You are here

தூரத்துப் புனைவுலகம் – 9 கால்களிலும் கண் முளைத்த பறவை

ம. மணிமாறன்

பழகிய பாதையினில் பயணிப்பவர்கள் பாக்கியவான்கள். சிக்கலில்லை. உருவாக்கிப் போடப்பட்டிருக்கிற தடத்தினில் புரண்டு விடாமல் சீராக இயங்குகிறவர்கள், வாழ்க்கையொன்றும் அவ்வளவு எளிதானதில்லை என்று அச்சப்பட்டு நிலைகுலையப் போவதில்லை. இப்படியானவர்களால் நிறைந்த இப்பெரு உலகினில் விலகி நின்று யாவற்றையும் உற்று நோக்குகிறவர்கள் தனித்தவர்கள். ஒவ்வொரு நொடியையும் துளித்துளியாக ஏற்று, அதனுள் இயைந்து கரைந்து வேறு ஒன்றாகத் தானும் மாறி புறத்தையும் கூட மாற்றிடத் துடிக்கிறவர்கள் அவர்கள். அப்படியானவர்களுக்கு வாழ்க்கை வரமா? சாபமா? என்றறிந்திட முடியாத புதிராகவே அமைந்து போகிறது. தனிமனிதர்களின் புதிர்சூழ்ந்த வாழ்வெனும் விளையாட்டு வடிவம் பெறுவதில் அவனுக்கு மட்டுமே பெரும் பங்கிருக்கிறது. அவனே அவனின் அனைத்திற்கும் கா£ரணமாகிப் போகிறான் என்பதை முற்றாக ஏற்றிட இயலாது. அவனுடைய உருவாக்கத்தில் அவன் ஊடாடித் திரியும் புறச்சூழலுக்கும் சரிசமமான பங்கிருக்கிறது. இந்தப் பிரம்மாண்டமான புறஉலகம் அவனுக்குள் இறக்கியிருக்கிற பேராற்றலை உணர்ந்து அவற்றைத் தன்வலிமையாக்கி தன்னையும், புறத்தையும் வேறு ஒன்றாக்குகிறவர்கள் வெகு சிலரே. அப்படியான வெகு சிலரின் கதையே ‘அவஸ்தை’.
வாழ்க்கை யாவருக்கும் பலநூறு சாத்தியங்களை முன்வைக்கிறது. ஒற்றைவழி உதவாது, பல திறப்புகளைக் கண்டறிதலே வாழ்க்கையை அர்த்தமும், அழகும் கொண்டதாக்கிடும் என்றறிந்தவர்கள் தனித்த ஆளுமைகளாகிறார்கள். ‘கிருஷ்ணப்ப கௌடர்’ என்கிற விலகிப் பயணித்த தனித்த ஆளுமையை யூ.ஆர். அனந்தமூர்த்தி ‘அவஸ்தா’ எனும் கன்னட நாவலாக்கித் தந்திருக்கிறார். வழமையிலிருந்து விலகிடும் தனிமனிதன் எதிர்கொள்கிற வேதனையையும், வலியையும், சவால்களையுமே தன்மொழியில் கதையாடியுள்ளார் யூ.ஆர். அனந்தமூர்த்தி. ‘அவஸ்தா’ வைக் கவிஞர் நஞ்சுண்டன் ‘அவஸ்தை’யென தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார். காலச்சுவடு பதிப்பகம் இப்புதினத்தை அழகுற வடிவமைத்திருக்கிறது.
