You are here
அஞ்சலி 

ஆர். உமாநாத் : வரலாற்றுச் சான்றாகத் திகழும் வாழ்க்கை

டி.கே. ரங்கராஜன்

தமிழகத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம், செங்கொடித் தொழிற்சங்க இயக்கம் இவற்றின் வளர்ச்சியில் ஒரு அடையாள முகமாகிவிட்டவர் அருமைத் தோழர் ஆர். உமாநாத். நாட்டின் வரலாற்றில் சுதந்திரப் போராட்டத்தோடும் சுதந்திர இந்தியாவில் உழைக்கும் மக்களின் உரிமைகளுக்கான போராட்டத்தோடும் கடல் நீரில் உப்புப் போலக் கலந்திருக்கிறது அனைவராலும் “”””ஆர்.யு.”” என்று வாஞ்சையோடு அழைக்கப்பட்ட அவருடைய வாழ்க்கை. சிறுவனாக வறுமையோடு போராடிய அவர், உயர் கல்விக்கான வாய்ப்புக் கிடைத்தபோது, அதனைத் தனது சொந்த வறுமையைப் போக்கிக் கொள்வதற்கான வழியாக அமைத்துக் கொள்ளாமல், தேசத்து மக்களின் வறுமைக்குக் காரணமான முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவச் சுரண்டல் முறையை ஒழிப்பதற்காகவும், அதற்கெதிராக ஒன்றுபட விடாமல் மக்களைக் கூறுபோடும் மதவாத-சாதியப் பாகுபாடுகளுக்கு எதிராகவும் தம்மை ஒப்படைத்துக்கொண்டவர். உழைப்பாளிகள் இன்று அனுபவிக்கிற உரிமைகளில் அவருடைய குருதியும் வியர்வையும் கலந்திருக்கின்றன என்றால் மிகையல்ல.

பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ், மதராஸ் மாகாணத்தின்  ஒரு  பகுதியாக இருந்த கேரளத்தின் காசர்கோடு நகரில், ராம்நாத் ஷெனாய் – நேத்ராவதி தம்பதிக்கு இரண்டு புதல்வர்கள், ஐந்து புதல்விகள். கடைக்குட்டியாய் 1921 டிசம்பர் 21ல் பிறந்தவர் உமாநாத். உணவு தானிய வதிகத்தில் ஈடுபட்டிருந்தவர் ராம்நாத். அதில் ஏற்பட்ட கடும் இழப்பின் காரணமாக  ஏழ்மை பிலையில் விழுந்தது குடும்பம். மேலுமொரு துயரமாக, அவர் அகால மரணடைந்ததால் மேலும் கடுமையான சவால்களை அந்தக் குடும்பம் எதிர்கொண்டது. அந்தச் சவால்களை எதிர்கொள்ளும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார் மூத்தவர் கேசவராஜ், காப்பீட்டு  முகவராகத்  தொழில்  செய்து தாய்க்கும் உடன்பிறந்தோருக்கும் உதவினார். தம்பியின் மீது தனிப்பாசம் கொண்டிருந்த அவர், அறிவுக்கூர்மை மிக்க உமாநாத்தைப் படிக்க வைத்துவிட்டால் நல்ல வேலைக்குச் சென்று பொருளாதாரத்தில் முன்னேறிவிடுவார் என்ற எண்ணத்துடன் பள்ளிக்கு அனுப்பினார்.

பள்ளிப்பாடங்களோடு அன்று நிலவிய அரசியல் – சமுதாய பிலைமைகளையும் படித்தார் உமாநாத்.  சுதந்திரப் போராட்டத்தில்  ஈடுபட்டிருந்த  காங்கிரஸ் மாணவர்  இயக்கத்தையும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகக் கொளுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்த போராட்டத்தையும் விடுதலை லட்சியத்தையும் உற்றுக் கவனித்தார். அது, இந்திய விடுதலை ஒரு அரசியல் சுதந்திரமாக மட்டுமல்லாமல், சுரண்டல்களிலிருந்தும்  ஒடுக்குமுறைகளிலிருந்தும் விடுபட்ட சமுதாய விடுதலையாகவும் பரிணமிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் இங்கே கம்யூனிஸ்ட் இயக்கத்தைக் கட்டி வளர்த்துக்கொண்டிருந்த தோழர்கள் இ.எம்.எஸ்., கிருஷ்ணப்பிள்ளை உள்ளிட்ட மார்க்சிய ஆசான்களுடன் தோழமை கொள்வதற்கு இட்டுச் சென்றது. அவர்களிடமிருந்து மார்க்சிய சித்தாந்தத்தையும் வழிமுறைகளையும் கற்றார் உமாநாத்.

