You are here
வாங்க அறிவியல் பேசலாம் 

இந்திய ஆட்சியாளர்கள் கட்டமைக்கும் வளர்ச்சி அறிவியல் பூர்வமானது அல்ல

அமர்த்தியாசென்

 

amartya-sen-1-MODIFICAஉலகப் பிரசித்திபெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் இடதுசாரி சிந்தனை மரபில் தனது துறையை அறிவியல் மயம் ஆக்கியவர். பஞ்சங்கள் மனிதர்களால் ஏற்படுத்தப்படும் செயற்கை பேரிடர்கள் என்பதை அறிவியல்பூர்வமாக நிரூபித்தவர். நவீன கால அரசுகள் குறித்த அமர்த்தியா சென்னின் சந்தை மயமாக்கல் மீதான கடும் விமர்சனங்கள் அவரை ஆடம் ஸ்மித், மார்ஷல் போன்றவர்களின் வரிசையில் வைத்துப் போற்றத் தகுந்த இடத்தில் நிறுத்துகிறது. உலகமயமாக்கல் உட்பட பொருளாதாரத்துறையின் அதி நவீன தொழில்நுட்ப சந்தைகளின் சிக்கலான உட்பொருளை அறிவியல் பூர்வமாக கூறுபோட்டு – இந்த 21ஆம் நூற்றாண்டின் கூலி, விலை, லாபம் மற்றும் உபரி யார்பக்கம் சாய்கிறது என்பதை மக்களிடம் பேசத் தயங்காத அறிவியல்வாதி அவர்.
1940களின் பெரும் வங்காளப் பஞ்சத்தின் போது சென்னுக்கு வயது பத்து. தனது உறவினர்கள் பலர் வறுமையில் பிச்சை எடுப்பதைக் கண்கூடாகப் பார்த்து பொருளாதாராம் படிக்க முடிவெடித்தார். அவர் பிறந்தது சாந்திநிகேதனில். தந்தை அங்கே விரிவுரையாளர். அமர்தியாசென் என்று தாகூர்தான் பெயர் சூட்டினார். பஞ்சம், பட்டினி பெருநோய்களுக்கு மக்கள் தொகை பெருக்கமே காரணம் என தாமஸ் மால்தூஸ் போன்றவர்கள் கூறிக் கொண்டிருந்தபோது அதை முழுமையாக ஆய்வு செய்து முப்பதாண்டுகள் திரட்டிய தகவல்களைக் கொண்டு தனது ‘மூன்றாம் உலக நாடுகளுக்கான’ பொருளாதார அறிவியலை முன் வைத்து கல்வி அறிவின்மையே வறுமைக்கான முக்கியக் காரணி என்பதை நிரூபித்தார் சென். ஜெட்புரி பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர் ஆகாமலே பேராசிரியர் ஆக்கப்பட்ட சென், பிறகு ஆக்ஸ்போர்டிலும் கேம்பிரிட்ஜிலும் பணியாற்றினர். 1998ல் உலகின் பெரும்பாலான மூன்றாம் உலக நாடுகள் 100 சதவிகித எழுத்தறிவை அடைய யுனிசெஃப்பின் பணி ஓரளவு நிறைவடைந்த நிலையில் அமர்தியா சென் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்றார். சமரச நோபல் அறிஞராக உலக வங்கி குழுமத்திற்கு பணிசெய்யாமல் மக்களின் பிரச்சனைகளை ஒரு தட்டிலும் சந்தை மய சிந்தனைப்போக்கை மற்றொரு தட்டிலும் வைத்து தனது கருத்துகளை வெளியிடத்தயங்காதவர் சென்.
சமீபத்தில் வெளிவந்த சென்னின் நூல் ஆன் அன்சர்டெய்ன் குளோரி (An Uncertain Glory)  ஜீன் டிரேஸுடன் இணைந்து எழுதியது இந்திய ‘வளர்ச்சி’ குறித்த அதிர்வலைகளை ஏற்படுத்தியதன் பின்னணியில் சமூக நீதிக்கும் பொருளாதார வளர்ச்சிக்குமான இருவழி உறவுநிலை எனும் தனது புதிய அறிவியல் கோட்பாட்டை சமூகவியல் மற்றம் பொருளாதாரத்துறை சார்ந்து–_ பிராஸ்பெக்ட் இதழின் ஜொனாதன் டெர்ப்ஷைர்க்கு அளித்த நீண்ட நேர்காணல் இது. அதன் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை கீழே தொகுத்துள்ளோம். சந்தைப் பொருளாதாரம் சமூக அறிவியலின் பார்வையில் எப்படி அணுகப்பட வேண்டும் என்பதற்கு அமர்த்தியா சென்னின் பாதை, அவரது புத்தகத்தின் மைய நீரோட்டம் என விரியும்  அவரது நேர்காணலின் சுருக்கம் இது. அவரது புதிய அணுகுமுறை பலவற்றை நமக்குப் புரியவைக்கிறது.

