாக நிற்கும் ஜின்னின் கதை பேசப்படுகிறது. இதன் நீட்சியாக ஜின்களைத் தங்களது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் ஞானம் கற்றுத் தேர்ந்த மலையாளத் தங்ஙள்மார்களைக் குறித்த விவரிப்பும் இடம் பெறுகிறது.
9வது அத்தியாயம் இம்ரானின் பாட்டி தாதி மைமூனா பேசுவதாக எழுதப்பட்டுள்ளது. அவளின் வருத்தம் தொனிக்கிற குரலைப் பொருட்படுத்தத் தக்கதாக நான் கருதுகிறேன். ‘‘எங்கள் சமூகத்திலிருந்த கலை, கலாசாரம் எல்லாம் இன்று ஒவ்வொன்றாகக் கைவிடப்படுகிறது என்பதை நினைத்து உள்ளம் வேதனையடைகிறது. எங்கள் காலத்து திருமண விழாக்களில் குமரிகள் கும்மியடித்து இஸ்லாமியக் கவிதைப் பாடல்கள் பாடுவதை அனைவரும் ரசிப்பார்கள¢’’ என ஏக்கப் பெருமூச்செறிகிறாள் அவள்.  மதத்தின் பெயரால் ஹராம் எனக் கூறித் தடுக்கப்பட்ட இஸ்லாமியக் கலைமனதின் வேட்கை என்றும் இதைக் கருத்தில் கொள்ளலாம்.
தாதி சொல்கின்ற பல கதைகளில்  குழந்தைகள் உலகமொன்று விரிக¤றது. சிறுமியான தாதியைக் குள்ளனொருவன் ஒரு தோட்டத்திற்கு  அழைத்துச் சென்று சுண்டு விரலால் ஈரத்தரையைத் தோண்டிக் கொண்டிருக்கப் பணிக்கிறான். சுண்டு விரல் அளவேயுள்ள விவசாயி ஒருவர் குழிக்குள் தட்டுப்படுகிறார். இவள் மேகங்களினூடே மிதந்து செல்கிறாள். கட்டை விரலளவேயுள்ள தெருக்கள் தோன்றுகின்றன. அந்த  ஊர் முழுவதையும் பொம்மைகளும், குழந்தைகளுமே வியாபித்திருக்கின்றனர். உலகில் பிறந்தவுடனேயே இறந்துவிடும் குழந்தைகள் யாவரும் அங்கு உயிருடன் ஜீவிக்கின்றனர். பொம்மைகள் நடமாட்டமும், குழந்தைகள் நடமாட்டமும் கொண்ட தெருக்களில் முட்டைகளிலிருந்து கோழிக்குஞ்சுகள் வெளிவந்து சிறுமிகளுடன் விளையாடிக் களிக்கின்றன. சிறுவர்கள் கொம்புகளில்லாத இளம்கன்றுகளுடன் ஜல்லிக்கட்டு விளையாடுகின்றனர். இவற்றையெல்லாம் வாசிக்கையில் ரபீக்கிடம் குழந்தை இலக்கியங்களையும் எதிர்பார்க்கலாம் எனத் தோன்றுகிறது. ஆலீஸின் அற்புத உலகம் போன்றோ குட்டி இளவசரன் போன்றோ சில உன்னதமான சிறுவர் இலக்கியங்களை சித்திரங்களுடன் அவரால் தரமுடியுமென நான் நம்புகிறேன். நம்  தலைமுறைக் குழந்தைகள் தவறவிட்ட திருடன் போலீஸ் விளையாட்டு, பல்லாங்குழி எனப் பலவற்றையும் அவர் நினைவூட்டுகிறார். பரண் மீது ஒரு நாள் ஏறுகிறார். கதவு திறக்கிறது. பரணில் ஏறி அவர் பார்க்கிற மதுரை நகரம் அலாதியாயிருக்கிறது.
‘‘மண்ணைத் தோண்டிச் சித்திரக்குள்ளர்களை வெளியிலெடுத்துக் கொண்டிருந்தார்கள் பால்ய நண்பர்கள். இருண்ட வரலாற்றை வெளிச்சத்தில் எழுதத் தொடங்கினார்கள் சித்திரக் குள்ளர்கள். ஓடும் நதியில் எழுதிய வரலாறுகள் நிலவு போல் மின்னிக் கொண்டு பூமியெங்கும் பரவிச் சென்றன. வரலாறுகளின் கனம் மீன்களை பயமுறுத்தியது. முதலைகளின் ஏப்பங்கள் நீர்க்குமிழ்களாக நதிக்கு வெளியே கொப்பளித்தன. கூட்டுப்புழுக்கள் தங்கள் கொண்டைகளில் வண்ணத்துப் பூச்சிகளின் இறகுகளைச் சுமந்து திரிந்தன. டிஷியன் மன்னன் குகை மனிதர்களைக் காணச் சென்று கொண்டேயிருக்கிறான். பூமியினடியில் ஆறாவது பூமியை நோக்கி அவன் பயணம் தொடர்ந்தது…’’ என்றெல்லாம் ரபீக் எழுதும்போது ஏதோ கோணங்கியின் பட்டாம்பூச்சிகள் உறங்கும் மூன்றாம் ஜாமத்தையோ, உப்புக் கத்தியில் மறையும்  சிறுத்தையையோ வாசிக்கிற மயக்கம் உண்டாகிறது. இது போன்று மாந்த்ரீக யதார்த்தவாதம் உருவாக்குகிற வினோத மயக்கங்களை பல்வேறு சந்தர்ப்பங்களில் நம்மால் தரிசித்துக் கடந்து செல்ல முடிகிறது.
