You are here
மார்க்சியம் 

இடதுசாரிகளும், சமூக இயக்கங்களும்…

என்.குணசேகரன்

மார்த்தா ஹர்நேக்கர், சிலி நாட்டில் 1970-1973 ஆம்-ஆண்டுகளில் நடந்த புரட்சி இயக்கங்களில் தீவிரமாகப் பங்கேற்றார். அதே போன்று கியூபப் புரட்சி அனுபவங்களையும் ஆழமாக ஆய்வு செய்து எழுதியுள்ளார். வெனிசுலாவின் புரட்சிகர மாற்றங்களில் நேரடிப் பங்களிப்பு செய்துள்ளார். இந்த தனது விரிந்த அனுபவப் பரப்பை அடிப்படையாகக் கொண்டு இடதுசாரி புரட்சிகர இயக்கங்கள், தற்காலத்திய சவால்களை எதிர்கொள்வதற்கான பல புதிய வியூகங்களை அவர் தனது நூல்களில் பதிவு செய்துள்ளார். அவற்றுள், முக்கியமானது சமூக இயக்கங்கள் பற்றிய அவரது சிந்தனை. உலகம் முழுவதும் அதிகரித்துவரும் சமூக இயக்கங்கள் குறித்து இடதுசாரி இயக்கங்களின் அணுகுமுறை எவ்வாறு இருக்க வேண்டுமென அவர் விளக்கியுள்ளார்.
மக்கள் நல நடவடிக்கைகள் பலவற்றைச் செய்து, முதலாளித்துவம் தனது இயல்பான மக்கள் விரோத முகத்தை மறைத்துக் கொள்ள முயற்சிக்கிறது.ஆனால், அதன் அன்றாட இயக்கம் மக்களை உளவியல், வாழ்வியல்ரீதியாக, அந்நியப்படுத்தி வருகிறது. இந்நிகழ்வு, மக்களைப் போராட்டக்களம் காண தள்ளிவிடுகிறது. எடுத்துக்காட்டாக, தமிழகத்தில் அரசாங்கம்  ஏராளமான இலவசங்களை வழங்கிய போதும், படித்து வேலையின்றி பதிவு செய்து காத்திருக்கும் இளைஞர்கள் எண்ணிக்கை ஒரு கோடியை நெருங்கி வருகிறது. இந்நிலையை அரசினால் மாற்றிட முடியவில்லை.இளைய தலைமுறைக்கு ஏற்படும் மனக்காயங்கள் கடுமையான வலியை ஏற்படுத்திவருகின்றன. எவ்வாறு  எதிர்ப்பு வடிவெடுக்கும் என்பதுதான் முக்கிய கேள்வி.
எனவே மக்கள் இயக்கங்களும், கிளர்ச்சிகளும் எழுவது தவிர்க்க இயலாதது. இந்த அமைப்பு மாறி சோசலிச இலட்சியம் நிறைவேறும் வரை போராட்ட அலைகள் ஓய்ந்திடாது. ஆனால் இந்த கிளர்ச்சிகளும் இயக்கங்களும் எந்தக் கட்சியையும் சாராமலும் தோன்றுகின்றன. அவை இடதுசாரிகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் போன்று முதலாளித்துவம் அகற்றி சோசலிசம் காணும் வேலைத்திட்டம் கொண்டவை அல்ல. ஆனால், இடதுசாரிகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களது சொந்தப் போராட்டத்திட்டம் அடிப்படையில் செயல்பட்டாலும் தங்களை சார்ந்திடாமல் நடைபெறும் சமூக இயக்கங்களை அவை ஒதுக்கிடக்கூடாது. இது மார்த்தாவின் அறிவுரை.