கே : உங்களது அறிவியல் பூர்வமான ‘வளர்ச்சி’ அணுகுமுறையில் இரு பதங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. சமூகநீதி மற்றும் பொருளாதார வளர்ச்சி. இவை இரண்டுக்குமான அடித்தள சமன் என்பது இந்தியாவில் ஒரளவு சரியாகவே உள்ளது என்று தானே முன்பு கூறினீர்கள். இப்போது என்ன ஆயிற்று?

ப: இந்தியாவில் செல்வந்தர்களுக்கும் ஏழைகளுக்குமான இடைவெளி எந்த அளவுக்கு ஆகிவிட்டது என்றால் பெருஞ்செல்வந்தர்களின் மலம் கழித்தல் ஏழைபாழைகளின் குடிநீர் ஆதாரங்களை அழிக்கும் சக்தி கொண்டதாகி… அவர்களது அதாவது- செல்வந்தரின் வாழ்முறையே சுற்றுச்சூழல் சீர்கேடுகளை இயல்பாக கொண்டுள்ள நிலை. அது சென்று கொண்டிருக்கும் பேரழிவின் வேகம் நம்மை மாற்றுவழிகளில் சிந்திக்கத் தூண்டுகிறது. 15-20 வருடங்களில் நாம் அறிவியல் பூர்வமாக பல பின்னடைவுகளை சந்தித்துள்ளோம். உதாரணமாக சத்து குறைபாடு இன்டெக்ஸ். நமது குழந்தைகளின் நிலை மிகமிக கீழே உள்ளது. இதுதான் என்னை ஓங்கி அறைந்த முதல் உண்மை. பிறகு அனைவரையும் ஒன்றுபோல் நடத்தும் மருத்துவ அமைப்பு விஷயத்தில் தொடர்ந்து மோசடி நிலை. எல்லா வகைக் குழந்தைகளுக்குமான நல்ல தரமான கல்வியளிக்கும் முறை, சர்வதேச அளவிலான தரம் கொண்ட நோய் தடுப்பு அமைப்பு. இவையனைத்தும் சிதைக்கப்பட்டு- நாம் தனிநபர் வருமான இன்டக்ஸில் எந்த நாடுகளைவிடவும் முந்திவிட்டதாக மார்தட்டுகிறோமோ- உதாரணமாக வங்கதேசம் – அந்த நாடுகளைவிட மேற்கண்டவற்றில் பல படிகள் பின்தங்கியிருக்கிறோம். இதனை விரிவாக அலசுவதற்கு சமூகநீதி மற்றும் பொருளாதார வளர்ச்சி இவற்றின் சமன் ஒரு ஓப்பீடான அறிவியலாக முன் வைக்கப்படுகிறது. இந்தோனேஷியா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக பெரிய பொருளாதார வளர்ச்சி நாடாக மூன்றாமிடத்தில் இந்தியா இருந்தும் மேற்கண்ட விஷயங்களில் வெட்கக்கேடான நிலை தொடர்கிறது.

