You are here

கீழத்தஞ்சையில் சமூகநீதிக்கான போராட்ட வரலாறு!

தொகுப்பு: வீ.பா. கணேசன்

தொழிலாளி வர்க்கத் தலைவராகப் பரவலாக அறியப்பட்ட போதிலும் சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்காகவும் குரல் எழுப்பி தன் வாழ்நாளையும் அடுத்த பல தலைமுறையினரின் வாழ்நாளையும் பயனுள்ளதாக மாற்றிய சமூகப் போராளியும் தலைசிறந்த கம்யூனிஸ்டுமான தோழர் வி.பி.சி.யின் 27வது நினைவுதினமான மே 8, 2014 மற்றொரு வகையில் குறிப்பிடத்தக்கதொரு நாளாகவும் அமைந்தது.

தோழர் ஜி.ராமகிருஷ்ணன் எழுதிய கீழத்தஞ்சை: விவசாயிகள் இயக்கமும் தலித் மக்கள் உரிமைகளும் நூலின் அறிமுகக் கூட்டம் விபிசி நினைவு தினத்தன்று சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வரவேற்புரை ஆற்றிய பாரதி புத்தகாலய நிர்வாகி க. நாகராஜன், ‘தமிழக வரலாற்றில் மாறுபட்ட புதிய அனுபவத்தையும், படிப்பினைகளையும் வழங்கிய கீழத்தஞ்சை மக்களின் போராட்டம் என்பது சாதிய ரீதியான நிலப்பிரபுத்துவத்தின் அடக்குமுறையை எதிர்த்து அனைத்துப்பிரிவு மக்களையும் இணைத்து நடத்தப்பட்ட போராட்டம் என்ற வகையில் முக்கியத்துவம் வாய்ந்ததுÓ என்று குறிப்பிட்டார். இந்திய புள்ளியியல் நிறுவனம் கல்கத்தாவில் நடத்திய கருத்தரங்கில் முன்வைக்கப்பட்ட இந்த ஆங்கிலக் கட்டுரை பின்னர் பேராசிரியர்கள் க்ஷி.ரி. ராமச்சந்திரன், மதுரா சுவாமிநாதன் ஆகியோர் தொகுப்பில் கிராமப்புறப் பொருளாதாரத்தில் தலித் குடும்பங்கள் என்ற நூலில் இணைக்கப்பட்டது என்று தெரிவித்த அவர், அதை இப்போது ச.சுப்பாராவின் மொழிபெயர்ப்பில் தமிழில் வெளியிடுவதில் பாரதி புத்தகாலயம் பெருமை கொள்கிறது என்றும் குறிப்பிட்டார்.

இந்த நூல் அறிமுகக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய அ.பாக்கியம் தனது தலைமை உரையில் “போராட்டக்களத்தில் உள்ள போராளிகளின் கைகளில் இந்நூலைக் கொண்டு செல்ல வேண்டியது நம் அனைவரின் கடமை ஆகும்” என்று குறிப்பிட்டதோடு தோழர் வி.பி.சி.யின் பன்முகத் திறனையும், நினைவு கூர்ந்தார். விவசாயிகளின் பிரச்சனையும் தலித் பிரச்சனையும் கிராமப்புறப் பொருளாதாரப் பிரச்சனையில் பின்னிப் பிணைந்த ஒன்று என்ற வகையில் களப்பணி ஆற்றும் அனைவரின் கைகளுக்கும் இந்த நூலைக் கொண்டு செல்ல வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

