You are here

பரிணாமவியலும் சார்பியலும் பிரபஞ்சத்தைக் காண உதவும் இரு கண்கள்

காரல் சாகன்

காரல் சாகன் அண்டத்தின் ஏனைய இண்டுஇடுக்குகளில் வசிக்கும் வெளிக்கிரக உயிரிகள் குறித்து உலகின் கவனத்தை திருப்பியவர். நட்சத்திரங்களின் கதிர்வீச்சு அமினோ அமிலங்களை தோற்றுவிக்கும் இயல்புடையது என்பதை நிரூபித்ததன் மூலம் புவியில் உயிரிகளின் தோற்றத்திற்கு கூறப்பட்ட, கூறப்படும் Ôபுனித’ காரணிகளை உடைத்தவர். வெள்ளி கிரகத்தின் மேற்தரை வெப்பநிலையை துல்லியமாக நிறுவிய இவரது மற்றொரு கண்டுபிடிப்பு டாப்ளர் விளைவை நட்சத்திரங்களிலிருந்து கோள்களின் தொலைவு ஏற்படுத்தும் விளைவுகளுக்குப் பொருத்தி மற்றொரு சர்ச்சையை முடித்துவைத்தது. அயல்கிரகவாசிகள் ஏதேனும் இருப்பின் அவற்றுக்கு விளங்கும் ஆரம்ப சமிக்ஞை தகட்டை(Pioneer plaque) தயாரித்தவர் சாகன். அது வியேஜர் விண்கலத்தில் அனுப்பப்பட்டது.

அறிவியலை வெகுஜனங்களுக்கு எடுத்துச் செல்வதை தன் 600 அறிவியல் ஆய்வுரைகள், 20 அறிவியல் நூல்கள் மற்றும் அறிவியல் புனைகதைகள் வழியே பதிவுசெய்து வாழ்நாள் முழுவதும் அறிவியல் விழிப்புணர்வுப் போராளியாய் விளங்கிய காரல் எட்வர்ட் சாகன் 1934 சோவியத் யூனியனின் தற்போதைய உக்ரேனில் கமியாநெட்ஸ் – பொடில்ஸ்கி’ ஆடையகத்தின் தொழிலாளர்களில் ஒருவரான சாமுவேல் சாகனுக்கு மகனாகப் பிறந்தவர். நியூயார்க்கில் வளர்ந்தார். சிக்காகோ பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் இளம் அறிவியல் பட்டம் தொடங்கி விண்வெளி இயற்பியலில் முனைவர் பட்டம் (1960) பெற்றவர் சாகன். பிறகு தொடர்ந்து கலிபோர்னியா பல்கலைக்கழகம், ஹார்வர்ட் பல்கலைக்கழகம் உட்பட 1968 வரை போகும் இடமெல்லாம் சாகன் ஓரம் கட்டப்படுகிறார். கறாரான பரிணாமவியல்வாதி என்பதாலும் நாத்திகர் என்பதாலும் தொடர்ந்து போராட்டமே வாழ்க்கையாகிறது. கார்னல் பல்கலைக்கழகத்தில் வானியல் துறையில் முழுநேரப் பேராசிரியர் ஆனார் சாகன். விண் ஆராய்ச்சியில் அவரது அயராத உழைப்பால் விரைவில் நாசா ( NASA) ) வின் கவனத்தைப் பெற்று பின் நமது சூரியமண்டலம் கடந்த நாசாவின் அனைத்து முயற்சிகளுக்கும் உதவினார். செவ்வாய்கிரக பயணம் உட்பட பலவற்றுக்கும் அவரே முதன்மை ஆலோசகர். சந்திரனில் கால்பதிக்கச் செல்லும் விண்வெளி வீரர்களுக்கு அவர் அடிப்படைகளை விளக்கும் வல்லுனராக இருந்தவர். மரைனர், வாயேஜர், பயணீர், அப்பலோ இதெல்லாம் பல்வேறு நாசா வானியல் முயற்சிகளுக்கு காரல்சாகன் வைத்த பெயர்கள்தான். தனது Ôடிராகன் ஆஃப் ஈடன்” அறிவியல் வெகுஜன நூலுக்காக புலிட்சர் விருது பெற்றவர். இவரது காஸ்மாஸ் எ பெர்ஸ்னல் வாயேஜ் (Cosmos: A Personal Voyage) எனும் டிவி தொடர் உலகெங்கும் 60 மொழிகளில் ஒளிப்பரப்பாகி பெரும்புகழ் பெற்று பின் நூலாகவும் வெளிவந்தது.

