You are here
தூரத்து புனையுலகம் 

அழிய மறுக்கும் அடையாளங்கள்

ம. மணிமாறன்

நான் யாராக இருக்கிறேன் என்பதும், யாராக இருக்க வேண்டும் என்பதையும் நான் முடிவுசெய்வதில்லை. எங்கிருந்தோ எடுக்கப்படுகிற முடிவினை விருப்பத்துடன் ஏற்றுக் கொள்கிறவனாக நான் உருவாக்கப்படுகிறேன். என் வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் இது நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. தோற்றங்கள் மாறுகிறது. அழுக்கு உடை தொலைந்து போகிறது. உடலும்கூட நெகிழ்வாகவும், நாசூக்காகவும் மாறிவிடுகிறது, இருந்தபோதும் நான் எப்போதும் நானாக மட்டும்தான் இருக்க வேண்டியுள்ளது. என்னுடைய ஒவ்வொரு செயலின் போதும் நான் யார் என்பது ஞாபகமூட்டப்பட்டுக் கொண்டேயிருக்கிறதே என்பதைத் துயரமும், எள்ளலும் கலந்த மொழியில் முன் வைத்திருக்கிறார் அரவிந்த மாளகத்தி. தன்னுடைய தன்வரலாற்று நாவலான ‘கவர்ன்மென்ட் பிராமணன்’ நூலினை அவர் 1990களில் எழுதியிருக்கிறார். 90-ம் ஆண்டு என்பது தலித் அரசியல், தலித் இலக்கியம் ஆகியவற்றைக் குறித்த தர்க்கங்களும், விவாதங்களும் தீவிரமாக எழுந்த காலம்.
அறிவர் அம்பேத்கரின் நூற்றாண்டு விழாவினையொட்டி அவரின் படைப்புகள் இந்தியாவின் எல்லா மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டு படைப¢பாக்கப்பட்டது. தமிழிலும் கூட இது நிகழ்ந்தது. ஆனாலும் கூட முதல் தலித் இலக்கியப் பிரதி உருவாவதற்கு பத்தாண்டுகள் தமிழ்கூறும் நல்லுலகம் காத்திருக்க வேண்டியிருந்தது. அரசியல், தத்துவம், பண்பாடு என பல்வேறு பாய்ச்சல்களை நிகழ்த்திய தலித் அழகியல் கோட்பாடு புனைவிலக்கியத்தின் பக்கம் தட்டுத் தடுமாறிப் பயணப்பட்டுக் கொண்டிருந்தபோது தமிழ்ப் படைப்பாளிகளுக்கு எழுதுவதற்கான உத்வேகத்தை கன்னடப் படைப்பாளிகள் தான் வழங்கினர். சித்தலிங்கையாவின் சுயசரிதையான ‘ஊரும் சேரியும்Õ தமிழில் வெளிவந்த பிறகுதான்  தலித் புனைவிலக்கியத்தின் ஆகச் சிறந்த படைப்புகள் எல்லாம் உருவாக்கம் பெற்றன.
ஊரும் சேரியும், புதைந்த காற்று என்கிற இரு கன்னட நாவல்களைக் கற்றுணர்ந்த தமிழ்  எழுத்தாளர்கள் தங்களுடைய சுயசரிதைகளைத் தன் வரலாற்று நாவலாக்கித் தந்தனர். ஒரு வகையில் மொழிபெயர்ப்பின் ஆகச் சிறந்த பயன்பாடு என இதனை மதிப்பிடுகிறார்கள் ஆய்வாளர்கள். இதன் தொடர்ச்சியே அரவ¤ந்த மாளகத்திய¤ன் தன் வரலாற்று நாவலான கவர்ன்மென்ட் பிராமணன். ஆதியில் கல்லையெடுத்து குகைகளில் வரைந்திட்ட கலைஞர்களுக்கு காலம் ஏற்படுத்தி தந்திருக்கும் கௌரவத்தைப்போன்றதே கன்னடப் படைப்பாளிகளுக்கு நாம் வழங்க வேண்டிய கௌரவமும் அந்தஸ்தும் என்பதை ‘கவர்ன்மென்ட் பிராமணன்’ தன் வரலாற்று நாவல் நமக்கு உணர்த்துகிறது. நாவலை வெளியிட்ட விடியல் பதிப்பகமும், மொழிபெயர்த்திருக்கிற எழுத்தாளர் பாவண்ணனும் ஆகச்சிறந்த கலைச்சேவை ஆற்றியிருக்கிறார்கள்.
