You are here
வாங்க அறிவியல் பேசலாம் 

அறிவியலாளர்கள் சமூகப் பணியாளர்களாகத் தங்களை உணரவேண்டும்

ராக்கேஷ்சர்மா

நேர்காணல்: நிர்மல்கவுத்ரிகவுர்தமிழில்: இரா. நடராசன்

 

ஸ்குவாட்ரண்ட் லீடர் ராக்கேஷ் சர்மா இந்தியாவின் முதல் விண்வெளி வீரர் எனும் வரலாறு படைத்தவர். 1984 ஏப்ரல் 3 அன்று அவரது பயணம் தொடங்கியது. அது ஒரு பெரிய வெற்றிக்கதை. நமது நாட்டு சந்ததிகள் அவசியம் அறிய வேண்டிய அறிவியலின் வரலாற்று நாயகன் ராக்கேஷ் சர்மா. சோவியத் அறிவியலின் சாதனைகளை எப்போது வாய்ப்புக் கிடைத்தாலும் பேசும் அவரை நமது பாடப் புத்தகங்கள்கூட ஒருவரி குறிப்பிட்டுக் கைவிடுவது வேடிக்கை, வாடிக்கை. விர்ரென்று விண்ணளவு புகழ் பெற வேண்டிய இந்தியாவின் ஒரே விண்வெளி வீரருக்கு பாரதரத்னா விருது இதுவரை வழங்கப்படாததும் கூட அவரது இடது சார்ந்த அரசியலால் தான் என்பது பலரின் கருத்து. பலர் வெறுமனே விண்வெளியில் உலாவந்து திரும்பிய அந்த நாட்களில் வேதியியலின் முக்கியமான இரண்டு சோதனைகளை ஈர்ப்பு விசை இல்லாத அந்த வானவெளியில் நிகழ்த்திய வேதி விஞ்ஞானி ராக்கேஷ் சர்மா என்பது இந்திய விஞ்ஞானிகளுக்கே தெரியாது. ராக்கேஷ் சர்மா வெள்ளி மற்றும் ஜெர்மானியம் உலோகக் கலவை ஒன்றை விண்ணில் உருவாக்கி கண்டு பிடித்தவர் என்பதை, அதுதான் விண்வெளியில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் உலோகக் கலவை என்பதை உலக அறிவியலின் பிரமாண்ட முதல்படியாக ரஷ்ய பாடப்புத்தகங்கள் அறிமுகம் செய்கின்றன.
ராக்கேஷ் சர்மா 1949ல் ஜனவரி 13 அன்று பஞ்சாபில், பாட்டியாலா எனும் ஊரில் பிறந்தவர். ஹைதராபாத்தின் ஓஸ்மானியா பல்கலைக்கழகத்தில் கல்விகற்றவர். செயிண்ட் ஜார்ஜ் பள்ளியில் அவர் படித்தபோது ஒரு அறிவியல் கண்காட்சியின்போது வானிலிருந்து பாராசூட்டில் குதித்து பதினோறு வயதில் முதல் வான்சாதனையைத் தொடங்கியவர் ராக்கேஷ். 1966ல் இந்திய விமானப்படையில் இணைந்தார். 1970ல் பைலட் ஆபீஸர் ஆக்கப்பட்ட ராக்கேஷ் 1971 வங்கப் பிரிவினைக்கு அடிகோலிய இந்திய பாகிஸ்தான் யுத்தத்தில் எம்.ஐ.ஜி. வகை போர் விமானத்தை முதலில் ஒட்டிய பைலட் ஆனார். 1982 செப்டம்பர் 20 அன்று கடும் போட்டிக்கு நடுவில் சோவியத் விண்வெளிப் பயணத்திற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தால் தேர்வுபெற்றார். கஜகிஸ்த்தான் சோவியத் விண்வெளி தளத்திலிருந்து பைக்கனூர் விண்ஏவுதளம் அனுப்பிய சோயுஸ் டி 11 ராக்கெட்டில் பறந்து ஏழு நாட்கள் 21 மணி நேரம் மற்றும் 40 நிமிடம்  விண்வெளியில் இருந்தபடி பிரமாண்ட சாதனை படைத்தார் ராக்கேஷ் சர்மா. தற்போது அவர் நம் தமிழகத்தின் ஊட்டி வெலிங்டனில் நகர்மன்ற மக்கள் பிரதிநிதியாகத் தன்னுடைய வார்டுக்குப் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 2009ல் அவர் வான் பயணம் மேற்கொண்டதன் 25வது ஆண்டுக்காக அஸ்ட்ரோ டாக் இதழுக்கு வழங்கிய நேர்காணல் இது. இந்திய அரசின் அசோக சக்ரா விருதும் ஹீரோ ஆஃப் சோவியத் யூனியன் விருதும் பெற்றவர் ராக்கேஷ் சர்மா.  இந்த நேர்காணலில் தன் பயண அனுவத்தோடு அறிவியலாளர்கள் பற்றிய தனது சமூகவியல் பார்வையையும் அழுத்தமாகப் பதிவு செய்கிறார்.

