You are here
தூரத்து புனையுலகம் 

கட்டுடைத்தலும் இட்டுக்கட்டலும்

ம. மணிமாறன்

காலமே கலைகளின் நிலைக் கண்ணாடி. போரும், ரத்தப்பலியுமாகிக் கிடந்த இரண்டாவது உலக யுத்தத்திற்குப் பிறகான நாட்களில் சகமனிதர்களிடம் அன்பு செய்யுங்கள் என்றுரைக்க வேண்டிய அவசியம் படைப்பாளிகளுக்கு ஏற்பட்டது. அன்புவழியும், மதகுருவும் தமிழில் பெயர்க்கப்பட்டதற்கான காரணமும் கூட இதுதான். பட்டவர்த்தனமாக வெளிப்பட்ட அதிகாரத்தின் சுவடுகள் இப்போது நூதனமாக வெளிப்படத் துவங்கியிருக்கின்றன. கண்களுக்குப் புலனாகாத மர்மம் கொண்டதாகியிருக்கிறது அதிகாரம். சக மனிதர்கள் பரஸ்பரம் கைகுலுக்கிக் கொள்வதில் கூட அதிகாரத்தின் சுவடு மறைந்திருக்கிறது என்று பூக்கோ உரைத்தபோது தடுமாறியது அறிவுலகம். படைகளும், போர்க்கருவிகளும் உலகெங்கும் அதிகாரத்தை நிலைநிறுத்தப் போதுமானதில்லை என்கிற புரிதலுக்கு அதிகார வர்க்கம் வந்தடைந்திருக்கிறது. மனங்களைத் தகவமைத்திட அதனுடைய கருவிகள் மாற்று வடிவம் பெறத் துவங்கியிருக்கின்றன. லாபமும், நுகர்வு வெறியும் கொண்ட மனிதக்கூட்டத்தை உருவாக்கினாலே போதுமானது என்கிற அதிகார வர்க்கத்தின் புரிதலைக் கலைத்துப் போட வேண்டிய அவசியத்தைக் காலம் எழுத்தாளர்களுக்கு உணர்த்தியுள்ளது.
காலத்தின் பிள்ளைகளான கலைஞர்கள் உலகெங்கும் அதிகாரத்தை நோக்கி உண்மையைப் பேசத் துவங்கியிருக்கிறார்கள். அதற்கு அவர்களுக்கு வழக்கமான கதை கூறுதல் முறையும், மொழித் தன்மையும் போதாது என்று உணர்ந்தபோது புதிய கதையாடல்களைக் கட்டமைத்தனர். அப்படியான புதிய கூறுதல் முறையில் வடிவம் பெற்றதே ‘கூகி வா தியாங்கோ’வின்  Wizard of the crow எனும் நாவல். இதனை மூத்த படைப்பாளி நாமக்கல் பழனிச்சாமி மொழி பெயர்த்திருக்கிறார். கூகியின் படைப்புலகம் தமிழுக்கு ‘சிலுவையில் தொங்கும் சாத்தான்’ என்கிற நாவலின் வழியாகத்தான் அறிமுகமாகியது.  தமிழில் உருவாகிக் கொண்டிருக்கிற  docu story என்கிற புதிய வகை எழுதுதல் முறையின் துவக்கப்புள்ளி கூகிதான்.
ஆப்பிரிக்க இலக்கியத்தின் கலகக்குரலும் கூகியினுடையதுதான். அவரே அதனைத் துவக்கி வைத்தவர். கென்யாவில் கருப்பர்கள் கைகளில் ஆட்சியும், அதிகாரமும் வந்தடைந்த பிறகும் மனித வாழ்க்கையொன்றும் பெரிதாக மாறிடவில்லையே என அதிர்ச்சியுற்ற கூகி தன்னுடைய படைப்புகளை புதிய அதிகார வர்க்கத்திற்கு எதிராகப் பேச வைத்தார். தன்னுடைய படைப்புகளுக்காக கென்ய  அரசாங்கத்தால் சிறைபிடிக்கப்பட்டு இருந்த நாட்களில் அங்கிருக்கும் கழிவறைக் காகிதங்களில்தான் தன்னுடைய ‘சிலுவையில் தொங்கும் சாத்தான்’ என்கிற நாவலை அவருடைய தாய்மொழியான ‘கிக்கூ’வில் எழுதினார். அது பிறகு ஆங்கிலம் வழியில் உலகின் பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. அவருடைய   Wizard of the crow கறுப்பின மந்திரவாதியாகத் தமிழ் வடிவம் பெற்றிருக்கிறது. மிகச்சிறந்த அரசியல்மிகு புனைவிற்கான அடையாளம் கறுப்பின மந்திரவாதி.
