You are here
மார்க்சியம் 

இலண்டனிலிருந்து ஒரு இந்தியக்கனவு

என்.குணசேகரன்

இங்கிலாந்து நாட்டு கம்யூனிஸ்ட் கட்சியின் மிக முக்கியமான தலைவராகவும் மார்க்சிய சித்தாந்த அறிஞராகவும் விளங்கியவர் ரஜினிபாமிதத் (1896-1974). இங்கிலாந்து கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக 1939-41 -ஆம் ஆண்டுகளில் ரஜினிபாமிதத் பணியாற்றினார். அவரது தந்தை இந்தியர்.
அவர்,1930-ஆம் ஆண்டுகளிலேயே இந்தியாவிற்கு பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து பரிபூரண சுதந்திரம் கிடைக்க வேண்டுமென லண்டனிலிருந்து  போராடியவர்.  அவர், ஆசிரியராகப் பணியாற்றிய
லேபர் மந்த்லி (Labour Monthly) இதழில் இந்தியாவின் தொழிலாளர்கள்  விவசாயிகள் பிரச்சனைகள் பற்றியும், ஆங்கிலேய ஆட்சி இழைத்து வந்த அநீதிகள் குறித்தும் தொடர்ந்து கட்டுரைகளை வெளியிட்டு வந்தார். ரஜினிபாமிதத்,பென் பிராட்லி உள்ளிட்ட பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட்கள் எழுப்பிய குரலின் எதிரொலியாக இந்தியாவிலும் ‘முழுச் சுதந்திரம் அடைந்தே தீருவோம்’ என்ற இலட்சியம் வலுவடைந்தது.இந்திய கம்யூனிஸ்ட்கள் பரிபூரண சுதந்திரத்திற்காக முதற்குரல் எழுப்பினர். பென் பிராட்லி. பிலிப் ஸ்பிராட் ஆகிய இரு பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் தலைவர்கள் மீரட் சதிவழக்கில் சேர்க்கப்பட்டு ஐந்து ஆண்டு கடுங்காவல் தண்டனை பெற்று, கொடூர சிறைவாசத்தை அனுபவித்தனர். தற்போதைய தலைமுறை அவர்களை மறந்துபோனாலும், இந்தியா அவர்களுக்கு என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளது.
1926-ஆம்ஆண்டு ரஜினிபாமிதத்தின் ‘நவீன இந்தியா’ (Modern India), வெளியானது. அந்த நூலும், 1940-ஆம் ஆண்டில் வெளியான அவரது  ‘இன்றைய இந்தியா’ நூலும்,  இந்தியாவிற்கு பூரண விடுதலை அவசியம் என்ற வாதத்தை அறிவியல் ரீதியாக, ஆதாரங்களோடு முன்வைத்தன. அவை இந்தியாவின் நவீன  வரலாற்றை விளக்கும் நூல்கள்;  அது மட்டுமல்லாது, இந்தியச் சமூகம் பற்றிய சிறந்த மார்க்சிய ஆய்வு நூல்களாகவும் அவை விளங்குகின்றன.
‘இன்றைய இந்தியா’ நூலை 1936 – 39- ஆம்ஆண்டுகளில் ரஜினிபாமிதத் எழுதி முடித்தார். 1940-ஆம் ஆண்டு  இலண்டனில் அது வெளியிடப்பட்டது. ஆனால்  இந்தியாவில் விற்பனை செய்ய பிரிட்டிஷ் அரசு  தடை விதித்தது.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமறைவுப் பகுதிகளில் சட்டவிரோதமாக ஒவ்வொரு தலைப்பாக அச்சிட்டு விநியோகிக்கப்பட்டது. அவ்வாறு பல தடைகளைத் தாண்டி விநியோகிக்கப்பட்டாலும், அந்நூல் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியது. 1947- ஆம் ஆண்டு  கல்கத்தாவில் இரண்டாவது பதிப்பு வெளியானது. “இந்தியாவில் ஒரு மார்க்சிய தலைமுறையையே  இந்த நூல் துவக்ககாலத்தில் உருவாக்கியது”என்றார் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் அன்றைய மூத்த தலைவரான ஜி.அதிகாரி.
காந்தியின் சித்தாந்தம் பற்றிய மார்க்சியக் கண்ணோட்டம் அடிப்படையில் பல விமர்சனங்களைக் கொண்டிருந்தார்  ரஜினிபாமிதத். ஆனால்  காந்தியின் முக்கிய பங்களிப்பைப் பற்றி அவர் குறிப்பிட்டுள்ளார்.
“1919-1922 காலக்கட்டத்தின் முக்கியத்துவம் என்னவென்றால், தேசிய இயக்கம் ஒரு வெகுமக்கள் இயக்கமாக மாறியதுதான். மற்ற எல்லாத் தலைவர்களை விட காந்தியின் மாபெரும் சாதனை வெகுமக்களை எட்டிய இயக்கமாக அதனை மாற்றியதுதான்.  இதுதான் காந்தியின் முதற்பெரும் சாதனை” (இன்றைய இந்தியா).
