You are here

இடதுசாரி அரசியல் கலை!

என்.குணசேகரன்

வரலாற்றில் சோசலிச இயக்கங்களுக்கு வளர்ச்சியும் உண்டு; வீழ்ச்சியும் உண்டு.ஆனால், வீழ்ச்சிகள் என்றுமே நிரந்தரமாக இருந்ததில்லை. பாரீசில் முதலாவது தொழிலாளிவர்க்க அரசு 72 நாட்கள் இருந்தது. அது மிகவும் குரூரமாக முதலாளிகளால் நசுக்கப்பட்ட பிறகு, “சோசலிசம்”, “தொழிலாளி வர்க்க அரசு” என்பதெல்லாம் சாத்தியமில்லை என்ற கருத்து, பேயாட்டம் போட்டது.ஆனால் 30 ஆண்டுகளுக்குப் பிறகு “யுகப்புரட்சி”யாக ரஷியப் புரட்சி எழுந்து மனிதகுல வரலாற்றைப் புரட்டிப்போட்டது.

பிறகு அடுத்த ஒரு சரிவு; அது பாசிச உருவில் வந்தது.ஹிட்லரின் பிரவேசம் சோசலிச நம்பிக்கையை தகர்க்க எத்தனித்தது. சோசலிசம் பயனற்ற கனவாக மாறிடுமோ என்ற அச்சம் மார்க்சிய உலகில் குடிகொண்டது. ஆனால், பாசிசம் வீழ்ந்தது மட்டுமல்ல;சீனப் புரட்சிக்கு வழிவிட்டது.

ரஷியப் புரட்சியை அடுத்த 30ஆண்டுகளில் சீனப் புரட்சி, அடுத்த சில ஆண்டுகளில் கியூபப் புரட்சி என வேகமான மாறுதல்கள் எழுந்தன. இப்படியே இந்த வரலாற்றை அடுக்கிக் கொண்டே போகலாம்.எனவே “வரலாறு முடிவுக்கு வந்துவிட்டது. சோசலிசத்திற்கு எதிர்காலம் இல்லை” என்பதெல்லாம் சமூக மேலாதிக்க சக்திகள் பரப்பும் சுயநல கருத்துக்கள் தானே தவிர வரலாற்று உண்மைகள் அல்ல.

ஆனால், வீழ்ச்சிக் காலங்களில் இடதுசாரிகள் தங்களை சுய பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்வது வழக்கம். வீழ்ச்சிக்குப் பிறகு, மீண்டும் புயலாக எழ வேண்டுமானால் இது அவசியம். புதிய சிந்தனை புதிய முயற்சிகளுக்கான காலம்தான் அந்த இடைவெளிக்காலம். இலத்தீன் அமெரிக்க அனுபவம் இதற்கு சிறந்த உதாரணம். இந்த புதிய பரிசோதனைகளை வடிவமைத்துக் கொடுத்ததில் பல சிந்தனையாளர்கள் முன்னிற்கின்றனர். அதில் முக்கிய மார்க்சிய சிந்தனையாளர் மார்தா ஹர்நெக்கர்.

இந்தியப் பாராளுமன்றத் தேர்தலில் இடதுசாரிகளுக்கு ஏற்பட்ட தோல்வியை வைத்து பலர் இந்திய அரசியலில் இடதுசாரிகள் துடைத்து எறியப்பட்டதாக எழுதி வருகின்றனர்.

உண்மையில் இடதுசாரி என்பவர் யார்? மார்த்தா ஹர்நெக்கர் ஒரு வரையறையைத் தருகின்றார்.

“எனது பார்வையில் இடதுசாரி என்பவர் சமூகம் ஒன்றைக் கட்டியமைக்கும் கடமைக்காகவும் அதற்காகப் போராடுவதற்கும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்.அந்த சமூகம் இலாபத்தை உற்பத்தி செய்யும் முதலாளித்துவ தர்க்கத்தை எதிர்ப்பதாகவும், மனிதமேன்மை தர்க்கத்தைக் கொண்டு கட்டியமைப்பதாகவும் இருந்திடும்.”

தேர்தல் தோல்வியைக் காரணம் காட்டி இடதுசாரிகளின் வீழ்ச்சியைப் பேசுகிறவர்கள் தெரிந்தோ தெரியாமலோ, மனிதத்தன்மையற்ற ஒரு சமூகம் நீடிக்க வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்கிறவர்கள். அம்பானிகள், டாட்டாக்கள் போன்ற கார்பரேட்டுக்கள் இதனை ஏற்றுக்கொள்வார்கள். இன்றைய சமூக அமைப்பினால் வஞ்சிக்கப்பட்டு, ஏழ்மையிலும், வறுமையிலும் வாடுகிற சாமான்யர்கள் அதனை ஏற்றுக் கொள்ளலாமா? இடதுசாரிக் கொள்கையே அவர்களுக்கான விடிவுகாலம். ஆனால், அவர்களது வாக்குகளையும் பெற்றுக்கொண்டு, இடதுசாரிகள் வீழ்ச்சி பற்றி அவர்களிடமே பிரச்சாரம் செய்கின்றனர்.

இடதுசாரிகள் அமைய விழையும் அந்த சமூகம், இன்று சாத்தியமில்லை என்று தோன்றலாம்; ஆனால், நாளை அது சாத்தியமாகிட என்ன செய்ய வேண்டும்? “தற்போதுள்ள  சூழலில் புதைந்துள்ள வாய்ப்புக்களை துல்லியமாகக் கண்டறிய வேண்டும்; அது ஒரு கலை; அதுதான் இடதுசாரி அரசியல்” என்று மார்த்தா ஹர்நெக்கர் தனது ‘இடதுசாரிகளும் புதிய உலகமும்’ என்ற நூலில் அடையாளப்படுத்துகிறார். (வெளியீடு: பாரதி புத்தகாலயம்).

