You are here

சில அறிவுஜீவிகளின் மௌனமும் மயக்கமும்

சாதி இன்று – அறிக்கை நூலை முன்வைத்து…

ப.கு. ராஜன்

தலித் நோக்கு நிலையில் இருந்து வெளிவந்துள்ள இந்த அறிக்கை வடிவிலான சிறுநூல் மிக முக்கியமான விவாதப் புள்ளிகளைக் கொண்டுள்ளது.

வெளிவந்து மூன்று மாதங்கள் ஆகிய பின்னரும் தீக்கதிர் நாளிதழில் தோழர் சு.பொ.அகத்தியலிங்கம் எழுதியதொரு விமர்சனத்தைத் தவிர நூலை வேறு யாரும் பொதுத்தளத்தில் எதிர் கொள்ளவில்லை எனத் தோன்றுகிறது.  பாராமுகத்தை சிலர் உத்தியாகப் பயன்படுத்தத் தலைப்பட்டிருக்கலாம். அல்லது எதிர்வினை ஆற்றினால் சாதியவாதி எனும்  குற்றச்சாட்டிற்கு ஆளாகி விடுவோமோ எனும் அச்சமிருக்கலாம். சாதியவாதியாக இருப்பதற்குத் தயாராக இருப்போரும்கூட சாதியவாதி எனும் பட்டத்துடன் இருக்க விரும்பாத காலம் அல்லவா? சாதிச் சங்கங்களின் கிச்சடிக் குவியலும்கூட தன்னை சமூக ஜனநாயக இத்யாதி இத்யாதியாக அழைத்துக் கொள்ளும் நிர்ப்பந்தம் இருக்கும் பூமி அல்லவா?

இந்தக் காலமும், பூமியும் தானாக விளைந்ததல்ல; அல்லது இந்த அறிவாண்மை கொண்ட தோழர்கள் நினைப்பதுபோல முன்னோடி தலித் செயல்பாட்டாளர்களின் பணியினால் மட்டும் ஏற்பட்டதல்ல என்பதை அறிக்கையின் ஆசிரியர்கள் உணரவில்லை என்பதுதான் அறிக்கை ஏற்படுத்தும் முதல் ஏமாற்றம். ஏனைய எல்லாச் சாதிகளைச் சார்ந்த அறிவாண்மைகளின் மூலைகளிலும் அவர்களது சாதிகளின் ஆதிக்க கொடுங்கோன்மை வரலாறு மூட்டையாய் அழுத்திக் கொண்டிருக்கின்றது; அதனால் சாதி குறித்த உண்மையை முழுக்க முழுக்க காய்தல் உவத்தல் இல்லாது எடுத்துக் கூறுவதை எதிர்பார்ப்பது இயலாது; அவர்கள் அனைவரது கருத்துகளையும் ஒரு சிட்டிகை உப்புடன்தான் அணுக வேண்டும் என்பதில் மாறுபட்ட கருத்துகள் இல்லை. ஆனால் அத்தகைய வரலாற்று ரீதியான ஆதிக்க மூட்டை அழுத்தாத சுதந்திரச் சிந்தனையாளர்களாக உண்மையைக் கூறுவதற்கான வாய்ப்பும், அப்படி உண்மையைக் கூறுவதில் மட்டுமே விடுதலையின் சாத்தியமும் கொண்ட தலித் அறிவுஜீவிகள் புறநிலை எதார்த்தங்களை, முழு உண்மையை கூறத் தயங்குவதன் காரணம் புரியவில்லை.

