You are here

சா.கந்தசாமி என்ற பயிற்சியாளன்!

நா. விச்வநாதன்

சா.கந்தசாமியின் படைப்புலகம் தனியானது. சிக்கலற்ற வார்த்தைப் பயன்பாடுகள் அழகானவை. வாசகனை அச்சப்படுத்தும் நோக்கமேதும் இல்லாமல் இயங்கும் அவரது கை லாவகம் மேன்மையானது. தனக்கு முன்னே சென்றோர் பாதையில் பயணிப்பதைத் தவிர்ப்பவர். தனிவழி என்பது சிரமமானாலும் அனுகூலம் நிறைந்தது. புதிய பாதையில் இதுவரை கேட்டிராத சப்தங்களைக் கேட்கலாம். வண்ண வண்ண – இதுவரை பார்த்தே இராத அழகிய பூச்சிகளைப் பார்க்கலாம். புதுப்புது செடிகளை மலர்களை – அவற்றின் வாசனையை நுகரலாம். இது சவாலானது என்றாலும் தேர்ந்த கலைஞன் விரும்பி ஏற்கும் தனிவழி மகத்தானது. அதனால்தான் வெகு லேசான விஷயங்களையும் அதன் அசல் ஆகுருதியோடு துல்லியமாகக் காட்டமுடிகிறது. இது சாயாவனத்திலிருந்தே அடையாளம் காணப்பட்டு வந்து இன்றைய எல்லாமாகிய எழுத்துவரை சீராக இருக்கிறது.

நடைப்பயிற்சிப் பேச்சு என்பது சாதாரணமானதல்ல. தஞ்சாவூரில் க.நா.சு., தி.ஜா., கரிச்சான் குஞ்சு, எம்.வி.வி., ஜி.நாகராஜன்,  கி.ரா., முதலிய ஆளுமைகளோடு ரயிலடியிலிருந்து கிளம்பி பொடி நடையாக பெரியகோவிலுக்கு வந்து சேருவோம். அப்போது நிகழ்ந்த உரையாடல்களைப் பதிவு செய்திருந்தால் தமிழுக்குப் பெரும் புதையல் கிடைத்திருக்கும்.  காற்றோடு போனது. மீனாட்சி சுந்தரம்பிள்ளையும் உ.வே.சா.,வும் பட்டீச்வரத்திலிருந்து கும்பகோணம் வரை பேசிக் கொண்டே வருவார்களாம். குறுந்தொகைக் காட்சிகளோ சிந்தாமணியின் புதிய உரையோ மணிமேகலையின் ஆராய்ச்சித் தொகுப்போ கிடைத்திருக்கும் என்பார்கள். நடைப்பயிற்சிப் பேச்சுக்கள் சுதந்திரமானவை. மெருகு பூசிக்கொள்ளாதவை; உண்மையானவை. சா. கந்தசாமி அவற்றைப் பதிவு செய்து விட்டது முக்கியமானதுதான். உலக இலக்கியத்திலிருந்து – இலக்கியப் பெருமிதம் வரையான இருபத்தெட்டு சித்திரங்களும் அசலானவை, அரிதானவை.

புத்தகங்கள் எப்போதும் பரவசமூட்டுபவை. அதன் புதுவாசனை அல்லது அதன் பழைய பழுப்புத்தூசி வாசனை  கிளர்ச்சியூட்டுபவை. பேரிலக்கியங்கள் என்பதில்லை. தனிமனிதன் தன் சொந்த வாழ்க்கை பற்றி நாணயமாக எழுதப்பட்டதுதான் நிலைத்திருக்கிறது. ‘புது எழுத்து’ கட்டுரையில் விவரிக்கிறார். உண்மையில் அது இதயத்திலிருந்து வருவதால் பேரிலக்கியமாகிறது. இவ்வாறான எழுத்துக்கள் முதன்மை பெறவேண்டும். தலைமையேற்க வேண்டும். நாணயமான எழுத்துக்களே நிலைபெறும்; மொழிக்கு வளம் கூட்டும்.

