You are here
நூல் அறிமுகம் 

பழமையின் புதிய கவி அவதாரம்

மு. முருகேஷ்

 

தமிழ் மரபின் செறிவோடும் புதுமையின் அழகோடும் தொடர்ந்து கவிதைத் தளத்தில் இயங்கி வருபவர் கவிஞர் ஈரோடு தமிழன்பன். மரபுக் கவிதையின் சமூகத் தாக்கமும் புதுக்கவிதையின் அர்த்தமிக்க எளிமையையும் கைவரப் பெற்றவர். அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக சோர்வுறாமல் எழுதிக் கொண்டிருப்பதும், புதுப்புதுக் கவிதை வடிவங்களை அறிமுகம் செய்து வருவதும் சற்றே சவாலான ஒன்றுதான். எண்பதாவது வயதில் கால் பதித்திருக்கிற கவிஞர் ஈரோடு தமிழன்பன் இந்த சவால்களை தனது உறுதியான இலக்கியக் கொள்கையாலும் எழுத்தின் சமூகத் தேவை குறித்த சரியான பார்வையாலும் வென்றெடுத்து நிற்பவர்.

‘உலராது பெருகும்

உலகின் விழிநீர்த் துடைக்க

ஒரு விரல் தேவை’ என்கிற வரிகளில் ஒலிக்கிற மானுட விடுதலையை விரும்பும் கவிக்குரலும்,

‘சுதந்திரத்தை என்னால்

சாப்பிட முடியவில்லை

சோறு கொடு…’ என்பதிலான மனிதநேயக் குரலும், இன்றைக்கும் ஈரோடு தமிழன்பன் கவிதைகளில் விடாது ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.

16-ஆம் நூற்றாண்டின் இறுதியில், கீழ்த்திசைப் பண்பாட்டில் ஜென் தத்துவ வெளிச்சத்தில் விளைந்த கவிதையான ஹைக்கூ கவிதைகள் இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் மகாகவி பாரதியார் எழுதிய ஜப்பானியக் கவிதை (சுதேசமித்திரன் – 16.10.1916) எனும் குறுங்கட்டுரை வழிதான் தமிழுக்கு முதல் அறிமுகமானது. சி.மணி, சுஜாதா ஆகியோரின் மொழிபெயர்ப்புகள், அப்துல் ரகுமான், அமுதபாரதி, அறிவுமதி ஆகியோரின் நேரடித் தமிழ் ஹைக்கூ கவிதைகளைத் தொடர்ந்து, 1985-ஆம் ஆண்டு கவிஞர் ஈரோடு தமிழன்பனின் ‘சூரியப் பிறைகள்’ ஹைக்கூ கவிதை நூல் வெளிவந்தது. அந்நூலில் ‘வாசல் ஓர வாசகம்Õ எனும் தலைப்பில் ஈரோடு தமிழன்பன் எழுதிய முன்னுரை, ஜப்பானிய ஹைக்கூ குறித்தும், தமிழ் ஹைக்கூ பயணிக்க வேண்டிய பாதை குறித்தும் வழி காட்டியது (பலருக்கும் நகலெடுத்துக் கொடுத்தே நைந்துபோய் விட்டன என் வசமுள்ள அந்நூலின் பக்கங்கள்)

‘ஆகாயமும் அழகு

பூமியும் அழகு ஆம்

என் கையில் ரொட்டித்துண்டு.

என்கிற ஹைக்கூ கவிதை, தமிழ் ஹைக்கூவின் திலகமாய் இன்னமும் ஒளிர்கிறது.

ஹைக்கூவை அறிமுகம் செய்ததோடு நில்லாமல், 2001 ஹைக்கூவின் அங்கத வடிவமான சென்ரியு கவிதைகள் கொண்ட ‘ஒரு வண்டி சென்ரியு’ எனும் தொகுப்பைத் தமிழின் முதல் சென்ரியு நூலாகக் கொண்டு வந்தார். எது ஹைக்கூ, எது சென்ரியு என்கிற குழப்பத்திற்கான சரியான புரிதலைத் தந்தது அந்நூலில் கவிஞர் எழுதியிருந்த முன்னுரை.