அவரை ஒரு பட்டதாரியாக்கிட விரும்பிய குடும்பத்தினர் சிதம்பரம்  அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பிவைத்தனர். ஆனால் மார்க்சியம் பயின்ற அவரால் தானுண்டு, தன் படிப்புண்டு  என்று  இருந்துவிட  முடிய வில்லை. கம்யூனிஸ்ட் இயக்கப்பதிகளில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டார். ஒரு கட்டத்தில் தோழர் ஏ.கே. கோபாலன், “”””உன் போன்ற இளைஞர்கள் கட்சிக்குத் தேவைப்படுகிறார்கள்…,”” என்று கூறி அழைப்பு விடுத்தார். உமாநாத் தமது சொந்த வளர்ச்சி பற்றிப் பொருட்படுத்தாதவராய்த் தயக்கமின்றி அந்த அழைப்பை ஏற்றார். ஒரு அஞ்சலட்டையை எடுத்து, “”””குடும்பத்துக்கு இனி நான் பயன்பட மாட்டேன்,”” என்று எழுதி அண்ணனுக்கு அனுப்பினார். அதன் பிறகு, சமுதாயத்திற்கு – குறிப்பாகத் தொழிலாளி வர்க்கத்தினருக்குப் பயன்படுகிறவராக, இயக்கத்தின் முழு நேர ஊழியராக அந்த இளம் வயதிலேயே பயணத்தைத் தொடங்கினார்.

தொடக்கத்தில் அவருக்குத் தரப்பட்ட பணி “”””கூரியர்”” எனப்பட்ட தகவல் தொடர்பாளர் பொறுப்புதான். இன்று கூரியர் என்றால் தனியார் தபால் விநியோகம்தான் நினைவுக்கு வருகிறது. அன்றைக்கு கம்யூனிஸ்ட் இயக்கத்தில் கூரியர் என்றால் சவால் மிக்கதொரு சேவை. பிரிட்டிஷ் ஆட்சியின் காவல்துறையினர் கம்யூனிஸ்ட்டுகளைத் தேடித்தேடி வேட்டை யாடிய காலம் அது. அப்போது, தலைமறைவாகத்தான் செயல்பட முடியும் என்ற நிலைமைக்குத் தள்ளப்பட்டிருந்த கம்யூனிஸ்ட் தலைவர்களிடையே கடிதங்களையும் ஆவணங்களையும் கொண்டு சேர்க்கிற, ஆபத்து பிறைந்த சேவை அது.

1939க்குப் பிறகு, இயக்கப் பதிகளில் கூடுதல் முனைப்புடன் அண்ணாமலை பல்கலைக் கழகத்திலிருந்து வெளியேறினார் உமாநாத். தொடர்ந்து கட்சியின் பல்வேறு பதிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். அவரை, போலிசார் கண்டுபிடித்து கைது செய்தார்கள். அலிப்பூர் சிறையில் அவர் மற்ற தோழர்களோடு அடைக்கப்பட்டார். இன்றைய நிலைமைகளோடு ஒப்பிடும் போது அந்நாட்களில் சிறை வாழ்க்கை என்பது மிகக் கொடூரமானதாகத் சொல்லொணாத் துயரங்கள் மிகுந்ததாக இருந்தது. அரசியல் கைதிகள் மற்ற கிரிமினல் குற்றவாளிகள் போலவே நடத்தப்பட்டனர். விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடுவதிலிருந்து ஊக்கமிழக்கச் செய்வது, அரசியல் கைதிகள் கொடுமைப் படுத்தப்பட்டதன் நோக்கம். ஆனால், நாடும் மக்களும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் ஒடுக்கப்பட்டதை எதிர்த்துப் போராடப் புறப்பட்ட கம்யூனிஸ்ட்டுகள், சிறைச்சாலைக்கு உள்ளேயும் அடுக்குமுறைகளை எதிர்த்துப் போராடினார்கள். கம்யூனிஸ்ட்டுகளின் அத்தகைய போராட்டங்களால்தான் அரசியல் கைதிகளுக்கு மட்டுமல்லாமல் சிறையின் மற்ற கைதிகளுக்கும் பல்வேறு அடிப்படை உரிமைகளையும் சலுகைகளையும் வழங்க வேண்டிய கட்டாயம் பிரிட்டிஷ் அரசுக்கு ஏற்பட்டது.