தலித் படைப்புகள் யாவும் அவரவரின் அனுபவங்களையே கதையாக்கி வெளிப்படுத்துகிறது. அதுவரையிலும் சுயசரிதை எழுதிட தலை நரைத்திருக்க வேண்டும், அனுபவங்களால் அவர்களது நாட்கள் யாவும் பழுத்திருக்க வேண்டும் என்கிற எழுதப்படாத விதிகள் யாவற்றையும் தலித் சுயசரிதைகள் கலைத்துப்போட்டன. வேறு எவருக்கும் வாய்க்க சாத்தியமே அற்ற அனுபவங்களையும், துயரங்களையும், கொண்டாட்டங்களையும் கணந்தோறும் எதிர்கொள்கிறோம் நாங்கள். எதற்காக நாங்கள் முதுமையடையும் வரை காத்திருக்க வேண்டும் என துடிப்புடன் வெளிப்படுத்தினார்கள் படைப்புகள் மூலமாக. அப்படித்தான் ‘வடு’வும், ‘காலச்சுமையும்Õ, ‘வன்மமும்Õ, ‘கூகை’யும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டன தமிழ¤ல். அப்படியே ‘கவர்ன்மென்ட் பிராமணனும்’ வெளிப்பட்டான்.
தலித்களை அடையாளப்படுத்திட பல்வேறு குறியீடுகளைப் பயன்படுத்திடும் வழக்கம் இன்று வரையிலும் நீடித்திருக்கிறது. தங்களுடைய உரையாடல்களின்போது பிராமணியம் ‘அடுத்தவர்’, ‘சூத்திராள்’ என பொதுமைப்படுத்துவதை நாம் அறிவோம். அப்படித்தான்  இட ஒதுக்கீட்டின் மூலம் (சலுகையல்ல) மறுபகிர்வைப் பெறுகிற தலித் சமூகத்தை எள்ளலாக ‘‘கவர்ன்மென்ட் பிராமணன்’’ என மற்றவர்கள் அழைப்பதையும், அதற்கான சந்தர்ப்பங்கள் தன்னுடைய வாழ்வின் வழிநெடுக வந்து கொண்டேயிருப்பதையும்தான் அரவிந்த் நாவலாக்கியிருக்கிறார்.
சுயசரிதையெனில் பிறப்பினில் துவங்கி பால்யத்தில் மூழ்கி எழுந்து காதல், திருமணம், பெறும்பேறுகள் எனத் தொடர்ந்து பரவிட வேண்டிய அவசியம் எதுவும் மாளகத்திக்கு இல்லை. முன்னும் பின்னுமாக நேர்கோட்டைத் துண்டு  துண்டுகளாக்கி கலைத்துப் போடுகிறார். ஆயினும் எல்லாப் பதிவுகளின்  ஊடாக அவருடைய சாதி அவருக்கு நினைவூட்டப்பட்டுக் கொண்டேயிருப்பதையும், அது அடையச் செய்யும் துயரத்தையுமே பதிவுறுத்தியுள்ளார். பால்ய நாட்களில் எங்காவது மரணம் நிகழ்ந்தால் தலித் குடியிருப்புகள் அடையக்கூடிய மகிழ்ச்சியில் தானும் பங்கேற்றதைச் செய்திருக்கும் பதிவு ருசிகரமானது. ‘‘ ஊரில் யார் செத்தாலும் எங்களுக்குச் சந்தோஷமாகவே இருந்தது. அன்று ஒரு வீரசைவரின் வீட்டில் யாரோ இறந்துவிட்டார்கள். பேண்டு வாத்திய முழக்கங்களோடு பிணத்தைத் தூக்கிக் கொண்டு சுடுகாட்டுக்குச் செல்லும் போது, பிணத்தின் மேல் சில்லறைக் காசுகளை இறைப்பதென்பது ஒரு பழக்கம்’’ அவர்களின் செல்வாக்கை காட்டுவதற்காகவே பிணத்தின் மீது காசை வீசுகிறார்கள் எனினும் இந்தச் சடங்கு சேரிகளில் இருக்கும் தலித்துகளை எதிர்பார்த்தே நிகழ்கிறது. தலித்துகள் இல்லாவிட்டால் அவர்கள் இறைக்கும் சில்லறைக் காசுகளுக்கு என்ன மரியாதை இருக்கிறது? இப்படித்தான் ஏதேனும் ஒரு வகையினில் தங்களை அண்டிப் பிழைக்க வேண்டிய நிர்பந்தத்தை ஆதிக்க சமூகம் தலித்துகளின் மீது விதித்துக் கொண்டேயிருக்கிறது. அது பிணத்தின் மீது வீசப்படும் சில்லறைகளைப் பொறுக்கிட, திருமணச் சாப்பாட்டுப் பந்திகளில் கொல்லைப்புறம் வழியாக வந்து சாப்பிட்டுச் செல்ல, தீபாவளி, பொங்கல், ஏன் கிறிஸ்துமஸ், ரம்ஜான் பண்டிகைகளின் போதும் மறக்காமல் ஊர்ச்சாப்பாட்டை வீடுகள் தோறும் பெற்றுத் திரும்பிட என ஏதேனும் ஒரு வகையில் இழிவினை நம் மீது சுமத்திக் கொண்டேயிருக்கிறதே என்கிற எரிச்சலை அடையாமல் இருக்க வாய்ப்பில்லை.
இந்நாவலை வாசிக்கையில் நாம் வாசித்துக் கொண்டிருப்பது மொழிபெயர்ப்பு நாவல் தானா அல்லது தமிழ்நாவலா என்கிற சந்தேகம் வந்து கொண்டேயிருக்கிறது. வாழ்க்கையும், சூழலும், அனுபவங்களும் நிலத்திற்கு நிலம் வேறுபடவில்லை. அச்சுப்பிசகாமல் தமிழ் நிலத்தைப் போலவே தான் சாதிய சமூகம் அங்கும் செயல்படுகிறது. மாளகத்தியின் பள்ளிக்கூட நாட்கள் இதற்கான பொருத்த சாட்சியாக நாவலுக்குள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளிக்கூடத் தண்டனை முறைகள் நீண்ட நெடுநாட்களாகவே குரூரமாகத்தான் வெளிப்படுகின்றன. பள்ளியைவிட்டுப் பாதியில் நின்ற தலித் மாணவர்களிடம் ஒரு சர்வே நடத்த வேண்டும்போலத் தெரிகிறதே என்கிற உணர்வினை நாம் ‘‘நாளைக்குப் பெருக்க வேண்டியவன் மாளகத்தி’’ என்கிற பகுதியை வாசித்திடும்போது அடைகிறோம்.