ஒரே தடத்தில் ஓடிச் சலிக்கிற வண்டிமாட்டின் பயணத்தைவிட, திசையெங்கும் சுற்றி வலம் வரும் சிட்டுக்குருவியின் பறத்தல் மனமுடையதுதானே கவிஞனின் மனமும்? 2014-ஆம் ஆண்டின் மத்தியில் பழமைக்கும் புதுமைக்குமான கவிப்பாலமாய் ஈரோடு தமிழன்பன் தந்திருக்கும் புதுவகைப் பா நூலே, ‘ஒரு கூடை பழமொன்ரியு.’

மக்களின் சொல்லாடல்களில் இன்றும் உயிர்த்திருக்கும் பழமொழியும், அங்கத்தோடு மூன்று வரிகளில் நம் சிந்தனையைக் கொடுக்கிற ஜப்பானிய சென்ரியு கவிதையும் இணைந்த புதுவகையே பழமொன்ரியு.

‘எறும்பு முட்டை கொண்டு

திட்டை ஏறியது எதிரில்

சுங்கத்துறை அதிகாரிகள்.’ எனும் தொகுப்பின் முதல் கவிதைவரை தொடர்கிறது.

சமகாலத் தமிழ்ச்சூழலில் மட்டுமல்ல. இந்தியச் சூழலுக்கும் பொருந்திப் போகிற மாதிரியான ஏராளமான தெறிப்புகள் இந்நூலில் நிறையவே உள்ளன.

‘நீர் இடித்து நீர்விலகாது

நீருக்காக இடித்துக் கொண்டால்

மாநிலங்கள் விலகும்‘ (பக்கம்:11)

‘தவிடு தின்னும் ராசாவுக்கு

முறம் பிடிக்கும் மந்திரி

பட்டினியில் சாகும் மக்கள்’ (பக்கம்:14)

‘பதவி திரண்டு வந்தபோது

ஐயோ! பாராளு மன்றம்

கலைக்கப்பட்டு விட்டதே’ (பக்கம்:71)

ஒன்றல்ல, இரண்டல்ல… இப்படியாய்த் தொகுப்பு முழுக்க வாசிப்பாளனின் சிந்தனையை முடுக்கிவிடும் கவிநறுக்குகள், நம் அன்றாட வாழ்வில் கேட்டு ரசித்த, சொல்லிப் பழகிய பழமொழிகள் இந்நூலில் புதிதாய்க் கவிஅவதாரம் எடுத்துள்ளன.

பெண் விடுதலை, உழைப்புச் சுரண்டல், விலையாகும் கல்வி, சீரழியும் விவசாயம், நாற்றமெடுக்கும் ஊழல், பலி கேட்கிற சாதி வெறி, சிதைந்து வரும் மனித மதிப்பீடுகள்.. என சமூகம் குறித்த உள்ளார்ந்த அக்கறையோடு ஒவ்வொரு பழமொழியையும் இன்றைய சமூக உண்மையோடு சேர்த்தெழுதியுள்ளார் கவிஞர் ஈரோடு தமிழன்பன்.

‘ஊர் என்றால் சேரியும் இருக்கும்

சேரி சீறினால், சேரி சீறினால்

அந்த ஊர் எங்கு இருக்கும்?’ (பக்கம்: 83)

எதையும் எதிர்க்கேள்வி கேட்காமல் பழகிவிட்ட தலைமுறையினர், முன்னோர்கள் சொன்னது சரியாய்த் தானிருக்கும் என்று பொத்தாம்பொதுவாக நம்புகிற மனிதர்கள், இவர்களின் முன்னே மறுவிசாரணை கோருகின்றன இந்த ‘பழமொன்ரியு’ கவிதைகள்.

ஓவியர் கண்ணாவின் அர்த்தஞ் செறிந்த ஓவியங்களோடு மலர்ந்துள்ள இந்நூல், கவிஞர் ஈரோடு தமிழன்பன் தமிழகக் கவிஞர்களுக்குக் காட்டியுள்ள புதிய கலங்கரை விளக்கென ஒளிமுகம் காட்டி மிளிர்கிறது.

 

ஒரு கூடை பழமொன்ரியு
ஈரோடு தமிழன்பன்
பாப்லோ பாரதி பதிப்பகம்  சென்னை–95 | பக்: 104 | ரூ.70

Related posts