You are here
கடந்து சென்ற காற்று 

கடந்து சென்ற காற்று – 1: கால்களும் கைகளும்

ச. தமிழ்ச்செல்வன்

1

 நான் 1978இல் ராணுவத்திலிருந்து திரும்பி வந்து பால்வண்ணம் போன்ற கோவில்பட்டி மார்க்சிஸ்ட் தோழர்களால் ஈர்க்க்கப்பட்டிருந்த ஆரம்ப வருடங்களில் ஒரு நாள். தோழர் ஜவகர் வீட்டில் வைத்து நடந்த ஒரு கூட்டத்தின் முடிவில், (அப்போதெல்லாம் கோவில்பட்டி ரயில்வே தண்டவாளத்தைத் தாண்டி வயல்களுக்கு நடுவே அமைந்திருந்த தோழர் ஜவகர் வீட்டில்தான் ..என்ன அழகான ஒரு வீடு அது.. எங்களை மடியில் படுக்க வைத்து அன்பு கலந்த மார்க்சியப்பால் ஊட்டுவார்கள்) ஜவகர் என் கையில் ஒரு புத்தகத்தைக் கொடுத்துப் படிச்சுப்பாரு என்று  சொன்னார்.
அது விவசாய இயக்கத்தின் வீர வரலாறு என்கிற புத்தகம். எழுதியவர் கோ.வீரய்யன் என்று இருந்தது.அன்றுதான் அப்புத்தகத்தின் வழியேதான் தோழர் வீரய்யன் அவர்கள் எனக்கு முதன்முதலாக அறிமுகம். இளவேனில் வரைந்த அட்டைப்படத்தோடு வந்த அப்புத்தகத்தை தோழர் வைகறைவாணன் பெருமுயற்சி எடுத்து  கார்க்கி நூலகம் என்கிற பதிப்பகத்தின் பேரில் கொண்டுவந்தார்.அன்று கட்சிக்கென்று  ஒரு பதிப்பகம் இல்லை.  வைகறைவாணன் தங்கியிருந்த 15,சாரித்தெரு,தி.நகர் வீடு, அப்புறம் நான் சென்னை போனால் தங்கும் இல்லமாக என் அறிவை விரிவு செய்த ஆசான்களில் ஒருவராகப் பின்னர் ஆன தோழர் வீ.அரசுவை அறிமுகம் செய்துவைத்த இடமாக அந்த வீடு ஆனது ஒரு தனிக்கதை.
தீக்கதிர் செய்திகள் வழியாகவும் வெண்மணித்தீ,  சங்கம் படைத்த சரித்திரம் போன்ற சிறு நூல்கள் வழியாகவும் தொடர்ந்து தோழர் கோ.வீரய்யன் அவர்களை நான் பின் தொடர்ந்து வந்தேன்.பின்னர் தமுஎசவில் சேர்ந்து சுற்ற ஆரம்பித்த குடைராட்டின வாழ்க்கை ஆரம்பமான நாட்களில் அவரைச் சில மாநாடுகளில் கூட்டங்களில் நேரில் பார்த்தேன். தஞ்சையில் தமுஎச பொறுப்பாளராக இருந்த தோழர் மணியரசன் வழியாகவும் அன்றைய தமுஎச மாவட்டச்செயலாளர் தோழர் வே.மு.பொதிய வெற்பன்  வழியாகவும்  அவரைப்பற்றிக் கூடுதலாக அறிந்துகொண்டேன். தோழர்கள் பி.ராமமூர்த்தி, ஏ.பாலசுப்பிரமணியன், உமாநாத், நல்லசிவன் போன்ற அன்றைய சூரியன்களையே பார்த்துக்கொண்டிருந்த எனக்கு தோழர் வீரய்யன் போன்ற தலைவர்கள் முகம்  அன்றைய நாட்களில் சரியாகப் புலப்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
