You are here

மாமணியைத் தோற்றோம்

கீரனூர் ஜாகிர்ராஜா

“இவரைப் பத்திரமாக பாதுகாக்க வேண்டும். இதற்கு தமிழ்நாட்டில் வேறுஎவரும் இல்லையா?” என்று மகாத்மா காந்தி ஒருமுறை ஆதங்கத்துடன் கேட்க நேர்ந்தது. பத்திரமாக பாதுகாக்க வேண்டுமென காந்தி கேட்டுக்கொண்டது பாரதியைத்தான். காந்திக்கு தமிழர்களைப் பற்றி அவ்வளவாக ஒன்றும் தெரியாதுபோல.  தமிழர்கள் சினிமா நடிகனுக்கானால் கோயில் கட்டுவார்கள். கும்பாபிஷேகம் நடத்துவார்கள். இலக்கியவாதிகள் அவர்களுக்கு மயிருக்குச் சமம். அதனால்தான் பாரதி எனும் மாமணியைத் தோற்றோம் என்று வேதனையுடன் குறிப்பிடுகிறேன்.

யதுகிரி அம்மாள் எழுதிய பாரதி நினைவுகள் முதல்பதிப்பிற்கான மெய்ப்புத் திருத்திக்கொண்டிருந்த போதே  ஒரு மதிப்புரை எழுத வேண்டுமென ஆவல்கொண்டேன். இயலாமல் போனது. காலம் கடந்தேனும் சந்தர்ப்பம் வாய்த்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

பாரதி நினைவுகளைப் பலரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் பலவிதக் கோணங்களில் பகிர்ந்து கொண்டுள்ளனர். பாரதியைப் பிடித்தவர்கள், பாரதிக்குப் பிடித்தவர்கள், தேசாபிமானிகள், பாரதியை மானசீக குருவாக மனதில் வரித்துக்கொண்டவர்கள், பேச்சாளர்கள், சிறுபத்திரிகையாளர்கள், வணிக இதழாளர்கள், சினிமாக்காரர்கள் இவர்களுள் அடக்கம். பாரதி மிக விரும்பிப் பூணூல் அணிவித்த கனகலிங்கம் ‘என் குருநாதர் பாரதியார்’ என்றொரு புத்தகம் எழுதினார். வ.உ.சி., வ.ரா., பாரதிதாசன், பாரதியாரின் துணைவியார் செல்லம்மாள், மகள் தங்கம்மாள் ஆகியோரும் தங்கள் பங்கிற்கு    எழுதியிருக்கின்றனர். பாரதியின் படைப்புகளை நவீன இலக்கியக் கோட்பாடுகள் வரை எல்லாவற்றுக்குள்ளும் பொருத்திப்பார்த்து நூற்றுக்கணக்கிலான ஆய்வு நூல்கள் இன்றைக்கும் வந்தவண்ணம் இருக்கின்றன. பாரதி வரிகளை மேற்கோள் காட்டாமல் இந்த மாநிலத்தில் எந்த அறிவுஜீவியாலும் கடந்துவிட முடிவதில்லை. நூற்றாண்டு கடந்து பாரதியால் இன்றைக்கும் ‘புதியவனாக’ நிற்கமுடிகிறது. அது அவன் சொல்லின் சக்தி. ஒரே நேரத்தில் முற்போக்காளனாக, பிற்போக்குவாதியாக, மகாகவியாக, அஞ்சாநெஞ்சனாக, பலவீனனாக அவனைப் பலராலும் பார்க்க முடிகிறது. இதுதான் காலங்கடந்து ஜீவித்திருக்கிற படைப்புக்கலைஞனின் பலம்.

