You are here

சிதைவுகளிலிருந்து…

Chinua_Achebe

ம. மணிமாறன்

நாம் பழக்கப்படுத்தப்பட்டு உள்ளோம். ஆப்பிரிக்கக்கண்டத்தைப் பற்றிய கதைகளுக்கும் கூட இப்படியான தன்மை உண்டு. நம்மில் பலரும் நம்புகிறோம். கருப்பின மக்களின் பழக்க வழக்கங்கள் அசூசையானவை. நாகரிகத்தின் சுவடுகள் தங்களின் மேல் படிவதை அவர்கள் எப்போதும் அனுமதிக்க மாட்டார்கள். இன்னும் இதைப்போல நிறைய….

பொதுப்புத்தியில் ஆப்பிரிக்க இனமக்களைக் குறித்த அதிர்ச்சிகளையும், வக்கிரங்களையும் பதியச் செய்ததில் ஹாலிவுட் திரைப்படங்களுக்கு மிகப்பெரிய பங்குண்டு. பொதுப் புத்தியில் உறைந்திருக்கும் தவறுகளை அழித்து எழுதிடும் ஆற்றல் மிக்கவை புனைவுகள். இதுவரையில் உலகம் கண்டிராத ஆப்பிரிக்க மக்களின் ஆன்மாவை உலகறியச் செய்து வருகின்றனர் இலக்கிய கர்த்தாக்கள். இவர்களின் முதன்மையானவர் “சினுவா ஆச்சிபி” சினுவா ஆச்சிபியின் “ஜிபிமிழிநிஷி திகிலிலி கி றிகிஸிஜி” என்னும் ஆங்கில நாவல் “சிதைவுகள்” என தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. சிதைவுகளுக்கு முன்பு தமிழ் இலக்கிய உலகம் அறிந்திடச் சாத்தியமற்ற கலாச்சார, பண்பாட்டுப் பகுதிகளை தமிழ் அறியத் தந்திருப்பவர் என்.கே. மகாலிங்கம்.

சினுவா ஆச்சிபியின் “சிதைவுகள்” மற்றும் “வீழ்ச்சி” ஆகிய இருநாவல்களையும் என்.கே. மகாலிங்கம் மொழிபெயர்த்திருக்கிறார். ஆச்சிபியின் சொந்த நாடான நைஜீரியாவில் ஆசிரியராகப் பணியாற்றியவர் மகாலிங்கம். ஆச்சிபியின் நாவல்களைக் கற்றிட நமக்கு ஆப்பிரிக்க கண்டத்தின் தனித்த கலாச்சாரக் கூறுகள் குறித்த அறிதல் மிகவும் அவசியமாகிறது. ஐம்பதிற்கும் மேற்பட்ட நாடுகளைக் கொண்டது ஆப்பிரிக்கக் கண்டம். எண்ணற்ற மொழிகள் பேசும் மக்களைக் கொண்ட தேசத்தில் அந்த இனக்குழுவிற்கேயான தனித்த பண்பாடும், கலாச்சாரக் கூறுகளும் நிறைந்திருக்கிறது. மிக நீண்ட காலமாக காலனிய அரசாட்சியில் அடிமைப்பட்டுக் கிடந்த தேசங்கள் அவை. அதனால் அவர்களின் மீது சாபமாகப் படிந்து கிடக்கிற வறுமையையும், பிணியையும், இழிவையும், சுமந்திட முடியாது தடுமாடுகிற மக்களால் நிறைந்திருக்கும் நிலமிது. இந்தப் பின்புலத்தைப் பற்றிய புரிதலுடன் தான் சினுவா ஆச்சிபியின் படைப்புகளை அணுக வேண்டும்.