கறுப்பின மந்திரவாதியின் நிலம் ‘அபுரிரியா’ எனும் தேசம். சுதந்திரக் குடியரசு தான் என்றாலும் அதிபரே ஆட்சித் தலைவர். ஒற்றை மனிதனின் கையில் அதிகாரத்தைக் குவித்துவிட்டு மக்களாட்சி, சுதந்திரக் குடியரசு எனப் பேசுவதில் என்ன நியாயம் இருக்க முடியும் என்பதைக் காத்திரமாக முன் வைத்திட கூகி பகடியான மொழியையும், கதையமைப்பையும் தேர்வு செய்கிறார். அதிகாரத்தை விழுங்கிச் செறித்திட முடியாத மனிதர்களின் உடலுறுப்புகள் விசித்திரமாகிக் கொண்டுவிடும் என்று கற்பனை செய்து பார்க்கிறார் கூகி. அதிபரின் கேபினெட் அமைச்சர் ‘சில்வர் சிக்கியோக்கூ’ பாரிஸ் நகரில் உள்ள ஒரு மருத்துவமனைக்குச் சென்று தன்னுடைய காதுகளைப் பெரிதாக்கிக் கொண்டவர். வெளியுறவுத்துறை அமைச்சர் ‘மச்சோக்களி’ கண்களைப் பெரிதாக்கிக் கொண்டவர். அதிபருடைய செய்தி மக்கள் தகவல் தொடர்புத்துறை அமைச்சருக்கு நாம் யூகிப்பதைப் போலவே நாக்கு மிக மிக நீளம். அவரவர் துறைக்கு ஏற்ப உடலுறுப்புகளின் அளவுகள் மாறுபடுகின்றன. பிறகு என்ன ஆகும்? உடலின் உறுப்புகள் வீங்கிப் பெரிதாவதால் அந்த தேசத்தின் தலைமை உடல் ஆன அதிபரின் உடல் நாளுக்கு நாள் உப்பிப் பெருக்கிறது.
உடல்தான் ஊதிப் பெருத்ததே தவிர மூளை ஒரு போதும் பெரிதாகிடவேயில்லை. அதிபரின் நோய்க்கான காரணங்களை அபுரிரியா தேசமே கண்டுரைத் துடித்தலைகிறது. “வயிற்றில் அடைந்து இருக்கும் வாயு வெளியேற்றப்படாததால் மனதின் ஆழத்தில் புதைந்து கிடக்கிற ‘கோபமே’ இந்த நோய்க்குக் காரணம் என ஒரு சாரர் கூறத் துவங்கினர். தவறாக தண்டிக்கப்பட்ட வெள்ளாட்டின் சாபம் தான் இதற்கு காரணம். இல்லையில்லை நீண்டகாலம் ஆட்சி செய்துவிட்டதால் முதுமையின் நோயிது. அவருடைய அதிகாரப்பூர்வ மனைவியின் கண்ணீரால் விளைந்த சாபமிது… இப்படி ஆளாளுக்கு நோய்மைக்கான காரணத்தைக் கூறிக் கொண்டிருக்க… இது அதிகாரம் ஏற்படுத்திய பேதமையின் விளைவு. மீறமுடியாத போதையில் விழுந்து கிடக்கும் அதிகார மையத்தையும், அதன் ஜால்ராக்களையும் தன்னுடைய கதைமொழியால் கலைத்துப் பார்க்கிறார் கூகி. அதற்கு அவருக்கு 750 பக்கஙகளும், ஆறு அத்தியாயங்களும் தேவைப்படுகிறது. ஒவ்வொரு அத்தியாயத்தின் தலைப்பும் அரக்கர்கள் பெயரிலேயே வெளிப்படுகிறது. ஆற்றல் மிக்க அரக்கர்கள், தாடிக்கார அரக்கர்கள், கலகக்கார அரக்கர்கள் என தலைப்பிடுகிறார்  கூகி.
