You are here

நிகழ்ந்தபோதே எழுதப்பட்ட வரலாறு

இரா.ஜவஹர்

‘சட்டமன்ற, பாராளுமன்றத்திற்கு அரசியல் கட்சிகள் தேர்ந்தெடுக்கும் வேட்பாளர்களுக்கு முதலாளிகள்தான் செலவழிக்கிறார்கள். நடைமுறையில் இந்த முதலாளிகள், வாக்காளர்களை இது போன்ற மக்கள் மன்றங்களிலிருந்து பிரித்துவிடுகிறார்கள். இதன் விளைவாக, மக்கள் பிரதிநிதிகள் எளிய மக்களின் நலன்களைப் பாதுகாப்பதில்லை. மேலும் இன்றைய சூழலில் ( பத்திரிகை, வானொலி, கல்வி ) தகவல் தொடர்பின் முக்கியமான பகுதிகள் அனைத்தையும் முதலாளிகள்தான் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தம் கையில் வைத்திருக்கிறார்கள். எனவே தனிப்பட்ட ஒரு குடிமகனால் சரியான முடிவுகள் எடுக்கவோ, தனது அரசியல் உரிமைகளைச் சரியானபடி பயன்படுத்தவோ முடிவதில்லை.”  இப்போது நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் பற்றிச் சொல்வதைப் போல இருக்கிறது அல்லவா?  இல்லை. இது 1949 ம் ஆண்டில் எழுதப்பட்டது. எழுதியவர் மகத்தான விஞ்ஞானி ஐன்ஸ்டைன்.

‘மன்த்லி ரிவ்யூ’ என்ற புகழ் பெற்ற இடதுசாரி இதழின் முதல் இதழில், ‘சோஷலிசம் எதற்கு ?’ என்ற அவரது கட்டுரையில் இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து ஆங்கிலத்தில் வெளிவரும் மாத இதழான ‘ மன்த்லி ரிவ்யூ’ 1949 முதல் இன்றுவரை வெளிவந்து கொண்டுள்ளது.

“ஐன்ஸ்டைன் முதல் ஐஜாஜ் அகமது வரை, சே குவேரா முதல் மார்க்கோஸ் வரை” இடதுசாரி அறிஞர்கள், புரட்சியாளர்கள் பலர் இதில் எழுதியுள்ளார்கள். இதில் உள்ள பல கட்டுரைகளின் தொகுப்பு இதன் ஐம்பதாவது ஆண்டு விழாவை ஒட்டி வெளியிடப்பட்டது. இதைத் தமிழில் பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது. இந்தப் புத்தகத்தைப் பற்றிய ஓர் அறிமுகத்தை இப்போது பார்ப்போம்.

முதலில் ஐன்ஸ்டைன் எழுதிய ‘சோஷலிசம் எதற்கு?’ என்ற கட்டுரை. ஐன்ஸ்டைன் ஒரு இயற்கை விஞ்ஞானி. பொருளாதாரம் மற்றும் சமூகப் பிரச்சனைகளில் வல்லுனர் அல்ல. அவர் சோஷலிசம் பற்றிக் கருத்துக் கூறுவது சரிதானா ? “ சரிதான்” என்று கூறி அவர் தொடங்குகிறார்.

மனிதர்களின் இயற்கையான உயிரியல் தேவைகள், அவற்றைத் தாண்டிய பல முன்னேற்றங்கள், தனி மனிதனுக்கும் சமூகத்துக்குமான தொடர்பு, முதலாளித்துவத்தால் ஏற்படும் நெருக்கடிகள், துன்பங்கள் என்று ஒவ்வொன்றாக அவர் விளக்குகிறார். தான் சமூகத்தைச் சார்ந்து இருப்பதை மனிதன் இப்போது அதிகமாக உணர்கிறான்; ஆனால் அந்தச் சார்பே தனது நலனுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் உணர்கிறான்; நெருக்கடியின் சாரம் இதுவே; இதனால் தனி மனிதனின் சமூக உணர்வு முடங்குகிறது; “மிகைப்படுத்தப்பட்ட போட்டி மனப்பான்மை மாணவர் மனதில் புகட்டப்படுகிறது” என்கிறார் அவர். இந்தக் கொடிய தீமைகளை ஒழிக்க என்ன வழி?

