You are here

கல்லூரிமாணவியின்- ஒர் இடைக்கால அறிக்கை

நிவேதிதாசுந்தர்

ஒரு குழந்தைக்கு எப்படி சாக்லேட்டுகள் என்றால் உயிரோ, தொடர் வாசிப்பு பழக்கம் உடையவர்களுக்கும் புத்தகங்கள் என்றால் உயிர். புத்தகக் கண்காட்சி என்பதெல்லாம் திருவிழா போலத்தான்! எனக்கும் அப்படித்தான்! எந்த ஆண்டையும் விட இந்த ஆண்டு நடந்த சென்னைப் புத்தகக் கண்காட்சியில் எனக்கு நிறைய நல்ல நூல்களை வாங்கிய அனுபவம் கிடைத்தது. பல அரங்குகளுக்குச் சென்று சுற்றித் திரிந்தும் அங்கெல்லாம் சில நூல்களை மட்டுமே வாங்கினேன். ஆனால், பாரதி புத்தகாலயம் சென்றது தான் தாமதம், ஒரு கால் மணி நேரத்தில் எல்லாம் கிட்டத்தட்டப் பத்து புத்தகங்களைத் தேர்வு செய்து வாங்கிவிட்டேன்.
ரொம்பவும் ஆசைப்பட்டு வாங்கிய புத்தகம் கறுப்பர் நகரம். தற்போது ஜார்ஜ் டவுன் என்றழைக்கப்படும் வட சென்னையின் நகர்ப் பகுதியில் வாழ்ந்த மக்களின் வறுமை, காதல்,அரசியல், அப்பாவித்தனம், வைராக்கியம் என அனைத்தும் கலந்த வாழ்க்கையை, இந்நாவலில் நம் கண்முன்னே திரையிடுகிறார் கரன் கார்க்கி. ஆராயி,செங்கேணியின் காதலைப் படிக்கும் தருணங்களில், இன்றைய காதலர் தின வியாபாரங்களில் பரிசுப் பொருட்களுக்கும் பார்ட்டிகளுக்கும் நடுவே சிக்கித் தவிக்கும் காதலைக்  கண்டு பரிதாபப்படாமல் இருக்க முடிவதில்லை. தங்கள் உரிமை மறுக்கப் படும்போது சங்கமாய்ச் சேர்ந்து போராடும் மக்களை ஒடுக்கும் அதிகார வர்க்கத்தின் கோர முகம், ஏழ்மையில் கூட அடுத்தவனுக்கு உதவ நினைக்கும் உழைக்கும் மக்களின் வெள்ளந்தி மனம் என எதார்த்தக் கலவையாய்  நகர்கிறது நாவல்.
அடுத்தது ஆயிஷா இரா.நடராசன் அவர்களின், இது யாருடைய வகுப்பறை?.  பாடப்புத்தகத்தைத் தாண்டி வேறு புத்தகங்களை வாசிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவே. (இருக்கும் சிலபஸையே படித்து முடிப்பதற்குள் மூச்சுத் திணருகிறது!) வாழ்க்கைக்குத் தேவையானவற்றை தற்போதைய  கல்வி சொல்லித் தருவதே இல்லை. வேலை செய்யத் தகுதியுடைய ஒரு எந்திரமாக மாணவர்களை மாற்றுவதை மட்டுமே அது செம்மையாகச்  செய்கிறது. இந்தப் பள்ளிக் கல்வி முறையின் தொடக்கமான லீசியம் முதல் இன்றைய ஏர் கண்டிஷண்டு ஸ்மார்ட் க்ளாசஸ் வரை அவை எத்தகைய மாற்றங்களுக்கு உட்பட்டு இன்றைய நிலைமையை அடைந்தன என்பனவற்றை எல்லாம் விளக்கி, மாண்டிசொரி, பாவ்லோ ப்ரைய்ரே போன்ற பல்வேறு கல்வியாளர்களின் கல்விமுறைகள், தேவைப்படும் கல்விச் சீர்த்திருத்தங்கள் பற்றிய கருத்துக்களையும் விவாதங்களையும் ஆழமாகப் பேசுகிறது இப்புத்தகம்.
என்னதான் பள்ளிக்கூடம் போவதையும் வகுப்புகளையும் வெறுத்தாலும், நமது விருப்பத்திற்குரிய, பிடித்தமான ஆசிரியர் என்று நம் அனைவருக்கும் ஒருவர் இருக்கவே செய்கிறார். அத்தகைய அபூர்வமான ஆசிரியர்களை நமக்கு நினைவூட்டும் கதை தான் ‘மிஸ்டர் சிப்பிங்’கின் கதையும். ப்ரிட்டிஷ் வீக்லியில் “Goodbye, Mr.Chips” என்ற கதையின் தமிழ்ச் சுருக்கத்தை அதே தலைப்பில் ச.மாடசாமி அவர்கள் எழுதி பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.
