You are here
நூல் அறிமுகம் 

எண்ணெய் டேங்குகளின் முன் எழுநூறு அறிவுஜீவிகள் தலை வணங்குகிறார்கள்

ஹெச்.ஜி.ரசூல்

 image description

தாரிக் அலி உலக அளவில் அறியப்பட்ட மார்க்ஸியப் பின்புலம் கொண்ட ஒரு இடதுசாரி எழுத்தாளர்.பாகிஸ்தானில் பிறந்து லண்டனில் வாழ்ந்துவரும் இவர் நியூலெப்ட் ரிவியூ இதழின் ஆசிரியர் குழும அங்கத்தினர். பாகிஸ்தான்: ராணுவ ஆட்சியா, மக்கள் அதிகாரமா(1979) ஒரு தேசத்தின் மரணம்(1999), எட்வர்டு சையது உடனான உரையாடல்(2005) த ஒபாமா சின்ட்ரோம்(2010) உள்ளிட்ட பல சமூக வரலாற்று ஆய்வுநூல்களை எழுதியுள்ளார். தாரிக் அலி ஆங்கிலத்தில் எழுதிய த கிளேஷ் ஆப் பண்டமென்டலிசம்  (The Clash of Fundamentalism)
நூலின் தமிழ் மொழிபெயர்ப்பே அடிப்படைவாதங்களின் மோதல். இந்த நூல் சிலுவைப்போர், ஜிகாத், நவீனத்துவம் சார்ந்த கருத்தாக்கங்களைத் தீவிரமாக விவாதிக்கின்றன. மொத்தம் 528 பக்கங்களைக் கொண்ட இப்படைப்பை கி.ரமேஷ் மிகுந்த சிரத்தையோடு அதிக உழைப்பை செலுத்தி தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார்.
முதலாவதாக பராக் ஒபமாவின் உருவம், பின்லேடனின் தாடி மற்றும் தலைப்பாகையுடன் ரத்தச் சிவப்பின் பின்னணி இந்நூலின் அட்டைப்படமாய் இடம் பெற்றுள்ளது. இதுவே நூலின் உள்ளடக்கத்தை ஒரு குறியீட்டு மொழியில் நமக்கு விளக்கித் தருகிறது.இரண்டாவதாக அடிப்படைவாதங்களின் மோதல் என்று தலைப்பு உள்ளது.மேற்குலக அமெரிக்க ஏகாதிபத்தியமும், இஸ்லாமியமும் உலகில் மோதும் இரண்டு அடிப்படைவாதங்களாக உருவகிக்கப்படுகின்றன.
வரலாறு ஒரு குரூரவடிவத்தில் மத அடையாளங்களோடு திரும்பி வருதலாக செப்டம்பர் 11 அமெரிக்க உலகவர்த்தகமைய தாக்குதலை தாரிக் அலி மதிப்பீடு செய்கிறார்.நம் கண்முன்னே காட்சி வடிவில் கண்ட இத் தாக்குதல் நம் கண்ணுக்குத் தெரியாமலே முஸ்லிம்கள் மீது அமெரிக்க ஏகாதிபத்தியம் கொடூரமாய் நடத்தி முடித்த தாக்குதலுக்கான எதிர்வினையாகவே மதிப்பீடு செய்யப்படுகிறது.
இஸ்லாத்தின் தோற்றுவாய், வரலாறு, ஆசியநாடுகளிலும், ஐரோப்பிய பகுதிகளிலும் அதன் பரவலான வளர்ச்சி, சிலுவைப்போர்கள், துருக்கி உதுமானிய சாம்ராஜ்யம்,அதன் வீழ்ச்சி,மேற்கின் அதிகார குவிப்பு, இஸ்லாத்தில் பெண்ணின் இருப்பு, வகாபிசம், இந்திய பாகிஸ்தான் பிரிவினை, பாகிஸ்தானிலிருந்து வங்காள தேசம், ஆசிய பிரதேசத்தில்  அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலையீடு என்பதான கருத்தாக்கங்கள் விரிவாக தாரிக் அலியின் இந்நூலில் விவாதிக்கப்படுகின்றன.
