You are here
கட்டுரை வரலாறு 

மே தினத் தியாகிகளின் மகத்தான வரலாறு!

(வில்லியம் அடல்மன் எழுதி ச.சுப்பாராவ் மொழிபெயர்ப்பில் பாரதி புத்தகாலயம் வெளியிட்ட‘மே தினத் தியாகிகளின் மகத்தான வரலாறு’ நூலிலிருந்து ஒரு பகுதி)

1886 மே 1 அன்று 8 மணி நேர வேலை இயக்கம் துவங்கியபோது, மெக்கார்மிக்கில் கதவடைப்பு ஆரம்பித்து இரண்டரை மாதம் ஆகிவிட்டது. மே 2ம் தேதி, ஞாயிறன்று, கிரீஃப் ஹாலில், அர்பெய்ட்டர் ஜியுடங்கின் (Arbeiter-Zeitung) ஆசிரியர் ஆகஸ்ட் ஸ்பைஸை சந்தித்த இரு கட்டுமானத் தொழிலாளர்கள் மெக்கார்மிக் தொழிற்சாலை அருகே போராடிவரும் கட்டுமானத் தொழிலாளர்களின் கூட்டத்தில் மறுநாள் மதியம் (மே 3 திங்கட் கிழமை) அவர் பேச முடியுமா என்று கேட்டார்கள். ஸ்பைஸ் ஒப்புக் கொண்டார்.

6000 தொழிலாளர்களுக்கு நடுவே, ஒரு டிராம் வண்டியின் மீது நின்றபடி ஸ்பைஸ் பேசினார். கூட்டத்தினர் பலரும் போலந்து, பொஹிமியன்காரர்கள் என்பதால் அவர்களுக்கு இவர் பேசியது ஒரு வார்த்தை கூட புரியவில்லை. பக்கத்திலிருந்த மெக்கார்மிக் தொழிற்சாலையில் 3.30 மணிக்கு மணி ஒலித்தது. வேலை முடித்து வரும் கருங்காலிகளோடு தகராறு செய்யச் சென்ற மெக்கார்மிக் தொழிலாளர்களுக்கு உதவ கூட்டத்தின் ஒரு பகுதி (சுமார் 200) அங்கு சென்றது. உடனடியாக 200 போலீசாருடன் போன்ஃபீல்ட் வந்ததும், தகராறாகி விட்டது. இதனால் ஸ்பைஸ் கூட்டத்திலிருந்து மேலும் பலர் அங்கு சென்றனர். உண்மையில், ஸ்பைஸ் தானும் அங்கு சென்று என்ன நடக்கிறது என்று அறிய எண்ணினார். அவரையும் கூட்டத்தினரையும், தடிகளும், குண்டு மழையும் வரவேற்றன.

போலீஸ் தாக்குதலால் ஸ்பைஸ் அதிர்ச்சியடைந்தார். போலீஸ் அராஜகத்தைக் கண்டித்து ஒரு துண்டுப்பிரசுரம் எழுத டிராம் பிடித்து வெல்ஸ் தெருவில் இருந்த அர்பெய்ட்டர் ஜியுடங் அலுவலகம் வந்தார். இருவர் இறந்ததாக அவர் கேள்விப்பட்டிருந்தார். அதுதான் உண்மை. ஆனால் சிகாகோ டெய்லிநியூஸ் பேப்பரைப் பார்த்தபோது அதில் ஆறு பேர் மரணம் என்று போட்டிருந்ததும், அந்த விபரத்தைத் தன் துண்டுப் பிரசுரத்தில் பயன்படுத்தினார். பின்னாளில், வழக்கு விசாரணையில் இறப்பு எண்ணிக்கையைத் தவறாகத் தந்து தொழிலாளர்களைத் தூண்டிவிட்டதாக அவர் மேல் குற்றம் சாட்டப்பட்டது பெரிய கொடுமை. டெய்லி நியூஸ் இதழை சாட்சியமாக சமர்ப்பிப்பதை நீதிபதி அனுமதிக்க மறுத்துவிட்டார்.

