You are here

திரைப்பெண்களின் பிம்பங்கள்

அ. வெண்ணிலா

தமிழர்களை வெகுவாகக் கவர்ந்த கலை வடிவம் திரைப்படம். மற்ற கலை வடிவங்கள் எல்லாமே அதில் தீவிரமாக ஈடுபாடு கொண்டவர்களாலேயே அறியப்படுகிறது. ஓவியம் குறித்தோ, சிற்பக்கலை குறித்தோ, இசை,நாட்டியம்,இலக்கியம் குறித்தோ வெகுசன மக்கள் கூடும் எல்லா அரங்கங்களிலும் பேசிவிட முடியாது. அதற்கான கவனத்தைக் கோருவதே பெரும் கடினமான முயற்சியாகவோ, தோல்வியடையும் முயற்சியாகவோ இருக்கும். திரைப்படம் குறித்தே இடம்,பொருள், ஏவல் இல்லாமல் பேச முடியும்.

இன்றைக்குப் பிரபலம் என்றால், திரைப்படத்துறை சார்ந்தவர்களைக் குறிப்பதாக மாறிவிட்டது. 25 ஆண்டுகள் அரசியலில், அதிகாரத்தில் அறியப்படும் ஒருவரைவிட ஓர் ஆண்டுக்குள் திரைத்துறையில் நுழைந்தவர்களை நம் மக்கள் எளிதாக நினைவு கூர்கிறார்கள். காரணம் காணும் திசையெங்கும் அவர்களுடைய பிம்பம் நம் கண்களில் நீக்கமற நிறைந்திருக்கிறது என்பது மட்டுமல்ல.

அசையும் பிம்பங்களால் உயிரூட்டப்பட்ட  காட்சிகள் மனித மனதை வசீகரிக்கத் துவங்கிய காலத்தின் வசீகரத்தில் இருந்து உலக சினிமா எவ்வளவோ மாறி, சினிமா என்பது மற்ற கலை வடிவங்களைப்போலவே படைக்கப்படும் ஒன்று என்ற புரிதலுக்கு வந்துவிட்டது. நம் இந்தியாவில், தமிழகத்தில் மட்டும் திரைப்படத்தின் பொருள் வேறாகவே உள்ளது. இதில் பத்துப் பேரை அடித்து வீழ்த்தும் கதாநாயகன் நிஜ வாழ்விலும் கதாநாயகனாகவே இருக்கிறான். வில்லன் வில்லனாகவும், நகைச்சுவை நடிகன் கோமாளியாகவுமே பார்க்கப்படுகிறான். திரைப் பிம்பங்கள்மேல் நமக்குள்ள அபரிதமான ஆர்வத்திற்கு இன்றுவரை முழுமையான காரணத்தைச் சொல்ல முடியவில்லை.

காரணம் தெரியாவிட்டாலும் திரைப்படங்கள் நிகழ்த்தும் மாயங்கள் குறைந்தபாடில்லை. இன்றைக்கும் தன்னை வழிநடத்தக்கூடிய தலைவனை திரைத்துறையிலேயே தமிழன் தேடுகிறான். தனக்கு எது சிறந்த  பற்பசை, காலையில் அருந்த வேண்டிய ஃபில்டர் காஃபி என்ன, காதலியை எந்த ஐஸ் கிரீம் ஃபிளேவருக்காக விட்டுக் கொடுக்க வேண்டும்,போட வேண்டிய உள்ளாடை முதல் இரவு தூங்க வேண்டிய மெத்தை வரை எதைத் தேர்வு செய்வது என்பதற்காக தமிழர்கள் திரைத்துறையினரின் வழிகாட்டுதலையே எதிர்நோக்கியிருக்கின்றனர். இவையெல்லாம் கூட பரவாயில்லை. தன்னை யார் ஆளவேண்டும் என்பதற்கான வழிகாட்டுதலையும் அவர்களிடம் இருந்தே எதிர்பார்க்கின்றனர்.