சோவியத் ராணுவ இடையீட்டுக்கு எதிராக அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆப்கானிஸ்தானில் தலிபான் போராளிகளுக்கும் பின்னணியாய் இருந்த வரலாறு, ஜியோனிச பயங்கரவாதத்தின் உருவாக்கம், பாலஸ்தீனத்தின் வரலாறு, அமெரிக்காவுடனான அரபு,முஸ்லிம் நாடுகளின் உறவு என்பதான விவாதங்களும் முன்வைக்கப்படுகின்றன.
2) சாமுவேல் ஹன்டிங்டனின் 1996ல் வெளிவந்த நாகரீகங்களின் மோதல் ஆய்வியல் நூல் முக்கிய விவாதங்களைக் கிளப்பியது.கம்யூனிசத்தின் பின்னடைவுக்குப் பின் அரசியலோ, பொருளாதாரமோ அல்ல, உலகை ஆதிக்கம் செலுத்துவது கலாச்சாரங்களின் மோதலே  என ஹன்டிங்டன் விளக்குகிறார். மேற்கின் கிறிஸ்தவம், லத்தீன் அமெரிக்கவாதம், சீன கன்பூஸியனிஸம், ஜப்பானிய ஷின்டோயிசம், இஸ்லாமியம், இந்துவாதம், ஆப்பிரிக்கன் மற்றும் ஸ்லாவிய கலாச்சாரங்களின் நெருக்கடிகளாக இவை மதிப்பீடு செய்யப்படுகிறது..மேற்கிற்கு மிகுந்த பயமுறுத்தல்களையும் தொந்தரவுகளையும் தரக் கூடியவையாக இஸ்லாமும், கன்பூசியனிசமும்தான் இருக்கிறது என்கிற மதிப்பீடும் முன்வைக்கப்படுகிறது. இஸ்லாம் உலகின் பெரும் ஆபத்தாக பார்க்கப்படுவதற்கு காரணம் என்னவெனில் பெருமளவு எண்ணெய் உற்பத்தி நாடுகளாக ஈரான்,ஈராக்,சவுதி ஆகிய நாடுகளே உள்ளன.
முஸ்லிம் போர்கள் என்பதான சொல்லாடல் முஸ்லிம்கள் தமக்குள்ளும், மற்றவர்களுடனும், ஏனைய எல்லாவிதமான நாகரீகங்களின் மக்களைவிடவும் அதிகமாகப் போரிடுகிறார்கள் என்கிற புறச்சூழலிருந்து தருவிக்கப்படுகிறது. ஈரான், ஈராக் போர், ஆப்கானிஸ்தானில் சோவியத் எதிர்ப்பு உள்நாட்டுப்போர்,இஸ்ரேல் பாலஸ்தீனப்போர், செர்பியா- போஸ்னியா போர் என்பதாக இது நீண்டு செல்கிறது.
அதே சமயம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பாசிச செயல்பாடான பாரம்பர்ய அமெரிக்கர்களின் வெளியேற்றம், கொரிய யுத்தம், வியட்நாமின் மீதான அமெரிக்க யுத்தம், லத்தீன் அமெரிக்க மண் மற்றும் ஆப்பிரிக்க அரசியலில் தலையீடு உள்ளிட்ட அரசியல் செயல்பாடுகளையும் இந்நூல் கவனப்படுத்துகிறது.