கேள்வி:  விண்வெளியில் பறப்பது உங்கள் வாழ்வின் லட்சியமா? அப்படி ஒரு எண்ணம் எப்போது உதித்தது?
பதில்:  பஞ்சாபில் ஒரு கவுர் இன மலைசாதி குடும்பத்தில் பிறந்தவன் நான். எங்கள் ஊர் பாட்டியாலாவில் வீட்டிற்கு ஒரு பிள்ளை இந்திய ராணுவத்திற்கு கண்டிப்பாக அனுப்பப்பட்டுவிடுவான். இது ஏதோ கடவுள் கணக்குப்போல பிடிவாதமாக இன்றுவரை பின்பற்றப்பட்டு வருகிறது. நான் விமானியாகி இந்திய ராணுவத்தின் விமான ஓட்டியாகவே இலட்சியம் கொண்டேன். மிகச் சிறிய  வயதில் என் வாழ்வில் நான் வரைந்த முதல் ஓவியம் ஒரு விமானம்தான். ஆனால் 1966ல் தேசிய பாதுகாப்பு  அகாடமி (National Defence Academy) யில் நான் தேர்வு பெற்றபோது என் கடும் உழைப்பின் மூலம் அனைத்து வகைத் திறன்களையும் ஒரு வெறியோடு நான் வளர்த்துக் கொண்டேன். தவிர விண்வெளியில் முதலில் பயணித்த பியூரி கெகாரின் பற்றி அப்போது ஒரு புத்தகம் வாசித்தேன். எனக்கு என் வாழ்வின் விண்விருப்ப வெறியை அந்தப் புத்தகம் விதைத்துவிட்டது.

உங்கள் விண்வெளிப் பயணத்திற்கான வாய்ப்பு பற்றிக் கூறுங்கள். தேர்வுபெறுவோம் என்று எதிர்பார்த்தீர்களா?
1980ல் பிரதமர் இந்திரா காந்தி சோவியத் அதிபரின் இந்திய வருகையை ஒட்டி இந்த அறிவிப்பைக் கூட்டாக வெளியிட்டார். சோவியத் விண்வெளி ஆய்வு மையம் இன்டர் காஸ்மாஸ் (Inter Kosmoss) என்று ஒரு விண் பயண சிறப்புத் திட்டம் வைத்திருந்தார்கள். சோவியத் ஆதரவு நாட்டுப் பிரஜைகளை விண்வெளிப் பயணத்தில் ஈடுபடுத்துதல், இந்தியாவிலிருந்து ஒருவரை அனுப்ப 1980ல் முடிவானது. 1982ல்தேர்வு பெற பல வகைப் படி நிலைகள் இருந்தன. நான் 1981ல் அதற்கான படிவத்தை அனுப்பிவிட்டுக் காத்திருந்தேன். ஏற்கெனவே எம்.ஐ.ஜி. விமானத்தை முதலில் ஓட்டியவன் எனும் பிரபல்யம் இருந்தாலும் இந்தத் தேர்வும் படிநிலைகள் கொண்டதாக இருந்தது. உங்கள் உடலியல் சோதனைகள் முக்கியமானவை. புவிஈர்ப்பு அற்ற சூழல்களில்  உடல் ஆரோக்கிய மிதவை சோதனைகளைக் கடப்பது அவ்வளவு எளிதல்ல. நான் விடாமுயற்சியோடு கடும் பயிற்சிகள் செய்தேன். இப்போதுபோல விண் பயணத்தின் போதான இயந்திர நவீன வசதிகளற்ற ஒரு காலத்தில் மிக அற்புதமாக சோவியத் விஞ்ஞானிகள் எழுச்சி மிக்க புதுமைகளைப் புகுத்தி இருந்தார்கள். நீண்ட வலிமிகுந்த பயிற்சிகள் அவை.