மீனாட்சியம்மன் கோவில் பொற்றாமரைக் குளத்தைச் சுற்றியுள்ள ஓவியங்களை வரைவதற்காகச் சென்ற இம்ரான், அங்குள்ள சிலைகளுடன் உரையாடும் காட்சி தனித்துவம் மிக்கது. அன்னத்தில் அமர்ந்திருந்த அழகிய பெண் சிலை ஒன்று பேசுகிறது. ‘‘நல்ல வேளை சிலையாகப் பிறந்துவிட்டேன். இல்லையென¤ல் இரண்டாயிரம் வருடங்களாக இவ்வுலகில் நடந்து வரும் சம்பவங்களைப் பார்த்திருக்க முடியுமா?’’ பொற்றாமரை சுற்றுச்சுவரில் சமணர்களின் கழுவேற்றம் இயற்கை மூலிகைகளால் வரையப்பட்டுள்ளது. ஓவியத்திலிருந்து ஒரு சமணர் இம்ரானிடம் பேசுகிறார். ‘‘தம்பி, உண்மையின் வடிவத்தை வணங்கியதால் எங்களைக் கழுவிலேற்றிவிட்டார்கள். பொய்களைப் பரவச் செய்த வதந்திக்காரர்களுக்கு யார் தண்டனை கொடுப்பார்கள்?’’
காதலை நோக்கி இம்ரான் பயணிப்பது ருசிகரமானது ‘‘எனது முதல் காதல் பெண்ணின் நினைவுகள் மரணம் வரை மறக்க முடியாத ஒன்று…’’ எனக் கூறும் இம்ரான், சித்திரைத் திருவிழாவன்று தமுக்கம் மைதானத்தில் வைத்து ஷெரீன் என்கிற இளம் பெண்ணைச் சந்திக்கிறான். அவள் ஒரு தமிழ் முஸ்லிம் பெண். இம்ரானை அவள் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டேயிருக்கிறாள். மிகத் தாமதமாகவே அவள் தன் பால்ய சிநேகிதி எனப் புரிந்து கொள்கிறான். பிறகு இருவரும் பல சந்தர்ப்பங்களில் ரகசியமாக சந்தித்துக் கொள்கின்றனர். ஆனால் சந்தர்ப்ப வசத்தால் அப்போது அவர்கள் ஒன்று சேர முடியவில்லை. பிறகு நீண்ட நாட்கள் கழித்து ஷெரீனை அவளுடைய கிழட்டுக் கணவனுடன் பார்த்து அதிர்ச்சி கொள்கிறான் இம்ரான்.
இந்தக் காதலுக்குள் ஒரு நுண் அரசியல் ஊடுருவியிருக்கலாமோ என நான் சந்தேகம் கொள்கிறேன். அது உருது முஸ்லிம் X தமிழ் முஸ்லிம் எனும் அரசியல். சிலருக்கு ஒவ்வாமையாகக் கூட இருக்கலாம். ‘இப்படியெல்லாம் இல்லை’ என்றும்கூட அவர்கள் கூற முற்படலாம். ஆனால், மிக நுட்பமாக தமிழ் முஸ்லிம் X உருது முஸ்லிம் என்கிற பாகுபாடு நீடித்தபடியிருக்கிறது. நான் மேலதிகமாக இதைப் பற்றி பேசவிரும்பவில்லை. என் படைப்புகளில் பேசியிருக்கிறேன். உருது  முஸ்லிம் படைப்பாளிகளும் இதைப் பேச வேண்டுமென எதிர்பார்க்கிறேன். ரபீக் ஆசைக்காக இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கலாம். ஆனால் தொடர்ந்து எழுத வேண்டிய சந்தர்ப்பத்தை அவருக்கு ‘சித்திரக்காரனின் குறிப்பிலிருந்து’ உருவாக்கித் தரும்!
….
சித்திரக்காரனின் குறிப்பிலிருந்து
ரஃபீக்/சந்தியா பதிப்பகம்,- சென்னை.
போன்: 044-24896979 | ரூ.185 பக்.216

Related posts