நாவல் முழுக்க “அபுரிரியா’’ எனும் கற்பனை தேசத்தில்தான் நிகழ்கிறது. வாசகனுக்கு அபுரிரியா என்பதை ஆப்பிரிக்கா என்று புரிந்து கொள்வதில் எந்தச் சிரமமுமில்லை. வரலாற்றையும் புனைவையும் பிரித்தறிய முடியாத நிலையில் கோர்த்துக் கட்டித் தருவதும்கூட ஒரு தந்திரம்தான். புனைவை வரலாறு என ஆட்சியதிகாரத்தை தக்கவைத்திட ஆள்பவர்கள் நம்பச் சொல்கிறபோது வரலாற்றை மிகுபுனைவால் கலைத்துப் பார்த்திடத்தான் செய்வார்கள் கலைஞர்கள். வரலாறு தான் என்று நாம்  நம்பிட நாவலுக்குள் அமெரிக்க அதிகார வர்க்கம் வருகிறது, உலக வங்கியின் நிபுணர் குழுவும் வருகிறது. நாவலின் நாயகன் இந்தியா என்கிற புராண, இதிகாசத் தொன்ம தேசத்தில் கல்வி பயின்று அபுரிரியா எனும் கற்பனை தேசத்தில் வேலை தேடியலைகிறான். அதிகாரத்தைக் குலைத்திட ரகசியகக் குழுக்கள் இயங்குவதும், அவை பகிரங்கமாகவே அரசுத் துறைகளிலும் பணியாட்களாக அமர்வதும் சாத்தியம்தான். அதனால்தான்  “நவியாரா’’ என்கிற பெண் கலகக்காரியாகவும் இருக்கிறாள். உலக வங்கியின் திட்டத்திற்கு நிதி திரட்டும் அலுவலகத்தில் உதவியாளராகவும் பணி செய்கிறார்கள்.
நாவலில் வருகிற அதிபரின் பிறந்தநாள் கொண்டாட்டம் நம்மை தமிழ்நிலத்திற்கு இழுத்து வரத்தான் செய்கிறது. எத்தனை கூத்துக்களைப் பார்த்திருக்கிறது தமிழ் நிலம். “அதிபரின் பிறந்தநாள் பரிசாக அபுரிரியாவில் உலகிலேயே மிகவும் உயரமான கட்டடமாக பெபெல் நவீனக் கட்டடம்’’ என்பதைக் கட்டத் திட்டமிடுகிறார்கள். அந்தக் கட்டிடத்தில் அதிபர் ஏறி எளிதில் மேலுலகம் சென்று வரலாம் என்றும் முடிவாகிறது. மிக மிக உயரமான கட்டிடம் என்பதால் அதிபர் ஒவ்வொரு நாள் காலையிலும் அதிபர் மேலுலக யாத்திரையின் மூலமாக கடவுளைக் கண்டு ஆசீர்வாதத்தையும் ஆலோசனைகளையும் பெற்றுத் திரும்புவார். இந்த மேலோக யாத்திரைத் திட்டத்திற்கான கட்டுமானப் பணி முடிவடைந்த பிறகு வரலாற்றாசிரியர்கள் இதனை உலக அதிசயங்களில் ஒன்றாகக் கண்டுணர்வார்கள். அதன் பிறகு தாஜ்மகாலைப் பற்றியும், சீனப் பெருஞ்சுவரைப் பற்றியும் யார் பேசுவார்கள் என்று உரைக்கின்றனர் அதிபரின் அடிவருடிகள். பகடியின் உச்சம் ராணுவ  அமைச்சரின் கூற்றுதான். “உயரமான கட்டிடத்தில் ஏறி மேலோக நுழைவாயிலை அடைவதற்கு அதிபருக்கு சிரமம் ஏற்படும். எனவே அமெரிக்கா செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பி வைத்த விண்வெளி