சாதி வேற்றுமை பார்ப்பதில்லை என்பது போல, மக்கள் வெளியில் காட்டிக்கொண்டாலும் உள்ளுக்குள் சாதி என்னும் “தீ” மனதுக்குள் அணையாமல் உயிர்த்தேதான் இருக்கிறது. இந்த அவலத்துக்கு சாட்சியாக தர்மபுரிக் கலவரம் போன்றவை இருந்து கொண்டுதான் உள்ளன. தர்மபுரி சம்பவம் நிகழும் முன்பே இமையம் எழுதிய சிறுகதை தான் “பெத்தவன்”. வேற்று சாதி ஆணைக் காதலித்த ஒரே காரணத்திற்காக அவளின் சமூகம் அவளையும் அவள் குடும்பத்தையும் எப்படியெல்லாம் கொடுமைகளுக்கு உட்படுத்துகிறது என்பதையும் இச்சாதிய சமூகம் பெண்களை எத்தகைய இழிநிலையில் வைத்துள்ளது என்பதையும் இச்சிறுகதை வெட்டவெளிச்சமாக்குகிறது.
முற்போக்கு இயக்கங்கள் வலுவாக இருந்த தமிழகத்தில் இன்றைய நிலையோ தலைகீழ். சாதிக்கலவரங்களும் பெண்கள் மீதான வன்கொடுமைகளும் மெல்லத் தலைதூக்க ஆரம்பித்துள்ளன. இத்தகைய சூழலில் அவசியம் படிக்க வேண்டிய புத்தகமாக அமைந்திருந்தது, தமிழக முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கமும் பாரதி புத்தகாலயமும் இணைந்து வெளியிட்ட “தமிழகப் பண்பாட்டுச் சூழல்” என்னும் நூல். பண்பாட்டைக் கட்டமைக்கும் கூறுகள், சாதியப் பாகுபாடு,பெண்கள் மீது தொடுக்கப்படும் வன்முறை,ஊடகங்களின் செயல்பாடு எனப் பல்வேறு விஷயங்களை இந்நூல் ஆய்ந்து கூறுகிறது.
தமிழில், சிறுவர் இலக்கியம் பெரிதும் கவனிக்கப்படாத ஒரு பிரிவாகவே உள்ளது என்ற போதும் பாரதி புத்தகாலயத்தில் நாம் சிறுவர்களுக்கென்றே தனியாக நூல்களைக் காணமுடிகிறது. “புத்தகப் பூங்கொத்து” என்ற சிறுவர்களுக்கான சிறுநூல் தொகுப்பு அழகாக, வண்ணமயமான படங்களுடன் அமைந்திருந்தது. நிச்சயம் இதனைக் குழந்தைகள் விரும்புவார்கள். ஆனால் இம்முறை வாங்க இயலவில்லை. அதற்கு பதிலாக விழியன் எழுதிய “மாகடிகாரம்” என்னும் சிறுகதை நூலையும் ஆயிஷா நடராசனின் “நீ எறும்புகளை நேசிக்கிறாயா?” என்னும் மொழிபெயர்ப்புச் சிறுகதைகளின் தொகுப்பையும் வாங்கிவிட்டேன்.
இன்னும் வாசிக்கப்படாமல் சில நூல்கள் மட்டும் மிஞ்சியுள்ளன. கறுப்பழகன், உலகப் புகழ்பெற்ற The black beauty
என்னும் நாவலின் தமிழ்ப் பதிப்பே இது. யூமா. வாசுகி மொழிபெயர்த்துள்ளார்.ஆயிஷா நடராசனின் உலகை மாற்றிய சமன்பாடுகள், செள்ளு என்னும் சிறுகதைத் தொகுப்பு, இவற்றையும் படித்து முடித்து விட்டால் அடுத்த கட்ட புத்தக வேட்டையில் இறங்கிவிடலாம். வாசிப்பு ஒரு ஆரோக்கியமான போதை. அதனால், அடுத்த புத்தகக் கண்காட்சியில் இன்னும் கொஞ்சம் நூல்களை அதிகமாக வாங்கும் திட்டமும் போட்டாயிற்று!

• கட்டுரையாளர் எத்திராஜ் மகளிர் கல்லூரி மாணவி

Related posts