You are here
தூரத்து புனையுலகம் 

இளம்பிராயத்து நினைவுகளும் மனப்பிறழ்வின் விசித்திரங்களும்

ம.மணிமாறன்

உடைந்த வளையல்கள், வடிவமழிந்த  ஓடுகள், கிழிந்து எதிர்ப்படும் துணிகள், இவை யாவும் யாதொன்றையோ ஞாபகமூட்டும் குறியீடுகள். நீரற்ற கிணறுகளை உற்றுப்பார்க்கிற யாவரின் மனத்திரைக்குள்ளும் கிணற்றுச் சுவர்களில் இருந்து டைவ் அடித்து நீரை நிலைகுலையச்  செய்த தன்னுடைய சேக்காளிகளின் முகம் வரத்துவங்கிவிடுகிறது. எப்போதும் வ¤ழித்துக்கொள்ளக் காத்திருக்கின்றன நினைவுகள். சாணி மெழுகிய தரையினில் உருள்கிற பகடைக் காய்களுக்குள் நூற்றாண்டு கால கதைகள் உறைந்து கிடக்கின்றன. பகடைகளில் பதிந்திருக்கும் ரேகைகளுக்குள் தான் அந்த ஊரின் ரகசியங்கள் சேகரமாகியிருக்கிறது. இவற்றை அறிந்திட மேலைத்தேய தர்க்கங்களால் இயலாது. தத்துவம், கோட்பாடு, உளச்சிக்கல் என தர்க்கித்துக் கிடந்தன மேற்கத்திய கதை மொழிகள். கீழைத் தேய தொன்மங்களால் அவற்றைக் கலைத்து ஊடாடி புதிய மொழிதலைக் கண்டடைந்தவர் முரகாமி. முரகாமியின் வாசகர்கள் உலகெங்கும் விரிந்து கிடக்கிறார்கள். வெளிவந்த முதல் நாளிலேயே மில்லியன் கணக்கில் விற்கிற அவருடைய படைப்புகளின் ஆதாரசுருதி சுவாரஸ்யம்தான். தமிழிலும் தன் கதைமொழியால் ஜப்பானிய ஆன்மாவை தரிசிக்கத் தந்திட்ட ஹாருகி முரகாமியின் நாவல் நோர்விஜியன் வுட். இதனை சுப்பிரமணியம் மொழிபெயர்த்திருக்கிறார்.
நடந்து செல்லும் பாதையினில் எதிர்ப்படும் இசைக்குறிப்பு எங்கெங்கு அழைத்துச் செல்லும் என்பதை யார் அறிவர். அதற்கு இருபதாண்டுகளுக்கு முன் பயணித்திடும் ஆற்றல் இருப்பதை வாசகன் அறிகிறபோது, அவனுக்குள் கடந்த காலத்தின் ஞாபகங்கள் திறந்துகொள்வதைத் தவிர்க்கவே முடியாது. அப்படித்தான் முரகாமியின்  நோர்வீஜியன்வுட் உங்களையும் என்னையும் பதின்பருவத்து நாட்களுக்குள் கொண்டுபோய்ச் சேர்க்கிறது. காற்றில் கலந்து வரும் இசைக்குறிப்பு அவனுக்கு அவனுடைய பதின்பருவத்துத் தோழனை, தோழியை ஞாபகமூட்டுகிறது. தமிழ் எழுத்தாளர்கள் தயங்கிக் கொண்டிருக்கும் பாலியல் உளச் சிக்கல்களை மிக எளிதான மொழியில் கடக்கிறார் முரகாமி. நாவல் டோரு வாட்டனபியின் நாற்பதாவது வயதின் ஞாபகக்கிடங்கினில் துளிர்விடுகிறது. அவனுடைய இருபதாவது வயதின் நாட்கள் முழுவதும் கொண்டாட்டமும், களிப்பும், துயருமாக வெளிப்படுகிறது.