யதுகிரி அம்மாள் பகிர்ந்துகொள்கிற பாரதி நினைவுகளுக்கு ஒரு கவித்துவ வசீகரம் உண்டுதான். அது குரு-சிஷ்யை எனும் ஆழமான நேசத்திலிருந்து பிறப்பெடுத்தது. இந்நூலை அறிமுகப்படுத்தியுள்ள ரா.அ.பத்பநாபன் குறிப்பிடுகிறார், “பாரதியின் அன்புக்குப் பாத்திரமான ஒரு சிறுமி என்ற கோணத்திலிருந்து பாரதியை ஒரு மனிதராக, குடும்பத் தலைவராக நம்முன் கொணர்ந்து நிறுத்துகிறார் யதுகிரி. இதில் அவர் கையாளும் ‘வீட்டுநடை’ நூலுக்கு ஒரு தனிச்சுவை அளிக்கிறது”

மொழிநடையில் வீட்டுநடை என்று தனியாக ஒன்று உள்ளதா? நமக்குத் தெரியாது. பிராமணப் பதங்கள் கலந்த பெண்களுக்கேயான எழுத்துப்பாணியைத்தான் அவர் அப்படிக் குறிப்பிடுகிறார் என்று நான் கருதுகிறேன்.

அந்நாளில் புதுச்சேரி விடுதலை வீரர்களுக்கான சரணாலயமாக இருந்திருக்கிறது. சென்னையில் இந்தியா பத்திரிகையில் பணியாற்றிய பாரதி போலீசாரின் அச்சுறுத்தல்களிலிருந்து மீள புதுச்சேரிக்கு வருகிறார். அதைத் தொடர்ந்து மண்டயம் ஸ்ரீநிவாசாச்சாரியாரும், வ.வே.சு. ஐயரும், வ.ரா.வும் புதுவைக்கு வர, இந்தியா பத்திரிகை அச்சகமும் கூடவே வந்துவிடுகிறது. பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்தவர்கள் பிரெஞ்சு இந்தியாவிற்கு ஜாகையை மாற்றிக்கொண்டு முன்பிருந்தும் புத்துணர்வுடன் செயல்படத் துவங்கினார்கள்.

மண்டயம் ஸ்ரீநிவாசாச்சாரி பாரதி என்கிற மேதமையைப் பலவிதங்களில் தாங்கியவர். அவருடைய புதல்வி யதுகிரி தன் பதின் வயதுகளில் அந்த மகாகவியுடன் ஒரு குடும்பமாகப் பழகும் பெறற்கரிய வாய்ப்பைப் பெற்றிருந்ததும், அந்நினைவுகளை நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு எழுதிப்பார்த்து பெருமிதப்பட்டுக்கொண்டதும், ஆக இவையாவும் பாரதியைக் குறித்த ஒரு புத்தகம் வந்தது என்கிற அளவில் மட்டுமே முக்கியத்துவம் பெற்றிருக்கவில்லை. 1912 முதல் 1918 வரையில் ஒரு ஆறேழு ஆண்டுகாலப் பதிவுகள் தானே  என்று  எவரும்  அலட்சியப்படுத்திவிட்டுச் செல்லவும் வழியில்லை.

பாரதி இப்புவியில் வாழ்ந்ததே 39 ஆண்டுகள்தான். அதிலும் தோழர் பாரதி கிருஷ்ணகுமார் குறிப்பிடுவதுபோல, பாரதி கவிதையே எழுதாமல் வாழ்ந்த அந்த 1898 – 1904 ஆம் ஆண்டுகளையும் நாம் கனத்த மௌனத்துடன் கணக்கில் எடுத்துக்கொண்டால் அவன் இயங்கியதென்னவோ 16 ஆண்டுகாலம்தான். அதனாலென்ன? நூறாண்டுக்கான  பணிகளைச் செய்துவிட்டுத்தான் சென்றான் பாரதி. அதனால்தான் ‘செயற்கரிது செய்துவிட்டாய்’ என்றார் பாரதிதாசன். எனவே யதுகிரி அம்மாளின் இந்த ஏழாண்டுகாலப் பதிவு பாரதி வரலாற்றில் முக்கியத்துவம் பெறுவது தவிர்க்க முடியாதது. பாரதியின் முழுமையான வாழ்க்கை  பதிவுபெறுவதற்கு யதுகிரியின் இந்தப் புத்தகம் பெருமளவு உதவியாக இருந்திருக்கிறது. பாரதி போன்ற உணர்ச்சித் துடிப்புள்ள நிஜமான கலைஞனை உடனிருந்து உன்னிப்பாக அவதானிப்ப தென்பது சிரமமான பணி. சமவயதும் புலமையும் கொண்டவரானாலும் அது சவாலான காரியமே. ஒரு பெண்ணாக இருந்து பாரதியுடன் யதுகிரி பழகியிருப்பதும், அதை எழுதியிருப்பதும்தான்  இங்கு குறிப்பிட்டுச் சொல்லத்தக்கது.

