You are here

ராக்கெட் விடுவதும் அணுகுண்டு சோதனையும் அறிவியல் அல்ல

பாரத்ரத்னா சி.என்.ஆர். ராவ்

திடநிலை வேதியியல் எனும் தனித்துறையே உருவாகக் காரணமானவர் இந்திய விஞ்ஞானி சி.என்.ஆர். ராவ். பெங்களூருவில் ஜவஹர்லால் நேரு உயர் அறிவியல் ஆய்வு மையம் உலகப் பிரசித்திபெற்றது. அதனை ஸ்தாபித்தவர். வெறும் அறிவியல் அல்ல. மூன்றாம் உலக அறிவியலாளர் பேரவை எனும் அமைப்பை உருவாக்கி பல்வேறு போராட்டங்களைக் களம் கண்டவர் ராவ். அதிகாரப் படிநிலை அறிவியலைக் கடுமையாக எதிர்த்து வரும் ராவ் ஐந்து பிரதமர்களின் ஆலோசகராகத் தொடர்ந்து பணிபுரிந்தாலும் அதைத் தனது சுய விளம்பரத்திற்குப் பயன்படுத்தாதவர். அரசு ஆலோசகர் என்றாலும் அரசுகள் குறித்த கடும் விமர்சனங்களை முன்வைக்கவும் தயங்காதவர். இந்தியாவின் சூப்பர் கம்ப்யூட்டர் உருவாக்கத்தில் திடவடிவ வேதிகோட்பாட்டியல் இவரது பங்களிப்பு. லீனஸ் பாலிஸ் பேராசிரியர்.

சமீபத்தில் சச்சின் டெண்டுல்கருடன் சேர்ந்து பாரத ரத்னா விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டார். ஆனால் அறிவியலில் கிரிக்கெட்டோடு ஒப்பிட்டால் அவர் சச்சின், டிராவிட், கபில்தேவ், நவாப் பட்டோடி, காலிஸ்  இவர்களை ஒன்றிணைத்தால் யாரோ அறிவியலுக்கு ராவ் ஆவார். 2000 ஆண்டு ராயல் கல்வியகம் அவருக்கு ஹுஸ் பதக்கம் வழங்கியது. அமெரிக்க தேசிய அகாடமி, ரஷ்ய அறிவியல் அகாடமி, பிரெஞ்சு அறிவியல் கழகம், கண்டிபிஷியல்  அகாடமி, ஜப்பான் அறிவியல் தொழில்நுட்பக்கழகம் என இவர் இடம் பெறாத உலக அறிவியல் அகாடமி கிடையாது. இதுவரை ஆறு முறை நோபலுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள ராவ் யுனெஸ்கோ அமைப்பின் ஐன்ஸ்டீன் விருது, பாரடே கழகத்தின் மார்லோவிருது பெற்ற ஒரே இந்திய விஞ்ஞானி ஆவார். இதுவரை 1,300 அறிவியல் ஆய்வுகளும் 38 புத்தகங்களும் எழுதியுள்ளார். பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்ட பின்னணியில் என்.டி.டிவி (NDTV) 24 X 7 தொலைக்காட்சிக்காக இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழாசிரியர் சேகர் குப்தாவுடன் நிகழ்த்திய வாக்- தி- டாக் (walk the talk)  உரையாடலின் தமிழ்வடிவம் இது.

கேள்வி: சி.என்.ஆர்.ராவ் இன்று பாரத ரத்னா ராவ் ஆகியிருப்பது மகிழ்ச்சி. உங்களை கிரிக்கெட்டோடு ஒப்பிடும் சந்தர்ப்பம் துரதிர்ஷ்ட வசமானது. ஆனால் நீங்கள் சச்சின் + கபில் + பட்டோடி + டிராவிட்… இன்னும் காலிஸ்…

பதில்: ஆனால் தங்கள் துறையில் அவர்கள் சிலகாலங்களே காலம் தள்ள முடியும். நான் அறுபது வருடங்களாக அறிவியலில் ஆய்வுத்துறையில் இருக்கிறேன். எங்கள் வாழ்க்கை காலம் – முறை அனைத்தும் வேறுவேறு. நீங்கள் அறிவியலாளர் என்றால் அது ஒரு வாழ்முறை. அது ஒரு வேலை அல்ல. அது ஒரு கேளிக்கை அல்ல. அது போட்டியும் அல்ல. வாழ்முறை.

