You are here

இடதுசாரி அரசியல் பணி எனப்படுவது

என்.குணசேகரன்

இடதுசாரிகளில் ஒரு பிரிவினரிடம் பாரம்பரியமாக நிலவி வருகின்ற  ஒரு கருத்தை மார்த்தா ஹர்நேக்கர் அடையாளம் கண்டு விமர்சிக்கின்றார்.அரசு  நிறுவனங்கள் செயல்பாட்டை அவ்வப்போது எதிர்ப்பது, போராடுவது, சட்டத்துறை உலகில் செயல்பட அதிக அக்கறை காட்டுவது ,அரசாங்கப் பதவி, பொறுப்புக்களில் தேர்ந்தெடுக்கப்பட்டு அதனையே பிரதானப் பணியாகச் செய்வது, ஊடகங்களில் இடம் பெற முனைப்புக் காட்டுவது போன்ற வேலைகள்தான் அரசியல் வேலை என்ற எண்ணம் பல இலத்தீன் அமெரிக்க  இடதுசாரிகள், கம்யூனிஸ்ட் தலைவர்களிடம் இருந்து வந்துள்ளது.

இடதுசாரிகளில் அதிதீவிரமாக இருப்பவர்கள் அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவதுதான் அரசியல் வேலை என்ற கருத்தைக் கொண்டிருகின்றனர். மாறாக சீர்திருத்தவாதிகளாக இருக்கும் இடதுசாரிகள் பலர், அரசாங்க நிர்வாகத்தில் தலையிடுவதே பிரதான அரசியல் நடைமுறையாகக் கருதுகின்றனர்.வேடிக்கை என்னவென்றால், இந்த இரண்டு பிரிவினரும் இடதுசாரி இலட்சிய அமலாக்கத்தின் முக்கிய கதாநாயகர்களான மக்களை மறந்து விடுகின்றனர்!

இந்தப் பார்வைகள் அனைத்தும் லெனினிய அரசியல் சிந்தனை அல்ல. பல கட்சிகளிலும்,பல வகையிலும் சிதறிக் கிடக்கும் வர்க்கங்களின் உறவுகளை மாற்றி, ஒன்றுபட்ட உழைக்கும் வர்க்கத்தின் அரசியல் பலத்தை வலுவாகக் கட்டுவதுதான் முக்கிய அரசியல் பணி. மக்கள் பங்கேற்கும் போராட்டங்களும் மக்களின் அரசியல் திரட்டலும்தான்  இடதுசாரி இலட்சியத்தை எட்டுவதற்கான பாதை.

மார்த்தா பொதுவாக லத்தீன் அமெரிக்க நிலைமைகளை விவாதித்தாலும் இது  உலக இடதுசாரி இயக்கங்கள் அனைத்துக்கும் பொருந்துவன.பாரம்பர்யமான, பழைய அரசியல் பார்வைகளைக் கைவிட வேண்டிய அவசர அவசியம் தற்போது  இடதுசாரிகளுக்கு உள்ளது.
இதர வகை வேலைகளை ஒப்பிடுகிறபோது மக்களிடையே அரசியல் திரட்டல் பணி ஆற்றுவது, கடினமான ஒன்று. ஆனால், இடதுசாரிகள் முதலாளித்துவம் உருவாக்கியிருக்கிற  ‘அரசியல்வாதி’ என்ற கருத்தாக்கத்தை உடைத்திட வேண்டும்.அத்தகைய அரசியல்வாதி ‘எதார்த்த அரசியல்’(Realpolitik)) நடத்துகிறவர்.

அவர், இருக்கிற நிலைமைகளில் அடிப்படை எதையும் மாற்றாமல் ஆதாயம் தேட முயல்பவர்.

“‘எதார்த்த அரசியல் எதிர்க்கப்பட வேண்டிய ஒன்று”என்று கூறும் மார்த்தா, எதனை மாற்று அரசியலாகக்  கருதுகிறார்?

“…அது (மாற்று அரசியல்) எதார்த்தத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளும்.நடந்து வரும் நிகழ்வுகளை அது அலட்சியப்படுத்தாது;ஆனால்,தற்போதுள்ள எதார்த்தத்தை அடிப்படையாக மாற்றுவதற்கான தயாரிப்புக்கள் செய்து  முன்னேறும்”என்கிறார் மார்த்தா.

இந்தக் கருத்தினை நிறுவிட கிராம்சியின் பல சிந்தனைக்கீற்றுக்களை துணைக்கு அழைத்துக்கொள்கிறார் மார்த்தா.“எவ்வாறு இருக்க வேண்டும்?” என்பதை விட “தற்போது என்ன இருக்கிறது?” என்பதிலேயே குறியாக இருக்கின்ற “அரசியல் எதார்த்த”அணுகுமுறையைக் கிராம்சி எதிர்த்தார். ஏனென்றால் அவர்கள் ‘சமநிலை’ நீடிக்க விரும்புகிறவர்கள். இங்கே வர்க்க சமநிலையை குறிப்பிடுகிறார்,கிராம்சி. அந்த ‘அரசியவாதி’களுக்கு மாறாக, இடதுசாரிகள் வர்க்க உறவு சார்ந்த சமநிலையை மாற்றிட முனைகின்றனர்.

வர்க்க உறவு சார்ந்த சமநிலை என்பதற்கு விளக்கமும் வரையறையும் மார்த்தா அளித்துள்ளார். கம்யூனிஸ்ட் இயக்கங்களின் சித்தாந்த விவாதங்களில் “வர்க்க உறவுகளின் பலாபலன்களை மாற்றுவது”என்ற சொற்றொடர் அடிக்கடி பயன்படுத்தப்படுவதுண்டு.மிக ஆழமான கருத்தாக்கம் இது.இதன் உண்மையான அர்த்தம் என்ன?