மே 3 மாலை, ‘திங்கள் இரவு சதிக்கூட்டம்’ என்று பின்னர் போலீஸ் கூறிய ஒரு கூட்டத்தில் காட்ஃபிரைட் வாலர், ஜார்ஜ் எங்கேல் உள்ளிட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். மெக்கார்மிக் ரீப்பர் தொழிற்சாலை நிகழ்வுகள், குறிப்பாக மே 3 போலீஸ் தாக்குதலைக் கண்டித்து மே4 செவ்வாயன்று ஹேமார்க்கெட் சதுக்கத்தில் ஒரு கூட்டம் போடுவது என்று முடிவானது. பின்னர் ஹேமார்க்கெட் கூட்டத்தில் பேச ஆகஸ்ட்ஸ்பைஸ் அழைக்கப்பட்டாலும், அதற்கான திட்டமிடலில் அவருக்குப் பங்கில்லை.

அமெரிக்கா முழுவதுமுள்ள தொழிலாளர்கள் ‘எட்டுமணி நேர வேலை நாளுக்கான’ நாடு தழுவிய போராட்டத்தில் இறங்கிய அதே வேளையில், மெக்கார்மிக் தொழிற்சாலை சம்பவங்கள், சங்கங்களை உடைக்க சிகாகோ முதலாளிகளின் பிரச்சாரம், சிகாகோ போலீஸ், போன்ஃபீல்ட் ஆகியோரின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகள் யாவும் உச்சத்தில் இருந்தன.

1886 மே தினம் எட்டு மணிநேர வேலை நேர இயக்கத்தின் துவக்கம்:

ஆண்ட்ரூ ஜாக்சன் அதிபராக இருந்த காலத்திலிருந்து அமெரிக்கத் தொழிலாளர்கள் குறைந்த வேலை நேரத்திற்காகப் போராடி வந்து கொண்டிருந்தார்கள். வான் பரென் அதிபராக இருந்தபோது அரசு ஊழியர்களுக்கு வேலை நேரம் பத்து மணி நேரமாகக் குறைந்தது. அரசு, தனியார் துறைகளுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், அரசு உதாரணத்தை தனியார் முதலாளிகள் தாமாகப் பின்பற்ற மறுத்தார்கள். குறைந்த வேலை நேரத்திற்காக தொழிலாளிகள் ஒவ்வொரு தனிப்பட்ட முதலாளியுடனும் போராட வேண்டியிருந்தது.

உள்நாட்டுப் போரைத் தொடர்ந்த பொருளாதார வீழ்ச்சியின் போது, அதே சம்பளத்தில் குறைந்த நேரம் வேலை பார்த்தால், பலருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது. அது நாட்டின் பொருளாதாரத்திற்கு உதவும் என தொழிலாளிகள் கருதினர். இருக்கும் வேலையைப் பகிர்ந்து கொள்ளவும், புதிய இயந்திரங்களால் வேலை இழந்தவர்களுக்கு உதவவும், எட்டு மணி நேர வேலை இயக்கம் சிறந்த வழி என்று நினைத்தனர். ஆண்ட்ரூ ஜாக்சன் ஆட்சிக் காலத்தில் அரசு ஊழியர்களின் வேலை நேரத்தை எட்டு மணி நேரமாகக் குறைக்கும் புதிய சட்டம் பிறப்பிக்கப்பட்டது. 1867 மார்ச்சில் ‘இலினாய்ஸ் மாகாணத்தில் சட்டபூர்வ வேலை நாள் என்பது எட்டு மணி நேரம்’ என்று அறிவிக்கும் சட்டத்தை இலினாய்ஸ் சட்டசபை நிறைவேற்றியது. இச்சட்டங்கள் அமுல்படுத்தப்படவில்லை. எட்டுமணி நேர வேலைக்கான போராட்டத்தைத் தொடர்ந்து நடத்த தொழிலாளர்கள் நிர்பந்திக்கப்பட்டார்கள்.