தத்துவ அறிஞர் பிளேட்டோவின் தீவிர விமர்சகரான சாகன் அறிவியலில் என்ன நடக்கிறது என்பதை பொதுமக்களுக்குப் புரியும்படியான ஒரு மொழியில் விளக்குவது அறிவியலாளர்களின் கடமை என்பதை இறுதிவரை கடைப்பிடித்தவர். 1996ல் (டிசம்பர் 20) இறந்துபோவதற்கு சில மாதங்களுக்கு முன் அவர் அளித்த நேர்காணல் இது. Ôஎதையும் சந்தேகி’ எனும் தனது அய்யுருவாத ((Skeptical Science) அறிவியலைத் திறந்த மனதோடு பகிர்கிறரர் சாகன். சோவியத்களின் ஆதரவாளன் என முத்திரைக் குத்தப்பட்டு ரீகன் அரசு தன்னைக் கைது செய்து சிறையில் அடைத்ததையும் விஞ்ஞானியாக ஒருவரது கடமை என்ன என்பதையும் நேர்மையாகப் பதிவு செய்யும் உரையாடல்.

நேர்காணல்: ரான் வெஸ்டர்ன்
(நன்றி: யு டியூப்)
தமிழில்: இரா. நடராசன்

கேள்வி: குவைத்தின் எண்ணெய் வயல் தீ நீங்கள் எதிர்பார்த்தது போல தெற்காசியாவை பாதித்ததாக தெரியவில்லையே?

பதில்: குவைத்தின் அரசியலை உள்ளடக்கிய சதாம் உசேன் மீதான முதல் யுத்தம் பற்றவைத்த எண்ணெய் கிணறுகளிலிருந்து கிளம்பிய கார்பன் மோனாக்சைடு வாயுப்புகை என்பது நமது புவியில் பாதியை உயிரினமின்றி அழித்தொழிக்கும் ஆற்றல் மிக்கது. காற்றும் மேகக்குவியலும் அதை ஆசியாவின் பக்கம் தென்மேற்கு பருவக்காலத்தில் கடத்திச் செல்லும் அபாயம் இருந்தது. அதிர்ஷ்டவசமாக அப்படி நடக்கவில்லை. ஆனால் இப்போதும் ஸ்ட்ராடோஸ்பியர் முழுதும் வானில் கரும்புகை கார்பன் புகையாக சூழ்ந்துள்ளது. பெர்சிய வளைகுடா முழுவதும் இதனால் 4 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பசூடேற்றம் கண்டுள்ளதை ஆய்வுகள் நிறுவியுள்ளன. வளைகுடா யுத்தத்தின் தாக்கம் அறிவியல் பேரழிவாக தங்கும் அபாயம் இன்றும் தொடரவே செய்கிறது.