திரைப்படத்தின் அவிழ்க்கப்படாத இத்தனை முடிச்சுகள் நமக்குள் இருக்க, அதில் சித்தரிக்கப்படும் பெண்கள் பற்றிய ஒரு பார்வையை ‘தமிழ் சினிமாவில் பெண்கள்’ என்ற நூலாக்கியிருக்கிறார் பேரா.கே.பாரதி. தன்னுடைய கல்வி மற்றும் பெண்ணியச் செயல்பாடுகளின் மூலம் ஏற்கனவே நன்கு அறியப்பட்டவரான பாரதி, இந்த நூலில் திரைக்கலை சார்ந்து ஒரு விமர்சகராகவும் மாறியுள்ளார்.

நூறாண்டு கொண்டாடும் சினிமா வரலாற்றில் 1931 முதல் 2013 வரையான காலகட்டத்தைத் தன் கட்டுரைகளுக்கான எல்லையாகக் கொண்டுள்ளார். இந்தக் காலகட்டம் பல்வேறு அரசியல் மாற்றங்கள் இந்திய அளவிலும் உலக அளவிலும் அரங்கேறிய காலம். தேசியச் சிந்தனைகளும், பகுத்தறிவுச் சிந்தனைகளும், திராவிட இயக்கங்களும் வீறுகொண்டு எழுந்த சிந்தனாபூர்வ காலகட்டம். இந்நேரத்தில் அகில உலக அளவில் பெண்ணியச் சித்தாந்தங்கள் ஓரளவுக்கு முழுமைப்பட்ட நிலையில்,பெண் விடுதலை, சமத்துவம், பெண்ணை அதிகாரமிக்கவளாக்குதல் போன்ற முயற்சிகள் தனிநபர்,இயக்க நிலைகளைத் தாண்டி அரசு சார்ந்து செயலாக்கம் பெறத் துவங்கிய காலகட்டமும் கூட.

தேசியம், திராவிடம் உள்ளிட்ட சமூக மறுமலர்ச்சித் தத்துவங்களில் முன்வைக்கப்பட்ட பெண்ணியம் எவ்விதம் இருந்தது?முழுமையான பெண்ணியக் கோட்பாடுகளை இவ்விரு  சமூக மறுமலர்ச்சியாளர்களும் உணர்ந்து ஏற்றுக் கொண்டிருந்தார்களா என்பதில் இருந்தே அந்தக் காலகட்டத்து கலை இலக்கியம் யாவையும் மதிப்பிட வேண்டியிருக்கிறது. தேசிய இயக்கத்தில் பெண்ணியம் என்பதை முகம் சுளிக்கும் ஒரு கசப்பு மருந்தாகப் பார்த்தவர்களே அதிகம். அதையும் மீறி சமூகத்தின் மரியாதையை,தேசத்திற்கான பண்பட்ட ஒரு தோற்றத்தைத் தர விரும்பிய தலைவர்கள் நம்முடைய புராணப் பெண்ணியத்தையே மீட்டெடுக்கத் துவங்கினார்கள். தமிழகத்தில் பெரியார் மட்டுமே முழுமையான ஒரு பெண்ணியக் கோட்பாட்டை உருவாக்கியதோடு அதை ஆழமாக நிலைப்படுத்தவும் போராடினார். பெரியார் வழிவந்தவர்கள் அவரின் மற்ற கொள்கைகளை முழுமையாக ஏற்றுக் கொண்டிருந்தாலும், பெண்ணியத்தைப் பெரிதாக பொருட்படுத்தாமல் வலிந்து வரவழைக்கப்பட்ட செவிட்டுத்தனத்தையோ, ஊமைத்தனத்தையோ ஆயுதமாகக் கொண்டிருந்தார்கள்.

இந்தப் பின்னணியில் திரைத்துறையில் கோலோச்சியவர்கள் எல்லோருமே இந்த சிந்தனையும், இயக்கப் பின்னணியும், அல்லது அந்தக் காலகட்டத்துச் சிந்தனையைப் பிரதிபலிப்பவர்களாகவுமே இருந்தார்கள். இவர்கள் படைத்த பெண்கள் எப்படி இருப்பார்கள்? அலசி ஆராய்ந்து அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்துப் போடுகிறார் பாரதி.