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஈராக், சவுதி அரேபியா, எகிப்து, பலஸ்தீன், செசன்யா நாடுகளில் நிகழ்த்தப்பட்ட  அமெரிக்க ஆதரவுத் தாக்குதல்களின் வெளிப்பாட்டையும் இதன் வழியேதான் நாம் மறு ஆய்வு செய்ய வேண்டியது உள்ளது. இந்தப் பின்னணியில் இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் உருவாக்கத்தையும் மேற்கின் நவீன காலனிய அடிப்படைவாதங்களையும் பற்றி விவாதிப்பதற்கான தளம் இந்தப் பிரதியில் உருவாகி உள்ளது. தாரிக் அலி பெர்டோல்ட் பிரெக்டின் கவிதைத்தலைப்பு ஒன்றையும் ஞாபகப்படுத்துகிறார். எண்ணெய் டேங்கரின் முன் 700 அறிவுஜீவிகள் தலை வணங்குகிறார்கள்… இவ்வரிகள் ஆயுதப் போருக்கு அடிபணியும் அறிவுஜீவி வர்க்கத்தின் மீதான விமர்சனமாக நல்லதொரு வாசிப்பனுபவத்தை வெளிப்படுத்துகிறது.
3) தாரிக் அலியின் இஸ்லாத்தின் தோற்றுவாய் குறித்த பதிவுகள் யூதம், கிறிஸ்தவம், மற்றும் அரபுப்பழங்குடிகளின் சமய நம்பிக்கைகளினூடே பயணப்பட்ட ஒரு மாற்று சமய வரலாற்றைப் பேசுகிறது. அல் லாத், அல் மனாத், அல் உஜ்ஜா உல்ளிட்ட சிலைவடிவப் பெண்கடவுளர்களை வணங்கிய பல்வேறு இனக்குழுக்களின் பகைமையையும், போரையும், தவிர்க்கும் விதத்தில் ஒரே கடவுள் கோட்பாட்டை ஆன்மீகரீதியாக முன்வைத்து சமூகரீதியாக அம்மக்களை ஒன்றுபடுத்தியது நபிமுகமதுவின் முக்கியப்பணியாக இருந்தது. இஸ்லாத்தின் தோற்றக் காரணிகள் இச்செயல்பாடுகளின் பின்னணியிலும் அமையப் பெற்றிருந்தது. ஒவ்வொருநாளும் ஐந்துமுறை தொழுவது என்பது இராணுவக் கட்டுப்பாட்டை விதைக்கவும், தொழுகையின் சந்திப்பில் பயனளிக்கும் வகையில் செய்திகளைப் பரிமாறிக் கொள்ளும் யுக்தியாகவும் எந்தப் புதிய அரசியல் இயக்கமும் குறிப்பாக போல்ஷ்விக்குகள் கூட செய்ய முடியாதது என்பதாக மதிப்பீடு செய்கிறார்.
அரபு மண்ணில் உருவான இஸ்லாம் வெகுவிரைவில் அனைத்துக் கண்டங்களுக்கும் பரவியது. 15, 16ஆம் நூற்றாண்டுகள் முழுவதும் முஸ்லிம்கள் பெரும்பாலோர் உதுமானிய, சபாவித் (பெர்ஸியா), மொகலாய(இந்தியா) பேரரசுகளின் ஆட்சியில் வாழ்ந்தார்கள். ஐநூறு ஆண்டுகள் துருக்கி உதுமானியப் பேரரசு நீடித்தது.
இஸ்லாத்திற்குள் உருவான ஷியா பிரிவின் தோற்றம் வாரிசுரிமைப் பிரச்சனையை அடிப்படையாகக் கொண்டது.நான்காவது கலிபா இமாம் அலி கிபி 660ல் கொலை செய்யப்படுகிறார். முஆவியா கலிபாவாகிறார்.தொடர்ந்து அவரது மகன் யசீதின் ஆட்சிக்கு எதிராக இமாம் அலியின் மகன்கள் இமாம்ஹசன், ஹுசைன் கர்பலாவில் கொலை செய்யப்பட்டார்கள், இந்த அடிப்படைக் காரணிகளிலிருந்தே ஷியாபிரிவின் ஆளுமை உருவானது. மத்தியகால பெர்ஸியாவும், தற்காலத்தில் ஈரானும், ஷன்னி பிரிவுக்கு மாற்றான ஷியா பிரிவு ஆட்சியை முன்வைக்கின்றன.. இதன் தொடர்ச்சிதான் இன்று ஈராக்கிற்குள் ஷுன்னி ஐ.எஸ்.ஐ.எஸ். காதிகளின் கிலாபத் அறிவிப்பும், ஷியா ஆட்சியாளரை எதிர்த்த உள்நாட்டுப் போரும் என்பதை கவனத்திற் கொள்ளலாம்.
