You are here

நட்சத்திரக் கடலில் அலைவுறும் துயரம்…

ம. மணிமாறன்

வரலாறு வழிநெடுக விச்திரங்களை வி¬த்தபடியே நகர்கிறது. முன்னொரு காலத்தில் கலகக்காரர்கள் என அடையாளப்படுத்தப்பட்டிருந்த ஷியா பிரிவினர் ஈராக்கின் அதிகார மையத்தில் அமர்ந்திருக்கின்றனர். அதிகாரத்தில் வீற்றிருந்த காலமெல்லாம் ஷியா பிரிவினரையும், காஜிரிக்களையும் வேட்டையாடி தீர்தத சன்னி பிரிவினர் இன்றைக்கு கலகக்காரர்களாகிப் போயிருக்கிறார்கள். அதிகாரம் யாவற்றையும் தலைகீழாக்கிடும் நூதனம். இரண்டுமே எல்லாம் வல்லான் பெயரினாலேயே நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. வேட்டைக்காரன் உதிர்த்திடும் சொற்றொடராக “லாயங்களில் ஏன் மோசமான விலங்குகளே எஞ்சியுள்ளன” என்பதே இன்று வரையிலும் இருந்து வருகிறது. விலங்கினங்களைப் போல சகோதரர்கள் வேட்டையாடப்பட்டுக் கொண்டிருப்பதற்கு மதத்தின் பெயரால் நியாயம் கற்பிக்க முயல்கிறது அதிகார மையம் எல்லாக் காலத்திலும்.

தொன்னூறுகளுக்குப் பிறகான நாட்களில் பிரயோகிக்கப்படும் புதிய சொற்சேர்க்கையான இஸ்லாமிய பயங்கரவாதம், ஜிகாத், புனிதப்போர் என்பவற்றை உருவாக்கிய உலக பயங்கரவாதிகளான அமெரிக்க அதிகார வர்க்கம் யாவற்றையும் ஹாலிவுட் சினமாக் காட்சியைப் போல ரசித்துக் கொண்டிருக்கிறது.  பெட்ரோல் யுத்தத்தின் போது அது பாக்தாத் நூலகத்திற்கு எரியூட்டி மகிழ்ந்தது. எரிந்து சாம்பலான புத்தக புகை மூட்டத்தின் நடுவில் இருந்த ஒற்றைப் புத்தகத்தை சுமந்தபடி வெளியேறிக் கொண்டிருந்தாள் அந்நாளில் சிறுமியொருத்தி. அரபு இலக்கியத்தின் சாகாவரம் பெற்ற சொத்து அது. அவளின் கைகளில் பத்திரமாக சேகரமான நூல் அரேபிய இரவுகளின் மூலப்படி என்பதற்கான சாட்சியமும் வரலாற்றின் பக்கங்களில் பதிவாகியிருக்கிறது. ஆயிரத்தொரு அரேபிய இரவுகளை தன் சொற்களால் நிறைத்த “செஹர் ஜாத்” தான் அந்தச் சிறுமி என்று நம்புவதைத் தவிர நமக்கு வேறு எந்த மார்க்கமும் இல்லை.

கதைகள் காலங் காலமாகத் தொடர்ந்து நிகழ்த்தப்படுகிற ஒரு நூதனம். சொல்லுக்கும் மொழிக்கும் மூத்தவை கதைகள். ஆதியில் கதைகள் மட்டும்தான் இருந்தன. கதைகள் நோய்மை தீர்த்திடும் ஆற்றல் கொண்டவை என்றுரைத்தால்  அறிவினால் மட்டும் தர்க்கிப்பவர்கள் நகைத்திடக்கூடும். அறிவின் சகல எல்லைகளுக்கும் அப்பாற்பட்டவையாக காற்றில் மிதந்து கொண்டிருக்கும் விசித்திரம் கதைகள். ஐரோப்பிய மரபிற்கு எதிரான கீழைத்தேய மரபின் தனித்த அடையாளம் கதைகள். கதைகள் முடிவற்றுத் தொடர்ந்து கொண்டே யிருப்பவை.
ஆயிரம் இரவுகளாகத் தொடர்ந்து கதைக்கும் மரணத்திற்குமான நூதன விளையாட்டு நடந்தேறுகிறது. செஹர்ஜாத்தின் சொற்களால் ஆன கதைகள் மரணத்தைப் பின்தள்ளி நகர்த்திக் கொண்டேயிருந்ததும், கொடுவாளையும் ரத்தப்பலிகளையும் நிர்மூலமாக்கியதுமான காட்சிப் படிமங்களே  “அர«பிய இரவுகள்” எழுத்தாளன் எல்லாவற்றையும் தலைகீழாக்கிப் பார்க்க நினைப்பவன் அதனால்தான் அரேபிய இரவுகளின் போதான பகல்களில் நிகழ்ந்தது என்னவாக இருந்திருக்கும் என எழுதிப் பார்க்கிறான். கெய்ரோவில் பிறந்திட்ட அரபு நாவல் உலகின் தனித்த ஆளுமையான நாகிப் மாஃபஸின் ‘Layali alf lela’ எனும் அரபு நாவல் பிறகான நாட்களில் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது. நோபல் பரிசு பெற்ற ஒரே அரபு எழுத்தாளரான நாகிப் மாஃபஸின் Arabian Nights and Days யை மொழிபெயர்ப்பாளர் சா.தேவதாஸ் தமிழாக்கித் தந்திருக்கிறார். எதிர்வெளியீடு வெளியிட்டிருக்கிறது.