“ ஒரே ஒரு வழிதான் உள்ளது என நான் உறுதியாக நம்புகிறேன். சோஷலிசப் பொருளாதாரத்தை உருவாக்குவதன் மூலமும், சோஷலிசக் குறிக்கோளை நோக்கிய கல்வி அமைப்பை அதோடு சேர்த்துக் கொண்டு செல்வதன் மூலமும்தான் இத் தீமைகளை ஒழிக்க முடியும் “ என்கிறார் ஐன்ஸ்டைன். கூடவே ஒரு முக்கியமான எச்சரிக்கையையும் அவர் அளிக்கிறார்.

“திட்டமிட்ட பொருளாதாரம் மட்டுமே சோஷலிசம் அல்ல..திட்டமிட்ட பொருளாதாரமும் தனி மனிதன் அடிமைப்படுதலோடு சேர்ந்து நடக்கலாம். சோஷலிசத்தை அடைய சில கடுமையான சமூக, அரசியல் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வேண்டியதாக இருக்கும். அரசியல், பொருளாதார அதிகாரத்தின் அதீத மத்தியத்துவத்தை வைத்துப் பார்க்கும் போது, அதிகார வர்க்கம் அதிக சக்தி வாய்ந்ததாக மாறுவதை எவ்வாறு தடுப்பது? தனி மனிதனின் உரிமையை எப்படிப் பாதுகாப்பது? அதிகார வர்க்கத்தின் அதிகாரத்தை சரியீடு செய்யும் ஜனநாயகத்தை எப்படி உறுதி செய்வது ?” என்பதையும் சிந்திதுச் செயல்பட வேண்டும் என்றும் ஐன்ஸ்டைன் வலியுறுத்துகிறார். இந்த எச்சரிக்கை சரிதான் என்பதை வரலாறு நமக்குக் காட்டியுள்ளது.

அடுத்து – மகத்தான புரட்சியாளர் சே குவேரா எழுதியுள்ள ‘கியூபா : தனிச் சிறப்பு வாய்ந்ததா?’ என்ற கட்டுரை. கியூபா புரட்சி தனித்துவமானது; எனவே அமெரிக்கக் கண்டத்தின் மற்ற நாடுகளின் வரலாற்றுப் பாதை வேறு மாதிரி இருக்கும் என்று கூறப்பட்டது. இது முழு உண்மை அல்ல என்று சே குவேரா இந்தக் கட்டுரையில் விளக்குகிறார். மற்ற நாடுகளில் இல்லாத, கியூபாவுக்கு மட்டுமே உரிய, தனித்துவமான அம்சங்கள் என்னென்ன என்பதை அவர் முதலில் விளக்குகிறார். பிறகு கியூபாவிலும் மற்ற நாடுகளிலும் உள்ள பொதுவான அம்சங்கள் என்னென்ன என்பதை விளக்குகிறார்.  எனவே மற்ற நாடுகளிலும் புரட்சி சாத்தியமே என்று அவர் முடிவுக்கு வருகிறார். ஆனால் மற்ற நாடுகளில் புரட்சி கியூபாவை விடக் கடினமாக இருக்கும் என்று எச்சரிக்கவும் அவர் தவறவில்லை.

“கியூபாவை வைத்து ஏகாதிபத்தியம் பாடம் பயின்றுவிட்டது இனிமேலும் மற்ற நாடுகளில் இது போலத் திடீரெனெப் புரட்சி செய்து அதை விரட்ட முடியாது. எனவே வரும் காலங்களில் புரட்சிப் படைகளுக்கு முன் பெரிய போர்கள் காத்திருக்கின்றன என்பதே இதன் பொருள். இது மிக முக்கியமானது. ஏனெனில் கியூப விடுதலைப் போர் இரண்டாண்டுத் தொடர் போராட்டமாக இருந்தது என்றால், மற்ற நாடுகளில் போராட்டம் அதைவிடக் கடுமையாகத்தான் இருக்கும்” என்று அவர் கூறுகிறார்.

மேலும் தேர்தல் முறையில் மட்டுமே மூழ்கிவிடக் கூடாது என்றும் அவர் அறிவுறுத்துகிறார்.