இறந்து போனதாக நம்பப்படுக¤ற நாட்களுக்குள் ஊடுருவிச் சென்று அதன்மீது பளீரென வெள்ளை வெளிச்சத்தைப் பாய்ச்சிட விரும்புகிறது மனம். யாவற்றையும் கண்டறிந்தபோதும் மனதின் ஆழத்திற்குள்ளும் உறைந்து கிடக்கின்றன மற்றவர்களுக்கு மறுக்கப்பட வேண்டிய ரகஸியங்கள். நாவலெங்கும் விதவிதமாக மீட்டப்படுகிறது இசை. வாழ்நாள் முழுக்க தன்னோடு இயைந்திருக்கும் இசையின் துளிகளுக்கு யாவற்றையும் மீட்டெடுத்திடும் பேராற்றல் உண்டு என நம்புகிறான் வாட்டனபி. பீட்டில்ஸ் இசைக் குழுவின் நோர்விஜீயன் வுட் இசைத் தொகுதி அவனுடைய பிரியத்திற்குரியவர்களை ஞாபகமூட்டுகிறது. ஞாபகங்களை அவனே அடுக்குகிறான். மிகச் சாதாரணமான பல்ப் பிக்ஸன் ஆகச் சகல சாத்தியமும் கொண்ட கதைக்களனை முரகாமி எப்படி நுட்பமாகக் கையாள்கிறார் என்பது ஆச்சர்யமிக்கதாக இருக்கிறது. தன்னுடைய தோழியிடம் கூறுகிறான் வாட்டனபி. ‘‘ஒருத்தரை மற்றவர் எப்போதைக்குமா கவனிச்சுக்கிறது சாத்தியமே இல்லை. நீ எப்பவும் ரொம்ப இறுக்கமா இருக்கிறதனாலதான் மோசமானதையே எதிர்பார்க்கிற உன்னோட உடலை இயல்பா விடு. மற்றதெல்லாம் தானாகவே லேசா ஆயிடும்.’’ இப்படியான உரையாடல்கள் நாவலெங்கும் நிகழ்ந்து படைப்பினை கலைத்தன்மை மிக்கதாக உருவேற்றுகின்றன.
யாவருடைய இளம்பிராயத்து நினைவுக்குள்ளும் அவரவர்களுடைய ஹாஸ்டல் வாழ்க்கையின் கசப்புகள் படிந்திருக்கின்றன. தன்னுடைய அறைத் தோழனாக அமைந்திட்டவரை பின்னாட்களில் எதிர்கொள்கிறபோது நாம் அடையும் பரவசத்தை எழுதிட முடியாது. அப்போதைய அவனின் சேஷ்டைகள் நம்முன் விரிவதையும் தவிர்க்கவே முடியாது. ஸ்டோர்ம் ட்ரூப்பர் வாட்டனபியின் அறைத் தோழன். சுத்தம், ஒழுங்கு இவற்றின் அடையாளம் அவன். மாணவர்களின் துயிற்கூட அறையின் ஒற்றைச் சாயல் கூட அற்ற இவர்களுடைய அறையை மற்ற மாணவர்களைப் போலவேதான் இவனும் வெறுக்கிறான். ஆனாலும் என்ன செய்வது என்றே அவனோடு பழகிக் கொள்கிறான். அவன் அறையை விட்டு விலகியபோதும்கூட அவனிடமிருந்து வாட்டனமிக்கு சுத்தமும் ஒழுங்கும் படிந்து விடுகிறது.
வெளிப்படையாக அவனைக் கேலியும், கிண்டலும் செய்துகொண்டிருந்த வாட்டனபி தானறியாது எப்படி அவனுடைய செயல்கள் தனக்குள் புகுந்தன என ஆச்சர்யம் கொள்கிறான். மிகச் சாதாரண நிகழ்விது என்று எதையும் வாழ்வில் கடந்து போகமுடியாது. எல்லாவற்றையும் பரிசீலனைக்கு உட்படுத்தத்தான் வேண்டும். துயிற்கூடத்தில் கச்சிதமாக சூரிய ஒளிக்கதிர் உதயமாவதற்கு முன் ஏற்றப்படும் தேசியக் கொடி இரவினில் பறப்பதில்லையே ஏன்?  தேசம், தேசியம், தேசியப் பெருமிதம் இவை யாவற்றிற்கும் தேச, கண்ட வித்தியாசங்கள் இல்லை. நம்முடைய தேசியக் கொடியும் கூட மாலைப் பொழுதினில் இருள்படிவதற்கு முன்பாக இறக்கப்படுகிறது. நாம் கேட்கத் தவறிய கேள்விகளை முரகாமி அடுக்கிப் பார்க்கிறார். கொடி ஏன் இரவில் இறக்கப்படுகிறதென நான் அறிந்திருக்கவில்லை. இருள் பொழுதிலும்  தேசம் இருக்கத்தான் செய்கிறது. எண்ணற்ற நபர்கள் இரவெல்லாம் வேலை செய்கிறார்கள். ரயில்வே கட்டுமானப் பணியாளர்கள், வாடகைக் கார் ஓட்டுனர்கள், மதுவிடுதிப் பணிப் பெண்கள், தீயணைப்புப் பணியாளர் மற்றும் இரவு நேர காவல் பணியாளர்கள். இத்தகைய நபர்களுக்கு கொடியின் பாதுகாப்பை ஏன் மறுக்க வேண்டும்?