ஆயிரத்தோரவது இரவினில் கதைகள் யாவும் தீர்ந்து போன இடத்தில் இருந்தே தன் நாவலை துவக்குகிறார் நாகிப். நாவல் முழுக்க அதிகார மையங்களை கவிழ்த்துப் போடுகிறார். அவருக்குத் துணையாக அரேபிய இரவுகளில் ஒதுங்கியிருந்த உபகதாபாத்திரங்கள் அந்தப் பணியில் இறங்குகின்றன. அகங்காரமும், அன்பும் ஓரிடத்தில் சங்கமித்திட சாத்தியமில்லை என்பதற்கான முடிவிற்கே ஷாரியருடன் இருந்த மூன்று ஆண்டுகளின் முடிவில் வந்து சேர்கிறாள் செஹர்ஜாத். ஷாரியரை விரும்பித் தேர்ந்தவள் இல்லை அவள். இரத்தபலிகளைத் தடுத்திட தன்னையே தத்தம் தந்தவள் அவள்.

அரேபிய பகல்களுக்குள் பதியமிடப்பட்டிருக்கிற பெண்கள் யாவரும் நாகிப் மாஃபஸின் பெண்கள். செஹர்ஜாத்தின் தங்கை துன்யாஜாத்திற்கு நிகழும் துயரத்தை எப்படி எதிர்கொண்டார்கள் என்பது நமக்கு மிகவும் முக்கியமாகிறது. சுல்தானின் மனைவியின் தங்கை அவள். அவளை நகரத்தின் ஆளுநர் யூசுப் அல்-தாஹிர் பெரும் பணக்காரனான காரம்-அல்-அலீஸ் என யாவரும் விரும்புகின்றனர். அவளுக்கோ கனவினில் முகமறியாதவனுடன் பாலியல் உறவு ஏற்பட்டு விடுகிறது. துன்யாஜாத்தின் கனவின் நாயகனான வாசனைத் திரவிய வியாபாரியான நூர் அல்தீனுக்கும் கச்சிதமாக கனவினில் நடந்தேறுகிறது உறவு. கனவா, நிஜமா என்று பிரித்தறிய முடியாத மாயப்பொழுதினை இருவரும் சுமந்தலைகின்றனர். கற்பிதமான திருமணத்தில் தொடங்கி நிஜமான உதிரத்தில் முடிவுற்ற கதையை செஹர்ஜாத்திற்கு எடுத்துரைத்திடும் போது அவள் தங்கையிடம் இப்படிக் கூறுகிறாள். “சுல்தானோ, தந்தையோ அறியாதபடிக்கு நம் கதையை ரகசியமாக வைத்திருப்போம். செய்யக்கூடியதை அம்மாவுடன் சேர்ந்து ஏற்பாடு செய்து விடுகிறேன்” என்கிறாள். அதிகாரத்தைச் சுமந்தலையும் ஆண் மனதினால் தீர்த்திடவோ, அறியவோ முடியாத விசித்திரங்களால் ஆனது பெண் உலகம் என்பதை வசீகரமான பெண்களைக் கொண்டு நாவல் முழுக்க எழுதித் தொடர்கிறார் நாகிப்.