4) வகாபிசத்தின் ஊற்றுக்கண் எது என்பது குறித்தும், இது 1927களில் சவுதி மன்னராட்சி மூலமாகவும், அண்மைக்காலத்தில் பின்லேடன் வழியாகவும் தன்னை வெளிப்படுத்திய முறை குறித்தும் தாரிக் அலி விவாதிக்கிறார். பதினெட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தோல்வியுற்ற வகாபிய ஆட்சி நூறு ஆண்டுகளுக்குப் பிறகு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் துணை கொண்டு தன்னை மீண்டும் நிறுவியது. பின்னர் வகாபிசம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் துணையோடு தன்னை நிலை நிறுத்தி உள்ளது. கம்யூனிசத்திற்கும், மதச்சார்பற்ற தேசியத்திற்கும் எதிராக தீவிரக்குரலையும் இது கொடுத்துவந்தது.சவுதி அரேபியாவின் எண்ணெய் வளத்தில் மேலாக்கம் செலுத்த அமெரிக்கா செய்த முயற்சியின் விளைவே 1938ல் அராபிய அமெரிக்க (ARAMICO) எண்ணெய் கம்பெனியின் உருவாக்கம் எனக் கூறலாம்.
5) இஸ்லாத்தில் பெண்ணின் இடம் எது என்பதை விவரிக்க முற்படும் பகுதியில் புகாரி ஹதீஸின் சில மரபுகள் சுட்டிக்காட்டப்படுகின்றன. மற்றவர்களைவிட அதிகமான பெண்களால் நரகம் நிறைந்துள்ளதை நான் கண்டேன் எனும் நபிகளாரின் வாக்கிலிருந்து இது துவங்குகிறது. இறைவசனங்கள் ஆண் சார்ந்த சொல்லாடல்களாக வெளிப்பட்ட போது அன்னை ஆயிஷா நாயகி நபிகளாரிடம் இது குறித்து வினவுகிறார்.அதன் பின்னரே வெளிப்பாடுகள் ஆண்,பெண் இரு பாலருக்கும் பொதுவான அறிவிப்புகளாக சொல்லப்பட்டன. இது போன்ற மற்றொரு ஹதீதில் அல்லாஹ்வைத் தவிர மற்றொருவரிடம் பணிந்து நடக்குமாறு ஆணையிட எனக்கு வாய்ப்புக்கிடைத்தால் நான் நிச்சயமாகப் பெண்களை அவர்களது கணவர்களிடம் தான் பணிந்து போகுமாறு கூறுவேன். இவ்வாறாக இடம்பெறும் ஹதீதுகள் உண்மையா, பொய்யா என விவாதிப்பதைவிட இஸ்லாமிய கலாச்சாரத்தில் பெண்குறித்த பார்வையை வெளிப்படுத்துவதாக தாரிக்அலி கூறுகிறார்.
இஸ்லாமியப் பேரரசின் பரவலாக்கம் உருவாகிய காலத்தில் பெண்களின் சமத்துவமின்மையைப் பாதுகாத்த விதிகள் புதிய முதலாளித்துவ முறைக்கும், பழைய காலனியாதிக்க முறைக்கும் இடையில் இயங்கின. எகிப்தின் அறிஞர் சையத்குதுப், ஈரானிய மத அறிஞர் கொமேனி இருவரும் மேற்கத்திய பெண்கள் அனுபவிக்கும் சுதந்திரம் போலியானது என்றும் இஸ்லாமிய அரசால் மட்டுமே பெண் பாதுகாக்கப்படுகிறாள் எனவும் கருத்தாக்கங்களை முன் வைத்தனர். என்றாலும் பாலியல் தேவை சார்ந்த சுதந்திரமும் புணர்ச்சிக்கு அனுமதியும், ஆண்களுக்கு எல்லையற்ற ஒன்றாகவும், பெண்களுக்கு கட்டுப்பாட்டுத்தன்மை கொண்டதாகவும் உருவகிக்கப்படுகிறது.