கே: ஸ்டீபன் ஹாக்கின்சுடனான உங்கள் நட்பு பற்றி சொல்லுங்கள்…

ப: ஹாக்கின்ஸ் அனைத்தையும் குறித்த ஒட்டுமொத்த கோட்பாட்டிற்கு எடுக்கும் முயற்சிகளின் தீவிர ஆதரவாளன் நான். இன்று நேற்றல்ல அவரது Ôதி பிரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம்’ (காலத்தின் சுருக்கமான வரலாறு) நூலுக்கு முன்னுரை நான் தான் எழுதினேன். ஸ்டிரிங் தியரியின் பல நூறு வடிவங்களை ஆய்வுசெய்து பிரபஞ்ச வடிவஇயலின் பரிணாமத்தை அறிய நடக்கும் இறுதி முயற்சிகளில் நாங்கள் இணைகிறோம். ஆனால் நான் அடிப்படையில் ஒரு கோட்பாட்டு இயற்பியலாளன் கிடையாது. விண்வெளி இயல் பயணம் சார்ந்த இயந்திர அறிவியலின் பக்கம் ஆரம்பக் காலத்திலேயே இடம்பெயர்ந்துவிட்டவன். அயல்கிரக உயிரிகள் கண்டிப்பாக உண்டு என்பதன் நம்பிக்கை எங்களை ஆழமாகப் பிணைக்கிறது.

கே: அறிவியலின் பக்கம் எப்படி வந்தீர்கள். உங்கள் ஆரம்பகால முயற்சிகள் பற்றி தெரிந்து கொள்ளலாமா?

ப: என் பெற்றோர்கள் விஞ்ஞானிகள் அல்லர். அறிவியல் பற்றி அவர்களுக்கு தெரிந்தது மிகக்குறைவு. என் தந்தை அய்யுருவாதி-அதாவது கடவுளை சந்தேகித்தவர். தாய் இயற்கையில் ஒவ்வொன்றையும் பார்த்து அதிசயிக்கும் இயல்பு பெற்றிருந்தார். இந்த இரு குணாம்சங்களையும் நான் பெற்றேன். ஒருபக்கம் எதையும் சந்தேகித்தல், மறுபக்கம் பிரபஞ்ச வெளியின் நிகழ்அமைப்புகள் பற்றி வியத்தல். ஆனால் அறிவியல் பக்கம் என்னை முழுமையாக இழுத்து வந்தது 1939ல் நியூயார்க்கில் நடந்த உலகப் பொருட்காட்சி. அப்போது வயது எனக்கு ஐந்து. என்னை அறிவியல் காட்சியகத்துக்கு என்பெற்றோர்கள் அழைத்துச் சென்றதுதான் திருப்புமுனை. ஐன்ஸ்டீனின் ஒளியின் மின்ஊக்கம் முதல் ஆஸிலோஸ்கோப் நிறமாலைமானி, பறக்கும் கார்கள், விண்ணைத்தொடும் கட்டிடவியல், மேலேயே செல்லும் ரயில்கள், மின்காந்தவியலை அன்றாட வாழ்வின் பயன்பாட்டிற்கு உட்படுத்தும் தானியங்கி முயற்சிகள். அந்த கண்காட்சியின் ஒவ்வொரு காட்சிப் பொருளும் என் மனதில் இன்றும் பதிந்துள்ளது. நான் அன்றே அறிவியல்வாதி ஆகிவிட்டிருந்தேன்.

கே: வானியல் பக்கம் எப்படி வந்தீர்கள்? சிறுவயதிலிருந்தே வானில் பிறகோள்களில் உயிரிகள் இருப்பதை நம்பினீர்களா?