எளிய மக்களின் கதைமொழி நேரடியாகக் தான் அமையும். எனவே தான் “சிதைவுகள்” மிக நேரடியாக ஒக்கொங்வோ எனும் மல்யுத்த வீரனின் வாழ்க்கையை அவனுடைய ஞாபகங்களின் வழியே மீட்டெடுக்கிறது. ஓக்கொங்வோ ஒரு மல்யுத்த வீரன். அதுவரை வெல்ல முடியாதிருந்த வீரனை வீழ்த்திய நாளில் துவங்குகிறது நாவல். மூன்று பகுதிகளாகப் பிரிந்து நூற்றுக்கணக்கான பக்கங்களில் விரிகிறது. நைஜீரிய நிலமக்களின் கதை. உமோஃபியா எனும் நிலத்தின் மக்களின் ஐதீகங்களும் நம்பிக்கைகளும் விசித்திரமானவை. இந்த மக்களுக்கு இருள் தெளிவற்ற பயங்கரத்தைச் சுமந்து கொண்டிருந்தது. மிகவும் துணிச்சலானவர்களும் கூட கெட்ட ஆவிகளுக்குப் பயந்து சீழ்க்கை அடிக்க மாட்டார்கள். பயங்கர மிருகங்கள் இரவில் மட்டும் தீங்கு விளைவிக்கக் கூடியவை என்று நம்புகிறார்கள். இப்படி முதல்பகுதி முழுவதும் நம்பிக்கைகள், பழக்கவழக்கங்களால் நிறைந்திருக்கிறது.

நம்பிக்கைகள் யாவும் ஒருவகையில் தமிழ்மக்களின் பழக்கவழக்கங்களைப் போலவே தென்படுகின்றன. பாம்பின் பெயரை இரவில் சொல்லிக் கூப்பிடக் கூடாது. அதுக்குக் கேட்டு விடும். கயிறு என்று தான் இரவில் அழைக்கிறார்கள் நம்மைப் போலவே. ஒருவகையில் உலகின் தொன்மையான பழங்குடிகளின் பழக்கவழக்கங்களும், நம்பிக்கைகளும், ஒன்று போலானவை தான். மந்திரவாதிகளாலும், பாசாரிகளாலும் உருவாக்கப்பட்ட பயம் ஒரு பனிப்போர்வையென நிலத்தைப் படர்ந்திருக்கிறது. “சிதைவுகள்” நாவலுக்குள் காட்சிப்படுத்தப்படும் உமோஃபியாவைக் கண்டு அயல் கிராமத்தவர்கள் கூட அஞ்சி நடுங்குகிறார்கள். இவர்கள் அஞ்சி நடுங்குவது மந்திரங்களைக் கண்டு தான். மந்திரத்தின் மூல இருப்பிடம் ஒற்றைக் காலுடைய ஒரு கிழவி. உண்மையில் அந்த மந்திரத்தை அகடிநாவாயி அல்லது கிழவி என்றுதான் அழைக்கின்றனர்.

குலத்தின் கட்டமைப்புக்குள் ஆண் மையம் வரத்துவங்கிய நாட்களின் கதையிது. ஆண் மகனே குலத்திற்கு உரியவனாக அழைத்து வரப்படுகிறான். இவை எல்லாவற்றையும் மந்திரங்களும், சடங்குகளுமே தீர்மானிக்கின்றன. நிலமெங்கும் பேய்களும், ஆவிகளும், அலைந்து கொண்டேயிருக்கின்றன. யுத்தமே அவர்களின் மையம். எதிரிக்குலத்து வீரனின் தலைக்குள் தான் அவர்கள் வெற்றியின் அடையாளமான தென்னங்கள்ளை ஊற்றிக் குடிக்கிறார்கள். அந்த அளவிற்கு எதிர்க் குலத்தின் மீதான வன்மமும், கோபமும் தீராமல் அவர்களுக்குள் நிறைந்திருக்கிறது. ஆனால் எல்லாவற்றிற்கும் அவர்களின் குலக்கடவுள்கள் அனுமதிக்க வேண்டும். அக்பாலா எனும் ஆணும், பெண்ணுமற்ற கடவுள் அனுமதிக்காமல் அவர்கள் போருக்குச் செல்வதில்லை.