இந்தக் கலையைப் பற்றி லத்தீன் அமெரிக்க நடைமுறை அனுபவங்களின் வெளிச்சத்தில் தொடர்ந்து அவர் தனது கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றார்.அவரது ஏராளமான எழுத்துக்கள், மார்க்சிய புரட்சிகர நடைமுறை என்ற துறையில் மகத்தான பங்களிப்புக்களாகத் திகழ்கின்றன. உலக மார்க்சிய இயக்கங்கள் பலவற்றில் இந்தத் துறையில் விவாதங்கள், பங்களிப்புக்கள் குறைவு. மார்க்சிய இயக்க வளர்ச்சிக்கு மார்க்சிய நடைமுறையின் தரம் மேம்பட வேண்டும்.

இலத்தீன் அமெரிக்காவில் இத்தகு தேக்கமும், பின்னடைவும், தோல்விகளும், இடதுசாரி இயக்கங்களுக்கு ஏற்பட்ட நிலையில் மக்கள் திரட்டல், மக்களை  இடதுசாரி  சித்தாந்தரீதியில் அரசியல்படுத்தல் போன்ற செயல்பாட்டுத்தளங்களில் பல புதிய சிந்தனைகள் உருப்பெற்றன. அல்தூசரின் மாணவராக பிரான்சில் மார்க்சியக் கல்வி பெற்று இலத்தீன் அமெரிக்க மக்களை சோசலிசப் பாதைக்கு கொண்டு செல்லும் கடமைக்குத் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட போராளியாக மார்த்தா ஹர்நெக்கர் செயல்பட்டு வருகின்றார்.

“1998-ஆம் ஆண்டு தேர்தல்களில் ஹ்யுகோ சாவேஸ் வென்றபோது நவீன தாராளமயத்திற்கு எதிரான மாற்றுத்திட்டத்தைப் பற்றி நின்ற ஒரே தலைவராக இருந்தார். இன்று எதிரியால் ‘சிவப்பு அலை’ என்று அழைக்கப்படும் போக்கு எல்லா இலத்தீன் அமெரிக்க நாடுகளிலும் பரவியுள்ளது. பிரேசில், அர்ஜென்டினா,உருகுவே,பொலிவியா, சிலி, உள்ளிட்ட நாடுகள் மட்டுமல்லாது நவீன தாராளமய எதிர்ப்பு போராட்டங்கள் ஈகுவடார், கொலம்பியா, கோஸ்ட்டாரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் முன்னேறியுள்ளது என்று குறிப்பிட்ட மார்த்தா,இந்த முன்னேற்றத்திற்கான காரணங்களில் மிக முக்கியமான ஒன்றைக் குறிப்பிடுகிறார்.

“உள்ளூர் மட்டத் தலைவர்களும், மையத் தலைமையும் லத்தீன் அமெரிக்கா நிகழ்வுக்கு உண்மையில் ஒரு முக்கியப் பங்கினை ஆற்றியிருக்கின்றனர்” என்றார். இதற்கு உதாரணமாக பொலிவியாவைக்  குறிப்பிடுகின்றார். பொலிவியாவில் “சோசலிசத்திற்கான இயக்கம்” (Movement for Socialism-MAS)  இல்லாமல் போயிருந்தால் இவோ மொரேல்ஸ் பொலிவியாவின் ஜனாதிபதி ஆகியிருக்க முடியாது என்கிறார் மார்த்தா.

புதிய சிந்தனை என்ற பெயரில் மார்க்சியத்தையும் அதன் உயிர்நாடிக் கோட்பாடுகளையும் சிதைத்திடும் கூட்டத்தைச் சார்ந்தவரல்ல, மார்த்தா ஹர்நெக்கர்.அவரது சிந்தனையின் அடிப்படையே லெனினியம்.

இன்று அதிகாரம் செலுத்தும் அரசுகளின் தன்மையில் ஏற்பட்ட மாற்றங்கள், வேகமான மூலதனத் திரட்சி, சோசலிச நடைமுறையில் எதிர்கொண்ட சிக்கல்கள், தவறுகள் ஆகியன அனைத்தையும் அலட்சியப்படுத்திவிட்டு புதியவற்றை மட்டையடியாக மறுத்திடும் சோசலிசவாதிகளால் இயக்கத்திற்கு வளர்ச்சியை ஏற்படுத்திட முடியாது. இது, சோசலிச இயக்கங்கள் மக்களிடம் தனிமைப்பட்டு பலவீனப்படும் நிலையை உருவாக்குகிறது.

மாறாக, முதலாளித்துவ அரசு அதிகாரத்தில் ஏற்பட்டுள்ள புதிய பலத்தை உணர்ந்து, தெரு, தேசம், உலகம் ஆகிய அனைத்து மட்டங்களிலும் உயிர்த்துடிப்பு மிக்க மக்கள் இயக்கங்களை பன்முக உத்திகள் மூலம் உருவாக்குவது; இதற்கு வழிகாட்டுகிற, மார்க்சிய-லெனினியத்தில் தேர்ந்த, ஒரு புரட்சிகர கட்சியை வளர்ப்பது; காலம் காலமாக குறுகிய தளத்தில் மட்டும் செயல்படுகிற நிலையை மாற்றி விரிவான மக்கள் திரளின் நம்பிக்கையைப் பெற்றிட படைப்பாற்றல் மிக்க முன்முயற்சிகளை இடைவிடாது மேற்கொள்வது; ஆகிய அனைத்தும் மார்த்தா ஹர்நெக்கரின் சிந்தனையில் பளிச்சிடுகின்றன.

Related posts