ப: இரண்டாம் உலக யுத்த காலத்தில் என் தந்தை சோவியத்களின் தீவிர ஆதரவாளராக இருந்தார். நாங்கள் யூதர்கள். ஐரோப்பாவில் அங்கங்கே என் தாய்வழி உறவினர்கள் பலர் ஹிட்லரால் அவரது மரண முகாம்களில் கொல்லப்பட்டனர். ஆனால் அதுபற்றிய துயரமும் பீதியும் பெரும்பாலும் என்னிடமிருந்து மறைக்கப்பட்டது. அதிலிருந்து என்னை திசைதிருப்ப எடுக்கப்பட்ட பல நடவடிக்கைகளில் (பொது நூலகத்திற்கு அனுப்புவது, அருங்காட்சியகத்திற்கு அழைத்துப் போவதுஎன) என் பெற்றோர்கள் ஈடுபட்டனர். நூலகத்தில் என்னைக் கவர்ந்த புத்தகங்கள் நட்சத்திரங்களைப் பற்றியவை. சூரியன் ஒரு நட்சத்திரம், ஒவ்வொரு நட்சத்திரங்களை பற்றியவை. சூரியன் ஒரு நட்சத்திரம், ஒவ்வொரு நட்சத்திரமும் சூரியன்தான். ஆனால் அவை தொலைவில் உள்ளன என்று வாசித்தபோது அந்த பத்து பதினோறு வயதில் இப்பிரபஞ்சத்தின் பிரமாண்ட அமைப்பு பற்றி பலவாறு கற்பனை செய்து வியப்படைந்தேன். அருங்காட்சியகத்தில் அதிலும் குறிப்பாக நியூயார்க்கின் அமெரிக்க -இயற்கை விஞ்ஞான வரலாற்றியல் அருங்காட்சியத்தில் ஹைடன் கோளரங்கம் மற்றும் விண்ணியல் காட்சிப் பொருட்கள் அரங்கில் மெடிராய்ட் கற்கள் என பார்த்தபொழுது நான் வானியலின் வழியில் அப்போதே நடக்கத் தொடங்கியிருந்தேன். எட்கர் பரோசின் அறிவியல் புத்தகங்கள் அந்த காலகட்டத்தில் துருவித்துருவி தேடினால் நூலகத்தில் கிடைத்த அறிவியல் நூல்கள், என்சைக்ளோபீடியா என யாவற்றையும் படித்தேன். பென்குயின்கள் அண்டார்டிக்காவில் வாழமுடியுமென்றால் பிரபஞ்சத்தின் மற்றகோள்களில் மனிதனால் வாழமுடியுமா… மற்ற கோள்களில் மனிதர்கள் இருப்பார்களா… என்பன போன்ற கேள்விகள் அப்போதுதான் மனதில் உருப்பெற்றிருக்க வேண்டும். பிறகு செவ்வாய்கிரகம் பற்றிய எச்.ஜி.வெல்ஸின் புத்தகம் என் வாழ்க்கையையே புரட்டிப்போட்டது.

கே: நாசா (Nasa) வுக்கு வருவதற்கு முன் உங்கள் வாழ்வின் மரபியல் குறித்த பங்களிப்புகளைச் சொல்லுங்கள். அடிப்படையில் நீங்கள் ஒரு மரபியல்வாதி அல்லவா?

ப: அடிப்படையில் நான் ஒரு இயற்பியல்வாதிதான். ஆனால் ஹானர்ஸ்பட்டம் இயற்பியலில் பெற ஒரு சிறப்பு ஆய்வறிக்கைக்காக நான் எச்.ஜே.முல்லரின் மரபியல் ஆய்வகத்தில் இணைந்தேன். பரிணாமவியலை மரபியலோடு இணைக்கும் முயற்சிகள் அந்த 1960களில் உலகெங்கும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. டார்வினின் பரிணாமவியலே இறுதியானது என முழுமையாக ஏற்கப்பட்டிருந்தது. மென்டலியத்தை பரிணாமவியலுக்குப் பொருத்தும் படிநிலை மிகவும் அவசியமானது. டார்வினும், மென்டலும் ஒரே காலக்கட்டத்தில் வாழ்ந்தாலும் அவர்கள் சந்தித்துக்கொள்ளவில்லை. பரிணாமவியலே சரி என்பது உண்மையானால், சந்ததிகளிடையே மரபியல் பண்புகளை எதை வைத்து இயற்கை தேர்வுசெய்கிறது என்கிற பிரதான கேள்வி ஒன்றுதான் பாக்கி இருந்தது. இயற்பியல், வேதியல் இரு விஷயத்திலும் மேதமையுடன் விளங்கிய எச்.சி. யூரேயுடன் இணைந்து வாழ்வின் தோற்றம்- உயிரிகளின் பரிணாமம் குறித்து மரபியலின் பார்வையில் ஒரு ஆய்வுக் கட்டுரையை ஏராளமான அடிப்படை புள்ளிவிவரங்களுடன் வெளியிட்டிருந்தேன். இன்றும் அக்கட்டுரையை ஏறத்தாழ 30 ஆண்டுகள் கழித்து வாசிக்கும்போது அன்று நாங்கள் யோசித்ததும் கண்டடைந்ததும் பரிணாமவியலை அடுத்த படிநிலைக்கு உயர்த்த மிகப்பெரிய வேலையாகவே படுகிறது. நான் பிறகு மரபியல் அறிஞர் ஜோசுவா லெடர்பர்க்குடனும் இணைந்து பல வருடங்கள் பணிபுரிந்துள்ளேன்.