கே:  ஒரு நூலகத்தின் பிரதான அலமாரி முழுவதும் உங்கள் புத்தகங்கள் அடைத்துக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிந்தது. அப்புறம் இந்த பி.எச்.டி ஆய்வு அறிக்கைகள் அது ஒரு பெரிய பகுதி முழுவதும் அடுக்கி வைக்கப்பட்டிருக்கிறது. இது வரை உங்கள் வழிகாட்டுதலில் எத்தனை பி.எச்.டி (முனைவர்) ஆய்வுகள் முடிக்கப்பட்டுள்ளன.

ப: 160 பேர் என் நேரடி வழிகாட்டுதலிலும் ஏறத்தாழ ஐநூறு பேர் எதாவது ஒருபடி நிலையில் என் உதவிபெற்றும் அறிவியலில் சாதித்திருக்கிறார்கள். அதில் கணிசமாக இந்தியர்களும் ஒரு இருபது சதவிகிதம் அயல்நாட்டினரும் அடக்கம். ஒரு 200 பேர் இருக்கலாம். பதினேழு பல்கலைகழகங்களில் ஒரே சமயம் என் பணி தொடர்கிறது.

கே: சும்மா வரவில்லை பாரத ரத்னா. பலபேருக்கு நீங்கள் ஈடுபடும் உயர்மட்ட உயர்தர அறிவியல் தெரியாது. புரியாது. ஆனால் தெண்டுல்கர் போல ஒருத்தருக்கு மீடியா அதீத முக்கியத்துவம் தருகிறது. காரணம் எங்களுக்கு வேதிபொருட்கள் அடிப்படை ஆய்வு இவை குறித்து அதிகம் தெரியாது.

ப: நான் நிறமாலையியலிலும் அதிகம் உழைக்கின்றேன். திடவேதியியல் இன்று மருத்துவம் முதல் நேனோ தொழில் நுட்பம் வரை அனைத்திலும் பிரதான சக்தியாக செயல்படுகிறது. அதீத கடத்திகளின் செயல்திறன் குறித்த தொடர் தேடல்கள் மட்டுமே நவீன தகவல் தொழில் நுட்பத்தை  சாதித்துள்ளன. முழு உலகே என்னிடம் மிகவும் அனுசரணையாகவே நடந்துகொண்டுள்ளது. அவர்கள் எனக்கான முழுமையான அங்கீகாரத்தைக் கொடுத்துள்ளார்கள். அப்புறம் இந்தியா. இங்கே என் அனைத்து வகை ஆய்வு செயல்பாடுகளுக்கும் ஆதரவு இல்லை என்றாலும் கணிசமாக உதவி கிடைக்கிறது. என் நாடு ஏழ்மையில் தவிக்கும் ஒரு மூன்றாம் உலகநாடு. தன்னிடம் ஏதுமில்லை எனும் நிலை இருந்த போதும் அது எங்களை ஆதரித்தது. மிகவும் மெதுவாக இன்று இந்த நிலையை அடைந்திருக்கிறோம். சிறந்த ஆய்வுக் கூடங்களை கட்டமைக்க முயல்கிறோம். இந்திய நாட்டு ஏழை எளிய மக்களுக்கு விவசாயிகளுக்கு மீனவ சமூகத்திற்கு உதவிட, அன்றாட வாழ்வில் உதவிட அறிவியலை பயன்பாட்டு சக்தியாக மாற்றிட… இன்னும் நிறைய தூரம் பயணிக்க வேண்டியுள்ளது.

கே: ஒரு பன்னிரண்டு வருடங்களுக்கு முன் கரண்ட் சயின்ஸ் (Current Science) இதழில் உங்கள் பேட்டி ஒன்று அச்சாகி இருந்தது. அதில் இந்தியா ஏழைநாடு என்றாலும் அது அறிவியலில் நிறைய சாதித்துள்ளது என்று குறிப்பிட்டிருந்தீர்கள்.