இந்த சொற்றொடரில் உள்ள சொற்களே சிலவற்றை உணர்த்துகிறது.இரண்டு எதிரும்புதிருமான சக்திகளுக்கிடையே உள்ள உறவு பற்றியது இந்த கருத்தாக்கம். அதில் ஒரு சக்தி தனக்குள்ள அதிக பலம் காரணமாக தனது நலன்களை வளர்த்திட இன்னொரு சக்தியை ஆட்டுவிக்கிறது. பலம் இல்லாத நிலையில் ஆதிக்க சக்திக்கு அந்த இன்னொரு சக்தி அடிபணிகிறது. இந்த நிகழ்வு “வர்க்க உறவுகளின் பலாபலன்கள்” என்றழைக்கப்படுகிறது.

முதலாளித்துவ சமூகத்தில் வர்க்க உறவுகளில் ‘சமநிலை’ இருக்கிறது என்றால்,முதலாளித்துவ வர்க்கம் ஆதிக்க நிலையிலும், உழைக்கும் வர்க்கம் அடக்கப்படும் நிலையிலும் நிலைநிறுத்தபப்ட்டுள்ளது என்று அர்த்தமாகும். இது இடதுசாரிகளுக்கும், கம்யூனிஸ்ட்களுக்கும் மட்டுமல்ல, அடக்கப்பட்டுள்ள வர்க்கங்களுக்கும் சகிக்க இயலாத சூழல். இந்த பாதகமான சூழலை மாற்றிட வேண்டும்.  அடக்கப்பட்டுள்ள உழைக்கும் வர்க்கங்கள் பலம் பெற்று, ஆதிக்க வர்க்கங்களை பலமிழக்கச் செய்திடல் வேண்டும். இதுவே வர்க்க உறவுகளின் பலாபலன்களை மாற்றிடும் பணியாகும்.

ஒரு இடதுசாரி இயக்கம் ஒரு நாட்டில் ஆயிரம்முறை “மாற்றுக் கொள்கைகள் இதோ எங்களிடம் இருக்கிறது;வாரீர்; வாரீர்;” என அறைகூவல் விடலாம்.ஆனால், அடக்கி ஒடுக்கப்பட்ட வர்க்கங்களோடு ஒன்றி, வர்க்க உறவுகளின் அநீதியான சமநிலையை தகர்ப்பதுதான் தலையாய பணி.வெறும் அறைகூவல்கள் பயனற்றவை.

மார்த்தா கூறுகிறார்: “ஒரு குறிப்பிட்ட சூழலில் வர்க்க பலாபலன்கள் புரட்சிகர சக்திகளுக்கு ஆதரவாக உள்ளதா,அல்லது எதிரிகளுக்கு சாதகமாக உள்ளதா என்பதை மதிப்பீடு செய்தல் வேண்டும்.” (“INSTRUMENTS FOR DOING POLITICS”: Marta Harnecker.)
இதற்கேற்ற நடைமுறை தேவை.மேலே குறிப்பிட்ட அதிதீவிர நடவடிக்கைகள்,சீர்திருத்தவாத செயல்பாடுகள் ஆகிய இரண்டும் பலன் தராது.

இன்றைய வர்க்க உறவு நிலை

மார்த்தாவின் அறிவுறுத்தல் அடிப்படையில் இன்றைய உலக வர்க்க உறவு நிலையை எவ்வாறு மதிப்பிடுவது?
இன்றைய நவீன தாராளமயம் பெரும் பன்னாட்டு நிதி மூலதனத்தினால் அமலாக்கப்பட்டு வருகிறது. இந்த வகை மூலதனம்,வலுவான இராணுவ, ஊடக அதிகாரம் படைத்தது.இதற்கான மேலாதிக்கத்தின் தளமாக அமெரிக்கா உள்ளது.

இந்த நிலை கடும் பொருளாதார விளைவுகளை கிராமப்புற,நகர்ப்புற உழைக்கும் மக்கள் மீது ஏற்படுத்தியுள்ளது.அத்துடன், சமூகத்தின் அடிமட்டத்தில் உள்ள நடுத்தர மக்கள், சிறு, குறு தொழில் முனைவோர், முறைசாராத்துறை தொழிலாளர்கள், வேலை கிடைக்காத இளைஞர்கள், பெண்கள்,குழந்தைகள், வயது முதிர்ந்தோர், கறுப்பர்கள், மதச் சிறுபான்மையோர், ஓய்வூதியர்கள் என பாதிக்கப்பட்டோர் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.

இந்நிலையில் ‘வர்க்க பலாபலன்கள் மாற்றம் ‘எப்படி நிகழ்த்துவது? பாரம்பர்ய இடதுசாரி இயக்கங்கள் பாரம்பர்யமான வடிவங்களான  ஆர்பாட்டங்கள், தர்ணா போன்ற வழிகளில் எதிர்ப்புக்களை தெரிவித்து வருகின்றன. ஆனால் இந்த அணுகுமுறை தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பது இலத்தீன் அமெரிக்க அனுபவம்.மற்ற நாடுகளிலும் கடந்த பல ஆண்டுகளாக இதே அனுபவமே ஏற்பட்டு வருகின்றது.
இதையோட்டி, மார்த்தா முன்வைக்கும் சில தீர்வுகளும்,வழிகாட்டுதல்களும் மார்க்சிய நடைமுறையை மேம்பட்ட, பரந்த தளத்திற்கு கொண்டு செல்கின்றன.

(தொடரும்)

Related posts