கே: பரிணாமவியலை சரிபார்க்க பிறகோள்களில் உயிரிகளின் தோற்றம் பற்றி  ஆய்வு செய்வதே ஒரேவழி என்று சொல்கிறீர்களே, அதை விளக்க முடியுமா?
ப: டார்வினின் பரிணாமவியலும் ஐன்ஸ்டீனின் சார்பியலும் பிரபஞ்சத்தைக் கண்டுணர நமக்கு கிடைத்த இரு கண்கள் போன்றவை. சார்பியலை நாம் கிரகணங்கள் நட்சத்திர வெப்பநிலைகள் என்று பலவற்றை வைத்து ஆய்வு செய்து சரிபார்க்க முடிகிறது. சார்பியல் சரிதான் என பலமுறை நிரூபணமாகியும் உள்ளது. பரிணாமவியலின் உண்மை நிலையை சரிபார்க்கும் ஒரே வழி அதற்கு இணையாக பிறகோள்களில் உயிரிகள் இருப்பின் அவற்றின் தோற்றம், வளர்ச்சி குறித்து ஆய்ந்தறிவதே ஆகும். இதனைத்தான் நான் தீவிரமாக முன்மொழிந்தேன். ரிச்சர்ட் டாக்கின்ஸ் போன்றவர்களே கற்றார்கள். நானொரு பரிணாமவாதி. உண்மை என்று நான் நம்பும் ஒன்றை சரிபார்க்க எனக்கென்று ஒரு வழி இருக்கக்கூடாதா.