நாகிப் மாஃபஸ் தன் கதையுலகை பூதங்களில் பார்வையிலேயே நிகழ்த்திப் பார்க்கிறார். நாவலை நான்கு பூதங்கள் நடத்துகின்றன. ‘குவாம்காம்’ எனும் பூதமே சனான் அல்-கமலி என்கிற வியாபாரியின் விதியையும் மரணத்தையும் உருவாக்கி நிகழ்த்துகிறது. மாய யதார்த்த மொழியினில் நாவலைக் கட்டமைக்க பூதங்களே நாகிப்பிற்கு சொற்களைத் தருகின்றன. எல்லா ஆண்களின் (பெண்களின்) தடித்த தோல்விகளுக்கு கீழேயும் காட்டு விலங்குகள் குடியிருக்கின்றன. அவை எப்போது வெளிக்கிளம்பும் என்பதை எவரும் அறிந்திடல் சாத்தியமில்லை. அப்படித்தான் குவாம்காம் எனும் பூதம் நிகழ்த்திய மாயத்தினால் நகரத்தின் பெருவணிகரான சனான்-அல்-கமலி பச்சிளம் பெண் குழந்தையை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்குகிறார். சனான் அல்-கமலியிடம் துவக்கிய யுததத்தை குவாம்காம் எனும் பூதம் நாவலெங்கும் நிகழ்த்திக் கொண்டேயிருக்கிறது. அதிகார மையத்தை கலைத்துப் போடும் வேலை நடந்து கொண்டேயிருக்கிறது. ஆளுநரைக் கொல்வது காவல்துறை அதிகாரியைப் பலியெடுப்பது என்பதை பூதங்கள் மனிதர்களை வைத்தே நிகழ்த்துகின்றன. ஆளுநர்கள் மாறுகிறார்கள் அதிகாரம் கைமாறுகிறது. ஆனாலும் வேறு எந்த மாற்றமும் நிகழ்ந்திடவில்லை. எளிய மக்கள் வேட்டையாடப்படுவதும், களவுக் குற்றமும், கொலைப்பழியும் அவர்களின் மீது சுமத்தப்படுவதும் நின்றபாடில்லை. பூதங்கள் ஆளுநர்களையும், காவல்துறை அதிகாரியாக பொறுப்பேற்பவர்களையும் கொல்வதும் கூட தொடர்கிறது. தேடலும், துரத்தலும் அதிகார மையத்தால் நிகழ்த்தப்படும் போது அவர்களின் குறியாக ஷியா பிரிவினரும் காஜிரிகளுமே இருக்கிறார்கள்.

அரேபிய இரவுகளின் கதைகள் யாவும் அரண்மனைக்கும், அதிகாரமட்டத்திற்குள்ளும் சுழல்கிற போது அரேபிய பகல் முழுக்க எளிய மக்களின் கதைகளால் கட்டப்பட்டு இருக்கிறது. ஒரு வகையில் விளிம்பின் கதைகளையும், விளிம்பிற்கும், மையத்திற்குமான யுத்தத்தின் கதையாகவும் கூட நாவலின் பின்பகுதியை வாசித்துத் தொடரும் சாத்தியமும் இருக்கிறது. நாவலில் காட்சிப்படுத்தப்படும் அமீர்களின் சிற்றுண்டி விடுதி ஒருவகையில் மிகவும் வசீகரமான இடமாகும். அவ்விடத்திற்கு ஆளுநரும் வருகிறார். செருப்பு தைக்கும் தொழில் செய்பவரும் வருகிறார். தண்ணீர் சுமக்கும் இப்ராஹிமும் வருகிறார். கடலோடி சிந்துபாத்தும் வருகிறார்.

எல்லோரும் சந்தித்தும் கொள்வதற்கான இடங்கள் இருக்கிறதா இப்பரந்த உலகினிலே எனும் கேள்வி நமக்குள் அடிக்கடி எழுந்து கொண்டேயிருக்கிறது. செருப்புத்தைப்பவரும், கடலோடியும் கூட நண்பர்களி£யிருக்கச் சாத்தியம் உண்டு. அரசவைக் கோமாளியும், தண்ணீர் எடுப்பவரும் நண்பர்களாக உரையாடிட முடியுமா? முடிகிறது. “அரேபிய இரவுகளும், பகல்களும்” நாவலுக்குள். அவர்களின் உரையாடல் அதிகாரத்தைப் பற்றியதாகவும் இருக்கிறது. மதக்கோட்பாடுகளைக் குறித்ததாகவும் இருககிறது. அமீர்களின் சிற்றுண்டி விடுதியில் நான்கு பூதங்களும் கூட இவர்களுடன் உரையாடுகின்றன. மாபெரும் மந்திரிமாரும், காவல்துறை அதிகாரிகளும் சந்திக்கும் இடத்திலேயே வர்க்கப்படிநிலையின் கடைசி வகையினரும் கூடுகிறார்கள் நாவலெங்கும் பைத்தியக்காரனாக அலைவுறும் அப்துல்லாவும் அலைந்து திரிகிறான். பைத்தியங்கள் ஒரு போதும் பொய்யுரைப்பதில்லை. சொர்க்கமும், நரகமும் முட்டிக் கொள்ளும் காஃப் மலைகளில் அலைவுறும் பூதங்களுக்கு ஆயுள் பல நூறு வருடங்கள். அவைகள் யாவும் மானுட குலத்துடன் விளையாடிக் கொண்டிருக்கின்றன. தங்களின் அதிசயத்தை நிகழ்த்துவதற்கான மீடியமாக எளிய மனிதர்களையே தேர்வு செய்கின்றன. அவர்கள் நிகழ்த்துகிற அதிசயங்களால் அதிகார மையமே ஆட்டம் காண்கிறது.