கே: ஆனால் சீனாவோடு போட்டிபோட்டு முன்னுக்கு செல்வது மற்றும் (BRICS) பிரிக்ஸ் அமைப்பு நாடுகளிடையே ஒரு சமநிலை போட்டியாளராக தொடர்வது என இருவகையிலும் இந்தியா உலகஅளவில் பலம் பெருதல் முக்கியமில்லையா?
ப: ஆமாம். பொருளாதார வளர்ச்சி என்பது மக்களின் அடிப்படை வாழ்வை முன்னேற்றும் சக்தி வாய்ந்தது என்பதால் அது மிகவும் முக்கியம். ஆனால் வளர்ச்சியை மட்டுமே கணக்கிட்டு பாராட்டிக் கொள்வதை ஏற்க முடியாது. இந்தோனேசியாவோடு ஒப்பிடும் போது இந்தியத் தனிநபர் வருமானத்தில், தேசத்தில் ஒட்டுமொத்த உற்பத்தி இண்டெக்ஸில் உயர்ந்து விட்டது என்று மார்தட்டுவது கவலை தருகிறது. காரணம் இந்தோனேசிய மக்கள் நம்மைவிட கல்விஅறிவில், குழந்தை நலனில் கல்வி அனைவருக்குமான உரிமையாவதில் பல படிகள் முன்னேறிவிட்டனர். நம்மைவிட மருத்துவ – ஆரோக்கியம் பேணிட உதவும் காப்பீட்டுத்துறை பன்மடங்கு அங்கு உயர்ந்ததாக உள்ளது. கல்வியில் பின் தங்கிய சத்து குறைபாட்டு வறுமை சுகாதாரக்கேடு கொண்ட ஒரு நாட்டு மக்கள் பொருளாதார வளர்ச்சி கண்டு முன்னேற வழிஇருக்கிறதா என்று நாம் சிந்திக்க வேண்டும்.

கே: உங்கள் புத்தகம் GDP எனும் ஒட்டுமொத்த உற்பத்தி பற்றி பேசாமல் அடிப்படை திறன், அடிப்படை வளர்ச்சி (capabilities) என பொருளாதார அறிவியலையே திசைமாற்றுவதாகப் படுகிறதே!
ப: இரு வெவ்வேறு காரணங்களுக்கு£க அப்படி செய்ய வேண்டியிருக்கிறது. நாட்டின் முன்னேற்றத்தை கணக்கிட செயல்திறனை சீர்தூக்கிப்பார்க்க வெறும் தனிநபர் வருமானத்தைப் பற்றி பேசினால் போதாது. தொழில்நுட்பம் பொருளாதாரத்துறையை அறிவியல் நுணுக்கங்கள் மிக்க துறையாக மாற்றியுள்ளது. இந்தியா வங்காள தேசத்தைவிட தனிநபர் வருமானத்தில் 50% அதிகம் இருந்தது. இதே 15-20ஆம் வருடக்காலத்தில் அது 100 சதவிகிதம் அதிகரித்து உள்ளது. அதே சமயம் 1990களின் தொடக்கத்தில் இந்தியா வங்காள தேசத்தைவிட வாழ்நாள் சராசரி மூன்று நான்கு வருடங்கள் அதிகம் என்னும் நிலையில் இருந்து இப்போது மூன்று நான்கு ஆண்டுகள் சராசரி வாழ்நாள் குறைந்து பின்னுக்குப் போயிருக்கிறது. இந்தியாவில் அது 65 அல்லது 66 வருடமாக உள்ள நிலையில் வங்கதேசத்தில் சராசரி வாழ்நாள் 72 வருடமாக முன்னேறிவிட்டது. அதேபோல நோய் தடுப்பு மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு இந்தியாவில் 72சதவிகிதமாகவும் அதே வங்கதேசத்தில் 95 சதவிகிதத்துக்கும் மேலேயும் உள்ளது. அதே மாதிரி எத்தனை ஆண்டுகளுக்கு எவ்வளவு பெண் குழந்தைகள் பள்ளிக்கல்வியை எட்டுகின்றன. சதவிகித அடிப்படையில் இஸ்லாமியர் அதிகம் வாழ்ந்தும் வங்கதேசம் நம்மைவிட 20 சதவீதம் அதிகப் பெண்குழந்தைகளை பள்ளிக்கல்வி முழுதும் தக்க வைக்கிறது. இவையாவற்றிலும் நாம் திறன் (capability) அதாவது திறன்இயல்பு என்பதை ஒரு கணக்கிடும் அலகாக கொள்ளவேண்டியிருக்கிறது. திறன்இயல்பு (capability)இண்டெக்ஸ் சுகாதாரமான வாழ்வை முன்னெடுத்துச் செல்லும் திறன்இயல்பு கல்வியறிவு பெறும் திறன்இயல்பு தடுக்க முடிந்த நோய்களிடமிருந்து தற்காத்துக் கொள்ளும் திறன்இயல்பு எழுதப் படிக்கத் திறன்இயல்பு, பெண்குழந்தைகள் மற்றும் ஆண்குழந்தைகள் விகிதாச்சாரம் ஆகிய அனைத்தையும் கணக்கில் கொள்ள வேண்டியுள்ளது.