எல்லா இயக்கங்களையும் ஒரு சித்தாந்தக் குடையின் கீழ் ஒன்றாகக் கலந்து நடத்துகிற வாய்ப்பு தற்போது குறைந்துள்ளது என்கிறார் மார்த்தா. அப்படி ஒன்றாக கலக்கிட நினைப்பது “காலாவதியாகிப் போன சிந்தனை” என்கிறார் அவர். அதற்கு அவர் இரண்டு காரணங்களைக் குறிப்பிடுகின்றார். ஒன்று, தொழிலாளி வர்க்கமே பல்வேறு வகையாக வேறுபட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, அமைப்புரீதியான தொழிலாளிகள் இருந்தாலும், ஏராளமான முறைசாராப் பிரிவுத் தொழிலாளர்களும் முக்கியப் பிரிவாக மாறியுள்ளனர். மற்றொன்று, புதிய சமூக செயற்பாட்டாளர்கள் தோன்றிக்கொண்டே இருக்கின்றனர். உதாரணமாக, தற்போது உருவாகிவரும், திருநங்கை இயக்கம், மாற்றுத்திறனாளிகள் இயக்கம் என பலவற்றைக் குறிப்பிடலாம். அத்துடன், நுகர்வுரிமை இயக்கம், மனித உரிமை இயக்கம் போன்றவை வேகமாக வலுப்பெற்று வருகின்றன. இந்த இயக்கங்களுக்கு சமூக ஊடகங்கள் முக்கிய திரட்டல் கருவியாக அமைந்துள்ளன.
பெருக்கெடுக்கும் இந்த சமூக இயக்கங்களின் தோற்றத்திற்கு முதலாளித்துவத்தின் நவீன தாராளமய செயல்பாடு முக்கிய காரணம். அது, சமூகத்தின் அனைத்து மூலைமுடுக்குகளிலும் புகுந்து அடித்தட்டு மக்கள், நடுத்தர மக்கள் உள்ளிட்ட அனைத்துப் பிரிவினரையும் வெவ்வேறு வகைகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் அது அவரவர்  தங்களது குழு சார்ந்து போராடத் தூண்டியுள்ளது.     இந்நிலையில் இடதுசாரிகள் என்ன செய்ய வேண்டும்? மார்த்தா எழுதுகிறார்:
“வேற்றுமை அடிப்படையில் ஒற்றுமை காணும் பிரச்சனையை இன்று,  நாம் அதிக அளவில் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இனக்குழு, பாலினம் உள்ளிட்ட பல பிரிவுகளின் பண்பாட்டு வேறுபாடுகளுக்கும்,  குறிப்பிட்ட கூட்டுப் பிரிவுக்குள் தாங்கள் அங்கத்தினர் என்ற தனித்த உணர்வுக்கும் எவ்வாறு மதிப்புக் கொடுத்து செயலாற்றுவது என்பதை நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.” (“Ideas for struggle”-Marta Harnekkar)
எடுத்துக்காட்டாக, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து ஆளும் அதிகார வர்க்கங்களின் கொள்கைகளுக்கு மாறாக, மக்கள் வாழ்வாதாரப் பாதுகாப்பை மையப்படுத்தி சில கோரிக்கைகளை ஒரு சுற்றுச்சூழல் இயக்கம் எழுப்பினால் அதனோடு ஒருமைப்பாடு காண இடதுசாரி இயக்கம் தயங்கிடக் கூடாது. இந்த மாற்றுக் கோரிக்கைகளுக்கு அதிக மக்கள் திரள்கிறார்கள் என்ற நிலை தான் முக்கியமே தவிர எந்த பேனரில் திரள்கிறார்கள் என்பது முக்கியமல்ல என்கிறார் மார்த்தா. அவ்வாறு தங்களது அமைப்பு பேனரை உயர்த்தி செயல்படும் ‘அந்த அமைப்புக்களின் கோரிக்கைகள் எங்களுக்குத்தான் சொந்தம்; எனவே எங்களின் பேனரைத்தான் பிடிக்க வேண்டுமென’ இடதுசாரி இயக்கங்கள் கட்டாயப்படுத்தக் கூடாது. இது அமைப்புக்களிடம் “அறிவுச் சொத்துரிமை” கோரும் நடைமுறை என கிண்டல் செய்கிறார் மார்த்தா.இந்த நொடித்துப்போன, மிகவும் தவறான  பழக்கங்களைக் கைவிட வேண்டுமென அறிவுறுத்துகிறார்.