ப: ஆனால் இன்னும் நிறைய செய்ய முடியும். ஏனென்றால் அவர்கள் நன்றாக சாதிக்கிறார்கள் என்றால் பிறநாட்டினர் இன்னும் அதிகமாக சாதித்துக் காட்டுகிறார்கள். நாம் அனைத்திலும் ஒரு இரண்டாம் தர மூன்றாம்தரத்திற்கு இறங்கிப்போய் விடுகிறோம். அதற்கு பலகாரணங்கள் உள்ளன.

கே:நீங்கள் இந்திராகாந்திக்குப் பிறகு தொடர்ச்சியாக ஐந்து பிரதமர்களின் அறிவியல் ஆலோசகராக இருந்திருக்கிறீர்களே…

ப: இந்தியா தனது ஆட்சிக் காலத்தில் அறிவியலில் வரலாறு படைக்க வேண்டும் என்பது எல்லா பிரதமர்களின் ஆர்வமாக இருந்தது. இருக்கிறது. ஆனால் அடிப்படையான ஒன்றை நாம் புரிந்து கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது. இந்தியா உலகஅளவில் முக்கியத்துவம் பெற வேண்டுமென்றால் அறிவியலிலன் பங்கு என்ன என்பதை நாம் உணர்ந்தோமா என்பதில் எனக்கு சந்தேகம் உண்டு. இன்றைய அறிவியல்தான் நாளைய தொழில்நுட்பம். அறிவியலின் தலைமையகமாய் நாம் மாறாவிட்டால் தொழில் நுட்பத்தின் தலைமையையும் நாம் அடையமுடியாது. இது இந்தியாவின் அனைத்து தரப்பிலும் புரிந்து கொள்ளபட்டிருக்கிறதா என்று தெரியவில்லை.

கே: எதை வைத்து இப்படிச் சொல்கிறீர்கள்?

ப: ஒரு அரசு அறிவியலுக்கு தனது வருடாந்திர பட்ஜெட்டில் எவ்வளவு தொகை ஒதுக்குகிறது என்பதை எடுத்துப்பாருங்கள். உங்களுக்குப் புரியும். நமது அரசுகள் மட்டுமல்ல நமது பொதுப்புத்தி அதாவது ஜனங்களின் இடையே செயல்படும் அபிப்ராயம் என்ன தெரியுமா.. ராக்கெட் அனுப்புவது, செயற்கை கோள்.. அல்லது அணு ஆற்றல். அணுஆற்றல் அணுகுண்டு சோதனை இது அறிவியல் என்று நினைக்கிறார்கள்.  உண்மையில் ஒரு பி.எஸ்.எல்.வி பறப்பதும், பொக்காரன்அணு சோதனையும் அறிவியல் அல்ல. உண்மையான அறிவியல் சிறுசிறு முயற்சிகளில் குட்டி ஆய்வகங்களில்தான் நடந்து கொண்டிருக்கிறது. வேதியியல், உயிரியல் இயற்பியல் எதுவாக இருந்தாலும் ஒரு சிறு முன்னேற்றம் போதும் தொழில்நுட்பத்தில் பெரிய மாற்றத்தை சாதிக்க. ராக்கெட் அனுப்புவதும் அணுஉலையும் எல்லா நாடுகளும் அறிந்த ஒரு தொழில்நுட்பத்தை நாமும் பயன்படுத்தும் ஒரு வளர்ச்சி செயல்பாடு. ராணுவத் தளவாடங்களுக்கு பணம் ஒதுக்கிவிட்டு அறிவியலுக்கு நான் நிதிஒதுக்கி விட்டேன் என்று மார்தட்டுவதுதான் நமது அரசுகளின் அபத்தமாக இருக்கிறது. அதை விமர்சித்தால் எல்லோருமே ஆத்திரப்படுகிறார்கள்.