நாவலை ஒரு நேர்கோட்டுப் பாதையில் நகர்த்திச் சென்றிட முரகாமிக்கு கதையின் மாந்தர்கள் துணை செய்கிறார்கள். நோர்வீஜியன் வுட் இசைத்தொகுதி டோரு வாட்டனபிக்கு கிஸீகி எனும் பால்யத் தோழனின் மரணத்தை நினைவூட்டுகிறது. கிஸீகியின் ஞாபகங்களில் இருவரின் தோழியான நாரோகோ வெளிப்படுகிறாள். நாரோகோவை பார்த்திடச் சென்ற நாட்களில் அவளுடைய அறைத்தோழி வாட்டனபியுடன் ஊடாடுகிறாள். இவர்களுடைய வாழ்க்கை, அவர்கள் சாகஸமின்றி இயல்பாக அதனை எதிர்கொள்வதைத் தான் நாவலாக்கியிருக்கிறார் முரகாமி. கிஸீகியின் தற்கொலை தந்த வாதையிலிருந்து தப்பிச் சென்றிடவே விரும்புகின்றனர் கிஸீகியின் பிரியத்திற்குரிய தோழன் வாட்டனபியும், கிஸீகியின் காதலி நவகோவும்.
மரணம், வாழ்க்கைக்கு எதிரானதாக அல்லாமல் அதன் ஒரு பகுதியாய் இருக்கிறது என்கிற புரிதலுக்கு பதின்மவயதினில் வருவது ஒன்றும் அவ்வளவு எளிதானதில்லை. அதனால்தான் வாட்டனபியும், நவகோவும் தப்பி ஓடுகிறார்கள். முகமறிந்த நபர்கள் ஒருவருமற்ற புத்தம் புதிய இடத்தில் வாழ்வது எனும்  முடிவைப் பதின் பருவத்தினில் எட்டிடும்படியான உளச்சிக்கல் எல்லோருக்கும் ஏற்படுவதில்லை. போரு என்கிற வாட்டனபிக்கு வாழ்க்கை தன்னுடைய நண்பனின் தற்கொலையால் நிர்பந்திக்கிறது. கிஸீகியின் தற்கொலை விரட்டிடத் தான் அவன் தூரதூரம் கடந்து டோக்கியோ வந்தான். அதனால் தான் நண்பனின் காதலியுடன் கட்டற்ற பிரியம் ஏற்படுகிறது. மரணம் எப்போதும் வாழ்க்கைக்கு விரோதமானதாகத்தான் யாவராலும் எதிர்கொள்ளப்படுகிறது. நிஜத்தில் மரணம் வாழ்தலில் ஒரு பகுதியாகத்தான் இருக்கிறது. ஒருபோதும் சுற்றித் தீர்க்கவே முடியாத பெருநகரமான டோக்கியோவை நோக்கி வாட்டனபியைப் போலவே கிஸீகியின் காதலி நவகோவும் வந்து சேர்கிறாள். யாரும் வந்துசேர யோசிக்கும் பெருந்தொலைவு இது என்பதனால் தான், தான் டோக்கியோ வந்ததாக அவளும் கூறுகிறாள். அவர்கள் அந்த நிமிடம் வரை அறியவில்லை. இருவரும் இனியான நாட்களை எதிர்கொள்ளப்போகும் வழிவகைகளை பால்ய காலத்து தோழனின் பிரியத்திற்குரியவளுடன் நடந்தே செல்கிற வாய்ப்பு உருவாகி மலர்கிறது. காயம்பட்ட  ஆத்மாக்களை சொஸ்தப்படுத்திடும் ஒற்றைச் சடங்கினைப் போல ஆன்மீக ரீதியிலான நிதான நடைப்பயணம் நாவலெங்கும் நடந்தேறுகிறது. எப்போதும் இருவரும் தங்களின் பிரியத்திற்குரியவனின் தற்கொலையைப் பற்றி ஒற்றை வார்த்தைகூட பேசிக் கொள்ளவில்லை. ஆனாலும் காலமும், சாத்தியங்களும் அவர்கள் இருவரையும் மிகுந்த நெருக்கமுடையவர்களாக   உருமாற்றி விடுகிறது.