சிறையில் இருந்து விடுதலையான பின் பம்பாய் நகருக்குச் சென்ற உமாநாத் அங்கே கட்சி அலுவலகத்தில் தங்கிப் பதியாற்றினார். பின்னர் அங்கிருந்து கோயம்புத்தூருக்கு, தொழிற்சங்க இயக்கத்தைக் கட்டி வளர்ப்பதற்காக அனுப்பி வைக்கப்பட்டார். தொழிலாளர்களிடையே செயல்பட்ட கம்யூனிஸ்ட்டுகளின் பன்முகப் பதிகள் மகத்தானவை. அன்றைய சூழலில் கோவையின் ஆலைகளில் வேலை செய்த தொழிலாளர்கள் பெரும்பாலும் எழுதப் படிக்கவும் தெரியாதவர்களாக இருந்தனர். அவர்களுடைய உரிமைகளைப் பற்றி, சட்டங்கள் பற்றி, அவர்களுக்குப் புரியவைப்பது முக்கியமான பணி. நீதிமன்றத்தில் அவர்களுக்காக வாதாடுவதுடன், பல்வேறு பிரச்சனைகளில்  தொழிலாளர்களுடன் கலந்தாலோசிப்பது, எடுக்கப்படும் முடிவுகளில் தங்களுக்கும் பங்கு இருக்கிறது என்ற உணர்வை ஏற்படுத்துவது, படிப்படியாக அவர்களை கட்சிக்குள் கொண்டுவருவது என்று ஒவ்வொரு பதியையும் தனக்கே உரிய தனித்தன்மையோடு திறம்பட மேற்கொண்டார் அவர்.

இன்று இருப்பது போன்ற நவீன ஒலிபெருக்கி ஏதுமற்ற அந்த நாட்களில், ஆலை வாயில் கூட்டங்களில்  உரத்தக்குரலில்  பேசியாக வேண்டும். ‘மெகாபோன்’ என்ற எளிய உலோக கூம்பு வடிவக் கருவிதான் அன்றைய ஒலிபெருக்கி. அதனைப் பயன்படுத்தி தொழிலாளர்களை உமாநாத், கே.ரமதி ஆகிய தலைவர்கள் அதிதிரட்டினார்கள்.

இதில் உமாநாத்தின் இன்னொரு சிறப்பையும் குறிப்பிட்டாக வேண்டும் . தமிழைத் தாய் மொழியாகக் கொண்டிராத அவர் தொடக்க நாட்களில் ஆங்கிலத்தில்தான் பேச வேண்டி இருந்தது. அவரது  பேச்சை  கே. ரமதி தமிழாக்கம் செய்வார். தொழிலாளரோடு நெருங்குவதற்கு மொழி ஒரு முக்கியத் தேவை என்ற புரிதலோடு உமாநாத் தமிழ் கற்றார். பிற்காலத்தில் பொதுமக்களிடத்திலே மிகச் சிறப்பாக தமிழிலேயே உரையாற்றக்கூடிய, சக்தி வாய்ந்ததொரு பேச்சாளராக அவர் உருவெடுத்தார்.

இந்தியா விடுதலை பெற்ற பிறகும் கூட உழைப்பாளிகள் அடிமைகளாகத்தான் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட சக்திகளால் தொழிலாளர்கள் விழிப்படைவதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.  கோவை முதலாளிகள் அரசாங்கத்தையும், காவல்துறையையும் நாடினர். 1948ல் ஒரு கொலை வழக்கில் உமாநாத்தின் பெயர் மோசடியான முறையில் சேர்க்கப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அன்றைய சூழலில் அவரை சிறையிலிருந்து வெளியே வருமாறு கட்சி கூறியது! அதை ஏற்று, கோவை மத்திய சிறையிலிருந்து, கடுமையான கண்காணிப்புகள் இருந்தும் காவலர்களின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டுத் தப்பிய உமாநாத், திருச்சி நகரத்தை வந்தடைந்தார்.

