You are here
நூல் அறிமுகம் 

அடித்தட்டு வாழ்வின் துறவு மனம்

போப்பு

ஆர்வத்தைத் தூண்டும் விதமாக ‘கிளி நின்ற சாலை’ என்ற தலைப்பைக் கொண்டுள்ளது இப்புதினம். ரோடு ரோலர் வண்டியில் கிளீனராக வேலை செய்யும் திருமுருகன் எனும் விளிம்பு நிலைத் தொழிலாளியின் வாழ்க்கைப் பாட்டைப் பற்றி ரோடு ரோலர் போலவே நிதானமாக சொல்லிக்கொண்டு போகிறது.
ஒன்றரையணா டிவிஎஸ் பிப்டி கூட ஏக அலப்பறைகள் பண்ணிக்கொண்டு ஏகத்திற்கும் சலம்பிக்கொண்டு போக, அத்தனை கனமான ரோடுரோலர் வண்டி, ஏதோ பாக்குக் கடிப்பதைப் போல கடக்கு முடக்கு என்று பிணையடிக்கும் மாடுபோல போய்க் கொண்டிருப்பது யாரும் காணக்கிடைக்கும் காட்சிதான். எத்தனையோ அதிசயங்களைப் பார்த்துவிட்டாலும் ரயில் போவதையும், ரோடு ரோலர் உருள்வதையும் நம் கண்கள் ஒரு நிமிடம் நிலைகுத்திப் பார்க்காமல் கடப்பதில்லை.
அத்தனை பெரிய வண்டியை வேடிக்கை பார்க்கிறோம். அந்த வண்டி போட்ட சாலையில் ஒரு நாளைக்கு நூறு முறை சர்புர்ரென்று போய் வருகிறோம். ஆனால் அந்தச் சாலையைச் சமைத்துத் தருபவர்கள் நம் நினைவிற்குள் மின்னல் வெட்டுகிற பொழுதாகிலும் வந்து போயிருக்கிறார்களா..?
பழைய டயர்களில் அடுப்பு மூட்டி, இறுகிக் கறுத்த தாரினை வத்தக் கொழம்பு பக்குவத்திற்குக் கொழபுழவெனக் கொதிக்க விட்டு,  சல்லி டப்பாவில் கொதிக்கும் தாரை ஊற்றி, காலிலே சாக்கு கட்டி என்னவோ கல்யாண மேடையை அலங்கரிப்பது போல அத்தனை லாவகமாக நிலத்தில் தெளித்து, ஒன்றரை இன்ச்சில் ஆரம்பித்து  வெவ்வேறு அளவுகள் கொண்ட ஜல்லிகளை இட்லிகளைச் சாம்பாரில் தோய்ப்பது போலத்தோய்த்து சாலையில் நிரவி, பாட்டி வெத்தலை இடித்து வாய்க்குள் திணிக்கும் அழகோடு சாலையைப் போட்டுத் தருபவர்களைக் கரிசனத்துடன் பார்த்திருக்கி றோமா.?
வாங்க தோழர் டீ சாப்புவோம் என்று ஒரு நாளைக்குப் பத்து டீக் குடிக்கிற நாம் வாழ்நாளில் ஒரேஒரு டீயாவது அவர்களுடன் குடித்திருக்கிறோமா?…… என்ற கேள்வியுடன் இந்தக் ‘கிளி நின்ற சாலை’ புதினத்தை அணுக வேண்டியிருக்கிறது.
நாம் பல நூறு புதினங்கள் வாசித்திருக்கலாம். தேர்ந்த எழுத்து வித்தகர்கள் நம் மூளையைக் கிளர்த்தி நிறைய சிந்தனை விதைகளை ஊன்றியிருக்கலாம், புத்தியைக் குத்திப் பல பதியன்களைப் போட்டிருக்கலாம். அவற்றைக் கொண்டு எது புதினம் என்று அளப்பதற்குரிய அளவுகோலை நாம் சீவிச்செதுக்கி வைத்திருக்கலாம். பலநேரங்களில் இந்த அளவுகோலை எடுத்து மூலையில் சார்த்தி வைத்துவிட்டுத்தான் திறந்த மனதுடன் சில புத்தகத்தின் பக்கங்களைப் புரட்ட வேண்டியிருக்கிறது. ‘கிளி நின்ற சாலை’யையும் அப்படித்தான் வாசிக்க வேண்டியுள்ளது.