குலத்தின் நீதியமைப்புகள் மிகமிக விசித்திரமானவை. உமோஃபியா எனும் கதைநிலத்தின் மகள் ஒருத்தியைக் கொன்றமைக்கான தண்டனை அந்த மாற்றுக் குலத்துப் பெண் ஒருத்தியைக் கொல்வதோடு மட்டுமல்ல. பலியாளாக அந்தக் குலத்தில் இருந்து ஒன்பது ஆண்டுகள் வளர்த்தெடுக்க மற்றொரு ஆண் மகனும் அழைத்து வரப்படுகிறான். அப்படி ஒக்கொங்கவோவால் உமோஃபியாவிற்கு பலியெடுக்க அழைத்து வரப்பட்டவனே இகெமெஃபுனா. பிறகான நாட்களில் அவன் இந்தக் குலத்தின் மகனாகவே வளர்க்கப்படுகிறான். உரிய நாளில் பலி நிகழ்த்தப்பட்ட பிறகு இகெமெஃபுனாவின் பிரிவினை சகிக்கமுடியாமல் ஒக்கொங்வோ மட்டுமல்ல, அவனுடைய குடும்பமும் கூட தவித்தலைகிறது. ஒக்கொங்வோவின் மூத்தமகன் “நாவொயெயு”க்கு சகோதரனைப் போல இருந்தவன் அவன். மென்மையான குணங்களால் கட்டமைக்கப்பட்ட புல்லாங்குழல் இசைக்கலைஞனான நாவொயெயு பிறகான நாட்களில் கிறிஸ்துவுக்குள் கரைவதில் அவனுக்குப் பெரும் விருப்பம் இருந்தது. அதற்கு காரணம் அந்த மதத்தின் கடவுள் இல்லை. அதன் புனிதநூலுக்குள் வருகிற கதைகள். குறிப்பாக இரட்டைச் சகோதரர்கள் கதை. அதற்குள் இவன் பலியெடுக்கப்பட்டவனின் துயரத்தைக் கண்டடைகிறான் என்று கதையாடிப் பார்க்கிறார் ஆச்சிபி நுட்பமாக.

ஏன் இரட்டைச் சகோதரர்கள் கதை அவனுக்குப் பிடித்தது தெரியுமா? இவர்களுக்கு இருக்கும் நம்பிக்கைகள் பலவற்றில் ஒன்று இரட்டைக் குழந்தைகள் பிறந்தால் அவர்கள் ஒரு மண்பானையில் வைத்து அவற்றை வீசியெறிந்து விட வேண்டும். இவர்கள் கடவுளைவிட நிலத்தையும், தானியங்களையும் மதிக்கின்றனர். தங்களின் நிலத்தின் மீது ரத்தம் சிந்திடக் காரணமாக யார் இருந்தாலும் அவர்கள் குற்றவாளிகள் தான். உடனடியாக “அக்கவுக்கள்” எனப்படும் ஒன்பது புனித ஆவிகளையும் அழைக்கிறார்கள். விசாரணை நடைபெறுகிறது. தலையில் புகை புறுபுறுவென கிளம்பிட அக்கவுக்குகள் தீர்ப்பளிக்கின்றன. இந்தக் கடவுளர்கள் யார் என்பது கடைசிவரை யாரும் அறிந்திடாத ரகசியமாகவே நீடிக்கிறது. இப்படியான கடுத்தண்டனைக்கு ஓக்கொங்வோவும் உள்ளாகிறான். தவறாக நடந்திட்ட படுகொலைக்காக அருகாமை குலத்திற்கு நாடு கடத்தப்படுகிறான். அவனுடைய தாய்க்குலமான “மாபென்ராவி”ற்குள் அடைக்கலமாகிறான்.

