You are here
கட்டுரை சா.க. பக்கம் 

சிற்றிதழ்கள்!

சா. கந்தசாமி

சிற்றிதழ் என்றால் சிறிய இதழ். சாதாரணமான காகிதத்தில் குறைந்த எண்ணிக்கையிலான பக்கங்களில் அச்சிடப்படுவது. விற்பனை அதிகம் கிடையாது. சரியான தேதியில் ஒழுங்காக வெளிவராதது. இரண்டு மூன்றாண்டுகளுக்கு மேல் ஜீவிதமற்றது. அதிகமான வாசகர்கள் பார்வையில் படாதது என்றெல்லாம் சொல்லப்படுகிறது.

சிற்றிதழ்கள் தங்கள் மீது சொல்லப்படும் குற்றம் குறைகளையெல்லாம் புறந்தள்ளிவிட்டு படைப்பிலக்கியத்தை உயிர்ப்புடன் வைத்துக் கொண்டிருக்கின்றது. சிற்றிதழ் என்பது புதிய சோதனை,  புதிய முயற்சி என்பதைச் சார்ந்தது. அது ஒரு நவீன இயக்கியம். மரபு என்பதற்கும், ஏற்கப்பட்டது, அங்கீகாரம் பெற்றது என்பதற்கும் எதிரானது. அதற்கு எழுத்தாளனே முக்கியம் கிடையாது, எழுத்து என்பதுதான் முக்கியமானது. புத்தம் புதிய படைப்பு எந்த வயதினரால் எழுதப்பட்டாலும் அதனை ஏற்று வெளியிட்டு நிலைநாட்டுவது என்பது சிற்றிதழ் மரபு.

நூற்று ஐம்பதாண்டு காலமாக வெகுஜனரசனை கிளுகிளுப்பூட்டும் ஆபாசமான எழுத்து, போலியான சம்பிரதாயம், நகைச் சுவை எழுத்து என்பதற்கெல்லாம் எதிராக நேரடியாகவும் – மறைமுகமாகவும் செயல்பட்டு வருவதுதான் சிற்றிதழ்.

1840-ஆம் ஆண்டில் அமெரிக்க சிந்தனாவதி தோரோ மலினமான கருத்துக்கள், இலக்கியங்கள் மீது கொண்ட வெறுப்பால் – எதிர்க்குரலான சிற்றிதழ் தொடங்கினார். நான்காண்டுகள் நடத்தினார். அதுவே அதிகம் என்றுபட்டது போலும். நிறுத்திவிட்டார். அவர் சிற்றிதழ் பெயர் டயல். டெலிபோனில் சுழற்றுவதுதான். 1894ஆம் ஆண்டில் அமெரிக்காவில் இலக்கியச் சிற்றிதழ் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. ஒரு சிற்றிதழ் நிற்கும்போது இன்னொரு சிற்றிதழ் தோன்றும் என்பதுதான்.

சிற்றிதழ்கள் தனித்தன்மையுடன் வந்து கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு சிற்றிதழும் தன்னளவில் வேறுபட்டது. சிற்றிதழ் என்று கோட்பாட்டில் மட்டுந்தான் ஒன்று. எனவேதான் சிற்றிதழ்கள் சண்டைபோடுகின்றன. மூர்க்கமாக எழுதுகின்றன. இலக்கிய வன்முறையை நிலைநாட்டுகின்றது. இங்கிதம், மரியாதையில்லாமல் எழுதுகின்றன என்று குற்றம் காட்டப்படுகின்றன. அது ஐரோப்பிய, அமெரிக்க சிற்றிதழ்களுக்குத்தான் என்பது இல்லை. இந்தியாவில் வெளிவரும் தமிழ், இந்தி, வங்காளி, மராத்தி என்று பல்வேறு மொழி சிற்றிதழ்களுக்கும் சொல்லப்படுவதுதான். ஆனால் அவையெல்லாம் கவனத்தில் கொள்ளத்தக்கவை இல்லை. ஏனெனில் சிற்றிதழ்கள் புகழ் பெற, பணம் சம்பாதிக்க, விருதுகள் பெற, பட்டங்கள் வாங்க நடத்தப்படுவதில்லை.