ஓடத்தை விடவும் பெரிய அளவிலான ஒரு நவீன ராக்கெட் பொருத்தப்பட்ட சொகுசு வாகனத்தைப் பயன்படுத்தி அதிபர் வேண்டிய நேரங்களில் மேலுலகத்திற்கும், விரும்பிய கோள்களுக்கும் சென்று வர ஏற்பாடு செய்யப்படும்’’ என்கிறார். இவையாவற்றிற்கும் இந்த வறிய நாட்டில் பணத்திற்கு என்ன செய்வது என்றெல்லாம் யோசிக்க வேண்டிய அவசியமில்லை. உலக  வங்கியின் நிதி உதவியுடன் இந்த மேலோக யாத்திரை கச்சிதமாக நடத்தி முடிக்கப்படும் என்கிறார் வெளியுறவுத்துறை அமைச்சர். அதிகாரத்தில் இருப்பவர்களின் பிறந்த நாட்களின் ‘பிளக்ஸ்’ போர்டுகளின் வாசகங்களை ஞாபகமூட்டுகின்றன நாவலின் காட்சிகள். பணமும், பதவியும் எந்த எல்லைவரை மனிதர்களை நடத்திச் செல்லும் என்பதற்கு பலநூறு உதாரணங்கள் உண்டு. நம் நிலத்தில் மந்திரியாகப் பதவியேற்ற நாளில் செருப்பு அணியாமல் வந்ததைக் கண்ட முதலமைச்சர் காரணம் கேட்ட நாளில்  ‘தெய்வம் உறைந்திருக்கும் கோயிலுக்கு பக்தன் எப்படி செருப்புடன் வர முடியும்’ எனச் சொன்னவர் இன்றைக்கும் மந்திரியாகத்தான் இருக்கிறார். ஒரு படைப்பு நம்முடன் உரையாடிடும் சக்திமிக்கதாக இருந்திடும்போது அது வாசகனுக்கு மனநெருக்கமாகி விடுகிறது.
ஆயிரத்தி தொள்ளாயிரத்து அறுபதுகளில் விடுதலை பெறத்துவங்கிய ஆப்பிரிக்க நாடுகளின் அரசியல் சூழலையும் அதிபரின் பிறந்தநாள் உரையின் வழியாக உணர்ந்திட முடிகிறது. ‘எனது இந்தப் பிறந்தநாள் பரிசாக சிறையில் வாடும் நூற்றுக்கணக்கான கைதிகளை விடுதலை செய்கிறேன். அவர்களில் சிலர் ஆசிரியர்களாகவும், பத்திரிகையாளர்களாகவும் உள்ளனர்.’’  ‘மக்கள் உருவாக்கிய வரலாறு’’ என்கிற நூலினை  எழுதிய ‘பேராசிரியர் மட்டறு’’, விடுதலை செய்யப்படுகிறார். ஆனால் அவருக்கு அரை அங்குலத்திற்கு மேல் தாடி வளர்க்க அனுமதியில்லை. அரசுடன் கருத்து வேறுபாடுள்ளவர்கள் சரித்திரம் அல்லது பத்திரிகை என்கிற போர்வையில் வதந்திகளைப் பரப்புவதில்லை என வாக்கு மூலம் தர வேண்டும். இப்படித்தான் தீவிரமான  புரட்சிகரக் கொள்கையைக் கொண்டிருந்த மாவோயிஸ்டான டாக்டர் யூனிஸ் இம்மாகுலேட் ஜென்சியை விடுதலை செய்திருக்கிறேன். மாஸ்கோவைப் பின்பற்றுகிற டாக்டர் லூமினஸ் தன்னுடைய மார்க்ஸியக் கருத்துக்களைப் புறந்தள்ளியதால் விடுதலை செய்யப்படுகிறார்’ என்று  நீண்டு செல்லும் உரை அபுரிரியா எனும் கற்பனை தேசம் ஆப்பிரிக்காவேதான் என்றுணரப் போதுமானதாக இருககிறது.