கொலைகளிலும் கூட அவர்கள் பால்பேதம் கற்பித்து வைத்திருக்கிறார்கள். தெரிந்தே, திட்டமிட்டே செய்வது ஆண் கொலை, தெரியாமல் தவறுதலாக செய்வது பெண் கொலை. ஆண் கொலைகளுக்கு மன்னிப்பு கிடையாது. பெண் கொலைகளுக்கு செய்ய வேண்டிய கிரியைகளும், காணிக்கைகளும் உண்டு. அவற்றை முறையாக செய்திட்டால் மன்னிப்பு வழங்கப்படுகிறது. மரண வீட்டில் தவறாக வெடிக்கப்பட்ட துப்பாக்கி பலியெடுத்ததால் தான் ஒக்கொங்வோ தன்னுடைய தாய் கிராமத்திற்கு அகதியாக சென்று சேர்கிறான்.
நாவலின் பின் பகுதியில் அதுவரை அவர்கள் நம்பி வந்திருந்த யாவும் சிதைவுக்குள்ளாகின்றன. அவர்களின் பேய்களும், ஆவிகளும், கடவுளர்களும் கேள்விக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். அக்கவுக்குகள் எனும் தீயகாட்டு நெருப்பு ஆவிகளைப் பிய்த்தெடுக்கின்றான் தன்னுடைய குலத்தில் இருந்து மாற்று மதமான கிறிஸ்தவத்துக்குச் சென்றவன். தன்னுடைய நிலத்தில் மனித ரத்தம் சிந்துவதைக் கடவுளர்கள் ஏற்பதில்லை என்பது அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. இந்த நம்பிக்கையே வெள்ளையர்களை உயிரிழப்பதில் இருந்து காக்கிறது. நடுகைக் காலத்தில் தான் முதன் முதலாக இரும்புக்குதிரையில் (சைக்கிள்) வெள்ளையன் வந்திறங்கினான். அவனை இவர்கள் அவனுடைய தோலின் நிறத்தைப் பார்த்து பாண்டு நோய்க்காரன் என்று கிண்டல் செய்தார்கள்.

ஆனாலும் அவர்களுக்குள் அச்சம் பரவியது. தங்களுடைய குலக்கடவுளை அழைத்தார்கள். அதனிடம் ஆலோசனை கேட்டார்கள். அது ‘இந்த மனிதன் குலத்தை அழித்து சிதைத்து அழிவுகளைப் பரப்பி விடுவான்’ என எச்சரித்தது. எனவே அவர்கள் அந்த வெள்ளை மனிதனைக் கொன்றுவிட்டு, அவனுடைய இரும்புக் குதிரையை மரத்தில் கட்டி வைத்துவிட்டார்கள். ஆனால் அவர்கள் அறிந்திருக்கவில்லை. வெட்டுக்கிளிகள் மாதிரி வரிசையாக வந்து கொண்டிருப்பதை அவர்கள் வெறும் கையுடன் வரவில்லை. ஒரு கையில் வாளுடனும், மற்றொரு கையில் பைபிளுடனும் வந்து கொண்டிருக்கிறார்கள். ஆப்பிரிக்க நிலம் முழுவதும் சமயப் பணியாளர்களை முதலில் இறக்குமதி செய்தார்கள். அவர்கள் மதங்களை நோக்கி இந்த நிலத்தின் பூர்வ குடிகளை உள்ளிழுத்தனர். இன்றைய ஆப்பிரிக்க நிலத்தில் சரிபாதிக்கும் மேலான மக்கள் கிறிஸ்துவத்துக்குள்ளும், இஸ்லாத்திற்குள்ளும் அடைக்கலமாகி விட அவர்களின் கதைகளும், கடவுள்களும், ஆவிகளும் இடமற்று அலைவதையே  சிதைவுகளாக்கியிருக்கிறார் சினுவா ஆச்சிபி.