கே: இந்த மனிதத் திறன் இயல்பு என்பதுதான் இன்றைய பொருளாதார அறிவியலின் மைய நீரோட்டமா?
ப: ஆமாம் பொருளாதார அறிவியல்தான் ஒருநாட்டின் கொள்கை உருவாக்கத்தை தீர்மானிக்க வேண்டும். மனித திறன் இயல்புகளை பாதுகாப்பதும் விரிவாக எடுத்துச் செல்வதுமே  பொருளாதார முன்னேற்றம். தனியார் மயமாக்குவது, தொழிற்பேட்டைகளை அமைப்பது உலக சந்தை இண்டெக்ஸ் இவை மனிதத் திறன் இயல்புகளை சார்ந்து இயங்கும் சில சாதாரண குறியீடுகள். எனது புத்தகத்தின் மைய நீரோட்டம் தனிமனிதத் திறன் இயல்பின் மீதான இந்திய ஆட்சியாளர்களின் கொள்கையை விரிவாக அலசுவதுதான். இந்திய ஆட்சியாளர்கள் தொடர்ந்து திட்டமிட்டோ திட்டமிடாமலோ கல்வி, மருத்துவ நோய்தடுப்பு, ஆரோக்கியமாய்க் குழந்தைகளைப் பேணுதல் உட்பட பல திறன் இயல்பு கணக்கீடுகளில் அபாயகரமானஅளவுக்கு பின்தங்கி அது குறித்த எந்த முறையான நிலைப்பாடும் இன்றி உள்ளனர் என்பதே உண்மை. இந்த மனித திறன்இயல்பு முன்னேற்றம் என்பதே ஆசியநாடுகளின் வளர்ச்சிப் போக்கை தக்கவைத்த நாடுகளின் பாதை. அது ஐப்பானில் தொடங்கியது. மெய்ஜி சம்பவத்தை அடுத்து ஐப்பானியர்களிடையே இருந்த பொதுக்கருத்து, Ôநாங்கள் ஜப்பானியர்கள் ஐரோப்பியர்களைவிடவோ அமெரிக்கர்களைவிடவோ வேறுபட்டவர்கள் கிடையாது. அவர்கள் கல்வியறிவு பெற்றவர்கள். நாங்கள் அதைப் பெறாதவர்கள்Õ அதன்பின் அங்கே அவர்கள் பிரமாண்ட சர்வதேச கல்வி விரிவாக்கத்தையும், பிறகு நாடு முழுவதும் பரவிய ஆழமான சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர். அவர்கள் ஒருசில பத்தாண்டுகளில் நல்ல சுகாதாரமான உடல்பலமிக்க, படித்த மக்கள் தொகை தானாகவே செழித்த பொருளாதார வளர்ச்சியை சாதிக்க முடியும் என்று கண்டனர். அதே பாடத்தை அப்படியே தென்கொரியா ஏற்று செயல்பட்டது. கொரியா இரண்டாம் உலக யுத்தத்திற்கு பிறகு மிகமிக குறைவான கல்வி அறிவே பெற்றிருந்தது. ஆனால் ஜப்பானைப் பின்பற்றியதால் அவர்களும் அதே பாதையில் மேலே மேலே சென்றுவிட்டார்கள். ஹாங்காங்கில், சிங்கப்பூரில், தாய்வானில் ஏன் தாய்லாந்தில் கூட அது அப்படியே நடந்துவிட்டது. ஓரளவு இந்தோனேசியாவும் அதே பாதையில் நகர்கிறது. உண்மையில் இவர்கள் அனைவருமே எதை விதைத்தார்களோ அதையே அறுவடையும் செய்தார்கள். மனிதத்திறன் இயல்பு வரிவாக்கம் ஆசிய பொருளாதார வளர்ச்சியின் பிரதான அங்கம் என்பதில் சந்தேகமே இல்லை. இதைத்தான் ஆடம்ஸ்மித் காலத்திலிருந்து பொருளாதார அறிவியல் மனிதமூலதனம் (Human Capital) ) என்று அழைக்கிறது. எனக்கு மனிதமூலதனம் எனும் சொல்லாக்கம் அறவே உடன்பாடற்ற ஒன்று. ஆடம்ஸ்மித் தனது நண்பர் ஹியூமிற்கு எழுதிய கடிதத்தில் கூட அதை விமர்சிக்கிறார். அவர் எழுதுவார், ‘இப்படி மனிதர்களைப் பற்றி நீங்கள் கூறினால், ஒரு நல்ல மனிதருக்கும், ஒரு மேசையின் நல்ல கபோடிற்கும் வேற்றுமையின்றிப் போய்விடும்’ நான் மனிதத்திறன் இயல்பு இண்டெக்ஸ் என்றே குறிப்பிட விரும்புகிறேன்.