இஸ்லாமிய சொர்க்கம் என்பது உலகில் செல்வந்தர்கள் வாழ்ந்த வாழ்க்கையின் பிரதிபலிப்பாகவும், ஆண்களுக்கு வழங்கப்படும் வசதிகள் சார்ந்த, பாலியல் உரிமைகள் சார்ந்த மறுபடைப்பாகவும் மாறுகிறது. ஒவ்வொரு சொர்க்கத்து ஆணுக்கும் உலகில் இருந்து மனைவியரைத் தவிர எழுபது ஆரணங்குகள் அனுமதிக்கப்படும் செய்தியை தாரிக்அலி எழுதிச்செல்கிறார். இதற்கான இஸ்லாமிய ஆதாரங்கள் தெரிவிக்கப்படவில்லை எனினும் நற்செயல்கள் புரிந்த ஆண்களுக்கு மறுமையில் சொர்க்கத்தின் கண்ணழகிகளான ஹுருலீன்கள் இருப்பதையும், இதை ஆண்களின் கேளிக்கை, பாலியல் சுதந்திரத்திற்கு ஆதாரமாக எடுத்துக் கொள்ளலாம் எனவும் உரையாடலைத் தொடருகிறார்.
6) 1989 ல் சல்மான்ருஷ்டிக்கு எதிரான கொமேனியின் பத்வாவிற்கு காரணமான சாத்தானின் கவிதைகளையும், அன்வர்ஷேக்கின் புத்தகங்களையும் ஒப்பீட்டளவில் வேறுபடுத்திக் காட்டும் தாரிக் அலி, ருஷ்டி தனது நாவலை நோக்கி மக்களைக் கவர்வதற்காக புனைவுகளைச் சேர்த்திருந்தார். அன்வர்ஷேக் திருக் குரானையும், ஹதீஸ்களையும் தனது படைப்பின் அடிப்படையாகக் கொண்டு ஒரு தீவிர வரலாற்றியல் ஆய்வாளராக உருவாகியிருந்தார் என்கிறார்.
ஷேக்கின் முதல் புத்தகமான எட்டேர்னிட்டி – நிலைபேறுடமை ஒன்பதாவது நூற்றாண்டின் இஸ்லாமிய அறிஞர் பிரிவுகளில் ஒருதரப்பினரான முத்தஸிலாக்களின் பகுத்தறிவுவாத அடிப்படையிலிருந்து குரானின் தெய்வீகத் தன்மை மீது கேள்வி எழுப்பி அது தானாக வெளிப்பட்ட தல்ல, உருவாக்கப்பட்டது என்கிறார். இந்த நூல்வெளி வந்தவுடன் அன்வர்ஷேக் ஒரு சமயத்துரோகி, கொலை செய்யப்பட தகுதி படைத்தவன் என்பதாக லண்டனின் டெய்லி ஆவாஸ் பத்திரிகையில் எழுதப்பட்டது.
அன்வர்ஷேக்கின் மற்றொரு புத்தகமான இஸ்லாம், அரபுதேசிய இயக்கம் இன்னும் பகுதறிவுவாதக் கேள்விகளை எழுப்பியது. அல்லாவை, இறைத்தூதரிடமிருந்து பிரித்துக்காட்டி குரானின் உண்மையான கட்டளையை தாம் ஏற்று நடப்பதாகக் கூறினார்.
இஸ்லாத்தைப் பொறுத்த மட்டில் அல்லாவைவிட இறைத்தூதர்தான் மையமான இடம் வகிக்கிறார் என்ற கருத்து நிலைக்காக உலக முஸ்லிம் ஒற்றுமைத் தலைவர் முப்திமுகமதுசயீத், அன்வர்ஷேக்கை மதத்தைக் கைவிட்டவர், நம்பிக்கையற்றவர் என பத்வாவை வெளியிட்டார்.  எல்லா பிரிட்டிஷ் மசூதிகளிலும் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது பத்வாவை அறிவித்து விட்டனர்.