எழுதி, எழுதி படைப்பாளி தான் உருவாக்கிய மனிதர்களைப் போலாகிறானா? அல்லது தன்னையே வேறு வேறு பெயர்களில் எழுதிப் பார்க்கிறானா? இரண்டும் இருக்கலாம். ஒரு வகையில் அவஸ்தையின் கிருஷ்ணப்ப கௌடரும், யூ.ஆர். அனந்த மூர்த்தியும் ஒருபடித்தானவர்கள் தான். சமரமற்று கலாச்சார சூழலை எதிர்கொள்கிறவர்கள் தான் இருவரும். அதனால்தான் இந்தியப் பெருஊடக நிறுவனங்கள் வரிந்துகட்டி வளர்ச்சியின் நாயகனாகக் கட்டமைத்த மோடியின் வலதுசாரிக் குரூரத்தை கேள்விக்குட்படுத்தினார் யூ.ஆர். அனந்த மூர்த்தி. மத அடிப்படைவாதம் பாசிஸமாக வடிவெடுத்திடும் அபாயத்தை மோடியின் கடந்தகாலத்தைக் கொண்டு கட்டுடைத்தார். அவஸ்தையின் கிருஷ்ணப்ப கௌடரும் கூட அப்படித்தான் அவர் காலத்தைய கலாச்சார அரசியல் வாழ்வினைக் கேள்விக்கும், தர்க்கத்திற்கும் உட்படுத்துகிறவராக வெளிப்படுகிறார். நாவல்  மூன்று  பாகங்களாக முன் வைக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணப்ப கௌடரின் வாழ்க்கையைத் திசை மாற்றுகிறவர்கள் வழிநெடுக வந்து கொண்டேயிருக்கிறார்கள். எளிய கதையையும் கூட அர்த்தமும், அடர்த்தியும் கொண்ட கலைப்படைப்பாக்கி விடுகிறார்கள் கலைஞர்கள் என்பதற்கான சாட்சியாக வெளிப்பட்டிருக்கிறது நாவல். மரத்தடியில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த கிருஷ்ணப்பன், அந்த மாநிலத்தின் முதலமைச்சராவதற்கான சாத்தியத்தை வாழ்க்கையின் ஓட்டத்தில் அடைகிறான். இந்த இரண்டு புள்ளிகளுக்கிடையில் தான் நாவல் விரிவு கொள்கிறது. சமகால அரசியலை நாவலாக்குகிற துணிச்சல் எப்போதுதான் நம்முடைய படைப்பாளிகளுக்கு வருமோ என்கிற ஏக்கத்தை அவஸ்தை வாசகர்களுக்கு ஏற்படுத்தும். ஒற்றைக் காகிதத்தில் பல்லாயிரம் அரசுஊழியர்களைப் பதட்டம் கொள்ளச் செய்த தமிழக அரசியல் அதிகாரத்தின் திமிரை ஏன் எந்தப் படைப்பாளியும் எழுதிப்பார்ப்பதில்லை. படைப்பென்றால் அது மனங்களுக்குள் இயங்க வேண்டும். அரசியல் நடவடிக்கைகள் தட்டையான மொழியில் தானே நகரும் என்று- தயங்குபவர்கள் கற்க வேண்டிய நாவல் அவஸ்தை. இந்தியப் பெருநிலத்தின் கலாச்சார, அரசியல் வாழ்வைக் குலைத்துப் போட்ட அவசரநிலைக் காலத்தைய நாட்களின் மனநிலை என்னவாக இருந்தது என்பதை சொல்லிப் பார்க்கிறது நாவல். மார்க்ஸியம், சோசலிசம், பாராளுமன்ற அரசியல் என தர்க்கம், தீராத தர்க்கம் நாவலுக்குள் நடந்தேறுகிறது. அரசியல் தளத்தில் மட்டுமல்ல இந்திய தத்துவ ஞான தரிசனங்களையும் அலசி ஆராய்கிறது.
நாவலின் முதல் பகுதியில் சிறுவனான கிருஷ்ணப்பன் ஆற்றுநீரில் மூழ்கும்போது காப்பாற்றிக் கரையேற்றுகிற பள்ளித்தோழன் அநுமந்தன் கடைசிவரை நாவலுக்குள் தென்படவேயில்லை. வாழ்வெனும் பேராற்றில் உக்கிரமான நீச்சலை அநாயசமாக அடித்து முன்னேறுகிற தன் நண்பனை அவன் ஒருவேளை வாசகனோடு, வாசகனாக கவனித்துக் கொண்டேயிருக்கலாம், ஏன் என்றால் என்ன ஆனான் இந்த அனுமந்தன் என்று நான் நாவலுக்குள் தேடிக்கொண்டேயிருந்தேன். ஏன் உன்னை நீ தேடிக்கொண்டிருக்கிறாய் எனும் குரல் கேட்கத் துவங்கியது. நாவல் நிறைவடைகிறபோது அதே பிள்ளை விளையாட்டுக் குணங்களோடு வெளிப்பட்டு கிருஷ்ணப்ப கௌடனைப் பெரும் சரிவில் இருந்து காப்பாற்றிக் கடைத்தேற்றுகிறான். மொத்தத்தில் முன்னூறு வரிகளுக்குள் கூட வந்திருக்காத ஒரு கதாபாத்திரம் வாசகனைக் கவர்வதற்கான மிக முக்கியமான காரணம் ஒன்று இருக்கிறது. கிருஷ்ணப்பக் கௌடன் மீடேற வேண்டும் என்கிற வாசகனின் ஏக்கத்தை நிறைவேற்றுகிறான். வெளிப்படையாகத் தெரியாவிட்டாலும் கூட இப்படியான மிக நுட்பமாக வாசகனின் பங்கேற்பிற்கான சாத்தியங்களைக் கொண்டதாக அமைந்திருக்கிறது புதினம்.