தன் பலங்களுடனும், பலகீனங்களுடனும் நமக்கு முழுமையாகச் சித்திரமாகிறார் பாரதி. அது இந்த நூலின் சிறப்பம்சம். “சுமார் 40 வருடங்களுக்கு முன் புதுச்சேரியில் பாரதியாரின் சிஷ்யையாகவும், அபிமான புத்ரியாகவும் இருக்கும் பாக்கியம் எனக்கிருந்தது. இதைச் சொல்லிக் கொள்வதில் எனக்கு இப்போது என்னையறியாமல் ஒரு பெருமிதம் உண்டாகிறது” என்று யதுகிரி கூறிக்கொண்டாலும், பாரதியுடனான உரையாடல்களில் ஆங்காங்கே அவர் தன் விமர்சன சவுக்கை சொடுக்கத் தவறவில்லை. பாரதியார் வாயால் பெண்கள் சுதந்திரம் பாடினாரே ஒழிய செல்லம்மாவைத் தம் நோக்கத்தின் படியேதான் நடக்கும்படி செய்தார். செல்லம்மா தமதிஷ்டப்படி நடப்பது வெகு அபூர்வமே… என்றெல்லாம் கூட யதுகிரி எழுதியிருக்கிறார்.

“பாரதியாருக்கு சங்கீதக் கச்சேரிகளைக் காட்டிலும் பாம்பாட்டி, வண்ணான், நெல்குத்தும் பெண்கள், செம்படவர்கள், உழவர் இவர்களுடைய நாடோடிப்பாட்டுகள் என்றால் மிகவும் இஷ்டம்” இப்படித்தான் யதுகிரி தன் நினைவுகளை எழுதத்தொடங்குகிறார். இதுவே பாரதி மீது வைக்கும் மறைமுகமான விமர்சனமாகத்தான் படுகிறது. இதே அத்தியாயத்தின் மூன்றாவது பத்தியில் பாரதியின் துணைவியார் செல்லம்மாள் “அவர் சுபாவம் உனக்குத் தெரியாதா? வீதியில் மாரியம்மன் எடுத்துக்கொண்டு உடுக்கை அடிப்பவன் வந்தால் இவர் கூத்தாடுகிறார். தன்நினைவேயில்லை” என்று உள்ளே நுழைகிறார். இந்நூல் முழுவதையும் பாரதியுடன் யதுகிரியும் செல்லம்மாளும் ஆக்கிரமித்துக்கொள்கிறார்கள். இடையிடையே மண்டயம் ஸ்ரீநிவாசாச்சாரி, வ.வே.சு.ஐயர் வருகிறார்கள். பாரதி எதையேனும் பிரஸ்தாபிக்க, செல்லமாவும் யதுகிரியும் அதில் குறுக்கிட பாரதி அதற்கு வியாக்கியானம் தர, சபை கலகலக்கிறது. இவ்வாறு உரையாடல்களின் வழியே நூலை நடத்திச்செல்வது வாசகர்களை அயர்ச்சிக்குள்ளாக்காத ஒரு உத்தியாகப்படுகிறது.