சோவியத் யூனியனின் இண்டர் காஸ்மாஸ் திட்டம் குறித்து விரிவாகச் சொல்ல முடியுமா?
இன்று சோவியத் இல்லை. அது இந்தியா போன்ற நாடுகளுக்கு எவ்வளவு பெரிய நஷ்டம். குறிப்பாக விண்வெளியியலில் அவர்கள் உலகிற்கே வழிகாட்டியவர்கள். நாசா (Nasa) விண்ணில் ஒரு ஆய்வு மையத்தை நிறுவுவதற்கு வெகு ஆண்டுகள் முன்னமே அங்கே நிரந்தரமாக சல்யூட் (salute) விண் ஆய்வுத் தளத்தை 1970களிலேயே அவர்கள் சாதித்திருந்தார்கள். அப்போலோ – சோயுஸ் சோதனைத் திட்டத்தை அறிமுகம் செய்து அமெரிக்கர்கள் ஐரோப்பியர்கள் என யாவருக்கும் விண் ஆய்வு மையம் குறித்து வகுப்பெடுத்தவர்கள் அவர்கள். விண்ணில் அவர்கள் அமைத்திருந்த சல்யூட் (salute) சர்வதேச விண் ஆய்வு மையம் என்றே அழைக்கப்பட்டது. இண்டர் காஸ்மாஸ் 1978 பிப்ரவரியில் தொடங்கி பத்தாண்டுகள் தொடர்ச்சியாக சோவியத் நாட்டின் நேசநாடுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமல்படுத்தப்பட்டது. ரஷ்ய ரல்லாத 14 பேர் விண்வெளியில்  (நான் உட்பட) வலம் வந்து அனுபவத்தைப் பெற அது உதவியது. ஒரு விண்வெளி வீரரை விண்ணில் சிலமணிநேரம் வலம் வந்து திரும்பப் பெற ஒரு நாடு குறைந்த பட்சம் 300 கோடி இந்திய ரூபாய் செலவழிக்க வேண்டிய நிலையில் பெரும்பாலான பொருட்செலவை (80:20) ஏற்ற சோவியத்துகளின் பெருந்தன்மைக்கு ஈடு கிடையாது.

இந்த இண்டர் காஸ்மாஸ் மூலம் விண்ணில் பறந்த மற்ற நாடுகளின் வீரர்கள் பற்றி சொல்ல முடியுமா?
சிலரைப் பற்றி ஞாபகம் இருக்கிறது. குறிப்பாக விண்ணில் பறந்த அமெரிக்கரும், சோவியத் நாட்டவரும் அல்லாத முதல் பிற நாட்டு பிரஜையான செக்கஸ்லோவாக்கியாவின் விலாடிமிர்ரெமக், விண்ணில் முதலில் பறந்த கருப்பின மனிதர் அர்னால்டோ  டமாயோ மெண்டெஸ், விண்ணில் முதலில் பறந்த ஆசிய கண்டத்தவரான வியட்னாமின் ஃபாம் டுவான் இப்படி. பெரிய நாடுகளான பிரான்சும், ஜெர்மனியும் கூட தங்களது நாட்டின் முதல் விண்வெளி வீரரை இந்தியாவைப் போலவே இண்டர் காஸ்மாஸ் வழியாகத்தான் அனுப்பினார்கள். நேட்டோ  (Nato) நேசநாடுகளையும்  சோவியத் நாடு தனது இந்த தனிப்பெரும் திட்டத்தில் இணைத்திருந்ததால் 14 நாடுகள் இதைப் பயன்படுத்தின. பல்கேரியா இருவரை அனுப்பியது. விண் ஆய்வு மையங¢கள் சல்யூட், சல்யூட் 7 மற்றும் மீர் ஆகியன பயன்படுத்தப்பட்டன. சிரியா, ருமேனியா, ஆப்கானிஸ்தான், ஹங்கேரி மற்றும் மங்கோலியா எனப் பல நாடுகளை சாதனையாளர்கள் ஆக்கிய பிரமாண்ட திட்டம் அது.