அசலான இலக்கியம் என்று நம்புவது – வேறு எந்தப் பத்திரிகையும் வெளியிட முடியாத – விரும்பாத படைப்புக்களை வெளியிடவே சிற்றிதழ்கள் நடத்தப்படுகின்றன. படைப்பு போலவே கறாரான விமர்சனமும் சிற்றிதழ்களில் முதன்மை பெறுகின்றன. அதனால் புரியாதவற்றை – ஒழுங்கு முறையில் எழுதப்படாதவற்றை சிற்றிதழ்கள் வெளியிடுகின்றன; விமர்சனம் என்ற பெயரில் புகழ் பெற்றவர்களின் படைப்புக்களை அவதூறு செய்கின்ற சிற்றிதழ்கள் தரம் என்று சொல்லிக் கொண்டு புரிந்து கொள்ள முடியாததை எல்லாம் வெளியிட்டுவிட்டு புரியவில்லை என்பதற்கு நாங்கள் பொறுப்பில்லை என்று வாசிக்கிறவர்கள் மீது குற்றம் காட்டுகிறார்கள், ஆனால் சிற்றிதழ்கள் தான் வாசிக்கப் படுவதில்லை. ஆயிரத்தில் இருந்து முன்னூறு பிரதிகள் வரையில் அச்சிட்டு விட்டு, மூன்று லட்சம் பிரதிகள் விற்பனையாகி, ஐந்து லட்சம் வாசகர்கள் படிக்கும் பத்திரிகைகளை கேலி செய்கிறார்கள். அதன் ஆசிரியர்களையும், வாசகர்களையும் நிலைகுலைய வைக்கிறார்கள். அது மரபுக்கும் நெறிக்கும் எதிரானது என்கிறார்கள். ஆனால் அவர்கள் சொல்வது எல்லாம் அவர்கள் அறியாததும், அறிந்து கொள்ளவே முடியாததுந்தான் என்பதை சிற்றிதழ்கள் நிலைநாட்டி வருகின்றன. சிற்றிதழ்கள் காலத்தின் கட்டாயம். அதன் வெற்றி என்பது அது வெளியிடும் படைப்புக்கள் தான்.

தமிழில் வெகுஜன பத்திரிகைகள் பரவலாகப் படிக்கப்பட்டு வந்தபோதே சிற்றிதழ்கள் தோன்ற ஆரம்பித்துவிட்டன. மணிக்கொடி, கலைமகள் எல்லாம் வெகுஜன பத்திரிகையாகவும் இல்லாமல் சிற்றிதழாகவும் இல்லாமல் இடைத்தரமான பத்திரிகைகளாக இருந்தன. அவற்றில் வெகுஜன ரசிப்புக்கு ஏற்ற கதைகள், கவிதைகள் வெளிவரும். அதுபோல முதல் தரமான சோதனைக்கான தரம் கொண்ட கதைகளும் வெளிவரும். அதுதான் அவற்றின் இலக்கியத்தரம். மணிக்கொடி, கலைமகள் இதழ்களில் சிறுகதைகள் எழுதிக் கொண்டு, தினமணியில் துணையாசிரியராகப் பணியாற்றிய புதுமைப்பித்தன் சிற்றிதழ் ஒன்றைத் தொடங்கி நடத்த எண்ணினார். அதற்கு சோதனை என்று பெயர் கூட வைத்தார். ஆனால் அவர் சினிமாவிற்குச் சென்றதாலும் பொருளாதார வசதியில்லாமல் போனதாலும், உடல்நிலை பாதிக்கப்பட்டதாலும் சோதனை வெளிவராமல் போய்விட்டது.

சிற்றிதழ் என்பதைத் தாண்டி கம்யூனிஸ்டு சித்தாந்தத்தோடு ‘சரஸ்வதி’ இதழை வ.விஜயபாஸ்கரன் நடத்தினார். சரஸ்வதி முற்போக்கு இலக்கியம் என்பதை முன்னெடுத்துச் சென்றது. அது சிற்றிதழ் தளத்தைப் பரந்துபட்ட அளவில் விரிவுபடுத்தியது.

1959-ஆம் ஆண்டில் சி.சு. செல்லப்பா ‘எழுத்து’ என்ற சிற்றிதழ் ஒன்றைத் தொடங்கினார். இலக்கியம் என்ற ஒன்றே அதன் பிரதான இலட்சியம். விமர்சனத்தின் மூலமாக தரமான இலக்கியத்தை ஸ்தாபிக்க முடியும் என்ற எண்ணத்தோடுதான் எழுத்து தொடங்கப்பட்டது. விமர்சனத்தின் குரல் என்று எழுத்து தன்னைப் பிரகடனப்படுத்தி கொண்டது. ஆனால் விரைவிலேயே அது புதுக்கவிதைக்கான இதழாகியது. ந.பிச்சமூர்த்தி, க.நா.சுப்பிரமணியம், சி.மணி, எஸ். வைத்தீஸ்வரன், தர்மு சிவராமு, தி.சோ.வேணுகோபாலன் புதுக்கவிதைகளை வெளியிட்டது. தமிழில் புதுக்கவிதை என்பதை ஓர் இலட்சியமாகக் கொண்டு அதனை வெளியிட்டது எழுத்துதான்.