அவரது தொழிற்சங்க அனுபவம் ரயில்வே தொழிலாளர்களை அதிதிரட்டப் பயன்பட வேண்டும் என்று கட்சியின் மாநிலக்குழு முடிவு செய்தது. அதனை ஏற்று ரயில்வே தொழிலாளர்களிடையே  செயல்பட்டு, அவர்களது போராட்டங்களுக்கு அவர் வழிகாட்டினார். 1949 மார்ச் மாதம் நடைபெற்ற ரயில்வே தொழிலாளர்களின்  வீரம்  செறிந்த  வேலைபிறுத்தப் போராட்டம்  வரலாற்றில்  இடம்பெற்றது.  திருச்சி பொன்மலை பகுதியில் தீரமிக்க தியாகிகளை உருவாக்கிய அந்தப் போராட்டத்தில்   உமாநாத்தின் பங்களிப்பு தலையாயது.

தொடர்ந்து தலைமறைவாகவே செயல்பட வேண்டியிருந்த பிலையில், பின்னர் சென்னைக்கு வந்து, பல்லாவரம் காவல்நிலையத்திற்கு அருகிலேயே தங்கினார். அவருடன் தோழர்கள் எம். கல்யாணசுந்தரம், லட்சுமியம்மாள், அவரது மகள் பாப்பா ஆகியோரும் தங்கியிருந்து ரகசியமான முறையில் இயக்கப்பதிகளை மேற்கொண்டனர். ஆயினும் அவர்கள் அங்கே இருப்பதை எப்படியோ மோப்பம் பிடித்த போலீஸ்காரர்கள், அவர்கள் இருந்த னிட்டைச் சுற்றி வளைத்துக்கொண்டனர். போலீசார் சூழ்ந்துகொண்டதை அறிந்ததும்  மற்ற இடங்களில் இருக்கக்கூடிய  தோழர்களைப்  பாதுகாப்பதற்காக வீட்டில் இருந்த பல ரகசிய ஆவணங்களை எரித்துவிட்டார் லட்சுமியம்மாள். மாடியில் ஏறித் தப்பிக்க  முயன்ற உமாநாத், தவறிக்  கீழே விழுந்ததில் அவரது கால் முறிந்தது. கால் முறிந்தும் மன உறுதி முறியாத அவர் மீதும் மற்றவர்கள் மீதும் திருச்சி போலீசார் சதி வழக்குப் பதிவு செய்தனர்.

இத்தகைய வழக்குகள் நீதிமன்றம் வந்தபோது, தோழர்கள் தரப்பில் தானே நீதிபதி முன் வாதாடுகிற அளவுக்கு சட்ட ஞானத்தையும் வளர்த்துக்கொண்டிருந்தார் அவர். இப்படிப்பட்ட திறமைகளைத் இயக்கத்தின் வளர்ச்சிக்காகவே பயன்படுத்திய அவர், 1970 முதல் 1990ம் ஆண்டுகள் வரையில் பொதுவாகத் தமிழகம் முழுவதும், குறிப்பாக திருச்சியில் செங்கொடியின் கீழ் தொழிற்சங்கங்களைக் கட்டி வளர்ப்பதற்கு வழிகாட்டினார்.

தொழிற்சங்கத் தலைவராக மட்டுமல்ல, அனைத்துப் பகுதி மக்களின் பிரதிநிதியாகவும் நாடாளுமன்ற மக்களவை,  மாநில  சட்டப்பேரவை இரண்டிலும் குறிப்பிடத்தக்க பதியாற்றினார். நாடாளுமன்ற  மக்களவைக்குப்  புதுக்கோட்டைத் தொகுதியிலிருந்து இரண்டு முறை, தமிழக சட்டமன்றத்திற்கு நாகப்பட்டினம் தொகுதியிலிருந்து இரண்டுமுறை தேர்ந் தெடுக்கப்பட்டவர். இரண்டு அவைகளிலும் அவர் பிகழ்த்திய உரைகள் மற்றவர்களுக்கு வழிகாட்டும் ஆவணங்களாகத் திகழக்கூடியவை. அதற்குக் காரணம், விவாதிக்க இருக்கும் எந்தப் பொருள் குறித்தும் முழுமையாகப் புரிந்துகொள்வதிலும், அது தொடர்பான உண்மைகளை உள்வாங்கிக்கொள்வதிலும் ஒரு முன்னுதாரமாகத் திகழ்ந்தார்.

