You are here
அஞ்சலி ஆளுமைகள் வரலாறு 

கேப்ரியல் கார்ஸியா மார்க்வெஸ்

ஆதிக்க மொழியை எதிர்ப்புக் குரலாய் மாற்றிய ‘காபோ’

-வீ.பா. கணேசன்

Gabriel García Márquez

லத்தீன் அமெரிக்க இலக்கியத்தின் மாபெரும் ஆளுமையாய்த் திகழ்ந்த, அவரது ரசிகர்களால் செல்லமாக ‘காபோ’ என்று அழைக்கப்பட்டு வந்த கேப்ரியல் கார்ஸியா மார்க்வெஸ் ஏப்ரல் 17 அன்று அவரது 87வயதில் மரணித்து உலகெங்கிலும் உள்ள இலக்கிய ரசிகர்களை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தினார்.

20ஆம் நூற்றாண்டில் உலக இலக்கியத்தின் திசைவழியை மக்களின் கோபத்தை நோக்கித் திருப்பிய மாலுமி அவர். தங்கம் தேடிப்போய் புதியதொரு கண்டத்தைக் கண்டறிந்த கொலம்பஸை அடியொற்றி வந்திறங்கிய ஸ்பானிய, ஐரோப்பிய ஏகாதிபத்தியங்கள் அங்கிருந்த பூர்வ குடிமக்களை பூண்டோடு சிறைப்படுத்தி வட அமெரிக்கா, லத்தீன் அமெரிக்கா என தங்களது வேட்டைக்காடாக மாற்றிக் கொண்டன என்பதே வரலாறு.

1492 ஆம் ஆண்டில் கொலம்பஸ் தரையிறங்கியதிலிருந்து துவங்கிய இந்த வேட்டை பல்வேறு பெயர்களில் இன்றளவும் தொடர்ந்து கொண்டேதான் வருகிறது. எனினும் இந்த ஆதிக்கங்களை எதிர்த்த போராட்டமும் தொடர்ந்தே வருகிறது. 20ஆம் நூற்றாண்டில் லத்தீன் அமெரிக்காவை எப்படியாவது தன் ஆதிக்கத்தில் வைத்துக்கொள்ள தொடர்ந்து முயற்சித்து வரும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சதிச் செயல்களுக்கு எதிரான போராட்டம் தனியொரு வீரவரலாறு ஆகும்.

இந்த ஏகாதிபத்திய எதிர்ப்புக் குரலை எழுத்தில் வடித்து அதை உலகெங்கும் ஒலிக்கச் செய்த பெருமை மார்க்வெஸ்ஸையே சேரும். 1982 ஆம் ஆண்டில் சிறந்த இலக்கியவாதி என்ற வகையில் நோபல் பரிசை ஏற்றுக்கொண்டு அவர் நிகழ்த்திய ஏற்புரையில் லத்தீன் அமெரிக்காவின் தனிமையை சுட்டிக்காட்டி ‘‘லத்தீன் அமெரிக்காவின் யதார்த்தம் நீங்கள் கற்பனையில் கூடக் காணவியலாத கொடூரங்களையும் விநோதங்களையும் தன்னகத்தே கொண்டது. அந்த யதார்த்தங்களை விவரிக்க பாரம்பரியான உத்திகள் எதுவும் எங்களிடம் இல்லை என்பதே அந்தத் தனிமையின் சாரம் எனலாம்” என்று குறிப்பிட்டார்.

லத்தீன் அமெரிக்க நாடுகளை காலங்காலமாக ஆட்டிப்படைத்து வந்த கொடுங்கோலர்கள், அவர்களை எதிர்த்துப் போராடிய புரட்சியாளர்கள், நீண்ட காலப் பஞ்சம், பட்டினி, நோய், வன்முறை ஆகியவற்றிலிருந்தே தனது மாய யதார்த்தம் உருப்பெற்றது என்றார் காபோ. இந்த யதார்த்தத்தைப் பாரம்பரியமான சொல் வழக்குகளின் மூலம் சொல்ல இயலாது என்ற நிலையில்தான் இந்த மாய யதார்த்தம் தனக்குக் கைகொடுத்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.

நோபல் பரிசு ஏற்புரையின் இறுதியில் மார்க்வெஸ் தனது ஆழ்ந்த நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்! ‘‘என்னைப் போன்ற கதை சொல்லிகள் எதை வேண்டுமானாலும் நம்பக் கூடியவர்கள்; சின்னஞ்சிறு கனவுலகு ஒன்றைப் படைப்பதற்கு இன்னமும் நேரமிருக்கிறது என்று நம்பக் கூடியவர்கள்; மற்றவர்கள் எப்படிச் சாக வேண்டும் என்பதை வேறு எவரும் தீர்மானிக்க முடியாத அன்பு என்பது உண்மையான – மகிழ்ச்சி பொங்கும் ஒன்றாக இருக்கக் கூடிய, நூறாண்டுகாலத் தனிமையின் சந்ததியினர் இந்தப் பூமிக் கோளத்தில் நிரந்தரமாக வாழ்வதற்கான மறுவாய்ப்பு பெற்றவர்களாகத் திகழும் இந்தக் கனவுலகு!”