விளிம்பு நிலையில் உள்ள திருமுருகன் என்பவரின் வாழ்க்கையைத் திருமுருகனே எழுதிச்செல்கிறார். சமூகத்தின் மையம் என்ற ஒன்றைக் கற்பித்து வைத்துக் கொண்டு, அதற்கு ஒரு விளிம்பு என்ற ஒரு சீனைப் போட்டு அங்கிருப்பவர்களை விளிம்பு நிலை மக்கள் என்கிறோம். பூமியிலும் சரி. சமூகத்திலும் சரி.. எது மையம்.. எது ஓரம். ஒரு வசதிக்காக அடித்தட்டு மேல்தட்டு என்று அழைத்துக்கொண்டால், மேல்தட்டு இல்லாமல் அடித்தட்டு இருந்துவிட முடியும். ஆனால் அடித்தட்டு இல்லாமல் மேல்தட்டினை பில்டப் செய்ய முடியாது என்பதை மனதில் குறித்துக் கொள்ள வேண்டும்.
கடந்த கால் நூற்றாண்டு காலமாகவே மேலிருந்து பார்த்து எழுதும் எழுத்து ஒதுக்கித் தள்ளப்பட்டு, உள்ளிருந்து முகிழ்த்து வரும் எழுத்துக்கள் பரவலாகி வருகின்றன. அந்த வகையைச் சேர்ந்தது தான் ‘கிளி நின்ற சாலை’
அவதியவதியாக மேய்ந்து விட்டு, வசதியான ஒரு நிழல் பார்த்து கால்களைப் பரப்பி அமர்ந்து உண்டக் கட்டிகளைச் செரிப்பதற்காகப் போடுகிற அசையல்ல எழுத்து.. நம்மைப் பொறுத்தவரை எழுத்து என்பது வாழ்க்கை பற்றிய விசாரணைகள், கேள்விகள். அதனை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதற்கான நெம்புகோல். இந்த நோக்குடன் கிளி நின்ற சாலைக்குள் இறங்கினால் அங்கே நாம் காண்பது சுமார் ஏழெட்டு ஆண்டு காலமாக திருமுருகனின் வாழ்க்கை எந்தச் சத்தும் சாரமும் இல்லாமல், எத்தனையோ போதாமைகள் இருந்தாலும் அதுபற்றிய புகாரும் இல்லாமல் ரோடுரோலரைப் போலவே கடக்கு முடக்கு என்று நிதானமாகத் தொடர்ந்து செல்லும் வாழ்க்கை.
கால்காசு கவருமெண்டு உத்தியோகத்திற்காக பாண்டிச்சேரி கொம்யூன் ஆபிசில் திருமுருகன் டெய்லி ரேட்டட் கூலியாகச் சேர்ந்த ஒரு வாரத்தில் நாவல் துவங்குகிறது. ரோடு போட்டால் செம்மண் தூசி படிந்த ரோடுரோலரைத் தூசி துடைத்து கிரீஸ் அடித்து, ரோலருக்குத் தண்ணீர் ஊற்றி பன்னு கடித்து, டீ குடித்து நசநசக்கும் வேர்வையுடன் வீடு திரும்புகிறான் நாயகன். கவர்மெண்ட் உத்தியோகம் என்று நினைத்திருந்த மனைவி வானதி அவனை ஆயில் மணக்கப் பார்த்ததில் இருந்து ஒருபோதும் பொருட்படுத்துவதே இல்லை. அவனுடன் மல்லுக்கு நிற்பதும் இல்லை.