உங்களோடு சேர்ந்து ரவீஷ் மல்கோத்ராவும் இந்தப் பயணத்திற்குத் தேர்வு பெற்றிருந்தார் அல்லவா?
அதுவும் இண்டர் காஸ்மாஸின் விநோத விதிகளின் அடிதளத்தில் அமைந்ததுதான். பொதுவாக ஒரே வீரருக்குப் பயிற்சிகள் அளிப்பதே வழக்கம். அதற்கே அதிக செலவு பிடிக்கும். ஸ்டாண்ட் பை என்பது அவர்களது பாணி. விண்வெளி வீரரின் அன்றைய உடல் நிலையைக் கருத்தில் கொண்டு விண்ணில் ஏவும் நேரம் முடிவு செய்யப்படும் ஆனால் இந்த இடத்தில் இரண்டு மூன்று பேர் இணைந்து விண்ணில் பறக்க வேண்டிய நிலை இருந்தால் ஒரு நாளை நேரத்தை தட்பவெப்ப நிலையைக் கருத்தில்கொண்டு முடிவெடுப்பார்கள். அன்றைய நாளில் அன்றைய வாரத்தில் பயணத்திற்கு ஏதுவான உடல்திறன் கணக்கீடுகளில் மருத்துவர்கள் உயர்மட்ட விஞ்ஞானிகள் தேர்வுசெய்யும் ஒருவரை அனுப்புவார்கள்.

உங்களது சோவியத் பயணம் பற்றி அனுபவம் பற்றி சொல்லுங்கள். உங்களோடு விண்வெளிக்கு வந்தவர்கள் யார் யார்?
என் சோவியத் பயணம் அவ்வளவு இனிமையானதல்ல. கடும் பயிற்சிகள்… நாங்கள் பல மைல்கள் நடத்தியே அழைத்துச் செல்லப்பட்டோம். ரத்த ஓட்ட மேம்பாட்டுத்திறன் வளர்ச்சி என்று பொதுவில் அழைக்கப்பட்டது. என்னோடு ஷிப் கமாண்டர் ஓய்.வி. மால்யஷேவ் மற்றும் ஃபிளைட் எஞ்சினியர் ஜீ.எம்.ஸ்ட்ரெக்காலாவ் ஆகிய இருவரும் விண்ணில் பயணம் செய்தார்கள். நாங்கள் 1984 ஏப்ரல் 2 அன்று கஜகிஸ்தானின்  பாய்கனூர் விண்வெளி செலுத்து தளத்திலிருந்து சோயுட்ஸ் டி 11 சோவியத் ராக்கெட்டில் கிளம்பினோம். சோயுட்ஸ்-டி 11 எங்களை சல்யூட் 7 விண் ஆய்வு மையத்தில் சென்று சேர்த்தது. யுரிகேகரின் விண்வெளியில் முதலில் பறந்த 23வது ஆண்டு தினத்தைக் கொண்டாடும் விதத்தில் எனது பயணம் அமைந்தது. பயணத்திற்கு ஒருநாள் முன்னதாகவே நான் தேர்வு செய்யப்பட்டேன். லிங்க் அப் எனப்படும் தொடர்ச்சி ஏற்கெனவே புவியை வட்டமிட்ட விண் ஆய்வு மையத்துடன் இணையும் நேரத்தைத் துல்லியமாக ஒருநாள் முன்னரே உலகிற்கு சரியாக அறிவித்து சோவியத் விண்வெளி ஆய்வு நிறுவனம் உலக சாதனை படைத்தது. இந்திய தேசிய மூவர்ணக் கொடியை கையால் ஏந்தியபடி நான் சல்யூட்7 ஆய்வகத்தில் முதலில் நுழைந்தேன். ஏழு நாட்கள் 21 மணி நேரம் மற்றும் 40 நிமிடங்கள் நான் விண்வெளியில் இருந்தேன். ஏப்ரல் 11 அன்று சோயுஸ் டி10 ரக வானூர்தியில் வந்து கஜகிஸ்தானின் உலர்பனிச் சறுக்கின் மேல் மாலை 4.19க்கு வந்திறங்கினேன். ஆறு  ஹெலிகாப்டர்கள் பனிச்சறுக்கு வண்டிகள் என நாங்கள் உடனடியாக மீட்டு அழைத்துச் செல்லப்பட்டோம்.

