You are here

துன்பக்கேணியில் தமிழகம்

ப.கு. ராஜன்

சாதாரணமாக சூழல், சுற்றுச்சுழல் குறித்த நூல்கள் படிப்பதற்கான ஆர்வத்தை தூண்டக்கூடாது என்ற கவனத்துடன் எழுதப்பட்டது போல் இருக்கும். மிகவும் மோசமான விளைவுகளை இங்கு, இப்போதே உருவாக்கும் பிரச்சனை குறித்து எழுதினால் கூட எங்கோ வேற்றுக் கோளில் வாழும் உயர்களுக்கு ஏழு யுகங்களுக்குப் பிறகு வரப்போவது எனும் நினைப்பை உருவாக்குவதாக ஒலிக்கும். இந்த வழக்கங்களையும் குறைபாடுகளையும் உடைக்கின்றது பொன். தனசேகரன் எழுதிய இந்தச் சிறுநூல்.

ஆர்டிக்கில் ஐஸ் உருகுவது, அண்டார்ட்டிகாவில் பென்குயின் பறவைக்கு வேர்ப்பது போன்ற தூரத்து விளைவுகளை புறமொதுக்கி தமிழகத்தின் பிரச்சனைகளை முன்னிறுத்துகின்றது. இப்படிக் கூறுவதால் கிணற்றுத் தவளைப் பார்வை என நினைத்துவிட வேண்டாம். பூவுலகு முழுமையும் தழுவி மானுடம் முழுமையையும் அச்சுறுத்தும் பருவநிலை மாற்றம் எனும் சுட்டெரிக்கும் இருள் குறித்த நூல்தான். அந்த இருண்ட தீயின் நாக்குகள் தீண்டி நச்சு நீலம் ஏறும் தமிழகத்தின் பகுதிகளை நம் கண் முன் கொணர்ந்து நிறுத்துகின்றது. அந்தவகையில் ஒரு முன்னுதாரணம் இல்லாத நூல்.

முழுநூலாக ஒற்றை அமர்வில் எழுதப்படாமல், 4 ஆண்டுகாலப் பரப்பில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு என்பதைக் காணும்போது பொன். தனசேகரனின் தளராத கடப்பாட்டு உணர்வு தெரிகின்றது.

நூலிற்குள் செல்வோம். சூழலியல் சீர்கேடுகளால் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன் மெசபடோமியாவில் சுமேரிய நாகரிகம் அழிந்த செய்தியுடன் முன்னுரை துவங்குகின்றது. இந்த வரலாற்று உணர்வே நம்பிக்கை அளிப்பதாக இருக்கின்றது. மேலை அறிவியல் கீழை ஞானம் என்ற பம்மாத்துகளுக்குள் சிக்காமல் எதார்த்தத்தை, அறிவியல் மற்றும் வரலாற்று ஓர்மையுடன் கூறுவது நூல் முழுவதும் தொடர்கின்றது.

புவி வெப்பமயமாதல் இந்த நூற்றாண்டில் மனித குலம் எதிர்கொள்ள வேண்டிய முக்கியப் பிரச்சனைகளில் ஒன்று என முன்னுரையில் கூறுகின்ற போது பிரச்சனையின் தீவிரத்தை சற்றே குறைத்துக் கூறுகின்றாரோ என சந்தேகம் வருகின்றது. ஆனால் பின்னர் (பக்கம் 42) இந்த நூற்றாண்டில் மனித குலம் எதிர்கொள்ள வேண்டிய முக்கிய சவாலாக இருப்பது பருவநிலை மாற்றம் எனக்கூறுவது பெருமளவு நியாயத்தை அளிக்கின்றது. இன்று மானுடம் எதிர் நோக்கும் சிக்கல்களிலெல்லாம் தலையாய சிக்கல் புவிவெப்பமயமாதல்; அத்தோடு ஒப்பிடும்போது ஏனைய சிக்கல்கள் இரண்டாம்பட்சம் என்பதே நிதர்சனம். அது போதுமான அளவு அழுத்தத்துடன் நூலின் முழுமையால் நமது செவிகளில் அறையும் விதத்தில் உரைக்கப்படுகின்றது.

புவிவெப்பமாதல் காரணமாக கடல்நீர் மட்டம் உயர்தல், பருவமழை பிறழ்வு நிகழ்வுகள் முதலியவை மிகவும் எதார்த்தமான தமிழகச் சான்றுகள் மூலம் விளக்கப்படுகின்றன. கடல்நீர் மட்டம் உயர்வதால் 1000 கி.மீக்கும் அதிகமான கடற்கரை கொண்ட தமிழகத்தில் நிலப்பரப்பில் ஏற்பட்டுவரும் மாற்றங்களும், இனி ஏற்படக் கூடிய மாற்றங்களும் விளக்கப்படுகின்றன. தமிழகத்தின் பல இடங்கள் தேன் சேகரிப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மூலம் பருவநிலை மாற்றங்கள் விளக்கப்படுவது அருமை. எளிதில் விளக்கி நிறுவ முடியாத நுட்பமான எதார்த்தத்தை எம்மைப் போன்ற பெரு நகரத்து கார்ப்பரேட்  எலிகளும் உணரும் வண்ணம் விளக்கியுள்ளார். வெப்பநிலை உயர்வு, பருவ மழை அளவுக் குறைவு என்பதெல்லாம் பொத்தாம் பொதுவாக இல்லாமல் தரவுகளுடன் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. நாம் மனம் பதைக்க வாசிக்கவேண்டியுள்ளது.

