You are here
நூல் அறிமுகம் 

மூடுபனிச்சிறையில் வண்ணங்கள்

மெல்லியமிகமிகமெல்லியகலகக்குரல்

நா. விச்வநாதன்

தலைமுறைகள் தாண்டியும் பெண்களின் வளர்ச்சி குறித்த விவாதங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. காலந்தோறும் பெண்களின் நிலை என்ற சொற்பயன்பாடே சரியாக இருக்கும். பொருத்தமானதும்கூட. பெண் என்பவள் சுமக்கும் ஒரு சாதனம்தான். நல்லவைகளையோ, அல்லாதவைகளையோ ஏற்பதும் சுமப்பதும் பெண்கள்தாம். நிலஉடைமைச் சமூகத்தில் இதுதான் மேலான அறம். பெண் போகப் பொருள். அடுத்த படி நிலை குடும்பத்தை வழிநடத்துவது என்பதான மறைமுக வன்முறை. இந்திய மரபில் ஆண், பெண் சமநிலை இருந்ததே இல்லை. இந்த சமத்துவமற்ற தன்மையைப் பெருமையாகத் தூக்கிப் பிடிக்கும் வரலாறு. இந்தியப் பெண் சமூகம் என்பது இன்றளவும் அடிமைச் சமூகம்தான்.
‘மூடுபனிச் சிறையில் வண்ணங்கள்’ என்ற இந்தி நாவலை மொழிபெயர்ப்பில் படித்தபோது இது மேலும் உறுதிப்பட்டது. பெண்களின் வீடு சிறைதான். இதமான முன்பனிச் சிறையில் இருந்தாலும் பெண்களின் முகங்கள் மங்கலாகவே தெரிகின்றன. பொலிவற்றதாயும் தென்படுகின்றன. சீதை, பாஞ்சாலி முதலான அகலிகை உட்பட வதைகளிலிருந்து மீள்வதான ஒரு விஷயத்தையே இதிகாசங்கள் புனைவுகள் உயர்த்திப் பிடிக்கின்றன தெய்வத்தன்மையேற்றி, நமது தொன்மக் கதைகள் மிகச் சுவாரசியமாகவும், நிலைபெற்றதாகவும் இருப்பதற்கும் காரணம் ஆணாதிக்கச் சிந்தனைதான். பெண்களும்கூட இதில் உட்படுத்தப்பட்டு தன் வதை கதைகளை ரசிக்கும் மனப்பக்குவத்தைப் பெற்றுவிடுகின்றனர். இந்திய மரபின் அழுத்தமான பிரிக்க முடியாத கூறுதான் இது. வரைவின் மகளிர், பெண்வழிச் சேரல் என்று வள்ளுவப் பெருந்தகை அதிகாரமே வகுப்பார். அத்திப் பூவைப் பார்க்கலாம், வெள்ளைக் காகத்தைப் பார்க்கலாம். மீனின் பாதங்களைத் தண்ணீரில் பார்த்து விடலாம் பெண்களின் மனதைப் பார்க்கவே முடியாது. கள்ளம் நிறைந்தது என்று இந்திய நீதி சாத்திரம் விவரிக்கும். பெண்களை அடிமைப்படுத்தி வழிபடுவதை அறமாக்கிவிடும் புத்திசாலித்தனம் நீட்சியானது.
எனவே இந்த நாவலை வாசிக்கும் போதே இதன் போக்கும் முடிவும் பிடிபட்டு விடுகிறது. மூலத்தால் கோவிந்த மிஸ்ராவின் கதை சொல்லல் தன்மையும் இப்படியாகத்தான் இருந்திருக்கக்கூடும். வி.பத்மாவதியும் இதைச் சுவாரசியமற்று மொழி பெயர்த்திருக்கிறார். கூட்டுக் குடும்பங்களில் வழிவழி பெருமை பேசும் விவகாரங்கள் நிகழ்வுகள் லேசான திருப்பங்கள் என்பன அலுப்பூட்டுபவைதாம். இந்தியக் குடும்ப நடைமுறைகள் சடங்குகள், பழக்க வழக்கங்கள் ஏறத்தாழ ஒரே மாதிரியானவைதாம். எந்த மொழியில் எழுதப்பட்டாலும் இவைதாம். பெயர்களின் மாற்றங்கள் தவிர வேறேதும் இல்லை.