கே: வளர்ச்சி மற்றும் மனிதத் திறன்இயல்பு இவை இரண்டுக்குமான இருவழி உறவு அதாவது பொருளாதார வளர்ச்சி ஒருபுறம், தனி மனிதத் திறன் இயல்பு வளர்ச்சி மறுபுறம். புரிவது எளிதாகவே உள்ளது. ஆனால் இந்த விவாதத்தின் மறுபக்கத்தையும் சற்று விளக்க முடியுமா..  மனிதத் திறன்இயல்பு வளர்ச்சி பொருளாதார வளர்ச்சியை எப்படி சாதிக்க முடியும்?
ப: இதற்கான பதில்தான் நான் முன் கூறிய மெய்ஜி மீள் உருவாக்கம் சார்ந்து நடந்த ஜப்பானிய உதாரணம். கல்வியறிவு செழித்த சுகாதார மேன்மை கொண்ட பலம் வாய்ந்த வேலை சூழலே உண்மையான ஒட்டுமொத்த உற்பத்தி வளர்ச்சியை எட்ட முடியும். பொருளாதார சமூக வளர்ச்சி, வெகுஜன மக்களின் அடிப்படைத் திறன் வளர்ச்சி சார்ந்தது என்பதே உண்மை. வணிகம் ஏன் அவசியம்? வணிகம் ஏன் நல்லது? என்பதற்கு ஆடம் ஸ்மித் கூறும் பதில்.. ஏனெனில் அது உங்களை ஒரு விஷயத்தில் நிபுணத்துவம் பெற தூண்டுகிறது… நிபுணத்துவம் நோக்கிய பயணம் உங்கள் திறன்களை – வளர்த்துக் கொள்ள உதவுகிறது. டேவிட் ரிக்கார்டோ போல வணிகம் ஒப்பீட்டு அணுகூலத்தை உங்களுக்கு வழங்கும் என அவர் லாபநோக்கில் கூறவில்லை. ஸ்மித்தின் அனுகுமுறை வேறுபடுகிறது. அவரைப் பொறுத்த வரை எந்த நாடும் அது புவியியல் முறையில் மோசமாக இருந்தாலொழிய- உபயோகப் பொருட்களை எளிதில் உற்பத்தி செய்ய முடியும், ஆனால் ஏதாவது ஒரு விஷயத்தில் நீங்கள் நிபுணத்துவம் பெறும் போது நீங்கள் உலகே அச்சுறும் – அதிசயிக்கும்படியான நிலைப்படியை அடைகிறீர்கள். சுவிட்சர்லாந்து, சாக்லெட் செய்வதில், கைக்கடிகார உற்பத்தியில்  வங்கிகளை நடத்துவதில் நிபுணத்துவம் பெற்றதுபோல. அப்படி நடக்கும்போது உங்கள் மொத்த உற்பத்தி இண்டெக்ஸ் மற்றும் தனிமனித வருமானம் என அனைத்தும் மடமடவென்று முன்னுக்கு செல்வதைக் காணலாம். ஏனைய நாடுகளின் மொத்த உற்பத்தி குறியீடு வேறு விஷயங்களில் முன்னேற்றம் அடையும் போது உங்கள் வளர்ச்சி குறிப்பிட்ட நிபுணத்துவங்களின் உலகளாவிய கவனத்தின் பொருட்டு அதிகரிப்பது தவிர்க்க இயலாததாகிறது. ஸ்மித் திரும்ப திரும்ப வலியுயுறுத்திய அடுத்த விஷயம் பொதுக் கல்வி அறிவைப் புகட்டும் வேலை அரசின் அடிப்படை கடமைகளில் ஒன்று என்பது. கல்வியறிவு பெற்ற மக்கள் தொகை மிகவும் பயனுள்ளது மட்டுமல்ல தனித்திறன், நிபுணத்துவமிக்க புராதன தொழிற்மையங்களை அதுதான் உருவாக்கும்.