சர்ச்சைக்கும், சிக்கல்களுக்கும் உள்ளாகிய படைப்பு ‘அவஸ்தா’. அவஸ்தா கன்னட சினிமாவில் வெளிவந்த போது இது தன்னுடைய கணவரின் தனிப்பட்ட வாழ்க்கையைக் கொச்சைப்படுத்துகிறது என வழக்குமன்றத்திற்கு போனார் சாந்தவேரி கோபால கௌடாவின் மனைவி. கோபால கௌடா கர்நாடகத்தின் பிரபலமான சோசலிஸ்ட் தலைவர். நிலஉச்சவரம்புச் சட்டத்தை அமுலாக்குவதில் பெரும்பங்கு வகித்தவர். அவருடைய வாழ்வின் சாயலிலேயே அவஸ்தா ஒருவேளை இருக்கலாம். ஒரு ஆளுமையின் உருவாக்கத்திற்கு பொருத்தமற்ற காரணங்களைக் கூறிடாது சாத்தியமான விஷயங்களை முன்வைத்திட கோபால கௌடாவின் வாழ்க்கைக் குறிப்புகள் அனந்தமூர்த்திக்கு உதவியிருக்கலாம். அவருடைய வாழ்க்கையில் அனந்தமூர்த்தி உருவாக்கிய புனைவுப் பரப்பின் தன்மையில் தான் வழக்குமன்றத்தில் ‘அவஸ்தா’ வழக்கில் தீர்ப்பு அவருக்கு சாதகமாகவும் அமைந்திருக்கிறது.
மெல்லிய நீரோட்டம் போலானதில்லை வாழ்க்கை. சுழல்களும், சாகஸங்களும் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது. பெரும் கப்பலாக இல்லாமல் கிருஷ்ணப்பாவைக் கடைத்தேற்றுவதற்கான துடுப்பாக மஹேஸ்வரய்யா தோன்றிக் கொண்டேயிருக்கிறார்.ஆடுமேய்த்துக் கொண்டிருந்தவளை பள்ளிக் கூடத்தில் சேர்க்க வந்தவர், தான் வந்த வேலை முடிந்துவிட்டதைப் போன்ற மனநிலையில் வெளியேறிக் கொண்டேயிருக்கிறார். அவர்தான் அவனுக்கு தத்துவப் பார்வையை வழங்குகிறார். பறவையைப் போல உலகினைக் காண கற்றுக் கொள். பறவைக்கு உடலெங்கும் கண்கள் என்பதை மறக்காதே என்கிறார். மனப்பிறழ்வுக்கு உள்ளாகி நடுரோட்டில் டிரெங்குப் பெட்டியின் மீதமர்கின்ற போதும் அவர் அவனைக் கடைத்தேற்ற வருகிறார். தலைமறைவாக வாழ்ந்து புரட்சிக்காக உழைக்கிற இளைஞனைக் காப்பாற்றிட முனைந்து சிறைக்குள் கிருஷ்ணப்பன் சிக்கிக் கொள்கிற போதும் மஹேஸ்வரய்யா வருகிறார். இப்படி கிருஷ்ணப்பன் சிக்கலுக்குள் மாட்டிக் கொள்கிற போதெல்லாம் வந்து சேர்கிற மஹேஸ்வரய்யா ஒரு சாமியாரோ, புனிதரோ அல்ல என அவருடைய கதாபாத்திரத்தின் மீது வாசகன் ஏற்ற நினைத்திடும் புனிதத்தை மிக லாவகமாக துடைத்துப் போடுகிறார் அனந்தமூர்த்தி. அவர் ஒரு பணக்காரர், தன்னுடைய மனைவி விரும்பியவனுடன் போனபிறகும்கூட அவளுக்குரிய பங்கினை முறையாகக் கொடுத்துவிட்டு காடோ, தேசமோ என அலைகிறவர். இந்திய தத்துவமரபுகளையும், ஆதிசங்கரரின் சௌந்தர்ய லகரியையும், பகவத் பாதளையையும் கிருஷ்ணப்பனுக்கு சொல்லுகிற அவரேதான் குதிரை ரேஸிற்கும் போகிறார். சோசலிஷம் பேசுகிற கிருஷ்ணப்பக் கௌடா தன்னுடைய குருநாதன் குதிரை ரேஸிற்குப் போகப் பணம் தந்தே தீரவேண்டும் என மனைவியைக் கட்டாயப்படுத்துகிறார். மனிதர்களைச் சுற்றி அவர்களை வீழ்த்துவதற்கான சிறுமைகள் சுழன்று கொண்டேதான் இருக்கின்றன. அதனை வெல்வதற்கும் மீடேறுவதற்குமான சாத்தியங்களையும் வாழ்க்கையே முன் வைக்கும் என்பதற்கான குறியீட்டு அடையாளமே மஹேஸ்வரய்யாவுக்கும், கிருஷ்ணப்பாவுக்கும் இடையே நிகழும் உரையாடல்களும், தர்க்கங்களும்.
