You are here
மார்க்சியம் 

சீர்திருத்தம் பலனளிக்குமா?

என். குணசேகரன்

இன்றைய ஆளும்வர்க்க முகாமைச் சார்ந்தவர்களும்,கார்ப்பரேட் ஊடகங்களில் உள்ள உயர்நடுத்தர வர்க்கம் சார்ந்தோர் பலரும் இடதுசாரி எதிர்ப்பைக் கண்ணும் கருத்துமாகச் செய்து வருகின்றனர்.
வேறுசிலர்,இடதுசாரிகள் மீது அனுதாபம் கொண்டவர்களாகத் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு இடதுசாரிகள் முன்னேற வேண்டுமெனில் இப்படியெல்லாம் இருக்க  வேண்டுமென்று  ஏராளமான  அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்குகின்றனர். இவர்களில்  பலர் அமைப்புரீதியாக, அமைப்புக்கோட்பாடுகள் கொண்டு செயல்படும் இடதுசாரி இயக்கங்கள் மீது அதிக ஆத்திரத்தை  வெளிப்படுத்துவார்கள்.
சோசலிச இலட்சியம் கொண்ட இடதுசாரிகள் இயக்கங்களின் வளர்ச்சி, தேக்கம்  பற்றிய பிரச்சனைகளை எப்படிப் புரிந்து கொள்வது? சரியான  புரிதல் ஏற்பட ரோசா லக்சம்பர்க் துணை நிற்கிறார்.
சோசலிசம் என்பது சிலரின் நல்லெண்ண நடவடிக்கைகளால் உருவாவது அல்ல; திறமையும் ஆற்றலும் கொண்ட, மிகக் “கவர்ச்சிகரமான” தலைவர்களால் உருவாக்கப்படுவதும் அல்ல. அதற்கு அறிவியல் அடிப்படை உள்ளது என்று கூறும் ரோசா, மூன்று முக்கிய விளைவுகளைக்  குறிப்பிடுகிறார்.
1) முதலாளித்துவம் நடைபோட்டு வருகின்ற  பொருளாதார அராஜகப் பாதை, பெரும் நாசத்தை ஏற்படுத்துகிறது. இன்றைய சான்றுகளாக, விவசாய அழிவு, மக்கள் வாழ்வாதார இழப்பு, சுற்றுச்சூழல் பாதிப்பினால் பூமிக்கு  அச்சுறுத்தல் எனப் பலவற்றைக் குறிப்பிடலாம்.
2)  பண்டைய காலங்களைப் போன்று, உற்பத்தி நிகழ்வு, தனித்தனித்  தீவுகளாக நடப்பதில்லை. சமூகம் முழுமையும் உற்பத்தி நிகழ்வில் பிணைத்துக் கொள்ளுகிறது. உற்பத்தி மேலும் மேலும், உலகளாவிய அளவில்  சமூகமயமாகி வருகின்றது. இதில்தான் எதிர்கால சமுகத்தின் கரு உருவாகிறது. இந்தக் கரு, சோசலிசப் பிறப்புக்கு வழிவகுக்கிறது.
3)  புரட்சியின் மூலம்தான்  சோசலிசம்  பிறப்பெடுக்கிறது. இதன்  நாயகி, நாயகர்களாக விளங்குவது பாட்டாளி வர்க்கம்.  ஆனால், பாட்டாளி வர்க்கம் வெறும் மனிதர்களாக  இருந்தால் போதுமானது அல்ல; புரட்சிகர உணர்வும், அமைப்பு ரீதியான வலிமையும் கொண்டதாக அது உருமாற வேண்டும். அதுவே புரட்சிவழி சோசலிசத்தைக் கொண்டுவரும்.
இந்த மூன்று விளைவுகள்தான் சமூகத்தை சோசலிசத்திற்கு இட்டுச்செல்கிறது.இவற்றின் நிலைமைகள் சார்ந்து சோசலிச, இடதுசாரி இயக்கங்களின் நிலை இருக்கிறது. அதன்  வளர்ச்சியை அல்லது தோல்வியை தனிப்பட்ட நபர்கள் அல்லது குழுக்களின்  குறைகள் என  கருதக்கூடாது. இந்த மூன்று விளைவுகளைத் துல்லியமாக அலச வேண்டும்.