கே: நீங்கள் குறிப்பிடும் அவ்வகை அறிவியல் ஆய்வுகள் அதாவது கண்டுபிடிப்புகளை மையமிட்டு இயங்கும் அறிவியலுக்கு நாம் நமது நாட்டில் சிறுசிறு விஷயங்கள் மீதான அறிவியல் ஆவலை பயன்படுத்த வேண்டும். நம் இளைய தலைமுறைக்கு அது இல்லை என்கிறீர்களா?

ப: நமது அறிவியல் கல்வி முறை அறிவியல் செயல்பாட்டுமுறை அங்கேதான் பெரிய பிரச்சனை. அவை அறிவியலை அடுத்த படி நிலைக்கு எடுததுச்செல்லும் சாதாரண பொருட்கள் மீதான ஆர்வத்தை ஆவலைத் தூண்டும் சமூக அமைப்பை எப்போதோ சிதைத்து விட்டது. அரசுகளும், மீடியாவும் யாரைப் போற்றுகின்றன யாருக்கு அதீத அங்கீகாரம் உள்ளது என்பது முக்கியம். சமூகமே வங்கிவேலைக்காரர்களைத் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறது என்று ஒரு உதாரணத்திற்கு வைததுக்கொள்வோம். அப்புறம் ஆசிரியர் ஆகிறவருக்கு எப்படி மரியாதை கிடைக்கும். ஆசிரியராகும் ஆர்வம் சமூகத்தில் எப்படிஇருக்கமுடியும். அது மாதிரிதான் இதுவும். ஏவுகணை சாதிகளும், ராக்கெட் விஞ்ஞானி ஊழியர்களுமே அறிவியலாளர்கள் என கொண்டாடப்படும் ஒரு அறிவியல் சூழலில் ஆய்வகத்துறை சார்ந்த, ஒரு உயிரியல் அல்லது வேதியியல் ஆய்வுசெய்ய யார் வருவார்கள். ஏதாவது ஒன்றை புதிதாக கண்டுபிடிக்கும் போது நமக்கு கிடைக்கும் அந்த திருப்தி மகிழ்ச்சி. அது, இது எப்படி சாத்தியம்.. இது இப்படி இருக்குமா… என எழும் ஆவலை தேடலைத் தூண்டும் கேள்விகள் சநம்பந்தப்பட்டது.

கே: நமது நாட்டில் அறிவியல், நாட்டு பாதுகாப்பு சாதன உற்பத்தியோடு குழப்பிக் கொள்ளப்பட்டுள்ளது என்கிறீர்களா….

ப: ஆமாம் அதில் என்ன சந்தேகம். அரசுகள் அறிவியலுக்கு பணம் ஒதுக்கிவிட்டதாக கூறும்போது உண்மையில் அது ராக்கெட் விடவோ அல்லது பிரம்மாண்ட அணு ஆற்றல்திட்டம்… ஏன் மின் உற்பத்தி செலவைக்கூட அரசு அறிவியல் வளர்ச்சிசெலவு என்று சொல்லி விடுகிறது. நாம் பல்கலைக்கழக ஆய்வுக்கூடங்களைப் பலப்படுத்த வேண்டும் போலி பி.எச்.டி இவைகளை முதலில் நிறுத்த வேண்டும். ஒருவருடத்திற்கு 8000 முதல் 10,000 வரை அறிவியல் பி.எச்.டி.களை வழங்குவதாக அறியமுடிகிறது. ஆனால் நாம் நவீன அறிவியலான கணினி இயலிலோ நேனோ இயலிலோ.. மரபியல் சார்ந்தோ எத்தனை பி.எச்.டி. ஆய்வுகளை சாதிக்க முடிகிறது? எல்லாம் பழைய அரைத்த மாவையே  அரைத்து பி.எச்.டி. வாங்கி அதிகார குழுமத்தில் இடம் பிடித்து… வரும் சந்ததியையும் வீணடிக்கிறார்கள். தகவல் தொழில்நுட்பம் (IT Sector) லட்சக்கணக்கான இளைஞர்களை இழுத்து வீணடித்து விட்டது. அங்கே ஒரே மாதிரி வேலையை இரவும் பகலும் பார்த்து தனது இளமையை முற்றிலும் பணமாக்குவது தவிர அறிவியலுக்கு அவர்களால் எதுவுமே செய்யமுடியவில்லை. ஒரு ஆள் கூட தகவல்தொழில் நுட்பத் துறையில் இந்தியாவில் பி.எச்.டி வரை போக விரும்புவதே கிடையாது. உலகம் முழுவதும் அத்துறையில் கண்டுபிடிப்புகள் நடக்கின்றன. நாம் நமது நாட்டை வேலைக்கார நாடாக்கிவிட்டோம்! சொன்னால் (இன்போஸிஸ்) நாராயண மூர்த்தி நான் தகவல் தொழில் நுட்பத்திற்கே எதிரானவன் அந்தக் காலத்து ஆள் என கிண்டலடிக்கிறார்.