கிறிஸ்துவத்தைப் பரப்பிட வந்த சமயப்பணியாளர்கள் அந்தந்த நிலத்தின் தன்மைகளை உள்வாங்கிக் கொண்டே உலகெங்கும் செயல்பட்டிருக்கிறார்கள். எவ்வளவு காலம் தான் அவர்கள் மொழிபெயர்ப்பாளர்களை நம்பிச் செயல்படுவது என்பதனால் தான் அந்தந்த நிலத்தின் மொழிகளை வழக்காறுகளை, கலாச்சாரக் கூறுகளைக் கற்று தன்வயச் படுத்தியிருக்கிறார்கள். அவர்களுக்குள் ஐக்கியமானது அந்த நிலத்தின் மொழிகள் மட்டுமல்ல. அந்த மக்களும் தான். உமோபியாலிலுள்ள ‘ஒச’ எனப்படும் அடிமை மக்களை கிறிஸ்தவத்திற்குள் சேர்த்திட அதற்கு முன்பாக மதம் மாறியவர்கள் ஒத்துக் கொள்ளவில்லை. ஆனால் எல்லா நிலங்களையும் போலவே அடையாளம் ஏற்றப்பட்டனமயால் ஒடுக்கப்பட்டுக் கிடந்தவர்களே கிறிஸ்தவ மதத்திற்குள் தங்களை முழுமையாக கரைத்துக் கொண்டனர்.

நாவலின் கடைசிப் பகுதியில் இந்த சகிக்க முடியாத சிதைவுகளைக் கொண்டு வந்த கிறிஸ்தவ நிறுவனத்திற்கு எதிரான கலகம் நிகழ்கிறது. அந்தக் கலகத்தை நிகழ்த்துகிறவன் ஒக்கொங்வோ. போர்க்குலமாகிய உமோபியாவின் தலைமகனின் நெஞ்சுக்குள் நிறைந்திருந்த கசப்பு தீரவேயில்லை. வெட்டி வீழ்த்துகிறான். வெள்ளையனின் ஏவலாளியின் தலையை. வெள்ளையர்கள் மதத்தை மட்டும் அல்ல மதம் தந்திருக்கும் அதிகாரத்தையும் அரசாங்கத்தையும் நிறுவியிருந்தார்கள். பிரிட்டிஷ் அரசியின் நேரடி ஆட்சிக்குரிய நிலத்தின் சட்டங்களையும் தண்டனைகளையும் உருவாக்கியிருந்தார்கள். மீளமுடியாத துயரத்தில் விழுந்து விட்டது அந்தக் கருப்பு நிலம்.

பலியெடுத்தவனுக்கு தண்டனை நிச்சயம். அவன் தன்னை மாய்த்துக் கொள்கிறான். ஒக்கொங்வோவைத் தேடி வருகிறது காலனியப் படை குலத்தலைவன் அவர்களை அழைத்துப் போகிறான். அதிர்ச்சி அடையவில்லை. குலம் முழுவதும் உரக்கச் சொல்கிறான் குலத் தலைவன் “ஒருவன் தன் உயிரைத்தானே மாய்த்துக் கொள்வது அருவருப்பானது. பூமிக்கு எதிராகச் செய்யும் குற்றம். அப்படிச் செய்பவனைக் குலத்துடன் புதைப்பதில்லை. அவனுடைய தீய உடலை நாங்கள் தொட மாட்டோம்…. குலத்தவனின் குரல் பாறைகளில் தெறித்து ஒலிக்கிறது. ஒக்கொங்வோவின் உயிரற்ற உடலுடன் சேர்ந்து குலத்தலைவனின் நம்பிக்கைகளும், தொன்மக் கதைகளும், ஆவிகளும், கடவுளர்களும், காற்றில் ஆடிக் கொண்டிருக்கின்றனர். காலனியம் சிதைத்துப் போட்ட  கருநிலத்து மனிதர்களின் துயரங்களாலும் வாதைகளாலும் கனத்துக் கிடக்கிறது வாசக மனம்.

Related posts