கே: ஆனால் இந்திய ஆட்சியளார்களை வழி நடத்தும் நிபுணர்களும் சரி ஆட்சி அதிகாரத்திலுள்ள அரசியல் கட்சித் தலைமைகளும் சரி இந்த விஷயத்தை இரு தனித்தனி பாதைகளாகப் பிரிக்கிறார்கள். பொருளாதார சீர்திருத்தம் மற்றும் ஒட்டுமொத்த உற்பத்தியை உயர்த்துதல் ஏழைகளை முன்னுக்கு கொண்டு வருதல்  இது முதல் கட்டம். பிறகு இரண்டாம் கட்டமாக அதாவது இரண்டாவது வழியாக மருத்துவ சுகாதார பாதுகாப்பு கல்வி சீர்திருத்தம். இது அடுத்தபடி நிலையாக இருக்கிறது. முன்னது நடந்தால்தான் அடுத்தது நடக்கும் என்கிறார்கள். இந்த மாடலை மாதிரியை நீங்கள் ஏற்கவில்லை அல்லவா?
ப: கண்டிப்பாக இல்லை. இப்படி ஒரு பொருளாதார மாதிரி வரலாற்றில் இல்லை. முதலில் தனியார் மய உலகயமயமாக எல்லாவற்றையும் அரசிடமிருந்து தாரைவார்க்கும் அந்த  கடைசிப் படிவரை ஒட்டுமொத்த உற்பத்தியை உயர்த்துவோம். அது வரை பொறுங்கள், கல்வி சீர்திருத்தமும் சுகாதார பாதுகாப்பும் வந்து கொண்டே இருக்கிறது, என்பது ஒருவகை மோசடி. இப்படி ஜப்பானில் நடக்கவில்லை. சீனாவில் இல்லவே இல்லை. கொரியாவில் இல்லை. ஹாங்காங்கில் இல்லை. தாய்வானில் இல்லை. இப்படி ஒரு மாதிரி தாய்லாந்தில் இல்லவே இல்லை. ஐரோப்பாவிலும் இல்லை. அமெரிக்காவிலும் கிடையாது. பிரேசிலிலும் இல்லை பின் எங்கிருந்து இவ்வகை பொருளாதார மாடலை இந்த நிபுணர் என்று தன்னை அழைத்துக்கொள்பவர்கள் காட்டுகிறார்கள்? உலகில் எங்குமே நடக்காத ஒன்று அது. அனைத்து நாடுகளுமே திறன் மேம்பாட்டை ஊக்குவித்தே பிறகு உற்பத்தி குறியீடு வளரக் கண்டார்கள். கல்வி அறிவு அளிக்கப்படாத உடல் நலகேடுகளுக்கு எதிரான பாதுகாப்பற்ற மக்கள் முதலில் உற்பத்தி அளவீடுகளில் சாதனை படைத்ததாக எனக்குத் தெரிந்து எங்குமே நடக்கவில்லை.