விண்வெளியில் நீங்கள் மேற்கொண்ட ஆய்வுகள் பற்றிச் சொல்லுங்கள். விண்வெளியில் வெறும் யோகாசனம் தான் செய்தீர்கள் என்கிறார்களே?
இரண்டு ஆய்வுகள் மிகவும் முக்கியமானவை. நான் யோகாசனம் செய்தது உண்மைதான். ஆனால் அது ஒரு கேலிச்செயலாக சித்தரிக்கக்கூடிய விஷயம் அல்ல. ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்தோடு இணைந்து இந்திய விமானப் படையின் தி இன்ஸ்டியூட் ஆஃப் ஏவியேஷன் மெடிசன் (The Institute of Aviation Medicine) எனும் அமைப்பு வெக்டார்- கார்டியோ கிராஃப் எனும் கருவியைக் கண்டுபிடித்திருந்தார்கள். பொதுவான விண்பயணத்தின்போது விண்வெளி வீரர்களுக்கு மூச்சுத்திணறல், பல்ஸ் அதீதமாக வேகமடைவது கட்டுப்பாடற்ற ரத்தக்கொதிப்பு என ஒரு வகை ஸ்பேஸ் சிக்னஸ் (Space sickness)  ஏற்படுவது வழக்கம். வெக்டார் கார்டியோ கிராஃப் வைத்து என் உடலில் இந்தியாவின் ஆய்வுமையம் பரிசோதனைகளில் ஈடுபட்டது. அதற்காக யோகாசனம் உட்பட பல ஆய்வுகள்.