“ஒரு மக்கள் இயக்கம் வாக்குகள் மூலம் அதிகாரத்துக்கு வந்து, அதன் காரணமாகப் பெரும் சமூக மாற்றங்களைச் செய்ய முனைந்தால், உடனடியாக அதற்கு நாட்டின் எதிர்ப் புரட்சி சக்திகளால் பிரச்சனை வராமல் இருக்குமா ? ஒரு திடீர் ராணுவப் புரட்சி மூலம், கத்தியின்றி, ரத்தமின்றி, அரசங்கம் தூக்கி எறியப்பட்டு, பழைய விளையாட்டு மீண்டும் புதுப்பிக்கப்படும். இதற்கு முடிவே இல்லை. அரசைக் காக்க மக்கள் படை திரண்டெழுந்து இந்த ராணுவத்தைத் தோற்கடிக்கவும் செய்யலாம். ஆனாலும் ராணுவம் நல்ல சமூக மாற்றங்களை முழுமனதோடு ஏற்றுக்கொண்டு, அடிபணிவதற்கு வாய்ப்புகள் இல்லை என்றே தெரிகிறது” என்று அவர் தெளிவுபடுத்துகிறார்.

அவர் சொன்னது போலவே சிலி நாட்டில் நடந்தது. தேர்தலின் மூலம் ஆட்சி அமைத்த சோஷலிஸ்ட் தலைவர் அலெண்டே வை 1973 ம் ஆண்டில் ராணுவம் சுட்டுக் கொன்று ஆட்சியைக் கைப்பற்றியது.

அடுத்து-மாறுபட்ட கருத்துள்ள முற்போக்காளர்களுக்கும் ‘மன்த்லி ரிவ்யூ’ இடம் தருகிறது என்ற வகையில் ஒரு கட்டுரை. கார்னல் வெஸ்ட் என்பவர் முற்போக்குச் சிந்தனையாளர்; செயல்பாட்டாளார்.  “மார்க்சியச் சித்தாந்தமானது, இப்போதுள்ள சுதந்திரப் போராளிகளுக்குத் தவிர்க்க முடியாத ஒர் அறிவாயுதம் என்பதன் முக்கியத்துவம் பற்றி அக்கறை கொண்டவர்கள் ‘மன்த்லி ரிவ்யூ’ வின் ஆசிரியர்கள். நானும் இந்த அக்கறையைப் பகிர்ந்துகொள்பவன். நான் ஒரு மார்க்சியவாதி அல்லாத சோஷலிஸ்ட். நான் ஒரு கிறிஸ்துவன். மார்க்சிஸ்டுகளுக்கும்.. கிறிஸ்துவர்களுக்கும்.. சமரசம் செய்ய முடியாத சில குறிப்பான வேறுபாடுகள் உள்ளன என்பதை நான் அங்கீகரிக்கிறேன்” என்று அவர் தன்னைப் பற்றி வேறு ஒரு கட்டுரையில் கூறியுள்ளார்.

‘மதமும் இடதுசாரிகளும்’ என்ற தலைப்பில் அவரது கட்டுரையும் இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. அரசியல், பொருளாதாரம் ஆகியவற்றோடு மட்டும் மார்க்சிஸ்டுகள் தங்களது கவனத்தை சுருக்கிக் கொள்ளக் கூடாது; கலாச்சாரப் பிரச்சனைகளிலும் கவனம் செலுத்த வேண்டும் என்ற பொருளில் அவர் கூறுவதை ஏற்க முடியும்.

ஆனால் “மதம் பற்றிய மார்க்சிய விமர்சனம், மதத்தைத் தத்துவார்த்தரீதியாக நிராகரிப்பது அல்ல. மாறாக அது மதப் பழக்கங்களின் மீதான சமூக ஆய்வும், வரலாற்றுரீதியான தீர்ப்பும் ஆகும்” என்று அவர் கூறுவதை என்னால் ஏற்க இயலாது.

அதேபோல “மூன்றாம் உலகின் (போலந்து போன்ற இரண்டாம் உலகிலும்) மத மறுமலர்ச்சி, இடதுசாரி இயக்கத்தைக் கட்ட உதவும் என்பது தெளிவு” என்றும் அவர் கூறுகிறார்.