எழுத்து அதிகமான காலம் வெளிவந்த சிற்றிதழ். அதில் வெங்கட் சாமிநாதன், தர்மு சிவராமு இருவரும் நிறைய எழுதினார்கள். இலங்கைவாசியான சிவராமு இலக்கிய ஈடுபாட்டின் காரணமாகத் தமிழகம் வந்து எழுத்தில் எழுதினார். வெங்கட் சாமிநாதன் டில்லியில் வேலை பார்த்துக்கொண்டு விமர்சனக்கட்டுரைகள் எழுதினார். தமிழில் சிற்றிதழ் என்பது சண்டைக்கானது என்பதை சிவராமுவும், வெங்கட் சாமிநாதனும் நிலை நிறுத்தினார்கள். வெங்கட்சாமிநாதன் எழுதுவது இலக்கியமாக இல்லாவிட்டாலும் அவர் குரல், தொனி கவர்ச்சிகரமானது. பல்வேறு அம்சங்கள், சினிமா, இசை, நடனம், ஓவியம், சிற்பம், கூத்து பற்றி படித்து தெரிந்து கொண்டு அதனை உரத்த குரலில் சொல்லி வருகிறார். அவர் சிற்றிதழ்களில் எழுதி உலகம் முழுவதிலும் அறியப்பட்டவராக இருக்கிறார். அதனையும் சிற்றிதழ் சாதனை என்றே குறிப்பிட வேண்டும்.

சிற்றிதழ் என்பதற்கு ஒரு நோக்கம், ஒரு பார்வைதான் என்பது கிடையாது. அது பல நோக்கங்களும், பார்வைகளும் கொண்டது. நேரடியாகக் கிடைக்கும் பலன் என்பதைத் தாண்டி அது பல விளைவுகளை பல தளங்களில் ஏற்படுத்துகிறது. புது சிற்றிதழ்கள் தோன்றவும் சிற்றிதழ்களே காரணமாக இருக்கின்றன.

க.நா.சுப்பிரமணியம் அறுபதாண்டுகாலமாக சிற்றிதழ் ஆசிரியர். அவர் சந்திரோதயம், சூறாவளி, இலக்கிய வட்டம் என்று மூன்று இலக்கியச் சிற்றிதழ்கள் நடத்தினார். படைப்பு, விமர்சனம், மொழிபெயர்ப்பு என்று மூன்று தளங்களில் இருந்தது. ஆனாலும் அவர் செயல்பாடுகள் எல்லாம் முழுக்க முழுக்க சிற்றிதழ் என்பதையே சார்ந்து இருந்ததென்று சொல்லமுடியாது. அதுவும் ஒரு விமர்சனம்தான். விமர்சனம் என்பதற்காகவே சிற்றிதழ்கள் நடத்தப்படுகின்றன. படைப்பின் மீதும், விமர்சனத்தின் மீதும் விமர்சனந்தான். மேலும் மேலும் அசலானது, தரமானது என்பதை அடையவே சிற்றிதழ்கள் பாடுபடுகின்றன. அதில் வெற்றி தோல்வி என்பது கிடையாது. அது எங்கள் இதழின் வெற்றி என்றோ, தோல்வி என்றோ சிற்றிதழ் உரிமை கொண்டாடுவதில்லை. அதுதான் முக்கியம். அதன் தனித்தன்மை, சமரசம் அற்ற இலக்கிய ஈடுபாடு, புதிய படைப்புக்களைக் கண்டறியும் ஆற்றல் என்பதால் எப்பொழுதும் சிற்றிதழ்கள் மதிப்படைகின்றன. அதனால் இளைஞர்கள், முதியவர்கள் எல்லாம் சிற்றிதழ் நடத்த முன்வருகிறார்கள்.

நோபல் பரிசு பெற்ற அமிர்த்தியா சென், ஆங்கில மொழியில் லிட்டில் மேக்கஸின் என்று சிற்றிதழை நடத்தி வருகிறார். அதில் இந்தியமொழிச் சிறுகதைகள், புதுக்கவிதைகள் எல்லாம் வெளிவருகின்றது.

சிற்றிதழ்களே ஒவ்வொரு மொழியிலும் தரமான அசலான படைப்புக்கள் வெளிவருவதற்கும், ஆக்கப்பூர்வமான விமர்சனத்திற்கம் அடிப்படையாக இருக்கின்றன.

Related posts