“என்னைக் காட்டிலும் நுட்பமான உள்ளங்கள் திறமையான பேனாக்கள் கொண்டோரெல்லாம் முயன்று பார்த்தும் சாதியின் மர்மம் இன்னும் துலங்கவில்லை எனும் தளத்திலேயே இருக்கின்றது; இன்னும் புரிந்து கொள்ளப்படாதது எனும் நிலையிலேயே இருக்கின்றது”

இது டாக்டர் அம்பேத்கர் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் ஆற்றிய உரையின் ஒரு பத்தி. அம்பேத்கரின் இந்த கூற்றோடு அறிக்கை துவங்குகின்றது.  இரட்டை எடுத்துக்காட்டு குறிகளுடன் (னிuஷீtணீtவீஷீஸீ விணீக்ஷீளீs) அம்பேத்கரின் சொந்த வார்த்தைகள் என்பதுபோல எங்கோ எப்போதோ காதில் கேட்டதை எடுத்துப் போட்டிருப்பதை சற்று நெருடலுடன் கவனித்தவாறுதான்  நூலுக்குள்  நுழைய வேண்டியுள்ளது. பொருள் மாறுபாடு இல்லையென்றாலும் சாதி போன்ற ஒன்றை விவாதிக்கும்போது, அதில் அம்பேத்கர் போன்ற ஒருவரின் கூற்று எனக் கூற வரும்போது இருக்க வேண்டிய கறார்தன்மை  (ஸிவீரீஷீக்ஷீ) இல்லையென்றால் மற்ற விவரங்கள் குறித்து என்ன நம்பிக்கையுடன் வாசிக்க முடியும்?

பிற்கால சோழர் காலத்தில் ஏற்பட்ட இடங்கை/வலங்கை பிரிவுகள் மூலம் சாதிகள் திரண்டு பெரிய சாதிகள் உருவானதாக சற்றே குழப்பத்துடன் கூறப்படுகின்றது. அதிலும் சரியான பார்வை இருப்பதாகத் தெரியவில்லை; இடங்கைப் பிரிவு வலங்கைப் பிரிவு இரண்டிலுமே இன்றைய ஆதிக்க சாதிகள் சில இருக்கின்றன. இரண்டிலுமே சில ஒடுக்கப்பட்ட சாதிகள் இருக்கின்றன. இந்தப் பிரிவு சிறிய சாதிகள் இணைந்து பெரிய சாதிகள் உருவானதற்கெல்லாம் அடிப்படையாக இருந்ததற்கு ஏதும் சான்றுகளோ அல்லது ஏற்றுக்கொள்ளக் கூடிய தர்க்கரீதியான விளக்கமோ இல்லை.‘சாதிகளை விரிவான பின்புலத்தில் வைத்து புரிந்துகொள்ளாமல் இன்றைய சாதிகளின் நிலையைப் போன்றே சாதிகளைப் பார்ப்பதினால்தான் சாதியமைப்பு காப்பாற்றி வந்திருக்கும் வழக்கமான வாதத்திற்குள் சிக்கிக் கொண்டு அவற்றை எதிர்கொள்ள முற்படுகின்றோம்.’ என அறிக்கை சரியாகக் கூறுகின்றது. ஆனால் துரதிர்ஷ்டமாக அறிக்கையே இந்த குறைப்பாட்டிலிருந்து விடுபடவில்லை.

‘ஒரு குழுவின் சாதிமுறை சார்ந்த நடைமுறைகளே அவர்களின் பண்பாட்டு நம்பிக்கைகளாக வினையாற்றுகின்றன’ என அறிக்கை கூறுகின்றது. வன்னியருக்கும் முதலியார்க்கும் இடையே, வன்னியருக்கும் உடையாருக்கும் இடையே என்ன பண்பாட்டு வேறுபாடு? சைவமுதலி, சைவப்பிள்ளை, காருகாத்த வெள்ளாளர் இடையே என்ன பண்பாட்டு வேறுபாடு உள்ளது? இன்றைய நிலையிலேயே பெரிய வேறுபாடுகள் இல்லை; அவை தனித் தனி சாதிகளாக உருவான காலத்தில் என்ன பண்பாட்டு வேறுபாடு இருந்தது? இருந்ததென்றால் அதற்கான பொருளடிப்படை இல்லாது எப்படி வந்தது? வரலாற்று ரீதியான, பொருளாதாரக் காரணங்களின் பங்கை குறைத்து மதிப்பிடவே இதுபோன்ற கருத்துகள் பயன்படுகின்றன.