இந்தக் கட்டுரை 1984 ம் ஆண்டில் எழுதப்பட்டது. அதன் பிறகுதான் சோவியத் நாடு உள்ளிட்ட பெரும்பாலான சோஷலிச நாடுகளின் வீழ்ச்சி ஏற்பட்டது. “மத மறுமலர்ச்சி” ஏற்பட்ட போலந்து நாட்டில்தான் சோஷலிசம் முதலில் வீழ்த்தப்பட்டது. அதேபோல இந்தியாவிலும் “மத மறுமலர்ச்சி” எவ்வளவு கொடுமைகளைச் செய்துவருகிறது என்பதையும் நாம் பார்த்து வருகிறோம்.

இவ்வாறு சர்ச்சைக்குரிய பல கருத்துகள் இந்தக் கட்டுரையில் உள்ளன. அடுத்து – ஒரு மிகச் சிறப்பான பொருளாதாரக் கட்டுரையைப் பார்ப்போம். ‘மன்த்லி ரிவ்யூ’ இதழின் நிறுவன ஆசிரியர் பால் எம்.ஸ்வீஸி எழுதிய ‘நிதி மூலதனத்தின் வெற்றி’ என்பது இந்தக் கட்டுரை. உற்பத்தியில் ஈடுபடாத நிதி மூலதனத்தின் ஆதிக்கம் என்பது சமீப காலத்தில் ஏற்பட்ட புதிய நிகழ்ச்சி. இது ஏன், எவ்வாறு ஏற்பட்டது என்பதை அவர் தெள்ளத் தெளிவாக விளக்குகிறார். “நாமறிந்த முதலாளித்துவத்தின் வரலாறு, 18 ம் நூற்றாண்டின் பின் பாதியில் ஏற்பட்ட தொழில் புரட்சியிலிருந்து ஆரம்பிக்கிறது” என்று அவர் தொடங்குகிறார்.  தொழில் முன்னேற்றம், உள்ளூர் அளவிலேயே சந்தை, பிறகு போக்குவரத்து வளர்ச்சி, தொழில் விரிவாக்கம், கடும் போட்டி, பலவீனமான நிறுவனங்களின் சரிவு என்று அவர் விளக்கிச் செல்கிறார். பிறகு 19 ம் நூற்றாண்டின் கடைசியில் முக்கியத் திருப்பம் ஏற்பட்டது; நிறுவனங்கள் இணைந்து பகாசுர நிறுவனங்களானது; உள்நாட்டுச் சந்தையைத் தாண்டி, உலக அளவில் நாடுகளைக் கைப்பற்றிக் காலனி நாடுகளாக மாற்றி, அதன் மூலம் ஏகாதிபத்திய முதலாளித்துவமாக வளர்ந்தது என்று அவர் தொடர்கிறார். அதுவரை தொழில் நிறுவனங்களுக்கும், அரசுக்கும் வட்டிக்குக் கடன் கொடுப்பதை மட்டும் நிதி நிறுவனங்கள் செய்து வந்தன; இதில் கிடைத்த லாபத்தால் தொழில் நிறுவனங்களையும் அவை கைப்பற்றத் தொடங்கின; ஆதிக்கம் செலுத்தும் கூட்டாளி ஆயின; 1930களில் பெரு மந்தம் ஏற்பட்டது; இரண்டாம் உலகப் போரை ஏற்படுத்தியும், யுத்தத் தேவைகளுக்காக உற்பத்தியை அதிகரித்தும் இந்தப் பெரு மந்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது; மீண்டும் 1974-75 ல் மோசமான மந்த நிலை. “அவர்களுக்கு லாபத்தைத் தந்த அதே அமைப்புதான் கீழே உள்ள மக்களின் வருமானத்தைப் பெருமளவு சுருக்கிவிட்டது. எனவே பெருவாரியான மக்கள் நுகரும் வண்ணம் உற்பத்தியை விரிவு செய்வதில் எந்த லாபமும் இல்லை. பிறகு லாபத்தை வைத்து என்னதான் செய்வது?” இப்போது யோசித்துப் பார்த்தால், விடை தெளிவாகத் தெரிகிறது. அவர்கள் உண்மையான உற்பத்தி முறைகளில் முதலீடு செய்யாமல் நிதி மூலதனமாகச் செய்யவேண்டும். அதைத்தான் 1970 களில் மந்த நிலை ஏற்பட்ட போது செய்தார்கள். மறுபுறம் மாற்றத்திற்கான சூழல் கனிந்திருந்தது. 1950,60 களின் வளர்ச்சியால் தூண்டப்பட்ட நிதி நடவடிக்கைகள் இப்போது தேங்கத் துவங்கின. நிதி முதலீட்டாளர்கள் புதிய வர்த்தகங்களைத் தேடிக் கொண்டிருந்தார்கள். உண்மைப் பொருளாதாரத் திலிருந்து இடம் பெயரும் மூலதனத்தை நிதித்துறை மகிழ்ச்சியாக வரவேற்றது. இப்படி ஆரம்பித்தது, இருபதாண்டுகளில் நிதி மூலதனத்தின் வெற்றியாக உருவெடுத்தது.” என்று அழகாக விளக்குகிறார் ஸ்வீஸி. அவர் மேலும் கூறுகிறார் : “என்ன செய்யலாம்? எனது ஆய்வு சரியென்றால், உலகப் பொருளாதாரமோ அல்லது அதன் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்ட அரசுகளோ வேலை, பாதுகாப்பு, வாழ்வு என மக்களுக்குத் தேவையான விஷயங்கள் எதையும் தர முடியாது. அமைப்பை எதிர்த்துப் போராடுவதைத் தவிர வேறு வழியே இல்லை என்பது தெளிவு. இது என்றேனும் நடக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்று நம்பிக்கையுடன் அவர் முடிக்கிறார்.