அவரை முழுமையாக வெளிக்கொண்டு வந்தது அவரே எழுதிய “செங்கொடியின் பாதையில் நீண்ட பயணம்” என்கிற சுயசரிதை நூல்தான். அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்துடன் இணைந்து பாரதி புத்தகாலயம் வெளியிட்ட நூல் அது. அந்த நூலின் முன்னுரையில் அவர் எழுதியிருக்கும் சில வரிகள் தினசரி என்னை மிரட்டிக்கொண்டிருக்கும் வரிகளாகும். அவ்வரிகள், “தமிழகத்தின் தஞ்சை மாவட்டத்தில் 1943 முதல் 1952 வரை 10 ஆண்டுகள் நடைபெற்ற கீழத்தஞ்சையைப் புரட்டிப்போட்ட அந்த மகத்தான நினைவுகளை அன்று களத்தில் நின்று வழிகாட்டிய தலைவர்களான மணலி கந்தசாமி, பி.சீனிவாசராவ் ஆகிய இருவரில் ஒருவர் தொகுத்து எழுதியிருந்தால் கேரளத்தின் கையூர் தியாகிகளை நினைவுபடுத்தும் “நினைவுகள் அழிவதில்லை” மராட்டிய வோர்லி ஆதிவாசிகள் போராட்டத்தை  விளக்கும் “மனிதர்கள் விழித்துக்கொள்ளும்போது” தோழர் சுந்தரய்ய்யா எழுதிய வீரத்தெலுங்கானா புத்தகத்தைப் போல கீழத்தஞ்சை நிகழ்வுகள் ஒரு சிறந்த காப்பியமாக வரலாற்றுக்குக் கிடைத்திருக்கக் கூடும்… விவரங்களைச் சேகரித்து இப்போது யாராவது எழுதினாலும் அது இயற்கைத் தன்மையுடன் அமையாது. அந்த இருவரில் ஒருவர் செய்திருந்தால் தான் இயற்கைத் தன்மையுடன் அமைந்திருக்க முடியும் என்பது என் ஆழமான கருத்து.
2009இலிருந்து நான் விவரங்களைச் சேகரித்துக் கொண்டிருக்கிறேன். 2010இல் தோழர் வீரய்யனின் இந்தப்புத்தகமும் இந்த முன்னுரையும் வந்து என் வயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டிருக்கிறது.
அது போகட்டும். இப்புத்தகத்தில் விரிந்து கிடக்கும் அவரது வாழ்க்கை தமிழராகப்பிறந்த ஒவ்வொரு ஆணும் பெண்ணும் வாசிக்க வேண்டிய அனுபவச்சுரங்கமாகும். எளிமையும் அர்ப்பணிப்பும் கொள்கைப் பிடிப்பும் உழைக்கும் மக்கள் மீதான மாறாத அன்பும் கொண்ட ஒரு போராட்ட வாழ்க்கை  இந்த 300 பக்கங்களில் பதிவாகியுள்ளது. கொஞ்சம் பொதுவேலை பார்த்துவிட்டு ரொம்ப சுய இரக்கம் கொள்ளும்  நம் போன்ற மத்தியதர வர்க்க ஊழியர்களைக் குற்றஉணர்வு கொள்ளச்செய்யும்  சத்தியமும் ஜீவனுமான ஒரு வாழ்க்கை.
தோழர்கள்  சீனிவாசராவ், மணலி கந்தசாமி போலவே தஞ்சை மண்ணின் குறுக்கும் நெடுக்குமாக நடந்து நடந்தே அலைந்து திரிந்த இயக்க வாழ்க்கை இப்புத்தகத்தில் விரிகிறது. எத்தனை கிராமங்கள், எத்தனை வயல் வெளிகள், களத்து மேடுகள் என அலைந்து திரிந்தவை  தோழர் வீரய்யனின் இந்தக் கால்கள். எத்தனை கூட்டங்கள், வகுப்புகள், அதிகார வர்க்கத்தின் பேச்சு வார்த்தைகள், மேடைகள், பொதுக்கூட்டங்கள் என நின்று சாதித்த கால்கள்.உழைக்கும் மக்களுக்காக வாதாட எத்தனை அரசு அலுவலகங்கள், நீதிமன்றக் கூண்டுகள், காவல் நிலையங்களின் படிகளில் ஏறி இறங்கிய கால்கள்.உலகளந்தான் என்று ராஜராஜ சோழனுக்கு ஒரு பேர் உண்டாம். உண்மையில் உலகளந்த கால்கள் எங்கள் தோழர் வீரய்யனின் கால்கள் அல்லவா?