‘பிராமணர்களும் வேளாளர்களும் உடமை சாதிகளாகவும் புனித சாதிகளாகவும் கருதப்பட்டு அவர்களுக்கு பிரம்மதேயம், தேவதானம் எனும் பெயர்களில் வளமான நிலப்பகுதிகள் தானமாக வழங்கப்பட்டன’ என அறிக்கை சொல்லிச் செல்லும்போது எழும் ஏமாற்றம் சொல்லி மாளாது. பிரம்மதேயம், தேவதானம் இரண்டுமே பிராமணர்களுக்கான தானம் என்பதை உண்மையிலேயே இந்தத் தோழர்கள் அறியவில்லையா? அல்லது பிராமணியத்தின் தாக்கத்தை சற்றே குறைத்து பிராமணரல்லாத சாதிகளின் மீதான விமர்சனத்தினை சற்றுக் கூர்மைப் படுத்தும் முனைப்பா எனத் தெரியவில்லை. சோழர் காலத்தை சைவ அதிகாரத்தின் எழுச்சியாகக் காண்பது, கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி சோழர் காலத்தில் அதிகாரம் மையப்படுத்தப்பட்டு வலிமையான அரசு இருந்ததாகக் கருதினார் என்றும் பர்டைன் ஸ்டையின், கத்லீன் கௌ, நொபுரு கரொஷிமா, சீ.சுப்பராயலு ஆகியோரெல்லாம் கூறாக்க அரசு (ஷிமீரீனீமீஸீtணீக்ஷீஹ் ஷிtணீtமீ)  இருந்ததாகச் சொன்னார்கள் என்றும் மிகத் தவறான கூற்றுகள் அதிகம். சோழர்காலம் சைவம் வைணவம் வைதீகத்தால் உட்கொண்ட காலம் என்பதுதானே சரியாக இருக்கும்? அதுபோல பர்டைன் ஸ்டைனும் கரோஷிமா, சுப்பராயலு ஆகியோரும் மையப்படுத்தப்பட்ட அரசா கூறாக்க அரசா (ஷிமீரீனீமீஸீtணீக்ஷீஹ் ஷிtணீtமீ) என்பது குறித்த விவாதத்தில் நேரெதிர் கருத்துகளைக் கொண்டிருந்தனர் என்பதுதானே உண்மை? பர்டைன் ஸ்டையினின் கூறாக்க அரசு என்பதை கரஷிமா, சுப்பாராயலு ஆகிய தென்னிந்திய வரலாற்று ஆய்வாளர்களும் ஆர்.எஸ்.ஸர்மா போன்ற வட இந்திய ஆசிரியர்களும் ஏற்கவில்லை என்பதுதான் உண்மை.

காலனிய காலத்தில் சாதியின் நிலை பற்றி பேச வரும்போதும் இயற்கையாக பிராமணர்களுக்கும் பிராமணல்லாதவர்களுக்கும் இருந்த ஏற்றத் தாழ்வைப் பேசாது சாதி நிலைபற்றிப் பேசுவது செயற்கையான மௌனமாக இருக்கும் என இந்தத் தோழர்கள் உணரவில்லை என்பது வருத்தத்தையே அளிக்கின்றது. சூத்திரர்களுக்கும் தலித் மக்களுக்கும் இடையில் இருக்கும் வேறுபாடுகளைப் பேச பிராமணர்களுக்கும் சூத்திரர்களுக்கும் இடையே இருக்கும் ஏற்றத் தாழ்வை மறைப்பது என்ன அம்பேத்கர் வழியா? அவர் எப்போதாவது அப்படிச் செய்துள்ளாரா?