அடுத்து – பெண் விடுதலை தொடர்பான ஓர் அருமையான கட்டுரை. ‘பெண் விடுதலையின் அரசியல் பொருளாதாரம்’ என்ற தலைப்பில் மார்கரெட் பென்ஸ்டன், திலக் டி.குப்தா ஆகியோர் இணைந்து எழுதியது. பெண் விடுதலைப் பிரச்சனையின் மையப் புள்ளியை இந்தக் கட்டுரை சரியாக விளக்குகிறது. உழைப்பாளி என்பதற்கு வரையறை என்ன? “உற்பத்தி முறைகள் தங்களிடம் இல்லாததுதான் உழைப்பாளிகளின் நிலை. உற்பத்திச் சமூகத்தில் உழைப்பாளிகள் தங்களது உழைப்புச் சக்தியை விற்க நேரிடுகிறது. இதற்குப் பதிலாக அவர் கூலி பெறுகிறார். அது அவர் மற்றும் அவரது குடும்பம் வாழ்வதற்கான பொருட்களை நுகர உதவுகிறது. இதுதான் உழைப்பாளி பற்றிய வரையறை.” இந்த வகையில் பெண்கள் என்பதற்கான வரையறை என்ன? “வீடு, குடும்பம் தொடர்பான எளிய பயன் மதிப்பு உள்ள உற்பத்தி நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான குழுவே பெண்கள் என நாம் ஓரளவு வரையறுக்கலாம்” என்று இந்தக் கட்டுரையாளர்கள் சரியாகவே கூறுகிறார்கள்.  கவனியுங்கள். பயன் மதிப்பு உண்டு ! ஆனால் விற்பனை மதிப்பு இல்லை ! பண மதிப்பு இல்லை!

“பெண்களின் கீழான நிலைக்கு ஆதார காரணத்தை நாம் இந்த வரையறை மூலம் அறியலாம். பணம், மதிப்பை முடிவு செய்யும் ஒரு சமூகத்தில், பெண்கள் பணப் பொருளாதாரத்திற்கு வெளியே உழைக்கும் ஒரு கூட்டமாக இருக்கிறார்கள். அவர்களது உழைப்பிற்குப் பண மதிப்பு இல்லை. எனவே அதற்கு மதிப்புக் கிடையாது. ஆகவே அது உண்மையான உழைப்பே இல்லை. இந்த உபயோகமற்ற வேலையைச் செய்பவர்களை, பணத்திற்காக உழைக்கும் ஆண்களுக்கு நிகராக மதிக்க வேண்டும் என எதிர்பார்க்க முடியாது.” என்று அவர்கள் தெளிவாக விளக்குகிறார்கள். எனவே என்ன செய்ய வேண்டும்?

