You are here

வசந்தி என்றொரு பெண்ணின் வாழ்க்கைச் சரிதம்

பி. சுகந்தி

image description

தெலுங்கு எழுத்தாளர் ஓல்கா அவர்களின் மானவி என்ற நாவல் ‘தொடுவானம் தொட்டுவிடும் தூரம்’ என்ற தலைப்பில் கௌரி கிருபானந்தன் அவர்களால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

நாவலைப் படிக்க விரித்தால் படித்து முடிக்காமல் மூட மனமில்லை. வாசிப்பை வேகமாக்கும் எழுத்து நடையும் கதை அம்சமும் நிறைந்துள்ள நாவல். முதல் பாதியைப் படித்துமுடிக்கும் போது சின்னத்திரையில் பார்க்கும் மெகா சீரியல் போல கதையில் அடுத்தடுத்த பகுதியைத் தெரிந்து கொள்ள மனம் ஆவல் கொள்கிறது.

கதையின் கதாநாயகி வசந்திக்கு இரண்டு பெண் குழந்தைகள், மூத்தவள் லாவண்யா, தன் தாயைப் போலவே கணவன், வீடு, மாமியார், குடும்பம் என உலகையே வீட்டிற்குள் சுருக்கிக் கொண்டவள், இளையவள் சவிதா வைசாக்கில் இஞ்சினியரிங் படிப்புடன் மாணவர் சங்கத் தலைவியும் கூட. சவிதா தன்னம்பிக்கையான பெண் ஆதலால், பட்டப்படிப்பை முடித்து விட்டு, கிணற்றுத் தவளையாய் கணவனையும் குழந்தைகளையும் சுற்றிச்சுற்றி வரும் தாயை பலமுறை கடிந்து கொள்கிறாள். வசந்தியின் கணவன் டாக்டர் சுரேஷ். வசந்தி தான் படித்த குண்டூரில் தன் சிநேகிதி ரோகிணியைப் பார்த்து மலரும் நினைவுகள் பலவற்றைப் பகிர்ந்துகொண்டு அவளுடன் சில நாட்கள் தங்கும் ஆவலுடன் இரயிலில் பயணிக்கும்போதே மனம் பட்டாம்பூச்சியாய் சிறகடிக்கின்றது. எனக்குள்ளேயே ஒரு ஏக்கப் பெருமூச்சு, எத்தனை பெண்களுக்கு திருமணம் முடிந்தபின் தன் சிநேகிதிகளின் வீட்டிற்கு சென்றுப் மலரும்  நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள முடிகிறது. ஆண்கள் யாருக்கும் அத்தகைய தடை இல்லையென்று நினைக்கிறேன். நண்பர்களோடு குற்றாலம், கோவில் என குடும்பத்தை மறந்து உற்சாகமாக சுற்றித்திரியும் ஆண்கள் பலரைப் பார்த்ததுண்டு.

வசந்தியின் தோழி ரோகிணி ஒரு டாக்டர். குடும்பத்தை கவனிக்க நேரமில்லாத ஒரு பெண். ஆனாலும் தன்னம்பிக்கை மிக்க பெண். ரோகிணியுடன் தன் தோழி சாந்தாவையும் எதிர்பாராத விதமாக சந்திக்கிறான் வசந்தி. சாந்தா திருமணமாகாத ஒரு தனிப்பெண். தன் வருமானத்தில் தம்பிதங்கைகளுக்கு திருமணம் செய்து முடித்துவிட்டு தான் திருமணம் செய்யாமல் தனியாக வாழ்கிறாள் என்பதை அறிந்த வசந்தி சாந்தா மீது பாசம் கொள்கிறாள். ஆண் துணை இல்லாதி வாழ்க்கை சாத்தியமா? என்ற கேள்வியை கேட்கிறாள். ஆனால் அடுத்த நிமிடமே இராதாகிருஷ்ணனுடன் சாந்தா தன் வாழ்வைப் பகிர்ந்து கொள்கிறாள் என்ற தெரிந்த வசந்தி பொங்கி எழுகிறாள். வேறுஒரு பெண்ணின் வாழ்வைக் கெடுத்து அப்படியொரு உறவு தேவையில்லை எனக் கோபம் கொள்கிறாள். இந்த உறவில் தவறேதும் இல்லையென பலமுறை விளக்கமுயன்ற சாந்தா வசந்தியிடம் தோற்றுப்போனாள். சாந்தாவின் வாழ்வை வெறுத்து ஒதுக்கி சண்டையிட்டு வீடுதிரும்பிய வசந்திக்கு பேரிடி காத்திருந்தது. தனது கணவன் சுரேஷ் தன்னுடன் பணிபுரியும் டாக்டர் நீலிமாவைக் காதலிப்பதாகவும், அவளுடன் தனது வாழ்க்கை இனிமையானதாக இருப்பதாகவும் எந்தவித மனசங்கடமும் இல்லாமல் சொல்லி முடித்தான். வீடு, பாத்திரங்கள், அலமாரிகள் சுத்தமான சமையலறை, கணவனுக்கு பிள்ளைகளுக்கு பிடித்த உணவு, இப்படி வீடு மட்டுமே உலகமாய் இருந்த வசந்திக்கு இச்செய்தி ஜீரணிக்க முடியாத ஒன்றாக இருந்தது. தனது அன்புமகள் லாவண்யாவும் அம்மாவின் ஆழ்மனதைப் புரிந்து கொள்ளாதவளாக அப்பாவிடம் தனக்கு சேரவேண்டிய சொத்துக்களை பிரித்து வாங்குகிறாள். வாழ்வை முடித்துக்கொள்ளும் மனதோடு இறுதியாக ஒரு முயற்சி. தனது கணவனை வசீகரிக்க எடுத்த அத்தனை முயற்சியும் தோல்வியிலேயே முடிந்தது. கணவனின் துணையில்லாத வாழ்வை நினைத்துப்பார்க்க முடியாத வசந்தி தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சிக்கிறாள். இம்முயற்சியும் தோல்விலேயே முடிந்தது.