ஒரு விஷயம், விண்வெளியில் விண்வெளிவீரர் உடையில் நீங்கள் இருப்பதும் பிறகு விண் ஆய்வு மையத்தின் உள்ளே சாதாரணமாக மற்றவர்கள் அணியும் பனியன், கால்சராய் என இருக்கிறீர்கள். இது எப்படி சாத்தியமாகிறது?
விண்வெளி வீரர் அணியும் உடையை ஒரு பள்ளி மாணவர் பார்வையில் முதலில் நான் விளக்குவேன். இந்த விண்வெளி உடை ஒரு சிறிய விண்வெளி ஊர்தி போன்றது. நீங்கள் ஸ்பேஸ் சூட் அணியவில்லை என்றால் 15 வினாடிகளில் உணர்வற்று மிதப்பீர்கள். 250டிகிரி வெப்பநிலையை நீங்கள் எதிர்கொள்வீர்கள். சில இடங்களில் மைனஸ் 250 டிகிரி குளிர் வெப்ப நிலையும் உண்டு. ரத்தம் உட்பட உங்கள் உடலின் நீர்மங்கள் நொடியில் உலரவோ அல்லது ஐஸ்கட்டி ஆகிவிடவோ கூடும். காஸ்மிக் அலைகள் உட்பட பல்வேறு கதிர் வீச்சுகள் உங்களை வரிசையாகத் தாக்கிய வண்ணம் இருக்கும். சூரியனின் நேரடி அல்ட்ரா வயலட் கதிரியக்கம் உட்பட அனைத்து வகையான கொடுமைகளில் இருந்து உங்களைத் தற்காத்துக் கொள்ள ஒரு அதிசய அரணாக ஸ்பேஸ் சூட் பயன்படுகிறது. யுரிகாகரின் அணிந்தது நன்கு பரிசோதிக்கப்பட்ட எஸ்கே-1  ரக விண்வெளி ஆடை. இயல்பான பிராணவாயு ஓட்டம் கீழே புவியின் கட்டுப்பாட்டு மையத்தோடு நேரடித் தொடர்பை ஏற்படுத்தும் ஒலி அலைக்கருவி என ஒரு 67 அதிசயங்கள் கொண்ட ஆடையான இது கால் ஷூ முதல் தலை ஹெல்மட் வரை எல்லாம் சேர்ந்து 17 கிலோ எடை இருக்கும். அதை அணிந்து செயல்பட தனியே  பயிற்சி உண்டு. ஆனால் விண்வெளி ஆய்வு மையங்களில் நமது புவியின் அறை வெப்பநிலை பேணப்படுகிறது. காற்றழுத்தம் 1 அட்மாஸ்பியர், அதாவது, புவியின் காற்று மண்டல அழுத்தம் அப்படியே வைத்துப் பாதுகாக்கிறார்கள். இதனால் நாங்கள் எந்த சிறப்பு அணிகலனும் இன்றி இயல்பாக இருக்க முடியும்.

விண்வெளியில் இருந்தபோது அந்த நாட்களில் என்ன உணவு அருந்தினீர்கள். மாத்திரைகள் தான் சாப்பிடுவீர்கள் என்கிறார்களே?
இப்படி நிறைய அனுமானங்கள் உலாவுவது உண்மைதான். விண்ணில் டிரைஃபுட், அதாவது உலர்ந்த உணவு தருகிறார்கள். மெகலன் எனும் கடல் வித்தகர் எழுதுவார், மிக நீண்ட கடல் பிரயாணங்களில் அவர் வெறும் தவிடு மட்டுமே உண¢ண முடிந்தது என்று. ஆனால் எங்களுக்கு விண்வெளியில் சாக்கலேட் புடிஸ், திராட்சை ஜூஸ், அதாவது மாவாக உலர்ந்து இருப்பதை தண்ணீர் சேர்த்து உட்கொள்ள வேண்டும். எனக்கு இந்திய உணவின் பருப்பு சுவை வழங்கப்பட்டது. உலர் உணவை அப்படியே அருந்தினால் அது ஈர்ப்பு விசையற்ற அறை முழுவதும் பரவி கருவிகளைப் பழுதாக்கிவிடும் என்பதால் இப்படி. விண்வெளியில் ஒருவருக்கு ஒரு நாளின் தேவை 1,530 கிராம் உணவு, 876 கிராம் ஆக்ஸிஜன் 2.5 கிலோ தண்ணீர் அவ்வளவே.