இறப்பு என்பது நிகழ்வுதான் இதையே பெருமை உடைத்து என்பார் வள்ளுவர். ‘சாக்குருவி செத்துப் போயும் சாவு நீளலாச்சு. பின்னரும் மனிதர் பிறந்தனர் பின்னரும் மனிதர் வாழ்ந்தனர் என்பார் ந. பிச்சமூர்த்தி. ‘ம்ருத்யோர் மா அம்ருதம் கமய…’ என்னும் உபநிஷத் மரணத்திலிருந்து மரணமில்லாப் பெருவாழ்வு என்பது எச்சம் தான். அவரவர் எச்சத்தாற்காணப்படும் என்று தமிழாசான் சொன்னது இதைத்தான். எச்சம் என்பது பல் பொருள் உடைத்து. அது கந்தசாமியின் மொழியில் புத்தகம் அல்லது ஜீவிதம். உண்மைபற்றிப் பேசும் சொற்களுக்குப் புதுப்புது அர்த்தங்கள் தோன்றும். இது அதிசயமல்ல. இயற்கையானதுதான். இலக்கண விதிகளுக்குள்ளும் அகராதிகளுக்குள்ளும் இதன் அசல் பொருளைத் தேடமுடியாது. ‘புது எழுத்து’ கட்டுரையை வாசித்தபின்னரான தாக்கம் அழுத்தமானது.

ஒரு நூலைக் கையிலெடுத்தவுடன் அவன் அதன் வாசகனாக ஆகிவிடுவதுதான் இயல்பானது. விமரிசகன் திறனாய்வாளன் என்பதெல்லாம் பிறகானது. வாசகப்பார்வை என்பது சரியானது. வாசகனுக்குள் உறைபவன்தான் விமரிசகன். வாசக அனுபவங்களுக்கு எழுத்து வடிவம் கொடுப்பவன் திறனாய்வாளன். நன்றாக சொல்லப்பட்டது நன்றாக சொல்லப்படாதது என இரண்டுதான் சரியானது. எழுதும் பொருள் எதுவாயினும் என்? சிறந்த படைப்பு வாழ்விற்கு அருகில் கொண்டு வர முடியும். ‘பதிலுக்கான கேள்வி’ குறித்து இப்படியான பார்வைதான் சரியானது. முதலில் வாசிப்பு என்பது அறிவு என்ற கருத்தை முற்றாகத் துறக்க வேண்டும். அறவுரைகளால் நிரப்பப்பட்ட தமிழ்ப்பிரதேசத்தில் அவைதாண்டிய எதையும் ஏற்றுக்கொள்ளும் மனோபாவம் பெரும்பாலும் பலருக்கு வாய்ப்பதில்லை.

சா.கந்தசாமியின் எழுத்துக்களை அணுகுவதற்கு இம்மாதிரியான பிரத்தியேகத் தகுதிகள் வேண்டும்.

கெட்ட புத்தகம், இலக்கிய சர்ச்சை, வாசிப்பு என்னும் வசீகரம் எனவான இவற்றை வாசிப்பு தளத்தில் ஒரேமாதிரியான அடுக்கில் வைத்து வாசிக்க வேண்டும். வாசிப்பு என்பது வசீகரமானது என்பார் க.நா.சு. தனது ‘வாசிக்கும் கலை’ என்ற கட்டுரையில். எளிய குடும்பத்திலுள்ளோர் வரலாறு எழுதப்படுவதேயில்லை. அதனால் வாசிக்கும் வாய்ப்பும் இல்லை. ஆனால் எங்கோ ஓரிடத்தில் ஏதோ ஒரு மொழியில் பதிவாகியிருக்கும். அதனால்தான் எளியமனிதர்கள் சரித்திரப்பக்கங்களிலிருந்து விடுபட்டுப் போய்விடுவதில்லை. அதில் நம் எளிய மேதைகளின் அடையாளத்தைக் காணலாம்.