அங்க இங்க பார்த்த அழகான பெண்களை மனதில் இருத்திக்கொண்டு அவளைச் சீண்டினால் ‘‘ஆமா அர்த்த ராத்திரில வெறுங்கைய வீசிட்டு வந்து ஏறிக்க எம்மேல’’ என்று பொளீரென வார்த்தைகளால் சொடுக்குகிறாள். தன் நிலையை நினைத்த அவனுக்கு மனைவி மீது கோபம் வருவதில்லை. மனதால் சுருங்கி அடங்கிப் போகிறான். மனைவியிடம் மீண்டும் மீண்டும் தோற்கிறான். மனைவி அவனை மதிக்காதது போல் அவனது அம்மாவையும் மதிப்பதில்லை. காண்ட்ராக்டர், டிரைவர், ஜெ.இ. போன்றவர்கள் கொடுக்கும் சம்பளம் தவிர்த்த உபரிப் பணத்தைக் கூட வீட்டுச் செலவுக்கே கொடுத்துவிடுகிறவன். வெளுத்ததெல்லாம் பாலுன்னு இருக்கிறவன். அவன் வாங்கிப்போடுகிற ரேசன் பொருட்களைக் கூட பிறத்தியாருக்குப் பாக்கெட் போட்டு  விற்கும் சைடு பிசினஸ் செய்கிறாள் மனைவி. இதெல்லாம் அவனுக்குத் தெரிகிறது என்றாலும் ஒருபோதும் அவள் மீது ஆத்திரம் அடைவதில்லை. அவள் பக்கத்து நியாயத்தை உணர்ந்தே அமைதியாக இருக்கிறான்.
மனைவிக்கு இரண்டாவது பிள்ளை வயிற்றில் உண்டான பிறகு, சின்னதாக வாய்த்தகராறு. ÔÔஇன்னா கோடு கோடாத் தாரப் பூசிட்டு வந்துட்டிங்களா?……. கருமம் கருமம்’’ என்று அவள் தலையில் அடித்துக் கொள்ள சுள்ளென்ற வெயிலில் காய்ந்து வேர்வையில் உப்புப் பூத்து வந்தவன் சட்டென்று தலையில் தட்டுகிறான். ÔÔஎன்னாடி மயிறு.. தெரு நாயி மாதிரி ரோடு ரோடா சுத்தீட்டு வர்ரேன். பீ நாத்தத்துலயும், சாக்கட தண்ணியிலயும் கெடந்து கஷ்டப்பட்றது எனக்குத் தான்டி தெரியும்’’ என, பேச்சு நீண்டு தன் அத்தை பையனைக் கட்டிக்க ஆசைப்பட்டதைச் சொல்கிறாள். அங்கே அவனுக்கு ஆண்மை சீறி விடவில்லை. ‘‘சரி இப்போ சொல்லி என்ன பிரயோஜனம். அப்பவே சொல்லியிருந்தா நானே உன்ன அவனோட அனுப்பியிருப்பேனே.’’  என்று சொல்கிறான் திருமுருகன்.
டிரைவர் முத்தையன், வேடிக்கை பார்க்க வந்த உறவினனைக் கூட வண்டியில் ஏற்றி ஸ்டியரிங் கொடுக்கிறான். நான்காண்டுகள் கிளீனராக இருந்த ஒங்கையில இதுவரைக்கும் தர்லயே என்று பிறர் அவனை உசுப்பேற்றுகிற போதும் இவன் சகித்துக்கொண்டு சமாதானம் சொல்லக் கூடியவனாக இருக்கிறான். எந்தாசிவில் ஆபீசில் ஆளாளுக்கு இவனை வேலை வாங்குகிறார்கள். எல்லோரது வேலையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்கிறான். உதவியென்று அலுவலகத்தில் வந்து நிற்கும் சாமான்ய மக்களுக்கு வேலையை முடித்துக் கொடுக்கிறான். அவனது கையில் நன்றியுடன் காசு திணிப்பவர்களிடம் திருப்பிக் கொடுத்து பக்குவமாகச் சொல்லி அனுப்பி வைக்கிறான். ஒரு துறவு மனநிலையிலேயே இயங்கிக் கொண்டிருக்கிறான் கிளி திருமுருகன்.
ஆட்டோ ஓட்டும் அவனது தம்பியின் வாழ்க்கை அவனைக் காட்டிலும் நெருக்கடி மிகுந்ததாக இருக்கிறது. தந்தை இறந்தபிறகு ஒற்றைப் பொம்பிள்ளையாக இருந்து பிள்ளைகளை ஆளாக்கிய தாய், நார்நாராக நைந்துபோன நிலையிலும் பிள்ளைகளின் நிம்மதியை நாடுகிறவளாக இருக்கிறாள்.