பெண்கள் எப்படியான வாழ்க்கை வாழ்ந்து துறந்து பெருமையைக் காப்பாற்றியாக வேண்டிய இலக்கண வரையறைகளை சொற்குவியல்களால் சொல்வது ஒரு முறை.
இந்நாவலில் வரும் சரஸ்வதி, சாட்டோ பாபு, அஜய் முதலான பாத்திரங்கள் பதட்டத்தோடே இருக்கிறார்கள். ஆனால் வாழ்க்கை ரசமானதுதான் என்று தம் உரையாடல்களின் மூலம் அறிவிக்கிறார்கள். இந்த அறிவிப்புகளுக்குப் பின்புறம் ஒரு மரபின் உந்துதல் இருக்கிறது. மீறமுடியாத ஒரு கால்தளை இருக்கிறது. ஒவ்வொரு தலைமுறையிலும் பெண்களின் வளர்ச்சி பற்ற¤ய விவரங்கள் – தேசத்தின் எல்லாப் பிரதேசங்களுக்கும் பொதுவானது இது.
நான்கு தலைமுறைகளாக பெண்களின் வளர்ச்சி பற்றிய விவரங்களை யதார்த்தமாகச் சித்தரிப்பதாக இந்நாவல் அடையாளப்படுத்தப்படுகிறது. இந்திமொழி நாவல்களுக்கே உரிய அம்சங்கள் மலிந்து கிடக்கின்றன. ஏராளமான பாத்திரங்கள் கசகசவென்ற உரையாடல்கள், அலுப்பூட்டும் வருணனைகள், மொழிபெயர்ப்பாளர் என்ன செய்ய முடியும். முடிந்தவரை நேர்த்தியாகச் சொல்ல முற்பட்டிருப்பது பாராட்டுக்குரியதுதான். சமூகத்தளைகள்…. மூடுபனிபோல் அல்ல. இருளாகத்தான் அழுத்துகின்றன. மறைக்கின்றன. பெண்களின் வாழ்வும் வளர்ச்சியும் அவர்களுக்கான இயக்கமும் இதுதான்.
இந்த நாவலில் பெண்களின் பலதலைமுறை வளர்ச்சிப் படிநிலை பேசப்படுவதாக கருத்து இருக்கிறது. பெண்களின் வளர்ச்சி கூட்டுக் குடும்பங்களில் சாத்தியமே இல்லை என்று சமூக அறிவியல் முடிவு தருகிறது. இதில் பேசப்படும் வளர்ச்சி, பெருமை முதலான சொற்களுக்கான பொருள் வாசகனுக்கு லேசாகத்தான் புலப்படுகிறது. நர்மதையின் யாத்திரை சிறையிலிருந்து விடுபட்டுப் பாய்ந்து நீர்வீழ்ச்சியாகி நதியாகப் பாய்வதில் தொடர்கிறது. எங்கெங்கு குப்பைகள், வெளிப்பகட்டு கண்மூடித்தனம், நசுக்குதல், பறித்தல் ஆகியவை இருக்கிறதோ அங்கே ஆழமற்று மேலோட்டமாகப் பாய்ந்து சென்று விடுகிறது என்ற வரிகளின் மூலம் பெறப்படுவது என்னவாயிருக்கும்? ஆண் நதிக்கு சாதுர்யம் இருக்கும். புறப்பட்டவுடனே பாய்ந்தோட ஆரம்பித்து விடுகிறது. கீழே குதித்து மறைந்து போய் விடுகி¢றது. பின்பு எளிதில் பிடிபடுவதில்லை. ஆணல்லவா என்ற விடையும் கிடைக்கிறது.