அரசியல் பிரச்சனைகளில் வெளிப்படையாகப் பேச வேண்டிய பொதுக்கடமை ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் உள்ளது என்பதில் மார்க்வெஸ் உறுதியாக இருந்தார். குறிப்பாக லத்தீன் அமெரிக்காவைத் தன் காலடியிலேயே வைத்துக் கொள்ள அமெரிக்க ஏகாதிபத்தியம் எடுத்த  முயற்சிகளைக் கடுமையாகக் கண்டித்துக் குரலெழுப்பிய இடதுசாரிக் கலைஞர் அவர். இந்த வெறுப்பு பரஸ்பரமாகவும் இருந்தது. உலகப் புகழ்பெற்ற எழுத்தாளராக அவர் திகழ்ந்த போதிலும் அமெரிக்க நாட்டிற்குள் நுழைய அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. நெல்சன் மண்டேலா தென் ஆப்ரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகும் கூட அவரது பெயரை தீவிரவாதிகள் பட்டியலிலிருந்து அமெரிக்கா நீக்கவில்லை என்பதை இத்தருணத்தில் நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும்.

இந்த ஏகாதிபத்திய உணர்வுதான் அவரையும் கியூபா அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோவையும் மிக நெருங்கிய நண்பர்களாகத் தொடர்ந்து நிலைநிறுத்தியது. லத்தீன் அமெரிக்க நாடுகளின் கொடுங்கோலர்கள் நிகழ்த்திய கண்மூடித்தனமான படுகொலைகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்பதையே அவரது எழுத்துக்கள் அடிநாதமாய்க் கொண்டிருந்தன. அவரது முதல் நாவலான ‘இன் ஈவில் ஹவர்’ 1962இல் வெளிவருவதற்கு முன்பாக 1955லும் 1961லும் இரண்டு குறுநாவல்கள் வெளிவந்தன. எனினும் 1967ஆம் ஆண்டில் வெளிவந்த ‘நூறாண்டு காலத் தனிமை’ என்ற நாவல்தான் அவரை உலகப் புகழ்பெற்ற எழுத்தாளராக உருமாற்றியது. இதுவரை 30 மொழிகளில் வெளிவந்துள்ள இந்த நாவல் ‘பைபிளுக்குப்பின் வெளிவந்த படைப்புகளில் ஓட்டுமொத்த மனித குலமும் படிக்க வேண்டிய முதல் படைப்பு’ என்ற பாராட்டைப் பெற்றது. அவரது கடைசி நாவலான ‘என்னை மனச்சோர்விற்கு ஆளாக்கிய விலைமாதர்களின் நினைவலைகள்’ 2004ஆம் ஆண்டில் வெளிவந்தது. அவரது வாழ்க்கை நினைவலைகளின் முதல் தொகுதி 2002ஆம் ஆண்டில் வெளிவந்தது. அவரோடு இறுதிவரை துணையிருந்த மெர்சிடஸ்ஸைக் காதலித்து மணம் செய்வது வரை இத்தொகுதி அமைந்திருநதது.

1999 ஆம் ஆண்டில் நோய் எதிர்ப்புச் சக்தியை சீரழிக்கும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் வாழ்க்கையின் இறுதி நாட்களில் அல்ஸிமர் எனும் நினைவிழப்பு நோயால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே முடங்கிக் கிடந்தார். கடந்த மார்ச் 6 ஆம் தேதியன்று அவரது 87வது பிறந்தநாளை ஒட்டி தன் ரசிகர்களை மார்க்வெஸ் சந்தித்தார். இதுவே அவரது கடைசிப் பொது நிகழ்ச்சி.

ஏகாதிபத்திய ஸ்பானிய மொழியைக் கொண்டே அடிமைப்பட்டுச் சீரழிந்த லத்தீன் அமெரிக்க மக்களின் துயரங்களையும் கோப ஆவேசத்தையும் எழுத்தில் வடித்து அதை உலகெங்கிலும் ஒலிக்கச் செய்த பெருமை பெற்றவராக மார்க்வெஸ் திகழ்ந்தார். கொடுங்கோலாட்சிக்கு எதிரான அவரது எழுத்துக்கள் மனிதகுலம் உள்ள வரையிலும் நிலைத்து நிற்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

Related posts