பதினேழாம் நூற்றாண்டின் யூதத் தத்துவ ஞானி ஸ்பினோசா பழைய ஏற்பாடு புனித நூலை பகுத்தறிந்து ஆய்வு செய்தபோது ஆம்ஸ்டர்டாம் யூதக்கோவிலின் மூத்தோரால் சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்டார். அதேசமயம் அன்வர்ஷேக் இதுபற்றி குறிப்பிடும்போது இஸ்லாத்தில் மதத்திலிருந்து தள்ளப்படுவதில்லை மாறாக கொலையாளியின் வாள்தான் நீளும் என்கிறார்.தாரிக்அலி இக்கருத்தாடல்களை தன்நூலில் மிகசுதந்திரமாக, எவ்வித மனத்தடையுமின்றி விவாதிக்கிறார்.
7) தாரிக் அலியின் கட்டுரையாக்கங்களில் வரலாற்று ரீதியான அரசியல் பண்பாட்டு சம்பவங்கள் விவரணை செய்யப்படுகின்றன. அதே சமயம் இணைப் பிரதிகளாக பல்வேறு இலக்கியப் படைப்பாளர்களின் எழுத்துக்கள் அதில் சஞ்சாரம் செய்கின்றன. சவுதி அரேபிய குடியுரிமை இழந்து வெளியேற்றப்பட்ட அப்துல்ரஹ்மான முனிபின் உப்புநகரங்கள், அகழி நாவல்களில், சவுதி வரலாற்றின்  அரசியல் உலகங்களுக்குமான் உறவு பேசப்படுகிறது.1986ல் வெளியிடப்பட்ட ராய்மொட்டாடெயின் இறைத்தூதரின் மேலங்கி(The mantle of prophet) ருஷ்ய நாவலாசிரியர் கான்ஸ்டான்டின் புடோவ்ஸ்கியின் தங்க ரோஜா, (The Golden Rose) சல்மான் ருஷ்டியின் நள்ளிரவுக் குழந்தைகள் (midnight children) இந்தோனேஷியா நாவலாசிரியர் பிரமோத்யா ஆனந்த டோயரின் கடற்புரத்திலிருந்து ஒரு பெண், சதத் ஹஸன் மாண்டோவின் உருதுக் கதைகள் என இந்தப் படைப்புலகங்கள் விவாதிக்கப்படுகின்றன.
சிரியக் கவிஞர் நிஸார் ஹப்பானி, குவைத் பெண்கவி சவுத் எல்சபா, மேற்கு சுமத்ராவின் ஹம்ஸா பன்சூரி, உருது கவி இக்பால்,மேற்கு பாகிஸ்தான் கவி ஹபீப் ஜிலாப், பாக்கிஸ்தானின் பெய்ஸ் அகமது பெய்ஸ், காஷ்மீரின் பெண் சூபி கவி ஹப்பா காதூன், சூபிக் கவிஞர் வாரிஸ் ஷா, பஞ்சாபிக் கவி அம்ருதா ப்ரீதம் பற்றியக் குறிப்புகளும், கவிதை அறிமுகங்களும் தாரிக் அலியின் பிரதியை ஒற்றை வரலாற்று எழுத்து முறையிலிருந்து விடுவிப்பு செய்கின்றன. இஸ்லாமிய அறிவுலக மரபின் முக்கிய சிந்தனையாளர்களான பெர்சிய அறிஞர் இபின் சினா, இபின் ரஷீத், சூபி தத்துவ அறிஞர் இபின் அறபி என வெவ்வேறான ஆளுமைகளையும் தாரிக் அலியின் எழுத்துப் பயணத்தினூடே அறிந்து கொள்ள முடிகிறது. இந்த நூல் உண்மையாகவே தீவிர வாசகனுக்கு  ஒரு விசாலமான கருத்துலகத்தை சந்தித்த திருப்தியை  அளிக்கிறது.

Related posts