ஒரு மகாகவியின் துணைவியாகிய செல்லம்மா அதற்கான எவ்வித ஒப்பனைகளுமின்றி லௌகீஹ நெருக்கடிகளில் உழலும் சாரசரிப் பெண்ணாக நமக்கு அறிமுகமாகிறார். பொருளாதாரப் பிரச்சனைகள் கலைஞர்களின் வாழ்க்கையில் சகஜம்தான். ஆனால், செல்லம்மாள் பாரதியின் ஆளுமைக்கு ஈடுகொடுக்க இயலாத பெண்ணாக, பழமைச் சகதிகளில் உழலும் கர்நாடகமாகப் பல நேரங்களில் வந்து நிற்பது நமக்கு நெருடலாகவும் துயரமளிப்பதாகவும் உள்ளது. ஆனால் எதார்த்தம் அப்படித்தான் இருந்திருக்கிறது.

உதாரணத்திற்கு ஒரு காட்சி. செல்லம்மாள் அரிசியைக் களைந்து உலையில் போடுவதற்காக வந்துபார்க்கிறார். அரிசியில் கால்பங்கைக் காணோம். முற்றத்தில் நின்ற குருவிகளுக்கு அதை இறைத்துவிட்டு பாரதி தன் குழந்தை சகுந்தலாவைத் தூக்கி வைத்து ஆனந்தக் கூத்தாடுகிறான்.

“விட்டு விடுதலையாகி நிற்பாயிந்தச்
சிட்டுக் குருவியைப் போல…”

அடுக்களையிலிருந்து செல்லம்மாவின் குரல் தீனமாக ஒலிக்கிறது. “வீட்டிலிருந்து வருகிற பொறுக்கின அரிசியை குருவிக்குப் போட்டுவிட்டீர்களே? உங்களுக்குப் பணம் வர இன்னும் எவ்வளவு நாளாகுமோ? நீங்களோ இன்னும் கட்டுரை எழுதியாகவில்லை. பால்காரன் மானத்தை வாங்குகிறான். வேலைக்காரி இரண்டு நாளாய் வரவே இல்லை. நீங்கள் இதை யோசிக்க வேண்டாமோ?  என்னைக் குருவியைப் போல் சந்தோசமாக இரு என்கிறீர்களே. கடவுளுக்கு கண்ணே இல்லை. இந்த குழந்தைகளை கொடுத்து வதைக்கிறார்.”

பாரதி மரணித்து நீண்டகாலத்தின் பிறகு 1951ல் திருச்சி வானொலியில் செல்லம்மாள் ‘என் கணவர்’ என்கிற தலைப்பில் பேசினார். “ஊருக்குப் பெருமை என் வாழ்வு. உலகத்தோடொட்டி வாழ வகையறியாத கணவருடன் அமரவாழ்வு வாழ்ந்தேன் என்றால் உங்களுக்கு சிரிப்பாகத்தான் இருக்கும். யாருக்கு மனைவியாக வாழ்ந்தாலும் வாழலாம். ஆனால், கவிஞன் மனைவியாயிருப்பது கஷ்டம்” என்று தொடங்கி சில கசப்பான நினைவுகளைக் கூறுகையில் நமக்கு மனதைப் பிசைகிறது. எனவே நானும் இந்த இடத்தை வார்த்தைகளின்றி கடுமையான மௌனத்தால் நிரப்புகிறேன். மன்னிக்கவும்.

பாரதி ஒரு சனாதனி, பார்ப்பனக் கவிஞன், சாதியைப் பேணுகிறவன், வேதாந்தம் பாடிய இந்துத்துவவாதி, அவன் பெண் விடுதலை பாடியதெல்லாம் பொய்… என்றெல்லாம் சில அறிவு ஜீவிகள் விமர்சிப்பதை செவிகொண்டு கேட்டிருக்கிறேன். இன்னும் பாரதியின் சொற்களிலிருந்தே இதற்கான ஆதாரங்களையும் அவர்கள் அள்ளி விளம்புவதுண்டு. இன்னும் சில ‘பொறுப்பான’ நண்பர்கள் இருக்கிறார்கள். நம் அம்மா, அப்பாக்களைப் போல துணைவியார்களைப் போல, அவர்கள் பாரதியை “பொறுப்பில்லாதவன், தானும் பட்டினிகிடந்து தன் குடும்பத்தையும் பட்டினியால் வாட்டியவன்” என ஏசுகிறார்கள்.