தமிழகத்தில் எல்லா சூத்திர சாதிகளும் சாதி அபிமானத்துடன் வர்ண உயர்வு பெற எத்தனித்ததை அறிக்கை சரியாகச் சொல்கின்றது. ஆனால் அது சொல்லும் தொனி வட இந்தியா போல தமிழகம் இல்லையாக்கும், இங்கு வர்ண வேறுபாடுகள் எல்லாம் இந்த சூத்திரப் பயல்கள் வேலையாக்கும் என்பது போல இருக்கின்றது. தமிழகத்தில் மட்டுமல்ல, வட இந்தியாவிலும் வேதகால வர்ணங்கள் குப்தர் காலத்திலிருந்தே இருந்ததில்லை  என்பதும் அங்கு வைசியர்கள் சத்திரியர்கள் எனச் சொல்லிக் கொண்டோர் எல்லாம் உண்மையில் இங்கு போலவே சூத்திரப் பயல்கள்தாம் என்பதே கே.என். பணிக்கர், ஆர்.எஸ்.ஸர்மா போன்றோரின் கருத்து. வெள்ளாளர் வைசிய வர்ணத்திற்கு முயன்றது, ஏனைய பல சூத்திர சாதிகள் சத்திரிய வேடம் தரித்தது என்பதெல்லாம் இன்றும் தொடரும் கேலிக்கூத்துதான். அதன் ஒரு வகையான வடிவம்தான்  ‘வெள்ளாளர்’ நாமத்திற்கு நடக்கும் அடிதடியுமாகும்.  ‘தொண்டை மண்டல சைவ வெள்ளாளர்’ ஆரம்பித்து தென்தமிழகத்தின்  ‘தேவேந்திர குல வெள்ளாளர்’ வரை ’வெள்ளாளர்’ பேருக்கு ஆசைப்படுவதையும் கூறியிருந்தால்  ‘அரசியல் சரி’ ஆக இருக்க முயற்சிக்காமல் உண்மையை சார்ந்து நிற்பதற்கு பாராட்டலாம்.  ‘பள்ளிகள், சாணார்கள் ஆகியோரின் தாம் சத்திரியர் எனும் நிலைபாட்டை வேளாளர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை’ என அறிக்கை கூறுகின்றது. சரியே. ஆனால் பிராமணர்கள் ஏற்றுக் கொண்டனரா? தங்களைத் தவிர யாருக்காவது வேதம் படிக்க வேதப்பாடசாலையில் சேரும் உரிமை இருப்பதை ஏற்றுக் கொண்டனரா? ஏன் இது குறித்து மௌனம்? வேளாளர் சாதி தமிழ் அதிகாரப் புலத்தில் முதல் நிலைக்கு வந்த சூட்சுமம் இதுதான் என ஏதோ வேளாளர்கள் அதற்குமுன் ஒடுக்கப்பட்ட சாதியாக இருந்தோர் என்பதுபோல கூறும் வாதம் காலனி ஆதிக்கத்திற்கு முன்பு அவர்களும் கொடுமையான வழிகள் மூலம் ஆதிக்கம் செலுத்திய சாதிதான் எனும் வரலாற்றையே மாற்றி விடுகின்றதே. அவர்கள் மீது இருக்கும் கோபத்தில் அவர்கள் மீது நன்னடத்தை சான்றிதழை ஓங்கி எறிவதாக இல்லையா? சோழர் காலத்தின் சேக்கிழார், நாயக்கர் காலத்திய தளவாய் அரியநாதன் பற்றியெல்லாம் தெரியாதா?