மே தினத்திற்கும், எட்டு மணி நேர வேலை நாள் இயக்கத்திற்குமான முதல் தொடர்பு சிகாகோவில் 1867ல் தான் முதலில் வந்திருக்க வேண்டும். மெக்கார்மிக் தொழிற்சாலையில் இருந்த 23ம் எண் வார்படத் தொழிலாளர் சங்கம் அப்போது நகரத்தின் வலுவான சங்கங்களில் ஒன்று. அது இந்த இயக்கத்திற்காக ஏராளமான ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையை விட்டு, தெருக்களில் ஊர்வலமாகச் சென்றார்கள். ‘சிகாகோ நகரில் இதுவரை காணாத அளவு பெரிய ஊர்வலம்’ என்று சிகாகோ டைம்ஸ் குறிப்பிட்டது. சில தொழிற்சாலைகள் எட்டுமணி நேர வேலைக்கு ஒப்புக்கொண்டாலும், பல மறுத்தன. இதனால் வேலை நிறுத்தங்கள் அதிகரித்தன. அக்காலகட்டத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமாக இருந்ததால், வேலை நிறுத்தத்தை முறியடிக்க வேறு ஊர்களிலிருந்து தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டார்கள். இதனால் 1867ன் ‘எட்டு மணி நேர வேலை நாள்’ இயக்கம் தோல்வியுற்றது. பத்து, பன்னிரண்டு, பதினான்கு மணி நேர வேலை என்பதே சட்டமாக இருந்தது.

1884ல் சிகாகோவில் கூடிய அமெரிக்க மற்றும் கனடா தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு (1886ல் AFL என பெயர் மாற்றம் பெற்றது) தச்சர்கள் சங்கத்தின் கேப்ரியல் எட்மன்சன் என்பவரின் தீர்மானத்தை நிறைவேற்றியது. அது கீழே:

1886 மே 1-ம் தேதிக்குப் பிறகு ஒரு நாளின் சட்டபூர்வ வேலை நேரம் எட்டு மணி நேரம் என்றும், இக்காலத்திற்குள் தொழிற்சங்கங்கள் தம் பகுதிகளில் இத்தீர்மானத்திற்கு ஏற்றவகையில் சட்ட திருத்தம் கொண்டு வர முயல வேண்டும் என்றும் தீர்மானிக்கப்படுகிறது.

17 ஆண்டுகளுக்கு முன் சிகாகோவில் எட்டு மணி நேர வேலைக்காகப் போராடித் தோற்றவர்களின் நினைவாக திரு.எட்மன்சன் மே1 என்ற தேதியைத் தேர்ந்தெடுத்திருக்கலாம். ஒரு தச்சராக, ஒப்பந்தங்கள் புதுப்பிக்கவும், குறைந்த வேலை நேரத்தை வென்றெடுக்கவும் மே  1ம் நாள்தான் சரியான நாள் என அவர் நினைத்திருக்கலாம். ஏனெனில், சிகாகோ, மற்றும் பல பகுதிகளில் நீண்ட குளிர் காலத்திற்குப் பிறகு, கட்டட வேலைகள் மே மாதம் தான் சூடுபிடிக்கும். தொழிலாளர்களோடு ஒப்பந்தம் போட்டு விரைவாக வேலையை ஆரம்பிக்க ஒப்பந்தக்காரர்கள் ஆர்வமாக இருப்பார்கள்.

நாட்டின் மிகப்பெரிய தொழிற்சங்கமான நைட்ஸ் ஆஃப் லேபரும், அதன் தலைவர் டெரன்ஸ் பௌடர்லியும் ‘எட்டு மணி நேர வேலை’ இயக்கத்தை ஆதரிக்கவில்லை. எனினும், சிகாகோவில் அதற்கு ஆல்பர்ட் பார்சன்ஸ் போன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள். சிகாகோ நைட்ஸ் உறுப்பினர்கள் பௌடர்லி சொல்வதைக் கேட்காமல், இவ்வியக்கத்தில் ஆர்வமாகச் சேர்ந்தார்கள்.