சனாதனவாதியாகப் பார்க்கிறவர்களிடம் ஆணித்தரமாக மறுத்துப் பேசுவதற்கென தனது ஏராளமான கவிதைவரிகளை பாரதி விட்டுச் சென்றிருக்கிறான். மட்டுமின்றி நிஜவாழ்வில் பாரதி சமரசமின்றி நடந்துகொண்ட பல தருணங்களை இந்த இடத்தில் நினைவு கூரலாம். அதே போன்று பற்றற்ற தன்மையை விமர்சிப்பவர்களிடம் எதிர்வினை புரிவது வீண் என்பதே என் கருத்து. ஒரு நிஜமான கலைஞன் ‘வெற்றிகரமான குடும்பஸ்தனாக’ இருப்பது கடினம். அவ்வாறு இருப்பின் எங்கோ சமரசம் நிகழ்ந்திருக்கிறது என்றே பொருள்.

“ஏமாற்றி மற்றவரை ஏட்டால் அதை மறைத்துத்

தா மட்டும் வாழச் சதை நாணா ஆரியத்தை

நம்புவார் நம்பட்டும் நாளைக்குணர்வார்கள்

அம்பலத்தில் வந்ததின்றே ஆரியரின் சூழ்ச்சியெல்லாம்”

என்று தன்னினத்தை வார்த்தைகளால் வதைத்தவன் பாரதி. “என்னுடைய மகள் தாழ்த்தப்பட்ட இளைஞருடன் கடல்கடந்த நாட்டிற்கு ஓடிப்போய் அங்கிருந்து அப்பா, நான் சௌக்கியம் என்று எழுதும் கடிதம் எத்தனைப் பேரின்பம்” என்று நெருங்கிய நண்பர்களிடம் சொல்லுகிற துணிச்சல் பாரதிக்கு இருந்தது. “இழிந்த சாதியில் பிறந்த ஒருவன் எல்லா வேதஞானம் பெற்றாலும் சிருங்கேரிமடத்தின் தலைவராக முடியுமா” என்று பெரியாருக்கு முன்பே கேட்டவன் பாரதி.

நூலின் பல்வேறு அத்தியாயங்களில் பாரதி தனது சகல பாவங்களுடன் அப்பட்டமாக வெளிப்படுகிறான். தான் யார், தனது நோக்கம் என்ன என்பதில் அவனுக்கு எவ்விதத் தடுமாற்றமும் இருக்கவில்லை. ஆனால் ஆச்சார அனுஷ்டானங்களை தீவிரமாகப் பாவிக்கிற துணைவி செல்லம்மாளுக்கு பாரதி ஒரு புரியாத புதிராகவே நீடித்திருக்கிறார். யானையிடம் சிநேகிதம் பழகி, கழுதைக்கு முத்தம் தந்து, சட்டைப்பையில் உள்ள பணத்தைப் பிறருக்கு வாரி இறைத்து, புல்லினங்களை நேசித்து, மீசை முறுக்குவதும், லாகிரிவஸ்துகளை உபயோகித்துச் சதா கற்பனையில் ஆழ்வதும், சகதர்மிணிகளுக்குப் பிடித்த விஷயங்களா என்ன?