கே: அமினோஅமிலங்கள் குறித்த உங்கள் கண்டுபிடிப்பு இவ்விஷயத்தில் மிகப்பெரிய பங்களிப்பு. அது எப்படி நடந்தது?
ப: விண்ணிலிருந்து உயிரிகள் மெட்டிராய்ட் கற்கள் அல்லது தூசிமழை வழியே இங்கு புவியில் விதைக்கப்பட்டிருக்கலாம் என ஏற்கும்போது அதில் சில சிக்கல்கள் உள்ளன. புவியில் இயற்கை சூழல்கள் இங்கேயே உயிரிகளின் தோற்றம் நிகழ ஏதோ ஒருவகை காரணி இருந்திருக்க பரிணாமவியல் தூண்டுகிறது. இன்றும் இந்த நொடியிலும் கூட பிரபஞ்சத்தின் ஏதோ ஒரு மூலையில் உயிரிகள் தோற்றம் நிகழலாம். அறிவியல் கண்டுபிடிப்பு என்பது ஒருமுறை மட்டுமே நிகழும் அமைப்பல்ல. எவ்வளவுமுறை யார் முயன்றாலும் துல்லியமாகத் திரும்பத் திரும்ப நிகழ்த்த முடிந்த தொடர்ச்சி என்பதுதான் அறிவியலின் அடிப்படை என பிரதான ஆசான்கள் முன்மொழிந்துள்ளனர். கார்பனின் இருப்பு சாதிக்கப்பட்ட கோள்கள், துணைக்கோள்கள் இவை கார்பாலிக் அமிலங்களைத்  தானாகவே உற்பத்தி செய்துவிடுகின்றன. அவற்றில் சூரியகதிர்வீச்சு படும்போது அமினோஅமிலங்களாக மாறமுடியும் என்பதைத்தான் நான் நிரூபித்தேன். உயிரிகளின் தோற்றத்திற்கான இன்றியமையாத முதல்படிநிலை அதுதான். இதில் மாயமோ மந்திரமோ புனிதக்கரங்களின் அற்புதமோ எதுவும் கிடையாது. இயற்கையின் வேதிப்படைப்பு இது. அமினோ அமிலங்களில் மிகுந்த பயன் தரும் பத்து வகைகள் உள்ளன. அதிகப் பயனற்ற பத்து வகை அமினோ அமிலங்களும் உண்டு.
பிரபஞ்சத்தின் எந்த மூலைமுடுக்கிலும் இவை எத்தகைய உயிரி தோற்றத்தையும் – தரைவெப்பநிலை நட்சத்திரங்களின் கதிர்வீச்சுத் தன்மையை வைத்து உற்பத்தி செய்யமுடியும். எனவே இப்பிரபஞ்சத்தின் பல கிரகங்களில் வாழும் அயல் உயிரிகளை நாம் தேடுவது என்பது அபத்த அறிவியல் அல்ல. அதற்கான வாய்ப்புகள் எப்போது வேண்டுமானாலும் கைக்கூடலாம். டார்வினியத்தை நேரடியாக நிரூபிக்கும் வழிமுறையும் அதுவே.

கே: புவிவெப்பம் அதிகரித்தல் ஒரு பெரிய ஆபத்து என்று திரும்பத்திரும்ப சொல்கிறீர்களே, மற்றவர்கள் போலின்றி வேறு ஏதாவது ஆதாரங்கள் உங்களிடம் உள்ளதா?
ப: எனது அனுமானம் மற்றவர்களிடமிருந்து வேறுபடுகிறது. சூரியகுடும்பத்தின் பிற கோள்களிடமிருந்து மனிதர்கள் பாடம் கற்கவேண்டும் என்பதுதான் நாம் முன்வைக்கும் அறிவியல். எல்லோரும் நினைத்தது போல வெள்ளிக்கிரகம் ஜொலிக்கும் சொர்க்கபுரி அல்ல. வடக்கு நட்சத்திரம், வழிகாட்டும் நட்சத்திரம் எல்லாம் மதம்போற்றும் அந்த கிரகம் இறுகிய ஒரே பாறைக்கோளம் அவ்வளவுதான். தரை வெப்பநிலை 500 டிகிரி செல்சியஸ் என்று நான் நிறுவினேன். நாசாவின் வெள்ளிப் பயணத்திட்டங்கள் (மரைனர் – விண்கலம்) அதை சரிதான் என நிறுவின. செவ்வாய் கிரகம் அதை அடைந்து வருகிறது.
இவற்றுக்கு பசுமை இல்ல வாயுக்கள் – கார்பன் குடையேற்றத்தால் நிகழ்ந்த குறுகியகால பருவமாறுதல்கள் காரணம் என்பதை நிரூபிக்க முடியும். தரைவெப்ப நிலையின் ஒவ்வொரு டிகிரி அதிகமாவதற்கும் ஒரு கோளில் ஒரு மில்லியன் மாறுதல்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.

