You are here

கூடலூர் 10வது வாசிப்பு முகாம்…

தொகுப்பு: ஆர். நீலா

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 10-வது வாசிப்பு முகாம் தேனி மாவட்டம் கூடலூரில் மே 3, 4, 5 தேதிகளில் வெற்றிகரமாக நடைபெற்றது. தமிழகம் முழுவதிலுமிருந்து கல்வியாளர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். நினைவுகள் அழிவதில்லை நாவல் வாசிப்பிற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு அதன் மீதான விமர்சனங்களைப் பலரும் பகிர்ந்து கொண்டனர். அந்த உரைகள் இங்கே சுருக்கமாகத் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.

பேரா. மாடசாமி (துவக்க உரை)
நினைவுகள் அழிவதில்லை நூல் ஒரு விவசாயத் தொழிற்சங்க செயல்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. நாடு சுதந்திரமடைவதற்கு முன் 1940ன் தொடக்கத்தில் கையூர் என்ற கிராமத்தில் நடைபெற்ற சம்பவத்தைப் பின்னணியாகக் கொண்டது. நாடு விடுதலையடைந்த பின் 1948 முதல் 51 வரை தமிழ்நாட்டிலும் இதுபோன்ற போராட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன. நாணலூர் நடேசன் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார். இன்றும் காத்தையன், வைரன், களப்பால் குப்பு, வாட்டாக்குடி இரணியன் என்று அன்றைய போராட்ட வீரர்கள் வரலாற்றில் வாழ்கிறார்கள். சின்னச் சின்ன கூலி உயர்வுகளுக்காகப் போராடி உயிர்விட்டார்கள். 1969ல் வெண்மணியில் 48பேர் ஒரே குடிசைக்குள் கொளுத்தப்பட்ட சம்பவம் இன்றும் நம்நெஞ்சில் தீப்பிடிக்க வைக்கிறது.

‘நினைவுகள் அழிவதில்லை’ பாடமும் அவல வாழ்வைத்தரும் சொந்த உலகத்திலிருந்து மீட்பும் கொண்ட புத்தகம். இதற்குள் ஒரு ஆசிரியர் மாணவர்களுக்கும் மக்களுக்கும் போராட கற்றுத் தருகிறார். இப்போதும் ஆசிரிய இயக்கங்கள் போராடிக் கொண்டுதான் இருக்கின்றன. கையூரிலும் போராடிய விவசாயிகள் கைது செய்யப்படுகிறார்கள். சிறையில் வாடுகிறார்கள். அவர்களுக்காக அல்ல. ஓட்டுமொத்த அவல வாழ்வின் மீட்புக்காக அவர்கள் சிறையில் வாடுகிறார்கள். விடுதலையை எதிர்நோக்குகிறார்கள். நிரஞ்சனா அதை எப்படியெல்லாம் எழுதுகிறார். ‘விடுதலை பெற்று பிரியமானவர்களின் தோளில் விழுந்து அழவேண்டும்!’

கையூர் விவசாயிகளின் களத்தில் என்னவெல்லாம் நடக்கிறது? விவசாயிகள் பத்திரிகை வாசிக்கிறார்கள். துண்டுப் பிரசுரங்கள் போடப்படுகிறது.  நூலகம் உருவாக்கப்படுகிறது. அதில் ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். நூலக இயக்கம் அங்கு வெகு இயல்பாக நடக்கிறது. இப்போதுள்ள நூலகங்களைப் பார்த்துவிட்டு நான் சொல்வேன். நூலகத்தின் நிழல் நூலகத்திற்குள் விழக்கூடாது. “இங்கு சத்தம் போடாதே” ‘அமைதியாகப் படிக்கவும்’ என்ன இதெல்லாம்? நினைவுகள் அழிவதில்லையில் நூலக இயக்கம் வாழ்க்கையின் ஒரு அம்சமாக இயல்பாகக் கொண்டுவரப்படுகிறது. உணர்வின் அங்கமாகப் பார்க்கப்படுகிறது. டோட்டோசான் புத்தகத்தில் பார்த்தோமே? எரியும் ரயிலைப் பார்த்ததும் அவர் நினைப்பது என்ன? இதுபோன்ற வகுப்பறையை மறுபடியும் உருவாக்க வேண்டும். அப்படித்தான் கையூர் தோழர்களும் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள். ஆனால் விசாரணை என்ற பெயரில் கண்துடைப்பு நாடகம். அவர்கள் தூக்கிலிடப்படுகிறார்கள். இது நடந்தது நம் இந்தியா சுதந்திரமடைவதற்கு முன்… இன்றும் நடப்பது என்ன?