கே: மக்கள்தொகைப் பெருக்கம், சுற்றுச்சூழல் பாதிப்பு இவை வளர்ச்சியோடு எப்போதும் எதிர்எதிரே வைத்துப் பேசப்படுகின்றனவே.. உங்கள் புத்தகம் இவற்றைக் கண்டுகொள்ளாதது ஏன்?
ப: இந்தியாவின் வளர்ச்சிகண்ட ஒரளவு செல்வந்த மாநிலங்களாக விளங்கும் கேரளா,  ஹிமாச்சல பிரதேசம் இவை மக்கள் தொகை பெருக்கத்தையும் கட்டுப்படுத்தி உள்ளன. மக்கள்தொகை பெருக்கம் சீனாவில் பெருமளவு கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இந்திய மாநிலங்களையும் சேர்த்து சொல்கிறேன். அறிவியல் பூர்வமான உண்மை என்ன தெரியுமா. பெண்-கல்வி. பெண்கல்வியில் நாடுகள் முதன்மை பெற மக்கள்தொகை தானாகவே கட்டுக்குள் வருகிறது. இவை ஒன்றுக்கு ஒன்று சார்ந்து இயங்கும் பிரச்சனைகள். 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் திறந்த வெளியில் மலம்கழிக்கும் ஊரகப் பகுதி மக்கள் தொகை 73 சத்விகிதம் பேர் என்று யுனிசெஃப் சொல்கிறது. இந்தியாவின் மக்கள் தொகை 120 கோடி. அதில் 60கோடி (55%) பேருக்கு கழிவறை வசதியே இல்லை. இதில் பெரும்பாலானவர்கள், கிராமப்புறங்களிலும், நகர்ப்புற குடிசைப்பகுதிகளிலும் வாழும் உழைக்கும் மக்கள். இவர்களது கல்வியையும் சுகாதாரத்தையும் உள்ளடக்காத வளர்ச்சி ஒருமோசடி என்பதைத் தவிர வேறு என்ன? சுற்றுச்சூழல் சீர்கேடு ஆரோக்கியத்தின் மீதே அச்சுருத்தல் கொண்ட மக்கள் வசிக்கும் நாட்டில் மேலும் ஒன்றுக்கு ஒன்று அதீத ஆபத்துகளை ஏற்படுத்தவே வாய்ப்பு உள்ளது.