திருமுருகன் எத்தனை பாரம் சுமந்தாலும் தானும் வருத்தப்படுவதில்லை. பிறர் மீதும் வருத்தப்பட்டுக் கொள்வதில்லை. ஒரு விசித்திர மனநிலை கொண்டவனாக இருக்கிறான். கரண்டு பில் கட்டுவதற்கு கொடுத்த அம்மாவின் முதியோர் பென்சன் பணத்தை தம்பி நண்பர்களுடன் குடித்து அழிக்க, கரண்டாபீசில் பீஸைப் பிடுங்கிக் கொண்டு போகிறார்கள். செய்தி கேள்விப்பட்டு வந்த திருமுருகன் கடன் வாங்கி பில்லைக் கட்டி பல்ப் எரியவிட்டு அமைதியாகப் போய்க் கொண்டிருக்கிறான்.
ஒரு நடுத்தர வர்க்கத்தவனின் பார்வையில் பார்த்தால் அது அவமானகரமான ஒன்றாகத் தோன்றும். ஆனால் அடித்தட்டு மக்களுக்கு அதுதான் வாழ்க்கை எதார்த்தம்.
தான், தன்னுடைய வேலை, வேலைத்தளம், வேலைத் தொடர்புடையவர்கள், ரோடுரோலர், ஒரு துருப்பிடித்த சைக்கிள் என அவனது பார்வைக்கு எட்டிய தொலைவில் மட்டுமே விரிந்து செல்கிறது நாவல். பாண்டிச்சேரியின் பிரெஞ்சுக் கலாச்சாரம் குறித்து அங்கங்கே ஒருசில தகவல்கள் போகிற போக்கில் சொல்லப்படுகிறது.
ஒரு அதிர்ச்சியூட்டும் நிகழ்வுகளோ, மனதை உலுக்கும் நெகிழ்வுகளோ, பரபரப்பூட்டும் எதிர்பார்ப்புகளோ எதுவும் இல்லாமல் அவசரமற்ற பேசஞ்சர் ரயில் ஓட்டமாகப் போய்க் கொண்டிருந்தாலும், சிலுசிலுவென்ற காற்றும், பசிய வெளிக்காட்சிகளும் மனதிற்கு லயிப்பைத் தருவது போல பக்கங்கள் கடந்து செல்கின்றன.
ஓரளவு வாசிப்புப் பழக்கமும், நல்ல எழுத்துப் பயிற்சியும்  உடைய செந்தமிழினியன் சொந்த வாழ்க்கையை சுவாரஸ்யப்படுத்தும் எத்தனிப்பு இன்றித் தெளிந்த காட்சிகளாகத் தன் கடந்த கால வாழ்க்கையை எழுத்துவழி நிகழ்த்திக்காட்டுகிறார். சிக்கலற்ற மொழிநடை ஒரே சீராக வாசித்து முடிக்கச் செய்கிறது.
இடதுசாரி தத்துவ நூல்களையும், அரசியல் நூல்களையும், மூன்றாம் உலக இலக்கியங்களையும் தொடர்ந்து தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வந்த விடியல் பதிப்பகம் இப்போது அடித்தட்டு தமிழ் மக்களின் வாழ்க்கையைப் பேசும் படைப்பிலக்கியத்தை வெளியிடும் முயற்சியின் பகுதியாக இந்தக் கிளி நின்ற சாலையை வெளியிட்டுள்ளது.
சமூகத்தின் பெரும்பகுதியாக உள்ள அடித்தட்டு உழைக்கும் மக்களே காலத்தை முன்னகர்த்திச் செல்பவர்கள் என்ற கருத்தோட்டம் கொண்ட நாம் ‘கிளி நின்ற சாலை’ போன்ற நூல்களை வாசிப்பதும் பிறருக்குப் பரிந்துரை செய்வதும் நமது செயல்பாட்டின் ஓர் அங்கமாகும்.

Related posts