வகுப்பறையைப் பெருக்கி சுத்தம் செய்யும் வேலை தேவப்பா, மல்லப்பா, பஸவந்தப்பா மற்றும் அரவிந்த் என்கிற நான்கு தலித் மாணவர்களிடம் மட்டுமே ஒப்படைக்கப்படுகிறது. இதை மறந்து போகிறபோது இவர்களுக்குத் தரப்படுகிற பிரம்படிகளும், வசவுகளும் குரூரமானவை. ஒரு நாளில் தன்னுடைய பெயரைத் தவறாக வகுப்பு லீடர் எழுதிவிட்டானே என யாரும் இல்லேயென நம்பி அழிக்கப்போகிறபோது உள் நுழைந்த வாத்த¤யார் பின்னியெடுக்கிறார் பிரம்பினால். ‘‘ஏன்டா திருத்தக் கௌம்பிட்டாயா… மொவனே… கழுத… கழுத, கழுததாண்டா நீ… எண்ணக்காவது கழுத குதிரையாய்டுமா? கழுதைக்கு எதுக்குடா கொள்ளுத் தண்ணி?..’’ என்று தன்னுடைய ஆத்திரம் தீரும் வரை அடித்து நொறுக்குகிறார். பள்ளிக்கூடங்கள் இன்றைக்கும்கூட தன்னுடைய சாதியத்தின் எச்சங்களை விட்டு விலகவில்லை. கக்கூஸைப் பெருக்கி சுத்தம் செய்திடத்தான் அருந்ததியர்களின் பிள்ளைகள் பள்ளிக்கு வருகிறார்கள். அது அவர்களின்  வேலைதானே எனக் கூசாமல் அவர்களின் கைக்குள் விளக்குமாறு திணிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. எத்தனை பினாயிலை ஊற்றிக் கழுவினாலும் போகாத நாற்றமும், அழுக்கும் தேங்கிக்கிடக்கிற ஆதிக்கசாதி  வாத்தியார்களின் மனதின் குரூரத்தை கதைகளின் வழியாகத்தான் நாம் எழுதிக் கலைக்க வேண்டியிருக்கிறது.
இயற்கையோடு இயைந்து வாழ முடியாதவர்கள் வாழத் தகுதியற்றவர்கள் தான். பிரபஞ்சத்தின் உயிர்கள் யாவும் மனித குலத்திற்கு ஏதோவொன்றைக் கற்றுக் கொடுத்துக் கொண்டேயிருக்கின்றன. தூக்கணாங்குருவி மழைக்கு ஒழுகாத, வெயிலில் கருகாத எளிய இடம் போதும் வாழ்வதற்கு என மனிதகுலத்திற்குச் சொல்கிறது. ஆனாலும் மனிதர்கள் நிலங்களை அழித்து பிரம்மாண்டமான வீடுகளைக் கட்டிக் கொண்டே தான் இருக்கிறார்கள். மிருகம், பறவை, செடி கொடிகள் என யாவற்றிற்குள்ளும் ஜாதிகளை எழுதிப்பார்க்கிறது மனித மனம். இப்படித்தான் மாளகத்தியின் வீட்டு எருமை மாட்டிற்கு பொருத்தமான காளையைத் தேடிப் பயணிக்கிற ‘‘சினைக்குப் போன எருமையும் ஓடி வந்த காளையும்ÕÕ என்னும் பகுதி சாதியத்தின் ஆழம் வரையிலும் பயணிக்கிறது. ஊர்க்காளையுடன் சேரி எருமை சேர்வதை அதிலும் ஊருக்குள்ளேயே சேர்வதை சாதிய மனம் ஏற்க மறுக்கிறது. தும்பை அவிழ்த்து விரட்டி விடுகிறார் தேசாய் தன்னுடைய காளையையும் எருமையையும். பாட்டியின் கைதவறிப்போய்விடுகிறது. தேடியலைகிறார்கள் இரவு முழுக்க சேரியெங்கும் காளையையும், எருமையையும். இருட்டியபிறகும் அவைகள் கண்ணில் படவேயில்லை. விடிந்தபிறகு பார்த்தால் மாளகத்தியின் பின் கட்டில் தேசாய் வீட்டுக் காளையும், மாளகத்தியின் எருமையும் வாலாட்டிக் கிடக்கிறது. இப்படித்தான் ஊருக்குள் நுழைந்து தன்னுடைய பிரியத்திற்குரிய ஜோடியுடன் இணைந்த ‘‘ஹண்ட்யா’’ எனும் ஆண் நாயின் ‘‘பெல்லாவை’’ அறுத்துப் போடுகிறது சாதிய சமூகம். உலகின் மற்ற உயிரிகளைக் கூட இயல்பாகச் சேரவிடாத இந்தச் சமூகம் மானுடக் காதலர்களை மட்டும் எப்படி சேர்ந்து வாழ அனுமதிக்கும்? ஊரெங்கும் இளவரசனும், திவ்யாக்களும், வெட்டப்பட்ட ஆண்குறிகளுமாக  நிரம்பிக் கொண்டேயிருக்கின்றனர். நின்றபாடில்லை இப்பெருந்துயர்.