கே: உங்களது நாசா பங்களிப்புகளிலேயே சிறந்ததாக எதை நினைக்கிறீர்கள்?
ப: வைக்கிங் விண்கலத்தில் செவ்வாய் பயணம். ஏற்கெனவே அப்பலோ, மரைனர், வாயேஜர் விண்கலங்களை வடிவமைப்பதில் என் பங்களிப்பு இருந்திருந்தாலும் வைக்கிங் எனது பெட் புரோஜெக்ட் என்றே சொல்லலாம். வானியல் பொறியாளர்களான மைக் கார் மற்றும் ஹால் மஸ்சூத்ஸ்கி ஆகியோருடன் இணைந்து செயல்பட்டேன். செவ்வாயில் ஒரு காலகட்டத்தில் உயிரிகள் வாழ்ந்திருப்பதற்கான ஆதாரங்களைத் திரட்டுவது எனது நோக்கமாக இருந்தது. செவ்வாயில் வைக்கிங்கை எங்கே தரை இறக்குவது என்பதைத் தீர்மானிக்க ஏறத்தாழ முழுமையாக அக்கிரகத்தின் வரைபடத்தை நானே தயாரித்தேன். புவிக்குப் பிறகு சந்திரனின் வரைபடம் கூட முழுமையாக நம்மால் கிரகித்து வெளியிட முடியவில்லை. ஆனால் செயற்கைகோள் படப்பிடிப்புகளை மட்டுமே கொண்டு செவ்வாய் கிரகத்தின் மாதிரி வரைபடத்தை உலக மேப் போல வெளியிட இரண்டே இரவுகள் உழைத்தது மிக நல்ல அனுபவம்.

கே: ஆனால் உள்ளே என்ன நடக்கிறது என்பதை குறித்த ரகசியங்களை காப்பாற்றாதவர் என்று நாசா உங்களை குற்றம் சாட்டுகிறதே?
ப: பட்டவர்த்தனமாக வெகுஜன மக்களோடு தனது அறிவியலைப் பகிர்ந்துகொள்ளாதவர் அறிவியலாளராக இருக்க முடியாது. நாசாவின் பல பில்லியன் டாலர் செலவு பிடிக்கும் திட்டங்கள் மக்களின் பொதுப்பணத்திலிருந்து செலவு செய்யப்படுகிறது. என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று அறிய உலகுக்கு உரிமை உள்ளது என்பதை அவர்கள் மறந்துவிடக்கூடாது. தவிர ஒரு பிரச்சனை திறந்த நிலையில் இருக்கிறபோது தீர்வு எங்கிருந்து வேண்டுமானாலும் வரலாம். உதாரணமாக புவியை நோக்கி வரும் மெட்ராய்ட் பாறைகளைப் பற்றி விண்கற்கள் எப்போது புவியை தாக்கும் என்பதுபற்றி வெறும் பீதியை ஏற்படுத்துவது மட்டும் நாசாவின் வேலையாக இருக்கிறது. அதைப்பற்றி உண்மை நிலையை நான் வெளியிட்டால் அவர்கள் கோபப்படுகிறார்கள்.