கார்பாலை, மொட்டக்கூர், வான்சம்பா, சம்பாமோசனம், சிவப்பு குருவிக்கார், சூரன் குறுவை, குழியடிச்சான், குடைவாழை, பூம்பாளை, கவுனி, குடைஞ்சான், அறுபதாம் குறுவை, கார், நலமுடுங்கி என பலவகையான பாரம்பரிய நெல்வளங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றின் பண்புகளும், எதிர்காலத்தில் எந்தவகையான வானியல், மண்ணியல், நிலவியல் சூழல்களில் கை கொடுக்கும் என்பது மிக நுணுக்கமாக விளக்கப்பட்டுள்ளது. மகசூல் குறைவு, பயிர்கால நீட்டிப்பு, விலை கிடைக்காமை, அரசுக் கொள்முதல் இன்மை போன்ற பிரச்சனைகள் இருப்பதும் விளக்கப்பட்டுள்ளது. அதேபோல அலையாத்திக் காடுகள், கோயில் காடுகள் போன்றவற்றின் சூழலியல் முக்கியத்துவம் பயன்பாடுகள் பொருளாதார ரீதியான அர்த்தங்களோடு விளக்கப்படுவது சிறப்பு.

பருவநிலை மாற்றங்களையும் அதிகரிக்கும் கொசு உற்பத்தி அதனால் பெருகும் மலேரியா, சிக்கன்குனியா நோய்கள் என்பதெல்லாம் தமிழகத்து உதாரணங்களுடன் விளக்கியுள்ளது அநேகமாக முதல்முறை எனலாம்.

வரலாற்று ரீதியாக நாம் இந்த அபாயகரமான புள்ளிக்கு வந்தடைந்த பயணப்பாதை அதன் மைல்கற்கள் ஆகியவையும் சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளன. அதோடு இந்த பூவுலகம் தழுவிய பெரும்சிக்கலை விளக்கவும், உணர வைக்கவும் உலகம் முழுவதும் நடந்துள்ள முயற்சிகள், இந்த நிலை உருவாகப் பெரிதும் காரணமாக இருந்த அமெரிக்க ஐரோப்பிய ஏகாதிபத்தியங்கள், பேரழிவைத் தடுத்து நிறுத்த எடுக்கப்படும் சர்வதேச முயற்சிகள், சர்வதேச அரங்கில் எந்தவொரு நியாயமான நடவடிக்கையையும் எடுக்கவிடாது தடுக்கும் அமெரிக்காவின் காட்டுத் தர்பார் ஆகியவையும் விளக்கப்பட்டுள்ளன. குறைபாடுகள் இல்லாது இல்லை. சில இடங்களில் ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்; நிபுணர்கள் கருதுகின்றார்கள் என புனைவெழுத்தாளர்களின் கட்டுரை போல சுட்டியோ, தரவுக் குறிப்போ இல்லாது விவரணை ஓடுகின்றது   ஊடகத்தின் வரம்பு காரணமாக கட்டுரை பிரசுரம் ஆகியபோது அப்படி வந்திருக்கலாம்.

சில இடங்களில் எழுதவந்த செய்திக்கு அளிக்கும் முக்கியத்துவம் எதார்த்தத்தின் பன்முகத் தன்மையின் பிற அம்சங்களை விட்டு விடுகின்றது. சிக்கலை மிகு  எளிமைப்படுத்திவிடும் சறுக்கல்களாகவும் ஆகின்றது.

எடுத்துக்காட்டாக ‘குறையும் குதிப்பு மீன்’. இந்த மீன் குறைவுக்கு உயரும் வெப்பநிலை மட்டுமே காரணம் என்பது போன்ற தொனி உள்ளது. வெப்பநிலை ஒன்று மட்டுமே காரணி என்பதற்கு போதுமான சான்று இல்லை. ஆற்றுநீர் கடலில் கலப்பது குறைந்து வருவது; தடைசெய்யப்பட்ட வளங்களின் பயன்பாடு, குஞ்சு பொறிக்கும் காலத்தில் மீன்பிடிப்பு என பல காரணங்கள் கட்டுரையிலேயே இருக்கின்றன. ஒரு புறம் மழைநீர், ஆற்றுநீர் ‘வீணாக’ கடலில் கலப்பதை தடுக்கக் கோறும் குரல்களும் உள்ளன. அந்தக் குரல்களையும் அசட்டை செய்து விட முடியாது.