சோசலிச இயக்கங்களில் குறை காண்பவர்கள் மேற்கண்ட மூன்று அம்சங்களில் மூன்றாவது அம்சத்தின் மீது விமர்சனங்களை  முன்வைப்பதில்லை.பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர உணர்வை மேம்படுத்துவது,  அதன் அமைப்பு  வலிமை ஆகியன குறித்து அவர்கள் விவாதிப்பதில்லை.
இது ஏன்? இடதுசாரிகளின் பல நண்பர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் வேடிக்கையான ஒற்றுமை உள்ளது. இருதரப்பாரும் புரட்சியை ஏற்றுக்கொள்வதில்லை. உழைக்கும் வர்க்கம் உணர்வுப்பூர்வமாகத் திரண்டு முதலாளித்துவத்தை அகற்றும் என்பதில் இருவருக்கும்  நம்பிக்கையில்லை.முதலாளித்துவம் கேடான அமைப்பாக இருந்தாலும் அதனை சீர்திருத்தி, செழுமைப்படுத்தலாம் எனக் கருதுகின்றனர்.
ஜனநாயகம்,  நலச் சட்டங்கள், நலத்திட்டங்கள் என  அந்த அமைப்பினைச் சரிசெய்வது என்ற  எல்லைக்குள்தான் வாதங்கள் சூடுபறக்கின்றன.கடைசியில்,  இது  முதலாளித்துவத்தின்  ஆணிவேர்களை பலப்படுத்தும் வேலையாக மாறி, புரட்சிக்குப் பெரும் துரோகமாக முடிகின்றது.
பெர்ன்ஸ்டீனின் “சுறுசுறுப்பு” இதுதான் ஜெர்மானிய சோசலிச  இயக்கத்திற்கு  ஏற்பட்டது.அதன் தலைவரான பெர்ன்ஸ்டீன் புரட்சி அவசியமில்லை என்று முடிவுக்கு  வந்து,  தத்துவார்த்தக் கருத்தாக்கங்களை உருவாக்கினார். “இறுதி இலட்சியம், அது எதுவாக இருந்தாலும், எனக்கு கவலையில்லை; இயங்கிக் கொண்டிருப்பதுதான் எல்லாவற்றுக்கும் மேலானது…” என்றார்.
அதாவது தொழிற்சங்கங்களில் செயல்படுவது, சமூகத்தைச் சீர்திருத்துவதற்கும், அரசியல் ஜனநாயகத்திற்குமான கோரிக்கைகள் எழுப்புவது,  அவற்றையொட்டி இயக்கங்கள் நடத்துவது  போன்றவற்றை மேற்கொண்டால், சிறிதுசிறிதாக, சோசலிசம் மலரும்; புரட்சிகர உணர்வு, புரட்சிகர அமைப்பு  எதுவும்  தேவையில்லை  என்று பெர்ன்ஸ்டீன் கருதினார். ‘அன்றாட நடைமுறை அரசியல்’ மட்டும் போதுமானது; நீண்டகால குறிக்கோள் எதுவும் தேவையில்லை என்று  பிரச்சாரம் செய்தார்.
தொழிற்சங்கங்கள்  முதலாளித்துவ  சட்டங்களின்படி ஊதியத்தைப் பெறுவதற்கு ‘சுறுசுறுப்பாக’ இயங்க வேண்டும்; இதற்குமேல் எதுவும் செய்ய வேண்டியதில்லை. ஆனால், இந்த வேலைகள் மிதிவண்டியை ஒரேஇடத்தில்  நிறுத்திவிட்டு சக்கரங்களை வேகமாக சுற்றிக்கொண்டிருக்கும்  வேலை. இருந்த இடத்திலிருந்து எந்த முன்னேற்றமும் ஏற்படாது. உழைப்புச்  சுரண்டல் கொடூரத்திலிருந்து தொழிலாளி வர்க்கம் விடுதலை பெற்றிடாது.