கிருஷ்ணப்பக் கௌடருக்கு மட்டுமல்ல, நம்மில் பலருக்கும் ஏற்பட்டுள்ள குடும்பம், பெண் உடல், பாலியல் போன்றவை குறித்து உருவாகி நிலைத்திருக்கும் பார்வை நம்முடைய மரபுகளில் இருந்து உருவானதுதான். மரபுகளையும், நீண்ட நெடுங்காலமாக மதங்களும், புராண இதிகாசங்களும், சொல்கதைகளையும் கேள்விக்குட்படுத்திட வேண்டிய அவசியமிருப்பதை கிருஷ்ணப்பாவின் கல்லூரி நாட்கள் நமக்கு உணர்த்துகின்றன. தனித்தவர்களாக வெளிப்படுகிற கௌரி தேஷ்பாண்டேவும், கிருஷ்ணப்பக் கௌடாவும் காதலர்களாகிட எல்லா சாத்தியங்கள் இருந்தும் இருவரும் அதை மறுக்கின்றனர். குழந்தை பெற்றுத்தரும் இயந்திரமல்ல பெண்கள் என்கிற கருத்தினில் வலுவாக இருப்பவள் கௌரி. அதனால்தான் திருமணத்தை மறுத்து ஐரோப்பியா பயணித்திட்ட போது, கிருஷ்ணப்பன் கௌரியின் செயல் வெறும் உணர்ச்சிகளால் ஆனது என்றே நினைக்கிறான். பக்கவாதத்தில் படுக்கையில் வீழ்ந்து கிடப்பவனாக கிருஷ்ணப்பனை உடல் புரட்டிப் போடுகிறது. அப்போது கிருஷ்ணப்பன் நினைத்துக் கொள்கிறாள். நாம் வாழ்க்கையில் அடைய வேண்டிய மிகஉயர்ந்த விஷயங்களை அடைவதற்கான வாய்ப்புகள் தானாக கனிகிறபோதும் கூட நாம் ஏன் தவிர்க்கிறோம் தெரியுமா? ப்பூ… இவ்வளவுதானா என்றாகி அதன் மீதிருந்த பிம்பமும் கரைந்து விடும். அதனால்தான் கௌரியோடு கலக்கவில்லையவன். தன்னுடைய பிம்பத்திற்கு எந்த சேதாரத்தையும் ஏற்படுத்திடாத சீதா போன்ற சனாதன தர்மத்தைப் பின்பற்றுபவளை மனைவியாக்கிக் கொள்கிறான். அவள் அவனுக்கு மலம் அள்ளுபவளாக, உடலைப் பராமரிப்பவளாக மாறுகிறாள். எபபோதாவது அவன் அவளை அடிக்க கை ஓங்கிடும்போது ‘பொண்டாட்டிய அடிக்க வர்றவரு நாட்டில் புரட்சிய உண்டாக்கப் போறாராம், இதுதான் கம்யூனிஸ்ட்களோட லட்சணமாக்கும்’ எனக் கேட்டபடி வெளியேறுகிறாள். அவள் வெளியேறுவதும் வாசகனுக்குள் மிகத் தீவிரமான விவாதமும் ஒருசேர நிகழ்வதற்கான இப்படியான பல புள்ளிகளைக் கொண்டுள்ளது நாவல். அதிகாரம், ஜனநாயகம், பராளுமன்றத் தேர்தல், சோசலிஷம், கம்யூனிஸம் போன்றவை குறித்த வலுவான தர்க்கங்களும், வியாக்கியானங்களும் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றது. இந்தியா போன்ற பெருமுதலாளிகளின் கைகளுக்குள் சிக்கிச் சீரழிகிற இந்த நிலத்தில் சித்தாந்தத்தைக் கற்பதும், தொடர்ந்து சோசலிஷ்டாகவோ அல்லது கம்யூனிஸ்டாகவோ நீடிப்பதில் உள்ள சிரமங்களை நாவல் நுட்பமாக வெளிப் படுத்துகிறது. தலைமறைவு நாட்களின் போது லயன்ஸ், ரோட்டரி கிளப்களில் மார்க்ஸியம் குறித்துப் பேசுகிற கடுந்துயரை யெல்லாம் சுமந்தே கம்யூனிஸ்ட்களால் வாழ முடிகிற அபத்தம் நாவலை வேறொரு தளத்திற்கு நகர்த்துகிறது. காலத்தையும், அரசியலையும் லாவகமாகக் கதையாடிய அனந்தமூர்த்தியின் ‘அவஸ்தை’ தமிழ்ச் சமூகம் கற்றறிய வேண்டிய நூதனமான படைப்பு.

Related posts