நூல் குறித்து மதிப்புரை ஆற்ற முதலில் வந்த த.மு.எ.க.ச. மாநிலத் தலைவர் ச. தமிழ்ச்செல்வன் தனது உரையில் தஞ்சை மாவட்டத்தை கம்யூனிஸ பூதம் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது என்று அறிவித்த அன்றைய முதல்வர் ராஜாஜியின் நிலப்பிரபுத்துவ ஆதரவுக் குரலை மறுதலிக்கும் வகையில் அமைந்ததுதான் கீழத் தஞ்சை போராட்ட நாயகன் பி.சீனிவாசராவ் எழுதிய ‘தஞ்சை ஜில்லாவில் நடப்பது என்ன?’ என்ற புத்தகம்Ó என்று குறிப்பிட்டார். மிகச் சிறிய புத்தகமாக அது இருந்தபோதிலும், அன்றைய ஊடகங்கள் அனைத்தும் திட்டமிட்டு மறைத்து வந்த கள நிலவரங்களை அம்பலப்படுத்திய நூல் அது ஆகும் என்றார் அவர். கிருஷ்ணம்மாள் போன்ற சர்வோதயத் தலைவர்கள் பூமிதானத்தின் மூலம் கீழத்தஞ்சையில் ஆண்டாண்டு காலமாக சந்தித்து வந்த சாணிப்பால், சாட்டையடி போன்ற சமூகக் கொடுமைகளை மறைக்க முயன்றனர். 90 சதவீத மக்கள் தலித்துகளாக உள்ள கீழத்தஞ்சையில் நடைபெற்ற போராட்டம் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டமும், நிலத்திற்கான போராட்டமும் பின்னிப்பிணைந்த ஒரு வரலாறாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இந்தப் போராட்டத்தில் கம்யூனிஸ்டுகளின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்கு முறைகளுக்கும், அவதூறுகளுக்கும் அளவேயில்லை. அவர்களின் தியாகங்கள் இன்னமும் முழுமையாகப் பதிவாகவில்லை என்ற நிலையில் 1940 முதல் 1990 வரையிலான வரலாற்றை எடுத்துக்கூறும் இந்நூல் வரவேற்கத்தக்க ஒன்று எனக் குறிப்பிட்ட தமிழ்ச்செல்வன் 1991க்குப் பிறகு அங்குள்ள நிலைமைகளும் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இவ்வகையில் கீழத்தஞ்சையின் வரலாற்றில் நீங்காத நினைவாய்த் திகழும் வெண்மணிக் கொடுஞ்செயல் பற்றிய ஆவணங்களாக பாரதி கிருஷ்ணகுமாரின் ராமய்யாவின் குடிசை என்ற ஆவணப்படமும், பிரளயனின் வெண்மணி பற்றிய நாடகம் திகழ்ந்த போதிலும் மேலும் பல முயற்சிகள் பல்வேறு தளங்களிலும் தொடரவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அடுத்து வாழ்த்துரை ஆற்றிய பேராசிரியர் தங்கராஜ் இந்நூலை தமிழக கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு என்றே சுருக்கமாகக் கூறிவிடலாம் என்றார். விடுதலைக்கு முன்பு நிலப்பிரபுக்களின் ஆதிக்கத்தின் கீழ் தலித்பிரிவினர் மட்டுமின்றி இதர பிரிவினரும் கொடுமைகளுக்கு, சுரண்டலுக்கு ஆளாயினர் என்று குறிப்பிட்ட அவர் சாணிப்பால்-சவுக்கடி ஆகிய தண்டனைகளை ஒழிக்கும் ஒப்பந்தத்தில் பண்ணை அடிமைகளின் சார்பில் கையெழுத்துப் போட்டதற்காகவே பொய்வழக்குப் போடப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட களப்பால் குப்பு விஷம் வைத்துக் கொல்லப்பட்டதையும் பேராசிரியர் நினைவு கூர்ந்தார். விரிவான போராட்டத்திற்குப் பிறகு 1952 இல் பண்ணையாட்கள் பாதுகாப்புச் சட்டம் உருவானபோதிலும் இந்த இயக்கத்தை வேரறுக்க நிலப்பிரபுத்துவ சக்திகள் பல்வேறு வேடங்களைப் போட்டன என்றும் நெல் உற்பத்தியாளர்கள் சங்கம் போன்றவை அத்தகைய வேடங்களில் ஒன்றே எனவும் அவர் சுட்டிக்காட்டினார். வெண்மணி தீவைப்பு சம்பவத்தில் முன்னணிப் பங்கு வகித்த கோபாலகிருஷ்ண நாயுடுவின் கம்யூனிஸ்ட் எதிர்ப்பு நடவடிக்கைகளையும் அவர் நினைவு கூர்ந்தார்.