நீங்கள் மேற்கொண்ட இரண்டாவது விண்வெளி சார்ந்த ஆய்வு பற்றி சொல்லுங்கள்.
நான் வேதியியலைப் பாடமாக எடுத்துப் படித்தவன். வேதிவினைகள் உலோகம் உலோகக்கலவைகள் மீதான தனி ஆர்வம் எனக்கு உண்டு. விண்வெளியில் இது குறித்து ஆய்வு மேற்கொள்ள அரிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஒரே அளவு கொதிநிலை கொண்ட இரு உலோகங்கள் ஒன்றோடு ஒன்று கலக்கப்பட்டு உலோகக்கலவை உருவாகும்போது புவியின் ஈர்ப்பு விசை காரணமாக எந்தப் பாத்திரத்தில் வைத்து கலக்கப்படுகின்றனவோ அது எந்த உலோகத்தால் ஆனதோ அதன் தன்மையையும் சேர்த்துப்  பெருகின்றன. உதாரணமாக வெள்ளி மற்றும் ஜெர்மானியம் இரு உலோகங்களையும் ஈர்ப்பு விசையற்ற விண்வெளியில் ஒன்றோடு ஒன்று மிதந்தபடி கலந்து உருவான உலோகக் கலவை வெள்ளி ஜெர்மானிய விண் கலவை. புவியில் உருவான அதே உலோகக் கலவைகளைவிட அதிக வேதி மற்றும் சிறப்பு பண்புகளைப் பெற்றிருந்தன. கலவையை விண்வெளியிலேயே உருவாக்கி உலகின் குடுவைப்பாத்திரமற்ற முதல் (container less) ஆய்வை நிகழ்த்திய பெருமை எங்களைச் சாரும். சில வகை உலோகக் கலவை கிரிஸ்டல்களையும் நாங்கள் அடுத்தடுத்து விண்வெளி வேதிஆய்வில் பிரித்தெடுத்தோம். மொத்தம் 43 வெவ்வேறு ஆய்வுகள்.

இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள். விண்வெளிப் பயணத்திற்குப் பிறகு இந்துஸ்தான் ஏரனாட்டிகல்ஸில் இணைந்து பணியாற்றினீர்கள் அல்லவா?

விங்கமாண்டராக நான் இந்திய விமானப்படையிலிருந்து ஓய்வு பெற்றேன். 1987ல் இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்தின் முதன்மை டெஸ்ட் பைலட்டாக நாசிக்கில் இணைந்தேன். பிறகு 1992 முதல் பெங்களூரில்  அதே நிறுவனத்தில் பணியாற்றி தேஜஸ் போர் விமானங்களின் வடிவமைப்பிலும் பங்கேற்று ஓய்வுபெற்றேன். இப்போது என் வாழ்க்கைத் துணைவியான மது சர்மாவுடன் குன்னூரில், வெலிங்டனில் வசிக்கிறேன்.

உங்கள் பகுதி பஞ்சாயத்து தேர்தலில் வார்டு கவுன்சிலராகத் தேர்வு பெற்றீர்களாமே? அதுபற்றி சொல்லுங்கள்.
என்னைப் பொறுத்தவரை அறிவியலாளர்கள் ஒரு தனி அந்தஸ்து பெற்ற பிறவிகளாக சமூகத்தைவிட்டு ஒதுங்குவதைவிட அவர்கள் தங்களை இந்த சமூகத்தின் பணியாளர்களாக உணர வேண்டும். சாதாரண மக்களின் அன்றாடத் தேவைகள் கஷ்ட நஷ்டங்களோடு டவுன் டு எர்த் (Down to Earth) வாழ்க்கை வாழவே நான் விரும்புகிறேன்.

விண்ணில் பறந்து புவியை வலம் வந்தபோது இந்தியாவைப் பார்க்க முடிந்ததா.. அந்த அனுபவம் எப்படி இருந்தது?
பதினாலாவது புவி சுற்றுப் பாதையில் 2 முதல் 10 நிமிடங்கள் வரை இந்தியத்துணைக் கண்டத்தை நாம் கடந்து விடுவோம். நமது ஐ.ஏ.எஃப் விமானக் குழு, சல்யூட் குழு மற்றும் மண்ணின் புகைப்பட விண்ணாய்வு மய்யங்களுடன் இணைந்து ரிமோட் சென்சிஸ் எனும் நுண்மாதிரிப் புகைப்படங்களை நான் எடுத்து உதவினேன். அப்போதைய பிரதமர் இந்திராகாந்தியுடன் அங்கிருந்து நான் உரையாட முடிந்தது.  ‘அங்கிருந்து பார்க்க  இந்தியா எப்படி இருக்கிறது’ என்று அவர் கேட்டார். எனக்கு மகாகவி இக்பாலின் கவிதை வரிகள் ஞாபகம் வந்தன. சாரே ஜகான்சே அச்சா… எங்கள் இந்துஸ்தானமே சிறந்தது என்று நான் உணர்ச்சி பொங்க முழங்கினேன்.

Related posts