அந்தக் கால்கள் இன்று நடக்கும் பலம் இழந்து படுக்கையில் தளர்ந்து கிடக்கும் காட்சி மனதை உருக்குவதாக இருக்கிறது. சென்ற வாரம் அவர் வாழும் சித்தாடி கிராமத்து வீட்டுக்குப் போயிருந்தேன்.அதற்காக தோழர் ஐ.வி. நாகராஜனுக்கு நன்றி சொல்ல வேண்டும். குறுகிய காலம்தான் இருந்தது. வாகனம் கொடுத்து அனுப்பினார் அவர்.அந்த வீட்டில் அவர் படுத்திருந்த கோலம் இப்ப நினைத்தாலும் எனக்கு மனமும் கண்களும் கலங்குகின்றன. அவருடைய கால்களையே நான் பார்த்துக்கொண்டிருந்தேன். கால்களில் வீக்கம். ஒரு தலையணைக்கு மேல் கிடத்தியிருந்த கால்கள்.
எனக்கு மலையாள இயக்குநர் அரவிந்தனின் உத்தராயணம் திரைப்படத்தில் வரும் ஒரு காட்சி நினைவிலாடியது.வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது ரகசியமாக ஓடிஓடிப் புரட்சிப்பணியாற்றிய ஒரு தோழரின் கால்கள் செயலற்றுக் கிடப்பதை இணை ஷாட்டுகளின் மூலம் காட்டியிருப்பார். ஓடிய கால்களையும் தளர்ந்து கிடக்கும் கால்களையும் மாற்றி மாற்றிக் காட்டுவார். 1932இல் பிறந்த தோழர் வீரய்யனின் இந்த 82 ஆண்டுகால வாழ்க்கையில்  60 ஆண்டுகளுக்கு மேலான பொதுவாழ்க்கை முழுவதுமே ஓட்டமும் சாட்டமும்தானே. 60 ஆண்டுகள் ஓடிய கால்கள் ஓய்வைக் கோரியபோதெல்லாம் அவர் தந்ததில்லை. சுயநல மறுப்பில் வளர்ந்த  இயக்கவாதியல்லவா? இன்று  வேறு வழி இன்றி ஓய்வு கொள்ளும் அந்தக் கால்களை மானசீகமாகத் தொட்டு வணங்கி (கால்களை வணங்கும் பழக்கம் நம் இயக்கத்தில் அனுமதிக்கப்பட்டதில்லை அல்லவா) விடைபெற்றேன்.”ரொம்ப நன்றி’’  என்று சொல்லி விடை கொடுத்தார்.நான் பார்க்க வந்ததுக்கு நன்றி என்று சொன்னாரா, தகவல்கள் சேகரித்து எழுதுவதற்காக நன்றி என்று சொன்னாரா? சென்ற முறை அவரைப் பார்க்கச் சென்ற போது நடமாடிக் கொண்டிருந்தார். என்னைப் பார்த்ததும் “ஆயி…. எழுத்தாளர்  வந்திருக்கார்.. காப்பி கொண்டா ஆயி’’ என்று மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்றார்.நான் மிகுந்த கூச்சமடைந்தேன். எழுத்தாளனைக் கொண்டாடும், மதிக்கும், என் இயக்கமாக அவரைக் கண்டேன். அது போதும் அது போதும் என்று இருந்தது அப்போது.
தோழர்கள் சீனிவாசராவ், ஜீவானந்தம், என்.சங்கரய்யா, ஆர்.நல்லக்கண்ணு என விடுதலைப் போராட்ட காலம் தொட்டு இன்றுவரை இந்தத் தமிழ் மண்ணில் வாகன வசதிகள்  இல்லாமல் நடந்து நடந்தே மக்களுக்காக இயக்கப்பணியாற்றிய அந்தப் புனிதமான கால்களையெல்லாம் நினைத்துப் பார்க்கிறேன். என்னையறியாமலே கண்களில் நீர்த்திவலைகள் உருண்டு என் கன்னங்களில் வழிகின்றன.
கூட்டம் கூட்டமாகப் போய் ஏதேதோ பண்டாரங்களின் கால்களைக் கழுவித் தலையில் தண்ணீர் தெளித்துக்கொண்டிருக்கும் என் இனிய தமிழ் மக்களை நினைத்துத் தலையில் அடித்துக்கொள்கிறேன்.