ஆளும் வர்க்கங்கள் அந்த சட்டங்களையும் விட்டுவைக்காது. தற்போது தொழிலாளர் நல சட்டங்களைத் திருத்துவது என்ற பெயரில் மோடி செய்துவரும்  உரிமைப்பறிப்பு ஒரு எடுத்துக்காட்டு.
“…. மிகச் சிறந்த தொழிலாளர் பாதுகாப்பு சட்டங்களில் கூட  “சோசலிசம்” இல்லை. தெருக்களை சுத்தமாக வைத்துக்கொள்வதற்கும், தெரு விளக்குகளை ஒழுங்காகப் பராமரிப்பதற்கும் நகராட்சி போடுகிற  அவசர சட்டங்களில்  என்ன “சோசலிசம்” இருக்கிறதோ அதேஅளவுதான் தொழிலாளர் பாதுகாப்பு  சட்டங்களில் உள்ளது”  என்று ரோசா கிண்டலாக  எழுதினர்.   உழைப்புச் சுரண்டலைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு சோசலிச இயக்கங்களும் தொழிற்சங்கங்களும் வேகமாக செயல்பட வேண்டும் என்பதுதான் பெர்ன்ஸ்டீன் போன்றவர்கள் காட்டும் வழி. இதில், இயக்கங்கள் மிகவும் சுறுசுறுப்பாக இயங்குவது போன்று தோற்றமளித்தாலும் புரட்சி உணர்வை வளர்ப்பது, அமைப்பை வலுப்படுவது ஆகிய இரண்டிலும் தேக்கத்தை ஏற்படுத்தவே இந்த “சுறுசுறுப்பு” உதவும். இது,காலம் காலமாக, மார்க்சியத்திற்கும் புரட்சி இலட்சியத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தி வந்துள்ளது. அதனால்தான் இந்த சீர்திருத்தவாதத்தை ரோசா லக்சம்பர்க் முழுமூச்சாக எதிர்த்தார். அரசு, முதலாளித்துவ சமூகத்தின் பிரதிநிதி என்பதை மறந்திடக்கூடாது என்கிறார் ரோசா. இதனால், அந்த அரசின் கீழ் எடுக்கப்படும் சீர்திருத்த நடவடிக்கைகள் தொழிலாளி வர்க்கத்தின் சமூகக் கட்டுப்பாட்டை ஏற்படுத்திடாது. மாறாக, மூலதனம் மேலும் வளர்வதற்கு ஏற்ப சமூகத்தை ஒழுங்குபடுத்துவதுதான், சீர்திருத்த நடவடிக்கைகள்.  எனவே சமூக சீர்திருத்தங்கள் என்றழைக்கப்படும் நடவடிக்கைககள் மூலதன நலன்களைப் பாதுகாக்கவே கொண்டு வரப்படுகின்றன.
ரஷியப் புரட்சியின்போது “அமைதி, உணவு, நிலம்” என கோரிக்கைகளை கம்யூனிஸ்ட்கள் எழுப்பினர். ஜார் மன்னனோ, அல்லது  கெரென்ஸ்கி தலைமையிலான முதலாளித்துவ அரசாங்கமோ அவற்றை நிறைவேற்றிவிடுவார்கள்  என்ற  நம்பிக்கையை மக்களிடம் அவர்கள் ஏற்படுத்தவில்லை. அவற்றை அடைய புரட்சி தேவை என்று மக்களின் உணர்வுமட்டத்தை உயர்த்தினர்.  புரட்சி சாத்தியமானது. எனவே ‘இயக்கமே எல்லாம்’ என்ற ‘சுறுசுறுப்பு’ நோயிலிருந்து விலகி  ரோசா லக்சம்பர்க்கின்  புரட்சி வழியில்  செயல்படுவதுதான் சோசலிச இயக்கங்களின் உண்மையான வளர்ச்சிக்கு உதவும்.
(தொடரும்)

Related posts