1886 மே தினத்தில் நாடெங்கிலுமுள்ள 12000 தொழிற்சாலைகளில் இருந்த 340000 தொழிலாளர்கள் தங்கள் கருவிகளைக் கீழே போட, இயக்கம் துவங்கியது. ஒரு சங்க நகரமாக சிகாகோவின் பலத்தைக் காட்டும் வண்ணம், அங்கு 80000 தொழிலாளர்கள் இருந்தார்கள். போராட்டம் துவங்கும் முன்னரே, சிகாகோவின் 45000 தொழிலாளர்களுக்கு எட்டுமணி நேர வேலை அவர்களது முதலாளிகளால் உறுதியளிக்கப்பட்டது.

மே 2 ஞாயிறன்று சிறுசிறு ஊர்வலங்கள் நடந்தாலும், மே 3 திங்களன்று மெக்கார்மிக் தொழிற்சாலை அருகே ஸ்பைஸ் பேசிய கூட்டம், மே 4 செவ்வாய் நடந்த ஹேமார்க்கெட் சதுக்கக்கூட்டம் இரண்டும் பெரும் கூட்டத்தை ஈர்த்தன.

ஹேமார்க்கெட் கண்டனக் கூட்டம்

1886 மே 4 செவ்வாயன்று நடந்த ஹேமார்க்கெட் கண்டனக் கூட்டம் போல் மோசமான திட்டமிடலோடு நடந்த கூட்டம் வேறு எதுவும் இருக்க முடியாது. இப்படிக் கூட்டம் நடத்த வேண்டும் என்று முன்மொழிந்த காட்ஃபிரைட் வாலர் கூட்டத்தில் பதினைந்து நிமிடங்கள்தான் இருந்தார். விளம்பரப் பொறுப்பு ஏற்றிருந்த அடால்ஃப் ஃபிஷர் சிறிது நேரம் இருந்துவிட்டு, ஜெஃப்ஸ் கூடத்தின் கீழ்தளத்தில் இருந்த மதுபானக் கூடத்திற்கு மது அருந்தச் சென்றுவிட்டார். கமிட்டியின் மற்றொரு உறுப்பினரான ஜார்ஜ் எங்கேல் நண்பர்கள், மனைவியோடு மதுவருந்தி, சீட்டாடுவதற்காக வீட்டிலேயே இருந்துவிட்டார். வாலர் ஓடிவந்து சொல்லும் போதுதான் எங்கேலுக்கு குண்டு வெடித்த விஷயமே தெரியும்.

ஹேமார்க்கெட் வழக்கு நடந்தபோதும், அதற்குப் பின்னரும், காட்ஃபிரைட் வாலர் ஒரு போலீஸ் உளவாளி, பிரச்சனை ஏற்படுத்த அனுப்பி வைக்கப்பட்டவர் என்ற வதந்தி நகர் முழுவதும் சுற்றியது. அதனால்தான் அவர் கூட்டத்தில் இருக்கவில்லை. பிறருக்கு எதிராக அரசுத் தரப்பு சாட்சியாக மாறினார் என்று பலரும் நம்பினார்கள். வழக்கு விசாரணையின் போதும், அதன்பிறகும் அவரது வீட்டு வாடகை, பிற செலவுகளை சிகாகோ தெரு போலீஸ் நிலையத்தின் கேப்டன் ஷாக் தான் செய்தார்.