இந்த நாவலில் வந்துள்ள சாந்தா டாக்டர் நீலிமா இவர்களின் வாழ்வு குறித்து இரண்டு கேள்விகளை முன்வைக்க வேண்டியுள்ளது. இவர்கள் இருவரும்  தனிப்பெண்கள். தனிப்பெண்கள் யாரும் ஒரு ஆணின் துணையில்லாமல் வாழ்வை நடத்த முடியாதா? அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் 2009ல் தனிப்பெண்களிடம் (விதவைகள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், திருமணமாகாதவர்கள்) தமிழகத்தில் ஒரு ஆய்வு நடத்தியது. தனிப்பெண்கள் சில அரசு நலத்திட்டங்களைப் பெருவதற்கு அந்த கிராமத்திலுள்ள ஆண்களின் உதவியை நாடும் பொழுது பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளானதாக ஆய்வு தெரிவிக்கின்றது.

அடுத்த கேள்வி, திருமணமான பெண்களை இப்படிப்பட்ட உறவுக்குள் காட்டமுடியுமா? டாக்டர் சுரேஷைப்போல் வசந்தி வேறொரு ஆணுடன் தொடர்பு வைத்திருப்பதை சுரேஷ் எதார்த்தமாக எடுத்துக்கொள்வாரா? கதையின் அடுத்த பகுதி மரணத்தின் விளிம்பைத் தொட்டுவிட்டு மீண்டுவந்த வசந்திக்கு மகள் சவிதாவும், ரோகிணியும் தாய் மனைவி என்ற வேஷத்தைக் கலைத்து மனுஷியாய் வெளியே வா என்று அழைத்து வானத்தைத் தொடும் நம்பிக்கை கொடுக்கின்றனர்.

தன் மகளுடன் வைசாக் சென்று தங்கியிருக்கும் போது நம்பிக்கை அளிக்கும் வாழ்க்கையின் அனுபவம் கிடைக்கிறது.

சவிதா வயதில் சிறியவளாக இருந்தாலும் மாணவர் அமைப்பில் அவளது  தலைமைப் பொறுப்பு களங்கமில்லாத ஆண் பெண் உறவுகள் அவளது வாழ்வை வசந்தகாலமாக மாற்றுகிறது. நாவலில் மாணவர் அமைப்பின் பணிகளும் அதன்  தன்னம்பிக்கையான செயல்களும் நம்பிக்கை அளிக்கும் போராட்ட அமைப்புகளும் சிறப்பாய் வர்ணிப்பு பெறுகின்றன. இறுதியாக தன் மகள் லாவண்யா கருவுற்றிருந்த செய்தியும் அம்மாவை உதவிக்கு அழைக்கும் கடிதத்தையும் படித்த வசந்தி, மீண்டும் அப்படியொரு வீட்டுச்சிறைக்குள் தன்னை அனுமதிக்காதது  அருமை.

மாணவர் அமைப்பிலிருந்து பெற்றோரின் ஆதரவில்லாமல் திருமணம் செய்து கொண்டு தன் வீட்டிற்கு வந்த அந்த கதாபாத்திரத்துக்கு பிரசவம் பார்த்து உதவும் அப்பகுதி சுவாரசியம். வைசாக் வசந்திக்கு புதுவாழ்வை புதுநம்பிக்கையை புதுப்பாதையை காட்டுவதாக நாவல் நிறைவடைகிறது.  வானம் வெகுதூரம் இல்லை. தொட்டுவிடும் தூரம்தான்!

Related posts