பிராமணர் ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டத்தில் ஆதிக்க சாதிகள் தம்மை ‘பிராமணரல்லாதோர்’ எனும் பெருஞ்சொல்லாடலால் அடையாளப்படுத்திக் கொண்டனர் எனக் குற்றஞ் சாட்டும் தொனியில் கூறுவது ஏனென்று தெரியவில்லை. பிராமண ஆதிக்கத்தின் கீழ் தமது பங்குகளைப் பெற இயலாத அனைவரும் ஏதோ ஒரு பொதுப் பெயரில் திரள்வதில் என்ன குற்றம் இருந்திருக்க முடியும்.  ‘பிராமணரல்லாதோர்’ என்ற பெயரில் அவர்கள் ஒன்று திரண்டது தர்க்கரீதியான இயற்கை இல்லையா? பின்னர் நேர்மறையாக அடையாளப் படுத்திக் கொள்ளும் அவாவில்  ‘திராவிடர்’ என அடையாளப் படுத்திக் கொண்டதில்தான் என்ன தவறு? அது அயோத்தியா தாசரே பயன்படுத்திய பதம்தானே? இதிலெல்லாம் இவர்களுக்கு என்ன மனக்குறை என்பதை வெளிப்படையாகப் பேசவில்லை என்றுதான் படுகின்றது. பிராமண ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டத்தில்  வேளாளர் தம்மை தலைமை இடத்தில் அமர்த்திக் கொண்டனர் என்று அறிக்கை கூறுகின்றது. உலகமெங்கும் ஆதிக்கத்திற்கெதிரான முதல் குரலும் முதல் நகர்வும் ஆதிக்கப் படியின் அடித்தட்டு அல்லது ஒடுக்கப்பட்ட படியின் மேல்தட்டுப் பகுதியைச் சேர்ந்தவர்களிடம் இருந்துதானே வந்துள்ளது. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முதல் குரல் எழுப்பியவர்கள், ரஷ்ய சமூக ஜனநாயக் கட்சியின் முன்னோடிகள், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னோடிகள், சிங்காரவேலர், பெரியார், அம்பேத்கர் எல்லோருமே மேல்தட்டுகளைச் சார்ந்தவர்கள் தானே?

தீண்டப்படாத சாதிகளின் நகர்வை சமஸ்கிருத மயமாக்கல் என ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர் எனக் கூறும் அறிக்கை யாரந்த ஆய்வாளர்கள் எனக் குறிப்பிடவில்லை. உணமையில் சாதியம் கரடு தட்டிய வடிவமாய்த் தமிழகத்தில் காலூன்றியதே சமஸ்கிருத மயமாக்கல் அல்லது பிராமணமயமாக்கலின் ஒரு முக்கியமான அம்சம். சமஸ்கிருதமயமாக்கல் நிகழுமுன் தமிழகத்தில் சாதி, பிராமணிய இந்துமத வடிவில் இல்லை என்பதை மறைப்பது பிராமணியத்திற்கான சேவையின் ஒரு பகுதிதான். ‘பொதுவெளியில் எல்லோரும் இடம்பெற காலனியச் சூழல் எந்தளவு இடம்கொடுத்தது? என்பதான கேள்விகள் கேட்க வேண்டியுள்ளது’ என அறிக்கை கூறுவது எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றது ஆனால் உடனடியாக கல்விக் கூடங்கள், சாலைகள், வேலைவாய்ப்புகள் ஆகியவற்றில் தீண்டப்படாதவர்களை காலனியம் எவ்வாறு நடத்தியது என முன்னர் கண்டோம் எனக் கூறுவதுடன் இந்த வினாவின் விடை சுருங்கிக் கொள்கிறது. தலித் மக்களுக்கு பிரத்யேகமான பிரச்சனைகள் இருந்தன என்பதில் கருத்து வேறுபாடு இல்லை. ஆனால் எல்லா சூத்திரர்களுக்கு எதிராகவும் பாகுபாடும் உரிமை மறுப்பும் செயல்பட்டது என்பதுதான் வரலாற்று உண்மை. அந்த உண்மையைச் சொல்வதைத் தவிர்க்க வேண்டி வினாவிற்கான முழு விடையை முன்வைப்பதிலிருந்து அறிக்கை சுருங்கிக் கொள்வதாகத் தெரிகின்றது. தத்தம் சாதிகளுக்கான இடத்தை மட்டுமே சாதிகள் கோரின. அவ்வாறு கோரும் தருணத்தில் பிற சாதிகளின் இடத்தை ஏற்கவும் மறுத்தன என்பது மிகச் சரியான விமர்சனம். இந்த விமர்சனம் அருந்ததியர்க்கான உள்ஒதுக்கீட்டை மறுக்கும் தமிழகத்தின் ஏனைய இரு பெரிய தலித் சமூகங்களின் நிலைபாட்டிலும்கூட வெளிவந்ததுதான் என்பது அறிக்கையால் மௌனமாக கடக்கப் படுகின்றது. மேலும் சாதிகளையும் இடதுசாரி, திராவிட இயக்கங்களையும் அறிக்கை வேறுபடுத்திக் காட்டுவதே இல்லை. இரண்டு இயக்கங்களின் புரிதலில் இருந்த தவறுகள், போதாமை, சாதிப் பிரச்சனையில் அவற்றின் தோல்விகள் என இவர்கள் கருத்துக்கள் விவாதிக்கப்பட வேண்டியவைதான். ஆனால் சாதிகளையும் இந்த இயக்கங்களையும் ஒன்றுபோலப் பேசிச்செல்வது சரியானதல்ல. மேலும் இது போன்ற சாதிகளின் மேல்நோக்கிய நகர்வு, அதற்கான அங்கீகாரத்திற்கு இவற்றின் தேடல் முயற்சிகள் குறித்தெல்லாம் பேச முற்படும்போது தமிழகத்தின் முக்கியமான தலித் சாதிகளில் ஒன்றான பள்ளர்களின் ஒரு பகுதியினர் தலித் அடையாளத்தையே மறுப்பது, தம்மை வெள்ளாளர் என அழைக்கக் கோருவது, பறையர் அருந்ததியர் ஆகியோர் குறித்த இவர்களது பார்வை ஆகியவற்றையும் தொட்டிருந்தால் இவர்களது நேர்மையையும் துணிச்சலையும் பாராட்டியிருக்கலாம். அஃதில்லாத போது ஏனைய சூத்திர பிற்படுத்தப்பட்ட வெள்ளாள அறிவாண்மைகளுக்கெதிராக அறிக்கை வைக்கும் அதே குற்றச்சாட்டுகள் இவர்களுக்கும் பொருந்தும் என்பதே இவர்களது மௌனம் உருவாக்கும் கருத்தாக உள்ளது.