மானுடக் காதலைக் குறித்த மிக நீண்ட பகுதியொன்றும் நாவலுக்குள் முகிழ்த்து வருகிறது. ‘‘என் முன்னாள் காதலி’’ எனும் பகுதியில் கல்லூரிக் காலத்து நாட்களை எழுதிச் செல்கிறார் அரவிந்த மாளகத்தி. காதல் செழித்து வளர்ந்த ஆறாவது வருஷத்து நாள் ஒன்றில் அரவிந்தின் காதலி இப்படிச் சொல்கிறாள். ‘‘அரவிந்த்.. குறைந்தபட்சம் ஒரு லிங்காயத்தாவாவது நீ பிறந்திருக்கக்கூடாதா?’’ அவளுக்கு  சாதியமைப்பின்  மீது அருவருப்பு இருக்கத்தான் செய்கிறது. தெரிந்தே தான் அவனைக் காதலிக்கிறாள். எனினும் இச்சாதிய சமூகத்தை மீறிவருகிற சக்தி அவளுக்கு இல்லை. சில நாட்களுக்குப் பிறகு இப்படிச் சொல்லிப் பார்க்கிறாள் ‘‘சேரியும் அக்கிரகாரமும் ஒன்னாய்டுச்சின்னா எல்லாமே முடிந்த மாதிரிதான்…’’ காதலாகிக் கசிந்துருகிடும் நாட்களில் எல்லாம் எந்தவொரு சிக்கலுமில்லை. திருமணம், குடும்பம், வாழ்வது என யோசிக்கிறபோது தான் எல்லாச் சிக்கல்களும் வந்து சேர்கிறது. குடும்பம் சாதியைக் காப்பாற்றித் தக்க வைத்திடும் மிக நுட்பமான அமைப்பு என்கிற புரிதலை நாவல் வாசகனுக்குள் கொண்டு வந்து சேர்க்கிறது. உலகில் வேறு எங்கும் குடும்ப அமைப்பு முறை இத்தனை வலுவாக இல்லையென  பெருமைப்பட்டுப் பேசித்திரிபவர¢களின் சொற்கள் நமக்கு உலகில் வேறு எங்கும் சாதியக் கட்டமைப்பு இத்தனை நுட்பமாக இல்லை என்றுதான் கேட்கிறது. ஒரு தேர்ந்த நாவல் வாசகனுக்குள் எழுத்தாளன் எழுதியிருக்காத பகுதிகளையும் கூட கடத்திடும் வல்லமை கொண்டதாக இருக்கும். அப்படித்தான் நாவலின் பல பகுதிகள் அமைந்துள்ளன.