சுமார் ஏழரை மணிக்கு ஆரம்பமாவதாக இருந்த அந்தக் கூட்டத்தைப் பற்றி 20000 நோட்டீசுகள் அச்சடிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டன. 7.30 மணி அளவில் 2500 க்கும் மேற்பட்டோர் கூடியபின்னும், பேச்சாளர்கள் யாரும் வராததால் பலர் வெறுப்பில் திரும்பிச் சென்றனர். ஹேமார்க்கெட் சதுக்கத்திலிருந்து 50 கட்டடங்கள் தள்ளி (இது அரை  block  தூரம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 100 கட்டட தூரத்தை அமெரிக்கர்கள் block  என்பார்கள். மொ-ர்) டெஸ்பிளெய்ன்ஸ் தெருவில் கிரேன்ஸ் சந்து அருகே யாரோ நிறுத்திச் சென்ற பழைய வண்டி மீது நின்று ஆகஸ்ட் ஸ்பைஸ் பேச ஆரம்பித்த போது மணி 8.30 இருக்கலாம். ஸ்பைசுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. பார்சன்ஸ், ஃபெல்டன், இல்லை வேறு யாராவது உதவிக்கு வந்து, கூட்டத்தில் பேசினால் நன்றாக இருக்குமே என்று ஆள் அனுப்பினார். எனவே, கூட்டத்தில் பேசியவர்கள் யாரும், கூட்டத்தைத் திட்டமிட்டவர்கள் அல்ல. ஃபெல்டனுக்கும், பார்சன்சுக்கும், அவர்கள் பேசுவதற்கு பதினைந்து நிமிடங்களுக்கு முன்புவரை இப்படி ஒரு கூட்டம் நடப்பதே தெரியாது.

சிகாகோ போலீஸ்துறையும், கேப்டன் போன்ஃபீல்டும் எதிர்ப்புத் தெரிவித்த போதும், ஹேமார்க்கெட் கூட்டத்திற்கு மேயர் கார்ட்டர் ஹாரிசன் அனுமதி வழங்கியிருந்தார். மேயர் அனுமதித்த சட்டபூர்வமான கூட்டம் என்பதால்தான் இத்தனை மக்கள் கூடியிருந்தார்கள்.

ஜனநாயக் கட்சியைச் சேர்ந்த ஹாரிசனுக்கு, 1879ல் அவர் முதன்முறையாக மேயராகத் தேர்வானதிலிருந்தே போலீஸ் துறையைக் கட்டுப்படுத்துவதில் சிரமங்கள் இருந்தன. நகரத்தின் தொழிலாளர்கள் அவரை மிகவும் நேசித்தார்கள். சிகாகோவின் குடியரசுக் கட்சி முதலாளிகள் கலக்கமுறும் வகையில் அவர் நகர நிர்வாகத்தில் பல சோஷலிஸ்டுகளை நியமித்திருந்தார். மேயரின் உத்தரவை மீறி, இன்ஸ்பெக்டர் போன்ஃபீல்ட், கேப்டன் ஷாக் போன்ற போலீஸ்காரர்கள் வெளிப்படையாகவே பிங்கர்ட்டன் நிறுவனத்தோடும், முதலாளிகளோடும் தொடர்ந்து வேலைபார்த்துக் கொண்டிருந்தார்கள். போலீஸ் அடக்குமுறை, போன்ஃபீல்ட், ஷாக் போன்றோர் மீது மக்களுக்கு இருந்த வெறுப்பு ஆகியவற்றை வெட்ட வெளிச்சமாக்கவே மேயர் இக்கூட்டத்திற்கு அனுமதி தந்திருக்கலாம்.

மேயர் ஹாரிசன் ஹேமார்க்கெட் கூட்டத்திற்கு சீக்கிரமே வந்து, கிட்டத்தட்ட முடியும்வரை இருந்தார். ஆகஸ்ட் ஸ்பைசின் சுருக்கமான உரைக்குப் பின் ஆல்பர்ட் பார்சன்சின் ஒருமணி நேரப் பேச்சு முடிந்து, சாமுவேல் ஃபெல்டன் பேச ஆரம்பிக்கும் போது பத்து மணி அளவில் அவர் கிளம்பினார். தெற்கே டெஸ்பிளெய்னஸ் தெரு போலீஸ் நிலையம் சென்று கூட்டம் முடிந்து விட்டதால் போலீஸ்காரர்களை வீட்டுக்கு அனுப்பிவிடலாம் என்று போன்ஃபீல்ட், வார்டிடம் சொன்னார். பிரச்சனை ஏற்பட்டால் சமாளிக்க போலீஸ் நிலையத்தில் 176 போலீஸ்காரர்களை வைத்திருக்க அவர் அனுமதித்திருந்தார்.