சாதி என்றால் அது பிராமணர் சாதியோடு மட்டும் தொடர்புடையது என்றே பெரியார் விளங்கிக்கொண்டார்; மொத்தத்தில் ஒட்டுமொத்த பிராமணரல்லாத சாதிகளை பிராமணச் சாதியின் எதிரியாகத் திருப்பிவிடும் செயல் தந்திரம் பெரியாரின் செயல்பாடுகளில் வெளிப்பட்டது; நவீன முதலாளித்துவம், குறித்த எத்தகைய விவாதமும் இல்லாமல் பெரியார் முதலாளிய தளத்தில் பிராமணரல்லாதவர்களை நிரப்ப விரும்பினார்; ‘சாதி ஒழிப்பு’ என்பதான செயல் திட்டமோ அல்லது தெளிவான கோட்பாட்டு வரையறையோ பெரியாரிடம் உருவாகவில்லை என்பதெல்லாம் அறிக்கை பெரியார் குறித்து வாரி வழங்கியுள்ள புகழுரைகள். நூலின் முதலில் உள்ள அம்பேத்கரின் பத்தியை (சரியான) இந்தத் தோழர்கள் மீண்டும் படிப்பது நலம். அவருக்கும் பெரியாருக்கும் இடையில் இருந்த உறவு என்ன? அவருக்குப் பெரியார் மீது என்ன விமர்சனம் இருந்தது? இந்தத் தோழர்களுக்கு பெரியார் மீது இருக்கும் இத்தனை கோபம் அம்பேத்கருக்கு பெரியார் மீது இருந்ததா? ஏன் இல்லை?