தலித்கள் கல்வி கற்பதை, தன்னுடைய அறிவாலும், திறமையாலும் தனக்குரிய இடத்தை அடைவதை ஒருபோதும் சாதிய சமூகம் த¤றந்த மனதுடன் அனுமதிப்பதில்லை. கள்ளமௌனம் ததும்பிடத்தான் தலித்திய அறிஞர்களை எதிர்கொள்கிறார்கள். அரவிந்த் படித்திட உதவிக் கொண்டிருந்த தெருவிளக்குகளை இரண்டு நாட்களுக்கு ஒருமுறை கருப்புப் போர்வை போர்த்திய முரட்டு உருவங்கள் ஆட்டி, ஆட்டி பீஸாக்கிப் போகிறார்கள். அரவிந்த் படிப்பு அவர்களுக்கு எரிச்சலை ஊட்டியது ஒரு காரணம் என்றால் மற்றொரு காரணம் இரவில் தங்களுடைய இச்சையைத் தனிக்க ரகஸியமாக சேரிக்கு வந்துபோவதற்கு அது தடையாக இருக்கிறது என்பதும் தான். இப்படியுமா நடக்கும் என அரவிந்த் பத்திரிகையில் தொடராக எழுதியபோது அவருடைய நண்பர்கள் கேட்டார்களாம். தன்னுடைய சக அறை மாணவனின் கதையைக் கேட்டபோது அவர்கள் யாவரும் நிலைகுலைந்து போனார்களாம். நாமும் கூடத்தான் நிலைகுலைந்து போவோம். ஆய்வு மாணவன் அவன். காதல் வலையில் திட்டமிட்டு வீழ்த்திய பெண் பேராசிரியரின் மகள். அவனோடு சுற்றித் திரிந்து அவனை எதுவுமற்றவனாக ஆக்கிவிடுகிறாள். அவளுக்கும், அவளின் சுற்றத்திற்கும் இருக்கும் தீராத வெறியில் மனப் பிறழ்வுக்கு உள்ளாகி மலத்திலும், சிறுநீரிலும் மிதந்து கிடக்கிறான் அவன். வேறு என்ன செய்ய, ஆய்வுக்கட்டுரை எழுதி அறிஞனாகியிருக்க வேண்டியவன். பைத்தியமாகிப் படுக்கையிலிருக்கிறான். பெரிதாக எதுவும் தவறு செய்யவில்லை, அவன் தலித்தாகப் பிறந்ததைத் தவிர.
மேல்நிலையாக்கம் குறித்த தீராத வெறியுடன் தலித்கள் இயங்குவதற்குள்ள அவர்களின் மனநிலை மற்றவர்களின் புரிதலுக்கு அப்பாற்பட்டது. சமஸ்கிருதமயமாக்கலின் அடையாளமான பூணூல் அணிந்து, சிவலிங்கம் அணிந்து வீரசைவர்களானாலும் சாதிய அடையாளம் கலைந்திடவேயில்லை. ராகவேந்திரர் மடத்தில்  தான் வரைந்து மாட்டிய படம் அகற்றப்பட்டுக் கடைசிவரை மாட்டப்படவேயில்லை. எப்போது பார்க்கிற போதும் சுவரில் இருக்கிற கருப்பு ஆணி அரவிந்தை மாளகத்தியாக மட்டுமே நினைவூட்டிக் கொண்டிருக்கிறது.  தன்னைப் புரட்சியாளனாக நிலை நிறுத்திக் கொள்ளப் புலாலும்,  மதுவும் அருந்துகிறார்கள். தங்களுடைய பெருமைக்காக மாளகத்தியை வீட்டிற்கு சாப்பிடக் கூப்பிடுகிறார்கள். மனைவிமார்கள் மட்டும் மாளகத்தியின் கண்ணில் படுவதேயில்லை. பந்தாவாக அவர்கள் சொல்லிக் கொள்கிறார்கள், ‘‘என்னுடைய தத்துவத்தையும், கோட்பாட்டையும் எவர் மீதும் நான் வலுக்கட்டாயமாகத் திணிப்பதில்லை. அது கட்டிய மனைவியாக இருந்தாலும் கூட’’ என்கின்றனர். எல்லாம் முடிந்த பிறகும் மாளகத்தியின் எச்சில் தட்டிற்குக் கூட திண்ணையையும், கூடத்தையும் தாண்டுவதற்கு தகுதியில்லை. மழையிலும், வெயிலிலும் காயும் எச்சில் தட்டிற்குத் தெரியும்,  சாதிமறுப்பதாகச் சொல்லித் திரியும் நவீனர்களையும், அவர்களின் மனங்களையும். 150 பக்கங்களில் ஒரு சமூகத்தின் வாழ்வியலை, அதன் துயரை, சாதியத்தின் வன்மத்தையும், குரூரத்தையும் நுட்பமாகப் பதிந்திருக்கும் அரவிந்த மாளகத்தியின் புனைவிலக்கியங்கள் யாவற்றையும் யாராவது தமிழில் மொழி பெயருங்களேன் என்று மட்டும் இப்போதைக்குச் சொல்லி வைப்போம்…

Related posts