எங்கெல்ஸ் சொல்வதுதான். “பெண் விடுதலைக்கு முதல்படி, பெண்கள் சமூகம் முழுவதையும் தொழிலுக்கு மறு அறிமுகம் செய்வதே. இது நவீனப் பெருந்தொழில்களால் மட்டும் சாத்தியப்படவில்லை. தனிப்பட்ட வீட்டு வேலைகளையும் பொதுத் தொழிலாக மாற்ற முயற்சிக்க வேண்டும்” என்று எங்கெல்ஸ் கூறியதைக் கட்டுரையாளர்கள் மேற்கோள் காட்டுகிறார்கள். தொடர்ந்து “வீட்டு வேலையைப் பொது உற்பத்தியாக மாற்றுதல் என்றால், அனாதை ஆசிரமம் போல, ராணுவ முகாம் போல அனைவரும் ஓரிடத்தில் வாழக் கட்டாயப்படுத்துவது போல ஒன்றை நினைத்துக் கொள்கிறார்கள். தனிப்பட்ட வீட்டு வேலையை முதலாளித்துவ அமைப்பில் ஒரு தொழிலாக மாற்றுவதும், சோஷலிச சமூகத்தில் மாற்றுவதும் முற்றிலும் மாறுபட்ட விஷயம். சோஷலிச சமூகத்தில் உற்பத்தி சக்திகள் மனித நலனுக்காகப் பயன்படும். தனியார் லாபத்துக்காக அல்ல. இதன் விளைவு விடுதலை.” அதுவரை பெண்கள் காத்திருக்க வேண்டுமா?

“காத்திருக்க வேண்டும் என்பது இதன் பொருள் அல்ல. பெண்களின் நிலைக்கு ஒரு பொருளியல் அடிப்படை உள்ளது. அவர்கள் சுரண்டப்படுகிறார்கள்.  “தங்களது பங்கைக் கேள்வி கேட்கும் பெண்கள் கொடுக்கும் நெருக்கடி, இந்தச் சுரண்டலின் வேகத்தைக் குறைக்கும். மேலும் உழைக்கும் படையிலிருந்து பெண்களை ஒதுக்கும் முயற்சிகளைக் குறைக்கும்” என்று அவர்கள் கூறுகிறார்கள்.

இவை அனைத்தும் அமைப்பு மாற்றத்தை விரைவுபடுத்த உதவும்; “நமது வேலை இப்படிப்பட்ட புரட்சிகர மாற்றங்கள் பெண்கள் மீதான அடக்குமுறையை உண்மையிலேயே ஒழிப்பதை உறுதி செய்வதுதான்” என்று அவர்கள் கூறி முடிக்கிறார்கள். எனினும் பொருளாதார மாற்றத்தினால் மட்டுமே பெண் விடுதலை வந்துவிடாது; உளவியல் மாற்றங்களும் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று அவர்கள் முதலிலேயே எச்சரிக்கை செய்துவிடுகிறார்கள்.

இவ்வாறு ‘நிகழ்ந்தபோதே எழுதப்பட்ட வரலாறு’ என்ற இந்தப் புத்தகத்தில் பல துறைக் கட்டுரைகள் உள்ளன. மொத்தம் உள்ள 24 கட்டுரைகளில் அரசியல் கட்டுரைகள் 13, சமூகம் – பண்பாடு தொடர்பான கட்டுரைகள் 7, பொருளாதாரக் கட்டுரைகள் 3.அறிவியல் தொடர்பான ஒரு கட்டுரையும் உள்ளது.

இத்தனை வகைப்பட்ட, ஆழமான இந்தக் கட்டுரைகள் அனைத்தையும் தமிழில் மொழிபெயர்ப்பது சாதாரணப் பணி அல்ல. சவாலான பணி. இந்தப் பணியை மிகப் பெரும்பாலும் சிறப்பாகவே நிறைவேற்றியிருக்கிறார் தோழர் ச.சுப்பாராவ்.

அழகான, பொருத்தமான அட்டை வடிவமைப்புடனும், தரமான தயாரிப்புடனும் இந்தப் புத்தகத்தைப் பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது. (எழுத்துப் பிழைகள் ஆங்காங்கே படுத்துகின்றன ! தவிர்த்திருக்கலாம்.)

மொத்தத்தில் – இந்தப் புத்தகம், வரலாற்றைச் சரியாகப் புரிந்து கொள்ள உதவுகிறது; இப்போது நடக்கும் நிகழ்ச்சிகளில் இருந்து எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று ஊகிக்கும் திறன் பெற உதவுகிறது; வரலாற்றை மாற்றவும் தனது சிறப்பான பங்கை அளிக்கிறது

Related posts