பெரியார் ஒரு பெரும் கோட்பாட்டாளர் அல்ல என்பது ஒரு புதிய செய்தி அல்ல. ஆனால் அவரது செயல்பாட்டைப் புறங்கையால் தள்ளுவது நடக்கக்கூடிய காரியம் அல்ல. அவர் குறித்த விமர்சனங்களை இவர்கள் பிராமணர்கள் குறித்து எழுதுவதோடு சேர்த்துப் பார்க்க வேண்டும். நிலத்தை வைத்திருந்த பிராமணர்கள் சாதி இந்துகளின் அராஜகத்தாலும் புதிய வாய்ப்புகளாலும் நிலங்களை விற்றுவிட்டு நகரம் நோக்கியும் உயர்கல்வி நோக்கியும் கிராமங்களைவிட்டு வெளியேறினர்; தமிழகத்தின் பெரும் மூலதனச் சுரண்டல் என்னும் வடிவத்திற்கு தமிழக பிராமணரல்லாதார் சாதிகளே காரணகர்த்தாவாக விளங்கின..’ இந்த ரீதியாகப் போகின்றது. அரசியல் காரணங்களுக்காக மாயாவதி பாணியைப் பின்பற்றி செய்யப்படும் முயற்சி என்றால் அவர்களுக்கு நாம் நமது நல்வாழ்த்துகளைக் கூறி முடித்துக் கொள்ளலாம். உண்மையிலேயே சாதி குறித்த உண்மையான புரிதல்தான் நோக்கம் என்றால் அது உண்மையைப் பேசுவதில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என்றுதான் கூறமுடியும்.

கிராமப் புறத்திலிருந்து நகர்ப்புறங்களுக்கான இடப்பெயர்வின் காரணங்களாக ஆசிரியர்கள் கூறுவதையும் கிராமப்புறங்களில் பொதுத்தளத்தில் தலித் மக்களுக்கு கூலி உயர்வு குறித்துப் பேசக்கூட உரிமை இல்லை என்பதையும் நாம் பொதுவாக சரியென ஏற்றுக் கொள்ளலாம். கீழத்தஞ்சை அனுபவங்கள் குறித்து அவர்கள் மூச்சுவிடவில்லை என்றாலும் நாம் அதனை நினைவுபடுத்துவது அவசியம். ‘பிரச்சனையின் மையம் சமூக அமைப்பின் சுரண்டல் வடிவத்திடம் இருக்கிறது என்ற உண்மையை சாதி இந்துக்கள் புரிந்துகொள்ளவில்லை’ எனும் ஆசிரியர்களின் அங்கலாய்ப்பைத்தான் அவர்கள் குறித்தும் கூறவேண்டியுள்ளது.

‘இங்கு சமூக மாற்றத்திற்கு ஆதாரமாக இடஒதுக்கீட்டு முறைதான் ஒரே வழிமுறையாக நம்பப்படுகிறது. அதனாலேயே இடஒதுக்கீட்டு கேள்விக்கு அப்பாற்பட்டதாகவும் பரிசீலனைக்கு உட்படாததாகவும் ஆக்கப்பட்டிருக்கின்றது’ என அறிக்கை கூறுவது வரலாற்றுரீதியாக மிகவும் தவறான தகவல். காலம் காலமாக மறு ஆய்வும் மாற்றமும் தமிழக இட ஒதுக்கீட்டுத் தளத்தில் நடந்துள்ளது. இடஒதுக்கீட்டால் பயனடைபவர்களாக இருந்த வெள்ளாளர், நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் நீக்கப்பட்டது, கொங்கு வெள்ளாளர் இட ஒதுக்கீட்டிற்கு உள்ளே கொண்டுவரப்பட்டது, பலிஜா போன்ற நாயுடு வகுப்பினர் உள்ளே கொண்டு வரப்பட்டது, மிகவும் பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீடு வழக்கிற்கு வந்தது, எல்லா முஸ்லீம் வகுப்பினரும் ஒதுக்கீட்டிற்குள் கொண்டு வந்தது, முஸ்லிம்களுக்காக தனி ஒதுக்கீடு வந்தது, அருந்ததியினருக்காக உள் ஒதுக்கீடு கொண்டு வந்தது, மொத்த ஒதுக்கீட்டை 69% ஆக உயர்த்தியது என்பதெல்லாம் நடந்தேறியுள்ளது. அறிக்கையாளர்கள் விரும்புவதுபோல அல்லது பிராமணிய சால்ஜாப்பாளர்கள் விரும்புவதுபோல மாற்றம் நடைபெறாமல் இருக்கலாம். ஆனால் சமூக அறிவியல் நோக்கில் ஆய்வுகளும், விவாதங்களும், மாற்றங்களும் நடந்தேறியே வருகின்றன. என்ன மாற்றம் கொண்டுவர வேண்டும் என விளக்கினால் அது சரியா இல்லையா என விவாதிக்கலாம்.