‘இன்றைய  இந்தியா’ நூலில் ‘இந்தியாவின் செல்வமும்  அதன் ஏழ்மை நிலையும்Õ என்ற அத்தியாயத்தில் முதல் வாசகம்  இப்படித்  துவங்குகிறது:  “இந்தியா ஏழைகளின் நாடு; ஆனால், இந்திய நாடு ஏழை நாடு அல்ல….” பொன்னான இந்த வரிகளை எழுதிய ரஜினிபாமிதத், இந்தியாவின் செல்வ வளத்துக்கும், நாட்டின் வறுமைக்கும் இடையில் இருப்பது எது? என்ற கேள்வியை எழுப்பி அதற்கான விளக்கத்தை விரிவாக எழுதியுள்ளார்.
“இந்த  இரண்டுக்கும் இடையில், தற்போதுள்ள இந்திய சமூக அரசியல் அமைப்புமுறையே முக்கியப்  பிரச்னையாக உள்ளது”என்பதுதான் அவரது கருத்தின் அடிப்படை. இன்றுவரை நீடிக்கும் ஆழமான காரணமாக இந்தியாவின் சமூக அரசியல்முறை உள்ளது. இந்த அமைப்புமுறை மாற்றப்பட வேண்டும் என்பது அவரது எழுத்தின் உயிர்நாடி.
இந்தியப் பிரச்சனைக்கு அச்சாணியான கடமையாக விவசாயப் புரட்சி அமைந்துள்ளது என்பது அவரது கருத்து.நிலப்பிரபுத்துவ முறைக்கு எதிர்ப்பு என்ற உள்ளடக்கமும் 1857-முதல் விடுதலைப் போரிலேயே இருந்ததை, அந்தப் புரட்சி பற்றிய அவருடைய வரலாற்று ஆய்வு விளக்குகிறது.
“நில ஆதிக்கத்தையும், நிலப்பிரபுத்துவத்தையும், ஒழித்த ஜனநாயகக் குடியரசாக” விடுதலை பெற்ற இந்தியா அமைய வேண்டுமென அவர் எழுதினார். விவசாயிகளின் வலுவான நாடுதழுவிய ஒற்றுமையும், போராட்டமும்,  நிலப்பிரபுத்துவ முறையை முடிவிற்கு கொண்டு வரும் ஜனநாயக நில விநியோகம் நடைபெறவும் அது வழிவகுக்கும் என்று அவர் எழுதினார். அந்தக் கடமை இன்றும் நீடிக்கிறது.
இதற்கு அவர் உழைக்கும் மக்களின் வெகுமக்கள் புரட்சிக் கட்சி இந்தியாவில் வலுப்பெற வேண்டுமென்று விரும்பினார்.அதற்கு ஏதுவாக இந்தியப் பொருளாதாரம் சுயசார்புப் பாதையில் செல்ல வேண்டுமென அவர் முயற்சித்தார்.ஜவஹர்லால் நேரு, ரஜினிபாமிதத் மீது அதிகப்பற்று வைத்திருந்தார்.  அந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி இந்தியாவில் சுயசார்பான பொருளாதார வளர்ச்சி தேவை என்ற கருத்தை நேரு மனதில் ஆழமாகப் பதிவு செய்தார்.
சுயசார்பான பொருளாதார வளர்ச்சிப் பாதையில் செல்வது நாளடைவில் உழைக்கும் மக்களுக்கான அதிகாரம் கம்யூனிஸ்ட்களால்  நிறுவப்படுகிற சூழலை அது ஏற்படுத்தும் என்பது அவரது தொலைநோக்குப் பார்வை. அது சோசலிசத்திற்கான திறவு கோலாக இது அமையும் என அவர் கருதினார்.
ஆனால், வரலாறு வேறுவிதமாக அமைந்தது. இந்திய முதலாளித்துவம் சுயசார்பு வளர்ச்சியால் கிடைத்த பலன்களைத் தனது மூலதனக் குவியலுக்குப் பயன்படுத்திகொண்டது. பிறகு ஒரு கட்டத்தில், சுயசார்புப் பாதையிலிருந்து விலகி,நவீன தாராளமய மாற்றம் ஏற்பட்டது. முதலாளித்துவ அமைப்பு முறைக்கு எதிரான மக்கள் இயக்கம் சோசலிச நோக்குடன் இன்றும் தொடர்கிறது.
இந்தியா சோசலிசப் பாதையில் நடைபோட இந்திய முதலாளித்துவம் பற்றிய சரியான புரிதல் அன்றைய மார்க்சிய இயக்கத்திற்கு தேவைப்பட்டது. இதற்கு ரஜினிபாமிதத்தின் எழுத்துக்கள் வழிகாட்டியாய் அமைந்தன.இந்தியாவில் சோசலிச மாற்றத்திற்கான பாதை பற்றிய தெளிவான புரிதலுக்கும் வித்திட்டவர் அவர்.
வாழ்நாள் முழுவதும், இந்தியாவில் சோசலிசம் மலர வேண்டுமென்ற கனவுகளைத் தேக்கி வாழ்ந்தவர் ரஜினிபாமிதத். அவரது எழுத்துக்கள் பற்றிய ஆழமான வாசிப்பு இன்றைய மார்க்சிய செயற்பாட்டாளர்களுக்கும் அவசியமானது.

Related posts