சா. கந்தசாமி சொல்வதைப்போல ஒரு மனிதனால் எழுதப்படும் புத்தகம் எல்லோருக்குமானதுதான்.

இலக்கியச் சர்ச்சை குறித்துப் பேசுகிறார்கள். காலகாலமாய் விவாதிக்கிறார்கள். காலம்தாண்டியும் இருப்பதுதான். எந்தப் பொருள் குறித்து சர்ச்சையோ விவாதங்களோ அந்தப் பொருளின் மேன்மையை இயல்பாக வெளிப்படுத்தும் அல்லது உறுதிப்படுத்துவதாக அமைந்துவிடும். உண்மையை ஒருபோதும் நிரந்தரமாக மறைத்துவிடமுடியாது. இயற்கையில் பெயர்களும் பிரதிபெயர்ச்சொற்களும் இல்லை. எனவே நாம் அனுபவம் என்ற சொல்லையே பயன்படுத்த முடியும் என்பது தவறானது. அனுபவித்துக்  கொண்டிருத்தல் என்ற சொல்லின் பயன்பாடே சரியாக இருக்கும். இதுவொரு ஜென் கோட்பாடு. தமிழ்ச்சூழலில் இது தாராளமாகப் புழங்க வேண்டும்.

‘வரலாற்றின் முரண்’ என்பது எப்போதுமே அழகிய தொடர்தான். அது மேலும் மேலும் யோசிக்கத் தூண்டும். உண்மைப் பொருளைக் கண்டடையும். நீண்ட பயணத்திற்கு வழி வகுக்கும். அது தளர்ச்சியும் சலிப்புமற்ற ஆனந்தமான பயணம்தான். வரலாறு எப்படி இருக்க வேண்டும் என்று விரும்பும் கெட்டிக்காரர்களாலயே அது எழுதப்படுகிறது. அதுவொரு பேராசை. தன் வரலாறே மனிதகுல வரலாறு என்ற இருமாப்புதான். இது காலகாலமாய் அனுமதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. மனிதன் அறிவு பெற்றவன்தான். எல்லா மனிதர்களுக்கும் ஞானம் உண்டு. பயிற்சி என்ற சொல்லாட்சியே ஒருவரிடமிருந்து பெறுவதும் கொடுப்பதும்தான். அன்றைய குருகுலவாசம் இதைச் செம்மையாகச் செய்திருக்கிறது என்பதில் தவறில்லை. குருகுலத்தில் நடந்திருப்பது பயிற்சியே. குருவைக் கடத்தல் என்பதுதான். குருவைத் தேடிப் போக வேண்டும், கண்டடைய வேண்டும், பயில வேண்டும். ஒருகட்டத்தில் குருவும் சீடரும் சமமாய் ஒன்றாதல் வேண்டும். அப்புறம் குருவைக் கடக்க வேண்டும். இது ஒரு ஞான பறிமாற்ற முறை. குருவும் கற்கிறார் சீடனும் கற்கிறான். ஏகதேசமான கற்றல் பயிற்சி பூரணத்துவம் பெற்றுவிடும். ஆசிரியரின் கூற்றை அவரின் பொருளில்லாது அதனினும் மேம்பட்ட பொருளில் வாசகன் புரிந்துகொள்வது உத்தமமானது.

சா. கந்தசாமியிடத்து இது நேர்கிறது.