‘சமூக ஒடுக்குமுறையை அடிப்படையாகக் கொள்ளாமல் எண்ணிக்கை மற்றும் அதிகாரம் சார்ந்து அனைத்துச் சாதிகளுக்கும் ஒதுக்கீடு என்கிற நடைமுறை பரவலாகி வருகிறது’ என முழுக்க முழுக்க சமூக எதார்த்தத்திற்கு மாறான கருத்து போகும் போக்கில் சொல்லப்படுகின்றது. அறிக்கையாளர்கள் உண்மையிலேயே இதனை நம்பினால் மண்டல் கமிஷன், ரத்னவேல் பாண்டியன் கமிஷன் அறிக்கைகள் ஏன் தவறு என விளக்க வேண்டும். வாய் புளித்ததோ இல்லை மாங்காய் புளித்ததோ எனும்விதத்தில் கருத்து கூறுவது நேர்மையானதோ அறிவியல் பூர்வமானதோ அல்ல. ஒருவிதமான துவேசமும் குயுக்தியும் நெளியும் விதமாக  ‘வகுப்புவாரி பிரதிநிதித்துவம்’ எனும் கருத்தாக்கத்தை புறந்தள்ள முயற்சிக்கப்படுகின்றது. ஏனைய தலித் இயக்கங்களே இதனையெல்லாம் ஒத்துக் கொள்ளாது என்பதன் வெளிப்பாடே அறிக்கை அவர்களால் எதிர்கொள்ளப்பட்டுள்ள விதம்.

அறிக்கை இட ஒதுக்கீடு மறுவிவாதத்திற்கு உள்ளாக்கப்பட வேண்டும் எனக் கோருகின்றது. கட்டாயமாகச் செய்யப்பட வேண்டியதே. ஆனால் இதுவரை ஏதோ அது குறித்து விவாதங்களே நடைபெறவில்லை எனும் தொனிதான் அபத்தமாக இருக்கின்றது. மொரார்ஜி தேசாய் அரசு அதற்குமுன் பல காலமாக இருந்த கோரிக்கைக்கு செவிசாய்த்தாக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டபோது மண்டல் கமிஷனை அமைத்தது. அன்றிலிருந்து இன்றுவரை இட ஒதுக்கீடு என்பது இந்திய அரசியலின் அடிநீரோட்டமாக முடிவுறாத விவாதங்களில்தான் உள்ளது. என்ன? பொதுவெளியிலும் ஊடக வெளியிலும் மாற்றுத் தரப்பிற்கு எந்தவித இடமும் அளிக்காமல் பிராமணியமும் ஏனைய மேல்சாதிப் பற்றும்  தனது புலம்பல்களையும் அவதூறுகளையும் பொய்களையும் விவாதம் என்ற பெயரில் பிரச்சாரம் செய்து வருகின்றது. உண்மையிலேயே மாற்றுத் தரப்பின் கருத்துகளுக்கும் இடமளிக்கும் விவாதங்களை இந்த ஆய்வாளர்களே ஒருங்கிணைக்கலாம். மாற்று கருத்து கொண்டோர் மீதெல்லாம் சேற்றைவாரி இரைக்காமலும் சொல்லும் விவரங்களுக்கு சரியான சான்றுகளோடும், சாதியின் உருவாக்கம், வளர்ச்சி, கெட்டிப்பு, நிலைப்பு, சாதிகளின் இணைப்பு, கிளைப்பு, சிதிலம் என ஒரு முறையான நிகழ்வுப் போக்கில் அந்தந்த கட்டத்தின் அரசியல், பொருளாதார, சமூக வரலாற்றுப் பின்னணிகளோடு விவாதத்தை நடத்துவது என்பது பயனுள்ளதாக இருக்கும்.

Related posts