தாலியின் மேன்மையைக் கொண்டாடி, மஞ்சள் மகிமையை வியந்து, தாய்மையின் புனிதத்தை (?) கட்டிக்காத்திட தன் உயிர் உட்பட எல்லாவற்றையும் இழக்கத் துணிவது, ஆணுக்குத் தாயா தாரமா என்ற கேள்வி வந்தால் பதில் தாயே, பெண்ணுக்கு அதே கேள்வி வந்தால் அவள் கணவனையே தேர்வு செய்ய வேண்டிய மரபு. இவை எதுவும் வழுவிடாத பெண் பிம்பங்களே வெவ்வேறு விதத்தில் 85 ஆண்டுகால திரைப்படங்களில் வந்துள்ளன. தொழில்நுட்பம், பின்னணி,கதைக் களன் என எத்தனை மாற்றங்கள் நிகழ்ந்திருந்தாலும் அரதப் பழசான பெண் கோட்பாடுகள் மாற்றம் பெறவேயில்லை என்பதை 1934-இல் வெளியான சகுந்தலை துவங்கி 2013-இல் வெளியாகியுள்ள ஆதலினால் காதல் செய்வீர் சுவேதா வரையான உதாரணங்களின் மூலமாக நிறுவுகிறார்.

தாய்மையைக் கொண்டாடி தன் பிம்பத்தை உயர்த்திக் கொண்ட கதாநாயகர்கள் தன்னுடைய காதலி,மனைவி என்று வரும்போது தனக்கு கீழ்ப்படிந்தவளாக, அடங்கி நடப்பவளாக, மரபார்ந்தப் பெண்மையை பேணிக்காப்பவளாக சித்தரித்து தன் ஆண்மையை நிறுவிக் கொண்டார்கள். பிற்காலத்தில் இவர்களே நம் தலைவர்களாகவும் ஆட்சியாளர்களாகவும் ஆனார்கள். நாடகத்தில் நடந்த சிறுசிறு முற்போக்கான மாற்றங்கள் கூட திரைக்கதையில் மாற்றப்பட்ட உதாரணங்களை எடுத்துரைக்கிறார்.

ஏராளமான தரவுகளைத் தேடி எடுத்து அது குறித்தப் பார்வைகளை பதிவு செய்த விதத்தில் இந்நூல் முக்கியமான நூல். தமிழில் அவ்வப்பொழுது திரைப்பெண்களின் பிம்பங்கள் குறித்தக் கட்டுரைகள் வெளியாகியிருந்தாலும் இவ்வளவு விரிந்த நிலையில் வந்துள்ள முதல் நூல் இதுவே.

இன்றைக்கு தொழில்நுட்பம் சார்ந்து தகவல்கள் திரட்டுவது ஓரளவிற்கு எளிதாகி உள்ள சூழலில்,தமிழ்ச் சினிமாவில் புராண, இதிகாச பிம்பங்கள் காண்பிக்கப்பட்டிருந்த காலத்தில் யதார்த்த பாணி திரைப்படங்களின் முன்னோடி மாநிலங்களான மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட மொழித் திரைப்படங்களின் நிலை என்னவாக இருந்தது என்று திரை ஆய்வாளர்கள் எழுத முன்வந்தால் நம் திரைப்படங்களைப் பற்றி முழுமையாக மதிப்பிட முடியும்.