எல்லாமாகிய எழுத்து-மொழி எல்லாவற்றுக்கு மானது. மொழி என்பது தன் அன்பை, நேசத்தை உணர்வுகளை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதே. உண்மையில் மொழி என்பதே அறிவு கிடையாது. ஆனால் மொழியின்மை மனிதகுலத்தைக் காரிருளில் ஆழ்த்திவிடக்கூடும். மனிதன் முதலில் பேசிய சைகைமொழி உண்மையானது. ஆனால் போதாமை கொண்டது. அறிவியல் வளர்ச்சியே மனிதச் சிந்தனையை இன்னும் பல மேல்தளங்களுக்கு கொண்டுசேர்க்கிறது. மொழியின் வழியாக எதைச் சொல்கிறோம்? உண்மை, பொய், மோசடி, கயமை எல்லாவற்றையும்தான் சொல்கிறோம். இது இயற்கையானதுதான். மனிதனின் மேன்மையான நேசமிக்க மனநிலையே மொழி எனும் கூராயுதத்தை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதை முடிவுசெய்கிறது. எல்லாவற்றிலும் இரண்டு இருக்கிறது. ஜென் கூறும் “எங்கே மாந்தர் இருக்கிறார்களோ அங்கே ஈக்களையும் காண்பாய், புத்தர்களையும்தான்” படைக்கும் திறமைக்கு மரியாதை மதிப்பீடு அவசியமில்லை. படைக்கும் பாவம் மட்டுமே நிஜமானது. இது எளிதில் வாசகனை சென்றடைந்து விடும்.

படைப்பிலக்கியம் எதற்கு?

படைப்பிலக்கியத்திற்கு இலக்கணம் ஏலாது. இதுவரை சொல்லப்படாதது எழுத்தால் எழுதப்படாததுதான். மனிதன் தோன்றிய காலம்தொட்டே இது இருக்கிறது. முகக்குறிப்புகளும் சைகைகளுமே இதன் இடத்தை நிரப்பின. பாட்டும் நடனமும் சிற்பமும் பயிற்சியால் மட்டுமே முழுமைபெறும். படைப்பிலக்கியப் படிப்பு என்பது இல்லாமலே போனது. பாடத்திட்டத்திற்குள்ளிருந்து படைப்பிலக்கியம் சம்பந்தமாக எதையும் எடுக்கமுடியாது. கடந்தகால ஞானவான்கள் தாம் அரிதில் முயன்று கற்ற கண்டடைந்தவைகளை மற்றவர்களிடம் ஆரம்பத்திலேயே திணிக்கிறார்கள். இது இன்றுவரை நீளுகிறது. இது பெரிய இடைவெளியை ஏற்படுத்தி விடுகிறது.  ஒன்று சேர முடியாத வகையில் இது ஆகிவிடுவதால் படைப்பிலக்கியம் எதற்கு என்பன போன்ற வினாக்களும் எழுப்பப்படுகின்றன.

நிறைவாக சா.கந்தசாமியின் இலக்கியப் பெருமிதம் குறித்துப் பேசுவது முக்கியம். ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். மொழி, படைப்பிலக்கியம் சார்ந்தவர்கள் பெரும்பான்மையினர் அல்லர், சிறுகுழுக்களே. அனைத்து தேடல்களும் பொருள்தேடும் அலைச்சலே. இலக்கியப் படிப்பும் பொருள் சார்ந்ததாக ஆகிவிட்டது. இவ்வாறான சிக்கல்களுக்கிடையேதான் இலக்கியம் செய்ய வேண்டியிருக்கிறது. இவ்வாறு செய்யப்படும் துளி இலக்கியத்திலும் அல்லது காத்திரமான ஒரு சொல்லிலும் கூட பெருமிதம் கொண்டாக வேண்டும்.

வாசிப்பனுபவம் அலாதியானது. வாசகனை நிறுத்தி நிறுத்தி யோசிக்கச் செய்து கொஞ்சம் கொஞ்சமாகத்தான் நகர்த்திக் கொண்டே போகும். புனைவுகளுக்கு இடமில்லை. மிகையான எதுவுமில்லை. சா.கந்தசாமி வாழ்தலின் எளிய கூறுகளை உற்று நோக்கியும் முழுமையாக அனுபவித்தும் ஒரு கலையை நேர்த்தியாக வாசகனுக்கு கொடுத்துப் பயிற்சி தருகிறார். தமிழ்ப் படைப்புலகத்திற்கு இந்த வரவு லாபகரமானது.

Related posts