இவ்வாறு திரட்டிய உண்மைகளின் பலத்தோடு அவர் நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் மட்டுமல்லாமல், தொழில் நிறுவனங்களின்  நிர்வாகங்களுடனான பேச்சுவார்த்தைகளிலும்  வாதாடுகிறபோது, அதை எதிர்கொள்ள முடியாமல் மற்றவர்கள் திணறிப்போவார்கள்.

மக்களின் பிரதிபிதியாக வெற்றிகரமாகச் செயல்பட்டதற்கு ஆதாரமாகப் பல்வேறு நிகழ்வுகள் உள்ளன. ஒரு சோற்றுப் பதமாக இங்கே ஒரு நிகழ்வைக் காணலாம்:

தமிழகத்தில் நாராயணசாமி நாயுடு தலைமையிலான விவசாயிகள் சங்கம் வலுவானதொரு அமைப்பாக வளர்ந்துகொண்டிருந்தது. விவசாய இடுபொருள்களின் விலை உயர்வைக் கண்டித்தும், விளைபொருள்களுக்கு நியாயமான விலை கோரியும், விவசாயிகளின் இதர நியாயமான கோரிக்கைகளை முன்வைத்தும் போராட்டங்களைத் தொடங்கிய அந்தச் சங்கம் விரைவிலேயே முக்கியமானதொரு அமைப்பாக அடையாளம் பெற்றது. திருச்சியின் திருவெறும்பூர் அருகில் உள்ள கூத்தப்பார் கிராமத்தில், தலித் மக்களுக்குச் சொந்தமான விவசாய நிலங்களை ஆக்கிரமித்த அந்தச் சங்கத்தினர், தலித் மக்களை விரட்டவும் முயன்றனர். சட்டமன்ற உறுப்பினராக இருந்த உமாநாத் உடனடியாக அந்தப் பிரச்சனையை அவையில் எழுப்பினார். தலித் மக்களுக்காக சட்டமன்றத்திற்கு வெளியே நடந்த போராட்டங்களுக்கும்  அவர் தலைமை தாங்கினார். அந்தப் பாட்டாளிகளின் நிலம் மீட்கப்பட்டது; அவர்களுக்கு அநீதியிழைக்க முயன்ற நாராயணசாமி நாயுடு சங்கம் தனது முக்கியத்துவத்தை இழந்தது.

‘சிம்கோ’ பிறுவன  தொழிலாளர்கள் தங்களுக்கு மறுக்கப்பட்ட சட்டப்பூர்வ உரிமைகளுக்காகப் போராட்டக் களம் இறங்கினர்.  125 நாட்கள் நடந்த அந்தப் போராட்டத்தையொட்டி தினமும் சட்டமன்றத்தில், அந்தத் தொழிலாளர்களின் நியாயத்தை  எதிரொலித்தார் உமாநாத். அனைத்துக் கட்சிகளின் ஆதரவையும் தொழிலாளர்களுக்குத் துணையாகத் திரட்டினார். இறுதியில் அன்றைய எம்.யு.ஆர். அரசு, தொழிலாளர்களின் உரிமைகளை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்தது.

இப்படிப்பட்ட எடுத்துக்காட்டுகள் ஏராளமாக இருக்கின்றன. கட்சியின் முழுநேர ஊழியராக மிக எளிய வாழ்க்கை வாழ்ந்தார். ஒரு முறை, அவருடனும் தோழர்கள் கே. ரமதி, வெங்கிடு ஆகியோருடனும் உரையாடிக் கொண்டிருந்த போது, தொடக்கத்தில் ஊதியம் என எதுவும் இல்லாமல் பல நாட்கள், தொழிலாளர்கள் கொண்டுவந்து தரும் உணவைப் பகிர்ந்துகொண்டதை பினைவுகூர்ந்தனர். விடுமுறை நாட்களில் வெறும் பட்டாதியும் வேர்க்கடலையுமே உணவு! இந்த எளிமையும், தியாகமும், கூரிய அரசியல் தெளிவும், அயராத ஈடுபாடும்தான் அவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்களில் ஒருவராக உயர்த்தியது. நாடு தழுவிய பிரச்சனைகளில் கட்சி சரியான பிலைப்பாடுகளை மேற்கொண்டதில் பங்களித்தார்.