1990-2000-ஆண்டுகளில் உலகமய எதிர்ப்பு இயக்கத்தில் அதிக அளவில் சமூக இயக்கங்கள் பங்கேற்றன. இந்த சமூக இயக்கங்களைச் சார்ந்தோர் சியாட்டில் நகரில் நடந்த உலகமய எதிர்ப்பியக்கத்தில் இலட்சக்கணக்கில் பங்கேற்றனர். உலக சமூக மாமன்றம்(WSFWSF) பொது மேடையாக வடிவம் கொண்டது. இன்றளவிற்கும். வால்ஸ்ட்ரீட்டைக் கைப்பற்றுவோம் இயக்கமாக இது நீடித்து வருகிறது. இந்த இயக்கங்கள் பெரும்பாலும் சோசலிச வேலைத்திட்டம் கொண்டவை அல்ல.உடனடிப் பிரச்சனைகள்,கோரிக்கைகள் முன்வைத்து எழுந்தவை. வெகுமக்கள் ஆதரவுத் தளம் கொண்டவை.  ஆனால் எதார்த்தம் என்னவெனில், ஒரு நீண்டகால சோசலிச இலட்சியப்பார்வை இல்லாமல், முதலாளித்துவ உலகமயத்தை முடிவுக்கு கொண்டு வர இயலாது.எனவேதான் சோசலிச திட்டம் கொண்ட இயக்கங்கள் சமூக இயக்கங்களோடு உறவாட சரியான பாங்கு தேவைப்படுகிறது. இதில்தான் மார்த்தாவின் கருத்துக்கள் சிறந்த வழிகாட்டுதல்களாக அமைகின்றன.
இடதுசாரி இயக்கங்களின் சமூக இயக்கங்கள் குறித்த சரியான அணுகுமுறை இலத்தீன் அமெரிக்காவில் பலனளித்துள்ளது. இதனை மார்த்தா விளக்குகிறார்: “நவீன தாராளமயத்தை எதிர்த்து, இடதுசாரிக் கட்சிகள், பல அமைப்புக்கள் உள்ளிட்ட அரசியல் நிகழ்வுப்போக்கு பல நாடுகளில் வலுவடைந்துள்ளது என்பதனை மறுக்க இயலாது. வெனிசுலா, பிரேசில், கொலம்பியா, உருகுவே, எல்சல்வடார், பொலிவியா நாடுகளைக் குறிப்பிடலாம். பிரேசில், அர்ஜென்டினா, பொலிவியா, ஈகுவடர், மெக்ஸிகோ நாடுகளில் எழுந்த சக்திமிக்க சமூக இயக்கங்கள், மிகப் பெரும் அரசியல் சக்திகளாக உருப்பெற்றுள்ளன. இவை உலகமய தாராளமய எதிர்ப்பு போராட்டத்தில் முதன்மைப் பங்கு வகிக்கின்ற முக்கிய எதிர்ப்பு சக்திகளாக மாறியுள்ளன”.
ஒவ்வொரு நாட்டிலும் அப்படியே இந்த இலத்தீன் அமெரிக்க அனுபவத்தை இடதுசாரி இயக்கங்கள் பின்பற்ற வேண்டியதில்லை. எனினும், அவர்களது அனுபவம் உலக இடதுசாரி இயக்கங்கள் கற்றறிய வேண்டிய உன்னத அனுபவங்கள். இடதுசாரி இயக்கம் வளர்ச்சி பெறுவதற்கான வாய்ப்புக்களைக் கண்டறியும் முயற்சிகளுக்கு மார்த்தாவின் இந்த சிந்தனை துணைநிற்கும். மார்க்சிய தற்கால நடைமுறைக்கு இது ஒரு முக்கியப் பங்களிப்பு.

Related posts