2

சென்ற அக்டோபர் 2 ஆம் தேதியன்று நாமக்கல்லில் தோழர் கு.சின்னப்பபாரதி அறக்கட்டளையின் சார்பாக விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.வாழ்நாள் சாதனையாளர் விருது தோழர் அருணனுக்கு அவரது காலந்தோறும் பிராமணியம் நூல் தொகுதிகளுக்காக வழங்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் தோழர் ஜி.ராமகிருஷ்ணன்  விருதினையும் ஒரு லட்ச ரூபாய் பண முடிப்பையும் அவருக்கு வழங்கினார். சென்ற ஆண்டு ஒரு லட்சமும் விருதும் தோழர் என்.சங்கரய்யா அவர்களுக்கு வழங்கப்பட்டது. அந்தப் பணத்தை தோழர் சங்கரய்யா தமுஎகசவின்  வளர்ச்சிக்காக என்று அதே மேடையில் என்னிடம் கொடுத்துவிட்டார். இன்று தனக்கு வழங்கப்பட்ட ஒரு லட்சத்தை தோழர் அருணன் தீக்கதிர் வளர்ச்சி நிதிக்கென தோழர் ஜி.ராமகிருஷ்ணனிடம் அதே மேடையில் வழங்கி விட்டார்.சொத்துக்குவிப்பு அரசியல் காலத்தில் இன்றும் நம்முடைய தோழர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள் என்கிற பெருமித உணர்வு பொங்க நான் பின்வரிசையில் நின்று கொண்டிருந்தேன்.
இது  இடதுசாரி  இயக்கத்தில் இயல்பான  ஒன்றுதான். ஒன்றும் புதிதில்லை. ஆனால் அன்று தோழர் அருணன் ஆற்றிய ஏற்புரை ஓர் ஆழ்ந்த உணர்வு மிக்க உரையாக இருந்தது. அறிவார்ந்த எழுத்துக்கும் பேச்சுக்கும் சொந்தக்காரரான அவரை மிகுந்த உணர்ச்சிகரமான மனிதராக  அன்று  மேடையில் கண்டேன். “கதிரேசனைப் பெற்று வளர்த்தது வேண்டுமானால் என்னுடைய பெற்றோராக இருக்கலாம்.ஆனால் அருணனைப் பெற்று வளர்த்து ஆளாக்கியதெல்லாம் தீக்கதிர் நாளிதழும்  மார்க்சிஸ்ட்  கட்சியும்தான்’’ என்று துவங்கிய அவரது  உரை நான்  வாழ்நாளில் கேட்டிராத உரை. அவருடைய பேச்சு மட்டுமல்ல ஒவ்வொரு வார்த்தையையும் உச்சரிக்கும்போது அவரே அறியாமல் அவர் வெளிப்படுத்திய உடல்மொழி பேச்சுக்கு இன்னும் செறிவையும் பொருளையும் கூட்டின. தீக்கதிர் பற்றிப்  பேசும்போதெல்லாம் இடது  கை மைக்கைப் பிடித்திருக்க இன்னொரு கை அம்மாவின் நாடியைக் கொஞ்சுவதுபோல உயர்ந்து தாழ்ந்து கொண்டிருந்தது. மார்க்சிஸ்ட் கட்சி பற்றிப் பேசும்போது நிலைத்து நின்ற கால்களோடு இரு கைகளையும் விரித்து விரித்துப் பேசிக்கொண்டிருந்தார்.இப்படியாகப் போய் கடைசியில் ஒவ்வொருத்தருக்காக நன்றி சொல்லி தன்னுடைய துணைவியார் பற்றிக் குறிப்பிடும்போது “என்னை என்றும் இன்றும் ஒரு குழந்தையைப்போலப் பார்த்து அரவணைக்கும் என் துணைவியாருக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை இந்த மேடையில் சொல்ல வேண்டும்” என்று அவர் சொல்லிக்கொண்டிருந்தபோது அவரே அறியாமல் கால்கள் இரண்டும் இணைந்து நிற்க இரு கைகளையும் கூப்பி வணங்கினார். அவருடைய துணைவியார் அங்கு இல்லை. சென்னையிலிருந்தார். அந்தத்திசை நோக்கி அவர் வணங்கியதாக எனக்குப் பட்டது. பின்னால் அமர்ந்து இதையெல்லாம் சாட்சியாகப் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு அந்த நிமிடத்தில் உடலும் உள்ளமும் நடுங்கியது. கண்கள் பனித்ததைச் சொல்ல வேண்டியதில்லை. காலமெல்லாம் தனிமையைப்  பரிசாகப் பெறும்  நம் இயக்கத் தோழர்களின் வாழ்க்கைத் துணைவியரான பெண்கள் எல்லோருக்குமான வணக்கமாக அது இருந்ததாக நான் உணர்ந்தேன்.
அதற்கு மேலாக கடைசியில் மேடையின் நடுவில் தோழர் கு.சின்னப்பபாரதியும் அவருக்கு இடப்புறம் தோழர் ஜி.ராமகிருஷ்ணனும் வலப்புறம் அருணனும் நிற்க புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள். அப்போது திடீரென கு.சி.பா. தன் இரு கைகளாலும் இரு பக்கமும் இருந்த இரு தோழர்களையும் இறுகக் கட்டிக்கொண்டார். ஒருபுறம் கட்சி மறுபுறம் இலக்கிய இயக்கம். எதிர்பாராத  இக்காட்சி மனதையும் கண்களையும் நிறைத்தது.
என்ன ஓர் நாள்அது!
(தொடரும்)

Related posts