பொதுவாழ்க்கைக்கு வருகிற எல்லோராலும் தங்களது சொந்தக் குடும்ப வாழ்க்கையை வெற்றிகரமாக அமைத்துக்கொள்ள முடிவதில்லை. தோழர் உமாநாத் – தோழர் பாப்பா இவர்களின் குடும்பம்  இதிலேயும்  மிகச்சிறந்த முன்னுதாரணம். தலைமறைவாகக் கட்சிப் பதிகளைச் செய்து கொண்டிருந்த  நாட்களில் தான் இருவரது நட்பு காதலாக மலர்ந்தது. அவர்களது இணக்கமும் இயக்கப் புரிதலும் எல்லாத் தலைமுறைகளுக்கும் ஒரு வாழ்க்கைப் பாடம் என்றே சொல்லலாம். அது அவர்கள் இருவரோடு நின்றிடவில்லை. அவர்களது மூன்று மகள்களுமே இயக்க வாழ்க்கையோடு தங்களை இணைத்துக்கொண்டவர்கள்தான். திண்டுக்கல்லில் மருத்துவராகப் பதியாற்றி காலமாகிவிட்ட லட்சுமி, திருச்சியில் வழக்கறிஞராக உழைப்பாளிகள் தரப்பில் வாதாடும் நிர்மலா ராதி, இன்று கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தலைவர்களில் ஒருவராகச் செயல்பட்டுக்கொண்டிருக்கும்  வாசுகி,  இவர்களது குடும்பத்தினர் என எல்லோருமே இயக்கத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டவர்கள்.

இயக்கப்பதியாற்றுகிற பலரது வாரிசுகள் அரசியலுக்கு வருவதில்லை என்பதைப் பார்க்கிறோம். வேறு சில கட்சிகளிலோ, குடும்ப வாரிசுகள் அரசியலுக்கு வருவதாகக்  கூறிக்கொண்டு அதிகார பீடத்தில் ஏறிக்கொள்வதையும் பார்க்கிறோம்.  இவர்களோ,  மக்கள் பதிக்காகவே அரசியல் என்று உணர்வுப் பூர்வமாகத் தங்களை ஒப்புவித்துக்கொண்டவர்கள். இத்தகைய வளர்ச்சிக்கு அடிப்படை, குடும்ப ஜனநாயகம் என்ற கோட்பாட்டை நிஜவாழ்வில் நடைமுறைப்படுத்திக் காட்டினார்கள் உமாநாத் – பாப்பா இணை என்பதேயாகும்.  இப்படி வாழ்ந்து காட்டியது என்பதும், பொதுவாழ்க்கைக்கு வருவோருக்கான ஒரு படிப் பினைதான்.

கட்சியின் மாநாடுகளில் அதிகக் காலம் சிறைவாழ்க்கையையும் தலைமறைவு வாழ்க்கையையும் சந்தித்தவர்களில் ஒருவராக உமாநாத் பெயரும் பெருமிதத்தோடு அறிவிக்கப்படும். தேசத்தின் விடுதலைக்கு முன்னும் பின்னுமாக எட்டரை ஆண்டுகள் சிறைவாசம்! ஐந்து ஆண்டுகள் வனவாசம் போன்ற தலைமறைவு வாழ்க்கை! அருமையான இளமைக்காலத்தை வெறும் பொழுதுபோக்கு, அல்லது சுயநல வேட்கை என்று கடத்துகிறவர்களாக இளம் தலைமுறைகளை வார்த்துக்கொண்டிருக்கிறது இன்றைய முதலாளித்துவ உலகமயமாக்கல். அவர்களுக்கு நம்பிக்கையும் ஊக்கமும் அளிக்கிற, சமுதாய நலனுக்காக வாழ்வதே மானுட அழகு என்று உணர்த்துகிற வரலாற்றுச் சான்றாகியிருக்கிறார் தோழர் உமாநாத்.

இப்படியொருவரை எப்போது இனிக் காண்போம் என்று ஏங்குவதற்கு மாறாக, முன்னெப்போதையும் விட இடதுசாரிகளின், கம்யூனிஸ்ட்டுகளின் உறுதியான தலையீடும் பரந்த இயக்கமும் வலுவான செயல்பாடும் கட்டாயத் தேவையாகியுள்ள இன்றைய காலகட்டத்தில் அவரைப் போல் நம்மையும் தகவமைத்துக் கொள்வதே அவருக்குச் செலுத்திடும் செவ்வணக்கத்தை அர்த்தமுள்ளதாக்கும்.

Related posts