இந்நூலின் முக்கிய விடுபடல்களாக சிலவற்றைச் சொல்லலாம். தனது எட்டு வயது முதல் நாடக நடிகராக வாழ்வைத் துவங்கி, பிற்காலத்தில் லட்சிய நடிகர் என்று புகழ்பெற்று திராவிடக் கருத்தியலை சினிமாவில் கட்டமைத்ததில் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்குப் பெரும் பங்கு உண்டு. தன் கோட்பாட்டிற்கு எதிரான புராணக் கதைகளில் லட்சம் ரூபாய் கொடுத்தால் கூட நடிக்க மாட்டேன் என்று கொள்கை உறுதியோடு தனித்துவ நடிகராய் இருந்தவர். ஏறக்குறைய 100 படங்களுக்குமேல் கதாநாயகனாய் நடித்து, தயாரிப்பாளராகவும் இருந்தவர். அவரின் படங்கள் குறித்து குறிப்புகளாகக் கூட ஒரு வார்த்தையும் இடம் பெறவில்லை. சில நேரங்களில் வரலாறுகளை எவ்வளவு எளிதாகத் தவறவிட்டுக் கடந்துவிட முடிகிறது?

நடிகைகளாக மட்டும் இருந்துவிடாமல்,அதே திரைத்துறையில் தங்களின் படைப்பால் பங்களிப்பு செய்த பானுமதி துவங்கி ரோகினி வரையுள்ளவர்களின் பங்களிப்பை விரிவாக ஆய்வு செய்திருக்கலாம். அவர்களின் ஒன்றிரண்டு முயற்சிகள் பற்றி மட்டும் சொல்லப்பட்டிருக்கிறது.

சாதாரண நடிகைகளாக மட்டும் அறிமுகம் ஆனாலும், பின் தனக்கென்ற சுய அடையாளத்தைத் தமிழ் சினிமாவில் நிலைநிறுத்திக் கொண்ட பெண் நடிகையரைப் பற்றி பேசுவதும் மிக முக்கியமானதே. மனோரமா துவங்கி, சோபா,ராதிகா,சுகாசினி,ரேவதி போன்ற பெண்கள் எப்படி தங்களை முன்னிறுத்தினார்கள் என்பதும் ஆய்வுக்குட்படுத்த வேண்டியதே.

திரைப்படங்களைத் தயாரிப்பவர்களும், இயக்குபவர்களும் பெண்ணை எப்படிப் பார்த்தார்கள் என்பதை முழுமையாகச் சொல்லியுள்ள அதே வேளையில், திரைத்துறையில் இருந்த பெண்கள் தங்களை எவ்விதம் மதிப்பிட்டுக் கொண்டார்கள்… அவர்கள் தங்களின் சுயத்தை நிறுவ முயற்சித்தார்களா? பெண்ணிய சித்தாந்தம் சார்ந்து பெண் நடிகைகள் தங்களின் நடிப்புத் தொழிலை வரையறுத்திருந்தார்களா என்ற ஆய்வையும் உள்ளடக்கியிருந்திருக்கலாம். ஆண்களின் பார்வை இப்படித்தான் இருந்திருக்கும் என்று நமக்குத் தெளிவாகத் தெரியும் அதே நேரத்தில் பெண்கள் எவ்விதம் இருந்தார்கள் என்பதும் விவாதிக்கப்படக் கூடியதே.

எல்லாச் சித்தாத்தங்களையும்விட வாழ்க்கையும் வாழ்தலும் மிக முக்கியம். அன்பும் காதலும் சித்தாத்தங்களைப் பின்தள்ளி மனிதர்களை வெற்றி கொண்டுவிடும். மனிதர்களின் முடிவுகளுக்கும் மாற்றங்களுக்கும் நம்முடைய அளவுகோல்களின் மதிப்பீட்டில் மட்டும் காரணம் கண்டுபிடித்துவிட முடியாது. பருத்தி வீரன் முத்தழகியின் காதலும் தீவிரமும் திரைப்படப் பாத்திரப்படைப்பில் அரிய ஒரு படைப்பே. அவள் முன்னால் பெண்ணிய அளவுகோல்கள் தேவைப்படாது.

கலை என்பது மனித முரண்களை அதன் உச்சத்திற்குப் போய்ச் சொல்வதே. வேதனைக்குரிய நிலையாக திரைக்கலையிலும் பெண்ணுக்கு அந்தக் கலையின் உச்சத்திற்குப் போகும் வாய்ப்பு  இதுவரை இருந்ததில்லை, இல்லை என்பதை வலியுடன் இந்நூல் நிறுவுகிறது.

Related posts