காதல், சாகசம், கட்டற்ற புணர்ச்சி, ஒருபால் புணர்ச்சி ஏற்படுகிற சூழல் என நாவல் இளம் பிராயத்து மனநிலைகளையே எழுதிச் செல்கிறது. காலம் குறித்த தர்க்கம் விசித்திரமாகவும் நுட்பமாகவும் வெளிப்படுகிறது. கிஸீகி தன்னுடைய பதினேழாவது வயதினில் தற்கொலைக் குறிப்புகள் எதுவுமே எழுதி வைத்திடாமல் இறந்து போகிறான். அதன் பிறகு எத்தனை ஆண்டுகள் ஆனபிறகும் கூட அவனை வாட்டனபி நினைத்துக் கொள்ளும்போதெல்லாம் அவனுக்கு 17 வயதுதான். மரணம் ஒரு முற்றுப் புள்ளி அல்லது யாவும் முடிந்து போகிறது என்கிற எளிய புரிதலை எழுதிக் கலைக்கிறார் முரகாமி. தன்னுடைய நாற்பதாவது வயதினில் கிஸீகியின் வயது 17 தான். அவனுடைய இருபதுவயது நாட்களின் ஞாபகங்களுக்குள் பிரவேசிக்கிறபோதும் கிஸீகியின் வயது 17 தான். மரணம் மனிதர்களுக்கு வழங்குகிற நித்தியத் தன்மையை நுட்பமாக கிஸீகியின் வழியாக எழுதிப் பார்க்கிறார் முரகாமி. அதிலும் 17 வயதில் மரணிக்கிற கிஸீகி நாவலின் அரைப்பக்கத்தில் மட்டுமே வந்துபோகிறான். நாவலின் மையக் கதாபாத்திரத்தை அரைப் பக்கத்தில் கடந்து போகச் செய்துவிட்டு உபகதாபாத்திரங்களால் நாவலை நடத்திச் செல்கிற பெரும் துணிச்சல்காரர் ஹாருகி முரகாமி.
பல்கலைக் கழக வளாகங்களில் முகிழ்க்கிற ஆண், பெண் உறவுகள் நுட்பமானவை. அன்றைய நாட்களில் அவர்களுடைய உடலோடு, மனமும் தான் வளர்சிதை மாற்றங்களுக்கு உள்ளாகிறது. மிடோரி என்கிற பெண் இயல்பானவள் இல்லை. தாயைப் பறிகொடுத்தவள். தந்தையை மரணத்திற்கு அருகில் சந்தித்துக் கொண்டிருப்பவள். வாட்டனபியுடன் மிடோரி பெரும் பிரியம் கொள்கிறாள். எல்லாவற்றையும் கேட்கிறாள். எல்லாவற்றையும் என்றால் ஆசிய நிலத்துப் பெண்கள் இப்படியெல்லாம் உரையாடுவார்களா என்ன? என வாசகர்கள் கொஞ்சம் யோசிக்கிற உரையாடல்களை நிகழ்த்துகிறாள். ஆண்கள் எப்படி சுய இன்பம் செய்வார்கள். எத்தனை நாட்களுக்கு ஒரு முறை, ப்ளுபிலிம் பார்க்க என்னை எப்ப கூட்டிட்டு போவ என்கிறாள். அவள் ஒரு எக்ஸென்டர்க் கதாபாத்திரத் தன்மையில் எல்லாம் நாவலுக்குள் காட்சிப்படுத்தப்படவில்லை. இருவருக்கும் இடையில் நட்பு நீடிக்கிறது. ஆனாலும் எப்போதும் அவர்கள் பாலியல் உறவிற்குள் தங்களை ஈடுபடுத்தியதே இல்லை. மிடோரியின் குரலும், இயல்பும் இதுதான். Óஎன்னுடைய அம்மா இறந்த பிறகு நிச்சயமா நான் சோகமாதான் இருப்பேன்னு நினைச்சிருந்தேன். ஆனால் அப்படி நடக்கலை. துயரமாவோ, தனிமையாவோ நான் எதையும் உணரலை. அவங்களைப் பத்தி நினைச்சுக்கூட பார்க்கலை. இருந்தாலும் சிலசமயம் எனக்கு கனவுகள் வரும். சில சமயம் இருட்டுக்குள்ளிருந்து என் அம்மா என்னை உற்றுப் பார்த்து அவங்க இறந்ததுக்காக நான் சந்தோஷமா