கே: ஆனால் அமெரிக்க அரசு இயந்திரத்தோடு நீங்கள் மோதுவது இது முதல்முறை அல்ல. சோவியத்துகளின் ஆதரவாளர் என 1983ல் ரீகன் அரசு உங்களை கைது செய்தது. அதன் பின்னணியைப் பற்றிச் சொல்லுங்கள்.
ப: ரீகன் அரசு ஸ்டார்வார்ஸ் திட்டத்தை அறிவித்த போது அதை எதிர்த்தது நான் மட்டுமே அல்ல. அணு ஆயுத ஏவுகணைகளுக்கு எதிராக தனது ஆயுத நிலைகளை தற்காத்து எதிரிகளால் கண்டடையமுடியாத ஒரு இலக்கிலிருந்து அணுகுண்டுகளை வீசும் திட்டத்தின் வெளிப்பூச்சு பெயராக ஸ்டார்வார்ஸ் திட்டம் இருப்பதை நாங்கள் சுட்டிக் காட்டினோம். அது சோவியத்துடனான ஆயுதத் தடுப்பு ஒப்பந்தங்களை மீறிய செயல் மட்டும் அல்ல. உலக அளவில் அணுஆயுதப் பரவலைத் தடுப்பது அதன்பிறகு சாத்தியமே இல்லாததாக ஆகியிருக்கும். தனது கிளாஸ்நாஸ்டின் ஒரு அங்கமாக சோவியத் அதிபர் கோர்பச்சேவ் 1985 ஆகஸ்ட் 6 (ஹிரோசிமா 40வது நினைவு தினம்) அன்று இருநாடுகளும் அணுஆயுத சோதனைகளை பரஸ்பரம் நிறுத்த ஒரு பிரமாண்ட முயற்சியை மேற்கொண்டபோது ரீகன் அந்த அரியவாய்ப்பை பயன்படுத்தாமல் அதைக் கபட நாடகம் என்று அறிவித்து தான் ஸ்டார்வார்ஸ் திட்டத்தை தொடர்வதாக அறிவித்தபோது நாங்கள் அத்திட்டம் குறித்த உண்மையான அறிவியலை பேரழிவு அரசியலை விளக்கி அமெரிக்காவின் நவேதா அணுசோதனை நிகழிடம் சென்று ரீகன் அரசுக்கு எதிராக மக்களைத் திரட்டிப் போராட்டத்தில் குதித்தோம். 1986 ஈஸ்டர் முதல் 1987 ஈஸ்டர் வரை தொடர்ந்த அணுஆயுதக் குவியலுக்கு எதிரான அந்த மக்கள் போராட்டத்தின் போது நான் ரீகன் அரசால் கைதுசெய்யப்பட்டேன். சோதனை நடக்கும் நிகழிடத்துக்குள் அத்துமீறி நுழைந்ததாக தேச ரகசிய பாதுகாப்பு சட்டத்தின்படி என்மீது தேசத்துரோக வழக்கு தொடரப்பட்டது. ஆனால் அறிவியலில்
விஞ்ஞானி என்பவர் அரசு சார்பு ஆய்வுக்கூட உதவியாளரோ வெறும் பார்வையாளரோ அல்ல. புவிபாதுகாப்பு என்பது அனைத்தையும் கடந்த முக்கியத்துவம் வாய்ந்தது. தேவைஏற்பட்டால் மக்களைத் திரட்டிப் போராட நாம் ஏன் தயங்க வேண்டும்.

கே: கிறிஸ்துவமதத்தை ஏன் துவேசத்தோடு எதிர்க்கிறீர்கள்?
ப: நான் தீவிர நாத்திகன்கூட அல்ல. ஒரு அய்யுருவாதி. மதநம்பிக்கை எனக்கு இல்லை. ஸ்பினோசாவின் கடவுளை (அதாவது பிரபஞ்சத்தை செயல்படுத்தும் இயக்கும் விதிகள் கடவுள் என) ஐன்ஸ்டீன் ஏற்றார். நான் அதுகூட கிடையாது. அதற்காக வானைவிடப் பெரிய உருவத்தில் தாடிமுளைத்த ஒரு ஆண்பிம்பமாக என்னால் ஒரு கடவுளை ஏற்க முடியவில்லை. கிறிஸ்துவம் ஏசுவின் மதமாகவும் புனித பால் நினைத்ததையெல்லாம் எழுதியதைப் பின்பற்றும் அபத்தமாக இருக்கிறது என்று சொன்னது சர்ச்சையாகிவிட்டது. புனித பைபிள் ஒரு வரலாற்று ஆவணம் போல அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்தத் தகுந்த பண்பாட்டு ஆவணமாக நாம் கண்டிப்பாக பேணி வைக்கத் தகுந்த அம்சங்கள் கொண்டது என்பதில் சந்தேகமில்லை. மற்றபடி பரிணாமவியலையும் சார்புத்தத்துவத்தையும் ஏற்ற ஒருவரிடம் மதநம்பிக்கையை எதிர்பார்ப்பது தவறு.

Related posts