கே: உங்கள் (ஜவஹர்லால் நேரு) ஆய்வகமும் பெங்களூருவில் தானே இருக்கிறது.
ப: ஆய்வு செய்பவர்களில் ஒருவர்கூட பெங்களூருக்காரர் அல்ல. ஏன் தமிழ்நாட்டிலிருந்துகூட யாரும் இல்லை. எல்லோருமே பீகார், உத்திரபிரதேசம், ராஜஸ்தான் என வந்தவர்கள் தான். பலரும் வங்காளத்திலிருந்தும் வந்தவர்கள். ஏனென்றால் தலை சிறந்த நமது மாணவர்களை பெங்களூருவும் சென்னையும் (ஐ.டி. சிட்டி ஆயிற்றே) பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாக இழுத்துக்கொண்டு விட்டன. இப்படி இருபது முப்பது வருடங்கள் தொடர்ந்து அடிப்படை அறிவியல் இங்கே நிர்மூலமாக்கப்பட்டு விட்டது. பல்கலைக்கழகத்தில் இயற்பியல், வேதியியல் என எடுத்துப் படிக்கவோ பின் உயர்கல்வியில் ஆய்வுகள் என இறங்கவோ ஆட்கள் இல்லை.

கே: நேனோ தொழில் நுட்பம் பற்றி எங்களுக்கு கொஞ்சம் விளக்க முடியுமா… அதில் உங்கள் பங்களிப்பு என்ன?

ப: அறிவியல் இன்று பழைய இயற்பியல், வேதியியல் அல்ல. வேதியியலின் ஆய்வகத்தில் இன்று குடுவைகள், புன்சன்பர்னர் புகை என எதையும் நீங்கள் பார்க்க முடியாது. இன்றைய வேதியியல் பல்துறைசார்ந்தது. நீங்கள் இன்று வேதியியல் ஏதாவது சாதிக்க விரும்பினால் உங்களுக்கு வேதியியலோடு, உயிரியல், கணிதம், கணினியியல் என பலதுறைகளில் நல்ல பரிட்சயம் இருக்கவேண்டும். நல்ல அறிவியல் ஆராய்ச்சி இன்று பல துறைகளின் இணைசெயல்பாடாக உள்ளது. உயிரியல் ஆய்வுகூட இன்றுமாறிவிட்டது. நாம் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். தற்கால அறிவியலில் உலகஅளவில் நடப்பதை ஆய்ந்தறிந்து வருங்கால தொழில்நுட்பமாக மாறப்போகும் அறிவியலைக் கையில் எடுக்க வேண்டும். நேனோ தொழில்நுட்பம் அதில் ஒன்று. நான் அதில் திட-வேதிப்பொருட்களின் பயன்பாட்டுத் துறையில் இன்று உலகில் காணப்படும் வல்லுனர்களில் முதன்மையானவன் They call me the Grand – father of solid state Nano-Chemistry. . ஆனால் நமது நாட்டில் நான் அதை சொல்லிக்கொள்ள வேண்டியநிலை. உதாரணமாக தங்கம் மினுமினுக்கும் ஒரு திட வேதிப்பொருள். அதையே துகள் துகளாக அடைத்து மிகச் சிறிய ஆதாரத் துகளின் அளவுக்கு சுருக்கும்போது அதுஜொலிக்காது. ஆனால் ஜொலிக்கும் தங்கத்தை விட அது ஒரு ஆயிரம் மடங்கு அதிகப் பயனுள்ளது. அதை அடைவதே நேனோ தொழில்நுட்பத்தின் அடிப்படை.