அப்படியே வீட்டிற்குப் போகாமல் மீண்டும் கூட்டத்திற்கு வந்து சிறிது நேரம் இருந்துவிட்டு, தன் வெள்ளைக் குதிரையில், மேற்கே ஆஷ்லாண்ட் சாலையில் இருந்த தனது மாளிகைக்குச் சென்றார். போன்ஃபீல்ட் தொழிலாளர் போல் உடையணிந்த பல போலீஸ்காரர்களை போலீஸ் நிலையத்திற்கும், கூட்ட இடத்திற்கும் இடையே நடமாட விட்டிருந்தார். மேயர் கிளம்பிச் சென்றதும் அவர்கள் போன்ஃபீல்டிற்குத் தகவல் தர, வார்டும், போன்ஃபீல்டும் தமது ஆட்களுக்கு கூட்டத்தைக் கலைக்கச் சொல்லி உத்தரவிட்டனர். 10.30 க்கு மேயர் ஹாரிசன் உடைமாற்றி, படுக்கச் செல்லும்போது, குண்டுச் சத்தமும், துப்பாக்கி சுடும் சத்தமும் கேட்டன. போன்ஃபீல்ட் ஏன் மேயரின் உத்தரவை மீறினார், மேயர் அந்த இடத்தை விட்டுப் போக வேண்டும் என்று ஏன் பதட்டமாக இருந்தார் என்பது இப்போதும் மர்மமாகவே இருக்கிறது.

போலீஸ் தாக்கும்போது சுமார் 1000 முதல் 3000 மக்கள் கூட்டத்தில் இருந்ததாக பல வரலாற்று நூல்கள் கூறினாலும், வார்ட், போன்ஃபீல்ட் தலைமையில் 176 போலீஸ்காரர்கள் தாக்கியபோது உண்மையில் சுமார் 200 தொழிலாளர்கள்தான் இருந்தனர். கூட்டங்களைக் கட்டுப்படுத்த, பல மாதங்களாகப் பயிற்சி செய்துவந்த புதிய வகை ராணுவ அணிவகுப்பைப் போலீசார் பயன்படுத்தினர். பக்கத்தில் இருந்த தியேட்டரிலிருந்து வெளியே வந்தவர்களும் தாக்கப்பட்டனர். திடீரென, இன்றுவரை யாரென்று தெரியாத ஒருவரால் மர்மமான வெடிகுண்டு ஒன்று வீசப்பட்டது.

இப்போது, உலகெங்கும் பல இடங்களில் குண்டுகள் வீசப்படுவதாக நாம் தினமும் படிக்கிறோம். ஆனால் அமெரிக்காவில் இப்படி குண்டு வீசப்பட்டது இதுதான் முதல் தடவை. இந்த குண்டு எட்டு மணி நேர வேலை இயக்கத்திற்கு எந்த வகையிலும் உதவவில்லை. உண்மையில் அது முதலாளிகளாலும், செய்தித்தாள்களாலும் தொழிலாளர் இயக்கத்தையும், குறைந்த வேலை நேரப் போராட்டத்தையும் அழிக்கப் பயன்படுத்தப்பட்டது. மறுநாள் காலை, மே 5 புதனன்று, கார்ட்டர் ஹாரிசனே ‘ராணுவச் சட்டத்தைப்’ பிரகடனப்படுத்த நேர்ந்தது. ‘சட்டம் ஒழுங்கு’ பிரச்சனையில் மென்மையாக நடந்து கொள்வதாகத் தோற்றமளித்துவிடக் கூடாது என்பதற்காக பல வாரங்கள் அவர் போன்ஃபீல்டுடனும், முதலாளிகளுடனும் உடன்பட்டுச் செல்ல நேர்ந்தது.

Related posts