தமிழக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாற்று நாயகர்களில் ஒருவரான தோழர் ஆர். நல்லகண்ணு தனது சிறப்புரையில் 1940 முதல் 1990 வரையில் கீழத்தஞ்சையில் ஏற்பட்ட பல மாறுதல்களைப் பற்றிய வரலாறு இந்த ஆய்வுக் கட்டுரையில் தரப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். நிலப்பிரபுத்துவத்தின் கோட்டை-கொத்தளங்களை உடைத்து நொறுக்கிய கருத்துப் போராட்டத்தின் வரலாறாக இது திகழ்கிறது என்றும் அவர் கூறினார். தஞ்சை ஜில்லாவில் நடப்பது என்ன? என்ற சீனிவாசராவின் நூல் அங்கு நிலவிய கொடுமையான வாழ்க்கையை சித்தரித்தது. இந்தப் பின்னணியில் அடுத்த கட்டத்திற்கு எப்படிப் போக வேண்டும் என்பதை நடுத்தர மக்களிடையே எடுத்துச் செல்லும் நூலாக இது அமைந்துள்ளது. சோழநாடு சோறுடைத்து என்று பெயர்பெற்ற தஞ்சை மண்ணில் கண்ணுக்கு எட்டியவரையில் எங்கும் பசுமை என்றால் அங்கிருந்தவர்களோ நலிந்த, மெலிந்த மனிதர்களாக இருந்தது எப்படி என்ற கேள்வியை ஃபோர்ட் ஃபவுண்டேஷனுக்காக ஆய்வு செய்தவர்கள் கேள்வி எழுப்பினார்கள். கீழத்தஞ்சை மக்களின் போராட்ட வரலாறு என்பது வெறும் கூலிக்காக மட்டுமே நடத்தப்பட்ட ஒன்றல்ல; அது சமவேலைக்கு சமஊதியம், வாழ்க்கை முறைகளை மாற்றி அமைப்பது ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்த போராட்டமும் ஆகும். நமது இந்த இயக்க வரலாறு அனைத்து வகையிலும் பதிவு செய்யப்பட வேண்டும். ரங்கநாதன் – கிருஷ்ணம்மாள் போன்ற பூமிதான இயக்கத் தலைவர்களின் சமரச முயற்சிகளையும் மீறி நிலத்திற்காக நடத்தப்பட்ட போராட்டம் நில உச்சவரம்பு சட்டத்தைக் கொண்டு வந்தது. எனினும் வலிவலம் தேசிகர் போன்றவர்கள் வீட்டில் மாட்டப்பட்டிருந்த கிருஷ்ணர் படத்திற்கு 100 ஏக்கர், மாட்டுக்கொட்டகையில் இருந்த கோமதி (பசு)க்கு 100 ஏக்கர் என அந்த உச்சவரம்பு சட்டத்தின் ஓட்டைகளை அம்பலப்படுத்தியது.

அதே போன்று இன்றும் கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள், வீட்டு மனைகள் ஆகியவற்றில் உள்ள ஓட்டைகளை அடைப்பதற்குப் போராடிவரும் போராளிகளுக்கு ஒரு வழிகாட்டியாகவும் இந்த நூல் விளங்குகிறது. நிலப்பிரபுத்துவக் கொடுமைகளுக்கு எதிரான, சமூகக் கொடுமைகளுக்கு எதிரான போராட்டத்தில் கீழத்தஞ்சை பயிற்சிக் களமாக இருந்தது என்று குறிப்பிடுவதில் தவறேதும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இறுதியில் ஏற்புரை வழங்கிய நூலாசிரியர் ஜி.ராமகிருஷ்ணன் எந்தவொரு வரலாற்றிலும் ஆளும்வர்க்கங்கள் தொடர்பான ஆவணங்கள் ஏராளமாகக் கிடைக்கும். அவற்றை எதிர்த்த சக்திகள் பற்றிய விவரங்களை மறைக்க ஏராளமான முயற்சிகள் வரலாறு நெடுகிலும் உண்டு. உதாரணமாக [லோகாயதா (பொருள் முதல்வாதம்) நூல் ஆசிரியர் தேவி ப்ரசாத் சட்டோபாத்யாயா] இந்தியாவின் வேதகாலத்திலேயே பொருள்முதல்வாதக் கருத்துகளை முன்வைத்த அறிஞர்களின் வாதங்களைக் கருத்து முதல்வாதிகளின் வாதங்களிலிருந்தே பிரித்தெடுத்து வழங்கினார். அவ்வாறே கம்யூனிஸ்ட் எதிர்ப்பு சக்திகள் இந்த வரலாற்றை மறைக்க எண்ணற்ற முயற்சிகளை செய்துள்ள நிலையில், இத்தனை அடக்குமுறைகளுக்குப் பிறகும் அடிமைப்பட்ட மக்களைத் தலைநிமிர்ந்து நடக்க வைத்த தோழர்கள் பற்றி இன்றைய தலைமுறையினருக்குத் தெரியப்படுத்த வேண்டியது கடமை என்ற கருத்தில்தான் இக்கட்டுரை உருவானது என்றும் அவர் குறிப்பிட்டார். சாதியக் கொடுமைகள் எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு என்ற வகையில் உருப்பெற்ற இந்த இயக்கம் எதிரிகள் யார்? நண்பர்கள் யார்? என்ற நடைமுறைத் தந்திரத்தைக் கடைப்பிடித்து அனைத்துப் பிரிவினரின் ஒற்றுமையை உருவாக்க முடிந்ததால்தான் கீழத்தஞ்சையில் வெற்றி சாத்தியமானது. 1991க்குப் பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பொருளாதாரக்கொள்கை இப்போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளதை ஆவணப்படுத்த வேண்டியது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறு மிகச்சிறந்த ஆய்வரங்கமாக இந்த நூலறிமுகக் கூட்டம் நடந்து முடிந்தது. கூட்ட முடிவில் பாரதி புத்தகாலயம் சார்பில் உத்திரகுமார் விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி கூறினார்.

Related posts