அதைப்போலவே உரமில்லாமல், நீர் இறைக்க மின்சாரம் அதிகம் செலவிடாமல், நாற்று நடாமல் பயிர் செய்தால் விளைச்சல் காணும் வெள்ளாண்மை விவசாயிக்கு ஏற்றது. ஆனால் பெருகிவரும் மக்கட்தொகைக்கு உணவளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளதல்லவா? விவசாயப் பரப்பை அதிகரிக்காமல் மகசூல் அதிகரிப்பது எப்படி? அதுவும் உரமின்றி பூச்சிமருந்தின்றி மின்சாரம் இன்றி, அதிகம் நீர் இன்றி…?

இவையெல்லாம் நூலின் விளக்கங்கள், விவரணைகளுக்குள் உள்ள சில வினாக்கள். நூலில் அதிகம் தொடப்படாத  ஆனால் கட்டாயம் தொட்டிருக்க வேண்டிய அம்சம் ஒன்று உண்டு. அது புவி வெப்பமாதலுக்கான காரணங்கள். படிம எரிபொருள் பயன்பாடு. நிலக்கரி பயன்படுத்தும் அனல்மின் நிலையங்கள், எண்ணெய் எரிவாயு வளங்களை உறிஞ்சிக்குடிக்கும் போக்குவரத்துத் துறை. தொட்டியில் இருந்து நிரம்பி வழியும் நீரை நிறுத்த வேண்டுமென்றால் தொட்டிக்கு நீர்வரும் குழாயை அடைப்பது குறித்துப் பேசி ஆக வேண்டுமல்லவா?

இதையெல்லாம் தாண்டி குறிப்பிடப்பட வேண்டிய குறைபாடு அரசியல் புரிதல் அல்லது புரிதலின்மை. ஜார்ஜ் புஷ்ஷை பேட்டை ரவுடிபோல சித்தரிப்பதில் தவறில்லை. அவர் அதுதான். வேறுமாதிரி கூறினால் அவர் கோபித்துக் கொள்வார். ஆனால் மேலும் மேலும் லாபம் மேலும் மேலும் மூலதனத் திரட்சி என்ற முடிவற்றதும் குருட்டுத்தனமானதுமான முதலாளித்துவப் பொருளாதாரம், உற்பத்தி முறை உள்ளவரை பெரிய அளவில் மாற்றம் சாத்தியமில்லை. அதனை மாற்றக்கூடிய அரசியல் சந்திகள் பலமடைவதும், பூவுலகு காப்பாற்றப்படுவதும் ஒருசேர நிகழ்வது சாத்தியம்.

ஆனால் அரசியலற்று சூழல், சுற்றுச்சூழல் பற்றிப் பேசவருபவர் எல்லாம் பொத்தாம் பொதுவாக பள்ளி, கல்லூரி பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டியாளர்கள் போல ‘ஏ மனிதா’ ‘ஓ சமூகமே’ திருந்து வகையான அறைகூவல்கள் விடுபவர்களாகவே இருக்கின்றனர்.

‘என் கழிப்பறை
எங்கிருந்து தொடங்குகிறது?
வாயிலிருந்து
மலக்குடல் வழியாக’

எனத் தன்னைத் தானே குற்றம் சாட்டுவது போல, சாமானிய மனிதர்களைக் குற்றம் சாட்டுவது உண்மையான காரணமான முதலாளித்துவத்தின் கண்மூடித் தனமான இயங்கியலை மறைப்பதாகும்.

‘நடைமுறையில்லாத கோட்பாடு மலட்டுத்தனமானது கோட்பாடு இல்லாத நடைமுறை கண்முடித்தனமானது’ அரசியலாக இருந்தாலும், சூழலியலாக இருந்தாலும் பொருந்தக் கூடியதே.

பொன். தனசேகரனின் அக்கறை, கரிசனம், ஆழ உழும் அவரது செயல்பாடு நமக்கு வெளிப்படையாகத் தெரிவதே. ஐ.பி.எல். சினிமா, பரபரப்பு கட்சி அரசியல், தனி நபர் வழிபாடு எல்லாம் நிரம்பி நொதிக்கும் வணிக ஊடகப் பரப்பில் பொன்.தனசேகரன் போன்றோரின் பணிகள் எதிர் நீச்சல்தான். சமூக நோக்கம் கொண்ட அவரைப் போன்றோரின் முயற்சிகளுக்கு இடமளிக்கும் ஆசிரியர்களுக்கும் பாராட்டுக்குரியவர்களே. போதாமைகள், குறைபாடுகள் என கருதுவதை எடுத்துக் கூறுவது சக பயணி எனும் உரிமையாலும் நோக்கம் நிறைவேற வேண்டும் எனும் கரிசனத்தாலும்தான். மிக எளிய சரளமான தமிழில் சிக்கலான அறிவியல், தொழில் நுட்ப விவரங்களையும் கூறும்மொழி கைவரப் பெற்றுள்ளார் பொன். தனசேகரன். தமிழகம் குறித்து அக்கறை கொண்டவர் அனைவரும் வாசிக்க வேண்டிய நூல். புதுமைப்பித்தனின் துன்பக்கேணி பத்தியை பொன்.தனசேகரன் பொருத்தமான இடத்தில் எடுத்தாண்டுள்ளார். அவரது நூல் தமிழகமே துன்பக்கேணியில் சறுக்கி விழுந்து கொண்டிருப்பதை விளக்குகின்றது.

Related posts