கே: அதற்கான ஆய்வகங்கள் இந்தியாவில் உள்ளனவா? இந்தியாவில் உங்களது ஆய்வுகள் சி.வி. ராமன்காலத்திலிருந்தே தொடர்கிறது அல்லவா?

ப: நான் கான்பூர் ஐ.ஐ.டி.யில் என் இளமைக்கால ஆய்வுகளைத் தொடங்கினேன். எனக்கு இருபது இருபத்தோறு வயது. அப்போது அமெரிக்க நிதிஉதவி முழுவதையும் அவர்கள் ஆராய்ச்சிக்கே செலவு செய்தார்கள். இன்று அதே கான்பூர் ஐ.ஐ.டி. ஆராய்ச்சிகளுக்கு ஏற்ற எந்த சூழலும் இன்றி தகர்ந்து போய்விட்டது. காரணம் நிறுவனசூழல். ஒரு மூன்றாண்டு அறிவியல் ஆய்வுக்கு அரசின் நிதி உதவி கிடைக்கிறது என்றால் ஒவ்வொரு ஆண்டும் செலவு கணக்கு காப்பி பில் உட்பட சேகரித்து எழுதுவதை வேறு நாட்டில் பார்க்க முடியாது. மூன்றாண்டு முடிவில்தான் இரண்டாமாண்டு பணம் வந்துசேரும். அதற்கும் யார் யாரையோ போய் பார்த்து கவனிக்க வேண்டும். அதற்கு பதில் ஆராய்ச்சியைக் கைவிட்டு பேராசிரியர் விரிவுரையாளர் எனப் போய்விடுவதே பரவாயில்லை என்றாகி விடுகிறது.

கே: அயல்நாட்டில் உங்கள் அனுபவம் எப்படி?

ப: பலரும் சொல்கிறார்கள். அரபு நாடுகள்தான் அறிவியலைப் புறந்தள்ளுகின்றன என்று. இசுலாமிய நாடுகள் அறிவியல் வளர்ச்சி அடையவில்லை என்று நான் யுனைடெட் அராப் எமிரேட்ஸ் நாட்டின் அறிவியல் ஆலோசனை அரசுக் குழுவில் இருந்தபோது அந்த நாட்டு ஷேக்குகளில் ஒருவர் அறிவியல் ஆராய்ச்சிக்கு ஏதாவது செய்ய விரும்பினார். அவருக்கு என் மீது நம்பிக்கை. எந்த அளவு நம்பிக்கை என்றால் அறிவியலுக்காக உங்கள் நாட்டில் எதையும் செய்து கொள்ளுங்கள் என 4 பில்லியன் டாலர் ஒரே காசோலையாக கொடுத்தார். அவர் பெயரிலேயே ஒரு சிறிய அறிவியல் ஆய்வகம் இங்கே அமைத்திருக்கிறேன். உலக செல்வந்தர் பட்டியலில் இருக்கும் ஆயிரம் கோடீஸ்வரர்கள் (இந்தியர்கள்) நமக்கு என்ன செய்தார்கள். இங்கே அரசின் காகித ஆட்சிமுறை ஒரு பெரிய பிரச்சனை. என் தந்தைக்கு மூன்றாண்டுகள் ஓய்வூதியம் வரவில்லை. தருகிறோம் போய் இரண்டு ஆண்டுகளுக்கும் உயிரோடு இருந்ததற்கு சான்றிதழ் வாங்கி வருமாறு துரத்தினார்கள். நமது நிர்வாக முறையை மாற்றாமல் எதையுமே நாம் யோசிக்கவும் முடியாது. ராக்கெட் விடுவதிலும், அணு ஆயுதங்களைப் பெருக்குவதிலும்தான் இவர்களுக்கு அக்கறை நாம் மக்களிடம் அறிவியல் சிந்தனைகளை எடுத்துச் செல்ல என்ன செய்திருக்கிறோம்.