அதிகாரத்தை எதிர்த்திடும் கலகக்குரல்களும் ஆட்சிக் கவிழ்ப்பினை நிகழ்த்திடும் சூழ்ச்சிகளும், தந்திரங்களும் நிறைந்ததுதான் அரண்மனை என்பதை வரலாற்றின் வழிநெடுக நாம் கண்டே வந்திருக்கிறோம். அதிகாரத்தைக் கைப்பற்றிட அதிபரின் அடிவருடிகளான அமைச்சர்கள் சூழ்ச்சிக்கும்போது “காமிட்டி’’ என்கிற கறுப்பின மந்திரவாதியும், நையவிரா என்கிற “மக்கள் குரல்’’ அமைப்பைச் சேர்ந்தவளும் இணைந்து மக்களுக்கான அரசாங்கத்தை அமைத்திட முயல்கிறார்கள். “கறுப்பின மந்திரவாதியும்” நையாவிரா எனும் புரட்சிக்காரியும் உரையாடிடும் பகுதிகள் நம்முடைய படைப்பாளிகள் கவனித்திட வேண்டிய மிக முக்கியமான பகுதிகளாகும்.
“பெண்கள் பற்றி வந்துள்ள ஏதாவது நூல்களைப் படித்ததுண்டா’’ என்றாள் நையாவிரா. “அப்படிப்பட்ட புதினங்களை நான் படித்தது இல்லை. அத்துடன் இந்தியாவில் பெண் படைப்பாளிகள் உண்டா?’’ என்றாள் நையாவிரா. “ஏன் இல்லாமலில்லை சிறிய பொருள்களின் கடவுள்கள்’’ என்பதைப் படைத்த அருந்ததிராய் தவறான வரிகள் என்பதைப் படைத்த மீனா அலெக்சாண்டர், “நாங்கள் வரலாற்றை உருவாக்கியவர்கள்’’  என்பதை உருவாக்கிய சுசிதரு போன்றவர்கள் பெண் படைப்பாளிகளே. “இந்திய இதிகாசங்களான மகாபாரதம், ராமாயணம், அப்புறம் புராணங்கள், ரிக்வேதம், உபநிஷத்துகள் எல்லாவற்றையும் படித்ததில்லை. ஆனால்… இதிகாசங்கள், புராணங்கள் எல்லாம் ஆண்களால் எழுதப்பட்டது என நான் உறுதியாக நம்புகிறேன். அதே மனிதர்கள் தான் ஜாதியையும் கண்டு பிடித்தார்கள். பெண்களின் குரலினை எப்போதுதான் படிக்கப் போகிறார்களோ…’’ இப்படி நீள்கிற அந்த உரையாடல் நம்மை நாவலுக்கு மிக அருகில் அழைத்துப் போகிறது.
வேலைக்காக காத்திருக்கும் நீண்ட வரிசை இயக்கம், உலக வங்கித் தூதுக்குழுவின் சதிக்கு இரையாகிக் கிடக்கும் அதிகார வர்க்கத்தின் பதவிப்பித்து. எல்லாவற்றையும் மக்களுக்கானதாக மாற்றிட இயங்கும் “மக்கள் குரல்’’ இயக்கம் இவர்களுடன்  இயங்கும் சூன்யமும், வித்தைகளும் கற்றறிந்த கறுப்பின மந்திரவாதி என நகர்ந்து செல்லும் புனைவுக் களம் கண்டுரைப்பது “அதிகாரம்’’ என்கிற மாயாவியின் நுட்பத்தையும் வக்கிரத்தையும் தான். வரலாறு என்று எழுதி வைக்கப்பட்டிருக்கும் இரண்டு வரிகளை ஊதி, ஊதி உருவாகியிருக்கும் இடைவெளிகளில் தன்னுடைய புனைவெனும் மாயம் கொண்டு நிஜமான வரலாற்றை எழுதிப்பார்க்கிறார் கூகி நிகழ்கால அரசியலை கதைக்களனாக்கி வெளிப்படுத்த வேண்டிய நாவல்கள் தமிழ் நிலமெங்கும் சிதறிக் கிடப்பதையே “கறுப்பின மந்திரவாதி’’ நம்மிடம் சொல்லிச் செல்கின்றான்.

Related posts