கே: சீனா-இந்தியா ஒப்பீடு பற்றி உங்கள் கருத்து என்ன? பொதுவாக ஜனநாயக அமைப்பு பற்றிய பார்வை இன்று எப்படி உள்ளது? இந்தியா என்ன செய்ய வேண்டும்?
ப: ஒரு சோஷலிச நாடு எனும் நிலையிலிருந்து ஒரு கட்சி அதிகார நாடாக சீனா மாறி வருகிறது என்பது பரவலான கருத்தாக உள்ளது. எனக்கு சீனாவின் இரண்டு பல்கலைக்கழகங்களுடன் நெருங்கிய தொடர்பு உண்டு. தொழிற்சங்கங்கள் அற்ற சூழல் உள்ளது. ஆனால் கூலி குறித்த உயர்ந்தபட்ச ஒட்டுமொத்த பேரம் தொழிலாளர் கையிலேயே உள்ளது. மேலும் மேலும் கூலி கூடிக்கொண்டே போவதாக அங்கு முதலீடு செய்துள்ள அமெரிக்கர்களும் ஐரோப்பியர்களும் கொக்கரிக்கிறார்கள். இந்தியா தேர்வுபெற்ற ஜனநாயக ஆட்சி முறை கொண்ட நாடு. 1769ல் பிரிட்டிஷ்காரர்கள் நுழைந்தபோது இந்தியா பெரும் பஞ்சத்தில் இருந்ததை நினைவு கூறவேண்டும். காலனிய அரசின் முதல் வெற்றி பஞ்சத்தை முடிவுக்கு கொண்டு வந்தது. ஆனால் பிரிட்டிஷ் ஆட்சி முடிவுக்கு வந்த அந்த 1940-களிலும் இந்தியா அதே பஞ்சத்தை மேலும் உக்கிரத்தோடு அனுபவித்தது. புதிய அரசின் முதல் ஜனநாயக வெற்றி இந்தியமக்கள் கூட்டாக பஞ்சத்தை வென்றதுதான். சீனா 1960களில் கடும்பஞ்சத்தை எதிர்கொண்டபோதும் மில்லியன் கணக்கானவர்கள் இறந்து போனபோதும் வெளி உலகம் அறியா வண்ணம் செய்திகள் கூட வராது இருட்டடிப்பு நடந்தது. ஆனால் அதிவேக மாற்றங்கள், கல்வியில் சுகாதாரத்தில்  100 சதவிகிதம் உள்ளடக்கிய பொருளாதார மாற்றங்கள். 1990களில் எச்.ஐ. வி.யால் இந்திய சமூகத்தில் பெரும்பான்மை மக்கள் பாதிக்கப்படுவர் என அச்சம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஊடகங்களின் மிகச் சரியான பங்களிப்பு காரணமாக மக்கள் விழிப்புணர்வு பெற்றனர். பாராட்டத்தகுந்த வெற்றி அது. சோவியத்கள் கல்வியில் அடைந்த சாதனை அளவை இன்று வரை யாரும் எட்டவில்லை. இந்திய ஆட்சி அதிகாரத்தின் வளர்ச்சி அறிவியல் பூர்வமானது அல்ல. சோவியத் யூனியன் கல்வியில் அடைந்ததைப் பார்த்து பாடம் கற்க வேண்டியுள்ளது. சீனா கல்வி சுகாதாரம் என மக்களது ஆதாரங்களை பெருவளர்ச்சி அடைய வைத்து அடிப்படைத்திறன் மற்றும் நிபுணத்துவத்துடன் உலக சந்தையைக் குறிவைத்து தொழில் நுட்பத்தைக் கையிலெடுத்து ஜப்பானின் பாதையிலான உற்பத்தி அலகுகளை கடைபிடிக்கத் தொடங்கிவிட்டது. இடஒதுக்கீடு, இலவசத் திட்டங்கள் இவற்றோடு இந்தியா சுகாதாரம் மற்றும் திறன் சார்ந்த கல்விப் பரவலுக்கு தனி நிதிநிலை அறிக்கை தயாரிக்கவேண்டும். மக்களின் கல்விநிலை அடிப்படை சுகாதாரத்தில் மாற்றமின்றி வறுமைக்கோடு அழிந்துவிட்டது என்றால் யார் நம்புவார்கள்?

நேர்காணல் : ஜொனாதன் டெர்ப்ஷைர்      (பிராஸ்பெக்ட் இதழ் )
நன்றி: http://www prospect magazine.co.uk
தமிழில் : இரா. நடராசன்

Related posts