அப்பாவின் கால்கள் அடிக்கடி வருகின்றன. பின்னாலிருந்து பார்க்கும்போது வேட்டியில் தெரியும் அவரது கால்கள் ஒல்லியானவை. ஆனால் வலுவானவை. ஓயாமல் நடக்கும் கால்கள். வேகமாகவும் போகாது பின்னாலும் தங்காது. சென்று கொண்டே இருக்கும். இதுதான் வாழ்க்கையின் குறிப்பான நடுத்தர மக்களின் வாழ்க்கையும் என்பதைத் தேர்ந்த வாசகன் பிடித்துக் கொள்வான். இந்தக் கால்கள் அடிக்கடி வருகின்றன. மெல்ல நடக்கின்றன.
மரணம் நிச்சயமானது. வந்தே தீருவது, பிறந்தவுடன் உறுதி செய்யப்படுவது. ஆனால் அதைக் கடந்து விட வேண்டும் என்று மனிதன் முனைகிறான். ‘மக்கள் இறப்பார்கள் என்று தெரியும் ஆனால் ஏனென்று தெரியாது” என்று ஒரு பாத்திரம் பேசும். மயான வழியில் நடப்பது அனைவருக்குமே சிரமமானதுதான். அதில் ஏதுமில்லை ஏதும் நிகழ்ந்து விடப்போவதில்லை என்றாலும், அப்பா அதில் தனியாக நடக்கச் சொல்கிறார். அப்பாவின் செயலில் வாழ்க்கைக்கான கல்வி இருக்கிறது என்ற பெருமிதமும் அச்சம்தாண்டி முன் நிற்கிறது, அழகானது. வாழ்க்கை வாழ்ந்துவிடத்தான் என்ற அம்சம் பக்கங்களின் நெடுக இழையோடுகிறது.
‘முப்பது ஆண்டுகள் அவற்றைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு துள்ளியவாறே நான் மீண்டும் அந்த நாட்களைக் கைப்பற்ற நினைக்கிறேன். இது சிறுவயது அறியாமையால் பிறந்தது என்றாலும் உண்மை அது தான். தப்பிவிட்ட அழகானவற்றை உள்ளங்கைகளில் ஏந்தி பனித்துளிகளைப் போலப் பருக நினைக்கிறேன் ஒவ்வொரு பொருளையும் அறிந்து கொண்டு…’ என்பன போன்ற வரிகள் கவிதைக் கூறுகள் சார்ந்தவை.
இந்திய சமுதாயம் விலங்குகளைப் போலவும் புழு பூச்சிகளைப் போலவும் விழுந்து இறப்பவர்களைப் பற்றி என்ன சொல்வது. பெண்ணின் திருமணம் என்பது எது கிடைக்கிறதோ அதைத் தலைகுனிந்து ஏற்றுக் கொள்வதுதான்.  பெண்ணுக்குரிய இருபணிகள் கஷ்டப்படுவதும் பொறுத்துக் கொள்வதும்தான். திருமணத்திற்கு எதிராகக் கொஞ்சம் சொன்னால் கூட ஏற்று விழுங்க முடிந்ததில்லை. மனதைத் தினமும் கொல்வது வாழ்க்கை முழுவதும் கைதியைப் போல் இருத்தல் என்பவையாவன குரல்கள் கேட்பது புரியவே செய்கிறது. வாழ்க்கை மிகத் துயரம் மிக்கது என்றும், நொடியில் அது மேன்மையான மகிழ்ச்சியைத் தருகிறது என்பதும் நெடுகக் கிடைக்கும் செய்திகள்.
சடங்குகளை நிராகரிக்கச் சொல்வதன் மூலம் பெண்களின் தளைகள் அறுபடலாம்  என்ற நம்பிக்கை அடிக்கடி நாவலில் கூறப்படுகின்றது. இதன் நீண்ட அலுப்பூட்டும் உரையாடல் தன்மையைத் தவிர்த்துவிட்டு நாவலை  வாசிக்கவேண்டும். பெண்களின் பின்வாங்கல் என்பது எப்போதுமிருப்பதுதான்.
‘‘சடங்குகளில் மூழ்கிய அச்சமூகத்தில் நான்தான் மிகச் சிறுவயது உறுப்பினரானேன்.” என்ற வரிகள் இதை உறுதி செய்கின்றன.

Related posts