இருக்கிறதா என்னைக் குறை சொல்வாங்க. ஆனா நான் அவங்க இறந்ததுக்காக சந்தோஷப்படலை. நான் ரொம்ப வருத்தமாவும் இல்லை. உண்மையைச் சொல்லணும்னா நான் எப்பவும் ஒரு சொட்டுக் கண்ணீர் கூட சிந்தலை. ஆனா நான் சின்னவளா இருந்தப்ப என்னோட பூனை இறந்தப்ப ராத்திரி முழுக்க அழுதேன்..” இதுதான் மிடோரி, வாசகனுக்கு எக்ஸென்ட்ரிக்காக வெளிப்படுகிறவள். தனக்குள் பிறழ்வுக்குள்ளாகி கலங்கித் தெளிகிறாள். பித்தநிலையின் மாயத்தன்மை வசீகரமானது.
சிதைந்த உடையும், அழுக்கடைந்த முகத்தில் அப்பிக் கிடக்கும் மழிக்கப்படாத தாடியும் மொழிக்குள் அடங்காத சொற்பிரயோகம் என அடையாளப்படுத்தப் படுகின்றனர் மனப்பிறழ்வாளர்கள். நிஜத்தில் மனப் பிறழ்வென்பதன் உள்ளீடு என்ன என்பவற்றைக் குறித்த அழுத்தமான பதிவுகள் மிகவும் குறைவாகத்தான் தமிழில் வெளிவந்திருக்கிறது. கோபிகிருஷ்ணனின் மனப்பிறழ்வு சிகிச்சை மைய நாட்களின் ஞாபகங்களின் தொகுப்பாக வந்திருக்கிற ‘உள்ளேயிருந்து சில குரல்கள்’ நாவலும் கூட வாசக கவனத்தைப் பெறாமலே போய்விட்டது. இனி எழுத வேண்டும் அவர்களுடைய உளநடவடிக்கைகளை என்பதை உணர்த்துகிறது நோர்வீஜியன்வுட். ஹாருகி முரகாமி ஒருவிதத்தில் மனப்பிறழ்வின் விசித்திரங்களையே நாவலுக்குள் எழுதிப் பார்த்திருக்கிறார் என்பதை நாவலை வாசிக்கிற எவரும் உணர முடியும்.
நவகோவிற்கு எப்போதும் வார்த்தைகளை உச்சரிப்பதில் பெரும் சிக்கல். முதல் வார்த்தையை உச்சரித்த மறுநொடியில் அடுத்த வார்த்தை அவளிடம் இருந்து வெளியேற மறுக்கிறது. ஏன் தெரியுமா? முதல் வார்த்தை வெளியேறிய பிராக்ஷன் ஆப் செகன்ட்ஸ் ஆவியாகி விடுகிறது. பிறகு எப்படி அடுத்த வார்த்தை? வாயிலிருந்து வெளியேற வார்த்தைகள் மறுப்பதால் துயருகிற பெண் நவகோ. ஆனால் அவள் பக்கம், பக்கமாக கடிதம் எழுதுகிறாள். நவகோ தன் காதலனாக மாறிய வாட்டனருக்கு எழுதியிருக்கும் கடிதங்கள் மகத்தானவையாக வெளிப்படுகின்றன. தனக்குள் சொற்கள் இடுகிற கட்டளையினால் அடிக்கடி தற்கொலைக்கு முயன்று இறுதியில் மரணித்தும் போகிறாள். கிஸீகி என்கிற பதின்பருவத்துக் காதலனைப் போலவே இவளும் தற்கொலைக் குறிப்புகள் எதுவும் எழுதி வைக்கவில்லை. நவகோவின் மரணம் தந்த துயரைக் கடக்க முடியாது வாட்டனபியும் தான் பித்தநிலையில் தேசாந்திரியாய் அலைகிறான். அலைச்சல் இட்ட மருந்தினால் மனக்காயம் ஆறியதாக நம்பிய டோரு வாட்டனபி எழுபதுகளின் ஆசிய இளைஞர்களின் குறியீடு. கட்டற்ற வாழ்க்கையின் மீது பெரும் விருப்பத்துடன் அலைகிற ஹிப்பி இளைஞர்களால் நிறைந்திருந்தது அப்போதைய ஆசிய நாடுகளின் பல்கலைக்கழகங்கள். முரகாமியின் கல்லூரி நாட்களின் காட்சிப்பதிவுதான் இந்த நாவலும் கூட.