புலப்படாத தன்னை கொண்ட குல்லாய் ஒன்றை பாதில் சனானுக்குத் தருகிறது “ஸர்மபஹா” எனும் பூதம். அது வரையிலும் கண்ணியத்திற்குரியவனாக இருந்தவனின் மனம் தடுமாறுகிறது. தன்னுடைய இல்லத்திற்கு வெறும் கையுடனே சென்று திரும்பிய பாதில் சனான் முதல்முறையாக சாலையோரக் கடையில் திருடுகிறான். அவன் கற்றறிந்த மதக் கோட்பாடுகளுக்கும், யதார்த்த வாழ்விற்குமான யுத்தம் அந்த நொடியிலேயே துவங்கி விடுகிறது. தான் குல்லாய் அணிந்த மறுநொடியில் மறைகிறோம் என்றறிந்த நேர்மையாளன் சனானின் மனம் பேதலிக்கிறது. தன்னுடைய நண்பர்களிடம் கூட வேடிக்கை விளையாட்டை நடத்திப்பார்க்கிறான். பாதில் சனானாக அலைந்த நாட்களில் பைத்தியமாகித் திரியும் அப்துல்லாவிற்கு மிட்டாய் தரும் வழக்கம் கொண்டவள். குல்லாய் கிடைத்த பிறகான நாட்களில் அவன் தந்த மிட்டாயைப் பைத்தியம் வாங்கவில்லை. பைத்தியங்களுக்கு மனித மனதின் ஆழ்நிலையை கண்டுஉணரும் ஆற்றல் உண்டு என்பதை அறியத் தருகிறார் நாகிப்.

சாலமனின் மோதிரம் கைவரப்பெற்ற நாளில் செருப்பு தைக்கும் மாரஃப் வேறு ஒருவனாகிறான். சாலமனின் மோதிரம் ஷாரியரைச் சந்தித்திடும் போது முடிகிறது. நீ விரும்பினால் என்னுடைய இடத்தைக் கூட அடையலாம் என்கிறான் சுல்தான். ஆனால் தன்னிடம் மறைந்துள்ள ஆற்றலை தன்வீட்டில் சோதித்துப் பார்த்திட முயலும் போது, எந்த அதிசயத்தையும் சாலமனின் மோதிரம் நிகழ்த்தவில்லை என்ற போதிலும் செருப்புத் தைக்கும் மாரஃப் அந்தப் பிரதேசத்தின் ஆளுநராகிறான். இப்படித்தான் பூதங்களின் துணையோடு தண்ணீர் எடுக்கும் இபராஹிமால். ஏன் அவன் நிஜ சுல்தானையே நிகழ்த்திய கொலைகளுக்காவும் நிகழ்ந்த வன்முறைகளுக்காகவும் விசாரணைக் கூண்டில் கூட நிறுத்த முடிகிறது. எல்லாமே கனவுலகத்தில் தான் சாதியமாகிறது. நிஜம் கொடூர நெருப்பென சுட்டுப் பொசுக்குகிறது எளிய மனிதர்களை.

அரேபிய இரவுகளும், பகல்களும் நாவல் கவித்துவமிகு மொழியால் விரித்துச் சொல்லப்பட்டுள்ளது. காவல்துறை அதிகாரியைப் பற்றிக் குறிப்பிடும் போது “அவரின் இருதயத்திலே உணர்வுகளுக்கு ஓரிடமும் பேராசைக்கும், கடுமைக்கும் இன்னோரிடமும் இருந்தன” என்றுரைக்கிறார். “விரைந்து செய்யப்படுவதுதான் மேலான அன்பு”. முன்னெப்போதும் நிகழ்ந்திராத சம்பவம் இன்னும் மேலான ஞானத்தை நம்மிடம் கோருகிறது. தத்துவ விசாரமாக, மதக் கோட்பாடுகள் குறித்த புரிதலுக்கான புதையலாக அரேபிய இரவுகளும், பகல்களும் நாவலை கட்டித்தந்திருக்கிறார் நாகிப். அது நம்மை மாயஉலகினிற்கு அழைத்துச் செல்கிறது. பெரும் பாறையில் அமரவைத்து பாறையின் சிறகுகளை முறித்திடும் ஆற்றல் முறித்திடும் ஆற்றல் கொண்டவை செஹர்ஜாத்தின் கதைகள் மட்டுமே!

Related posts