பேராசிரியர் என். மணி
முதல்முறையாக இப்புத்தகத்தை வாசித்தபோது கையூருக்குச் சென்றுவரவேண்டும் என்ற அடங்காத ஆவல் ஏற்பட்டது. இப்புத்தகத்தில் வரும் நம்பியார் என்ற நிலப்பிரபு அவ்வூரில் ஒரு பள்ளிக்கூடத்தைத் துவக்குவார். கைநாட்டுப் பேர்வழிகளின் பிள்ளைகள் கற்க எதற்காகப் பள்ளியைத் துவக்குகிறார் தெரியுமா? கால் ஏக்கர் அரை ஏக்கர் வைத்திருக்கும் விவசாயிகளிடம் கைநாட்டுப் போட்டு வாங்கி நிலத்தை அபகரிக்கும்போது ஏமாற்றி வாங்கிவிட்டதாக சொல்லும் வாய்ப்பிருக்கிறது. ஆனால் அதே நிலத்தை கையெழுத்துப் போடச்சொல்லி வாங்கி கையகப்படுத்தினால், பத்திரத்தில் உள்ளதைப் படித்துப் பார்த்து விபரமறிந்தபின் ஒப்புதல் கையெழுத்துப் போட்டதாக எடுத்துக் கொள்ளலாம். சமீபத்தில் இந்து தமிழ் நாளிதழில் வந்த நீதியரசர் சந்துரு எழுதிய கட்டுரையிலும் இதே விபரத்தைக் குறிப்பிட்டிருப்பார். நம் கல்வித் திட்டமும் இதே அளவில்தான் உள்ளது. புத்தகத்தில் வரும் நம்பியாருக்குப் போலவே இந்த முதலாளித்துவ அரசுக்கும் ஒரு Skill labour தான் தேவை. அவ்வளவுதான்..!

ஆர்.நீலா
விவசாயிகளின் பிள்ளைகளுக்கு விவசாய மொழிகளிலேயே மாஸ்டர் பயிற்றுவிப்பது அழகு. ஒருவரிடம் அறுநூறு ஏக்கர் நிலம் இருக்கிறது.  அதை இருநூறு பேருக்குப் பிரித்துக் கொடுத்தால் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு நிலம் கிடைக்கும்?

மாஸ்டர் தன்னிகரில்லா ஆளுமைத் திறனுடன் இருக்கிறார். ‘தான் இருப்பதே மக்களுக்குத் தெரியாத அளவுக்கு இருப்பவனே மிகச் சிறந்த தலைவன். அவனது பணி நிறைவேறி லட்சியம் பூர்த்தியாகும்போது மக்கள் தாங்களாகவே இதைச் செய்ததாகச் சொல்வார்கள்’ என ஒரு சிறந்த தலைவனுக்கான இலக்கணத்தை லாவேட்சு சொல்வார். லாவேட்சின் பொன்மொழிக்குச் சிறந்த உதாரணம் இக்கதையில் வரும் மாஸ்டர்தான்.

பிரின்ஸ் கஜேந்திரபாபு (நிறைவுரை)
‘நினைவுகள் அழிவதில்லை’ புத்தகத்தைப் பல பிரதிகள் வாங்கி நிறையப் பேருக்குப் படிக்கக் கொடுத்திருக்கிறேன். அதில் ஒருவர் இரவு 11.15 மணிக்குப் போன் பண்ணினார். இந்தப் புத்தகத்தைப் படித்ததிலிருந்து எதையாவது செய்யவேண்டும் போல் மனசு பரபரக்கிறது என்றார். அறிவியல் இயக்கக் கிளைகளை ஊர்தோறும் அமைப்போமா என்றார். அவர் ராமநாதபுரத்துக்காரர். மக்களின் போராட்ட உணர்வையும் அரசின் அடக்கமுறைகளையும் அன்றாடம் பார்த்துக் கொண்டிருப்பவர். அவரின் உணர்வுகளை இந்தப்புத்தகம் விசிறிவிட்டது.

அவரைப் போலவே பலருக்கு இந்த நாவல் கனவுகளைக் காண வைத்திருக்கிறது. இந்தப் புத்தகம் ஒட்டுமொத்தமான சமுதாய விடியலுக்கு ஒரு தத்துவார்த்த விளக்கைக் கையிலேந்திப் போராடுகிறது.

Related posts