மனப்பிறழ்வு சிகிச்சை மையங்களைக் குறித்த தமிழர்களின் பொதுப்புத்தியைக் கலைத்து எழுத வேண்டிய அவசியம் இருக்கிறது என்பதனை முரகாமியின் அமிஹாஸ்பிடல் காட்சிகள் நமக்கு உணர்த்துகின்றன. எப்போதும் திறந்தே கிடக்கின்றன அறைகள். ஜன்னல்களுக்குக் கூட கதவுகள் இல்லை. காற்றும், வெளிச்சமும் உடலுக்கும், மனதிற்கும் பெரும் நிம்மதியைத் தருகின்றன. ஆட்கள் தன் விருப்பம்போல் நுழையவும், வெளியேறவும் செய்யலாம். இங்கு தான் ரெய்கோ என்கிற இசை ஆசிரியையைச் சந்திக்கிறான் வாட்டனபி. ரெய்கோ நவசோவுடன் அமிவிடுதியில் ஒரே அறையைப் பகிர்ந்து கொண்டிருப்பவள். ரெய்கோவிற்கும், வாட்டனபிக்கும் நிகழ்கிற உரையாடல்கள் மனப் பிறழ்வு சிகிச்சை மையங்களைக் குறித்த ஆழமான விமர்சனமாக வெளிப்படுகிறது. ‘இங்க நாம குரலை உயர்த்த வேண்டிய அவசியம் எதுவுமில்லை. நாம் யாரையும் எதற்காகவும் திருப்திப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. இங்கே ஒருவர் மற்றவருக்கு உதவ வேண்டும் அவ்வளவுதான்…”
அமி விடுதி அவரவர்களின் குறைபாடுகளை ஏற்றுக் கொள்ள வேண்டும். ‘நாங்கள் இங்கே இருப்பது குறைபாட்டை சரிசெய்வதற்கல்ல. நம்மை அந்தக் குறைபாட்டுக்குப் பழக்கிக் கொள்வதற்கு. நமது குறைபாடுகளை அடையாளம் கண்டு கொள்வதற்கும் ஏற்றுக் கொள்வதற்கும் இயலாமல் இருப்பதே இங்கு எல்லோரின் பிரச்சனையாய் இருக்கிறது. மனதின் குறைகள் விதவிதமானவை. அவற்றை ஏற்பதும், இயல்பாய் இருப்பதுமான உலகமே யதார்த்த உலகம் என்பதையே நாவல் நமக்கு உணர்த்துகின்றது. இருபது வயது இளைய உலகம் எதிர்கொள்ளும் காதல், சாகசம், பாலியல் உறவுகள் என யாவற்றையும் கீஸிகி, வாட்டனபி, மிடோரி, நவகோ, ரெய்கோ என ஒருவர் மற்றொருவருடன் ஊடாடிக் கிடப்பதன் வழியாக நமக்கு முரகாமி காட்சிப்படுத்துகிறார். 500 பக்க நாவலை ஒற்றை வாசிப்பில் முடித்துவிடுகிற ஆச்சர்யத்தை எவரும் அடையப்போவது நிச்சயம். முரகாமியின் எல்லா படைப்புகளுக்கும் இதே வாசகமன நிலைதான் ஏற்படும். முரகாமியின் நோர்விஜியின் வுட்டை தமிழுக்குத் தந்திருக்கிற எதிர் வெளியீடு வாசகர்களின் பாராட்டுதலுக்குரிய செயலைச் செய்திருக்கிறது.

Related posts