ஒருமுறை முகம் மழித்துக்கொள்ள இன்றைக்கு நாள் நன்றாக இல்லை(!) என்று செல்லம்மாள் தடுக்க, பாரதி யதுகிரியின் வீட்டிற்குப் போய் மழித்துக்கொள்ளும் நிலை. “இதோ பார். தொந்தரவு பண்ணினால் நான் தலைமேல் துணியைப் போட்டுக் கொண்டு போய்விடுவேன்” என்று பாரதி மிரட்ட, “நீங்கள் இந்தப் பக்கம் போனால் நானும் அந்தப் பக்கம் போய்விடுகிறேன். இந்தக் கஷ்டம் எதற்கு?” என்று செல்லம்மாள் பதில்கூற, இவ்வாறு தம்பதியருக்குள் சகஜமாக நடக்கின்ற சம்பாஷணைகள் ஏராளம். ஆனால் அதே மனைவியைத்தான் பாரதி “என் செல்லம்மா முக்கிய பிராணன், என் செல்வம். எல்லாம் எனக்கு அவள்தான். அவள் பாக்கியலஷ்மி…” என்று ஒரு சந்தர்ப்பத்தில் தூக்கிக் கொண்டாடுகிறார். இவ்வாறு எதார்த்தமும் தீவிரமும் ஹாஸ்யமும் கலந்த எண்ணற்ற சம்பவங்களை  யதுகிரி ஒளிவுமறைவு இல்லாமல் விவரித்துச் செல்கிறார். பல சம்பவங்கள் நாம் அதிகமும் கேள்விப்படாதவை.

பாரதி வாழ்வின் பல நிகழ்வுகளை எல்லா எழுத்தாளர்கள் கலைஞர்களின் வாழ்வுடனும் பொருத்திப் பார்க்க வேண்டிய கடமை நமக்குண்டு. அப்போதுதான் புறச்சூழல் நெருக்கடிகளை எதிர்கொள்ள முடியாமல் கலைஞன் அல்லலுற்றதை, தவித்த தவிப்பை, அப்புறம் பாரதிக்கும் பிறருக்குமான வித்தியாசத்தை ஓரளவேனும் உணர்ந்து கொள்ள முடியும்.

“மனுஷ்ய ஜீவனுக்கு இரண்டு வித நிலைமைதான் உண்டு.எதுவும் தன்னிஷ்டப்படி செய்து, அதனால் ஏற்படக்கூடிய இன்பதுன்பங்களுக்கு தான் பொறுப்பாளியாக இருப்பது ஒரு நிலைமை. அதுதான் சுதந்திரம். அப்படியில்லாமல் பிறர் விருப்பப்படி கட்டுப்பட்டிருத்தல் அடிமைநிலை” இவ்வாறு பாரதி ஒரு கட்டுரையில் எழுதுகிறார்.

பாரதி வேண்டிய விடுதலை தேசத்தின் விடுதலை மட்டுமன்று, தன் விடுதலையுமாகும். எட்டயபுரத்தானிடம் ஏவல் செய்தபோதும், சுதேசமித்திரனில் அடங்கியிருந்தபோதும் அவன் ‘தன்னை’ விடுவித்துக்கொள்ளப் பெரும்பாலும் போராடியிருக்கிறான். ஆனால், இந்தப் பிரபஞ்சமெங்கிலும் ஏசுவோ, அல்லாவோ, ஈஸ்வரனோ ஏனைய தெய்வங்களோ பாரதி உள்ளிட்ட எந்தக் கலைஞனையும் சுதந்திரமாக இயங்கவிட்டதில்லை.  தெய்வங்களைச் சண்டைக்கிழுத்து நடுமுச்சந்தியில் நிறுத்தவும், சவால் விடுக்கவும், தண்டனை அளிக்கவும் திராணி உள்ளவனாக கலைஞன் இருப்பதானாலேயே அவனை நசுக்குவதற்கு தெய்வங்கள் மட்டுமின்றி மனிதர்களும் விரும்புகிறார்கள். ஆனால் கலைஞர்கள் இந்தச் சராசரிகளிலிருந்து சாமர்த்தியமாகத் தப்பித்து அமரர்களாகி விடுகிறார்கள். பாரதி அமரன்!

Related posts