கே: இப்படி பேசுவதன் மூலம் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குகிறீர்களே.

ப: சி.வி.ராமன் பேசாததா. இந்திராவிடமே ‘உன் தந்தை இந்தியாவில் அறிவியலைக் கொன்றுவிட்டார்’ என நேருவை வைத்துக்கொண்டே சொன்னவர் அவர். நான் அங்கேதான் இருந்தேன். பண்டிட்நேரு, ரூர்கி அறிவியல் மாநாட்டு தொடக்க உரை ஆற்றியபோது நானும் சத்யேந்திரநாத் போஸும் முதல்வரிசையில் அமர்ந்திருந்தோம். போஸ் திடீரென்று எழுந்தார். தன் வெள்ளைவெளேர் முடியை கோதிவிட்டபடி ‘இதே.. முட்டாள் தன பேச்சைத்தான் பலவருடமாகப் பேசி வருகிறீர்கள்’ என்று சத்தமாகத் தன் எதிர்ப்பைத் தெரிவித்தார். ஒரு நிமிடம் பேச்சை நிறுத்தியதோடு பிறகு ஏதும் நடக்காதது போல தொடர்ந்தார். என் ஆய்வு குரு லினஸ் பாலிஸ். அவர் அணுஆயுத எதிர்ப்பு ஊர்வலம் நடத்தவில்லையா. அவரது பாஸ்போர்ட்டை பிடுங்கி முடக்கி அவரை கம்யூனிஸ்ட் என்று அமெரிக்கா அறிவித்ததே. அவர்களால் அவரை என்ன செய்ய முடிந்தது. சம்பிரதாயங்களுக்கு எதிராகப் பேசாவிட்டால் வேறு யார் பேசுவார்கள்.

கேள்வி: ஆனால் நம் நாட்டில் ராக்கெட் விட்டதும் நேரே திருப்பதிபோய் மொட்டை போடுவதுதான் அறிவியலாக இருக்கிறது.

ப: மதம் சம்பிரதாயம் இது அவரவரின் வீட்டில் வைத்துவிட வேண்டும். என் நண்பர்கள் கிண்டலாகச் சொல்வதுண்டு கடைசிநேரத்தில் ராக்கெட்டில் கோளாறுவந்தால்.. ஒரே ஒரு சூடம் காட்டும் ஆரத்திபோதும். சரிசெய்துவிடலாம் என்று, அவ்வளவு மூடநம்பிக்கை இன்று. சி.வி.ராமனிடம் இப்படி அபத்தங்களைப் பார்க்க முடியாது. அந்த அறிவியலுக்கு நாம் திரும்ப வேண்டும். அறிவியலில் இருந்து மக்கள் பாடம் கற்க வேண்டும்.

கே: முரளிமனோகர் ஜோஷி (பி.ஜே.பி) வந்து வேதகால அறிவியலைத் திணித்தபோது ராஜா ராமண்ணா உட்பட யாருமே எதிர்க்கவில்லையே.. பசுமாட்டு மூத்திரத்தின் வேதிப்பண்புகளை அவர் ஆராயச் சொன்னார் அல்லவா.

ப: ஆயிரக்கணக்கான பணம் விரயமானது. அதைவிட நேரம் முழுவதும் வீண். உலகம் சிரித்தது. அபத்தம். அவர் அணுகுண்டுகளை வேதகாலத்தில் இந்தியா கண்டுபிடித்ததாகச் சொன்னார். பாடபுத்தகத்தில் எழுத வைத்தார். ஏன் ஜெட்விமானம் கூட மகாபாரத காலத்தில் இருந்தது என்றும் குழந்தைகளை நம்பவைத்தார்கள். அத்தகைய பாதை அறிவியல் சிந்தனை மரபை எதேச்சதிகாரத்தோடு சிதைத்துவிடும் போக்கு என்பதில் சந்தேகமே இல்லை.

உரையாடல் : சேகர்குப்தா, ஜோதி காரத் அதித்தி-ரே.
தமிழில்: இரா.நடராசன்
நன்றி: ndtv.com

Related posts