You are here

கதைகூறும் பொற்சித்திரங்கள்

கமலாலயன்

குழந்தைகளின் மீதும், குழந்தைகளுக்கான இலக்கியப் படைப்புகளின் மீதும் மக்களின் கவனம் சற்றே அதிகரித்து வரும் காலம் இது. படைப்பாளிகளின் பார்வைகளும் குழந்தை இலக்கியங்களின் பால் பதியத் தொடங்கியிருக்கின்றன. தமிழின் மிக முக்கியமான எழுத்தாளர்களுள் ஒருவரான உதயசங்கரின் பங்களிப்பு, சமீபகாலமாகத் தமிழ்க் குழந்தையிலக்கியப் பிரிவிற்கு வளம் சேர்ப்பதாக அமைந்துள்ளது. ‘கேளு பாப்பா கேளு’ குழந்தைப் பாடல் தொகுப்பிலிருந்து, மலையாள மொழியிலிருந்து சிறார் இலக்கியக் கதைகளின் மொழியாக்கத் தொகுதிகள் வரை _ கணிசமான புத்தகங்கள் உதயசங்கரால் தமிழுக்கு வந்து சேர்ந்திருக்கின்றன.

கேரள மண்ணின் வளங்களுள், குறிப்பிடத்தக்க வளமென யாவரும் அறிந்தது இலக்கியம். குழந்தை இலக்கிய முயற்சிகளைப் பொறுத்தவரை, நிச்சயம் மலையாள மொழிப் படைப்பாளிகளிடமிருந்து தமிழ் எழுத்தாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உண்டென்றே தோன்றுகிறது. கேரள மாநில குழந்தைகள் இலக்கியக் கழகம் மலையாள மொழியில் வெளியிட்ட 14 கதை நூல்களுடன், உதயசங்கரின் குழந்தைப் பாடல் தொகுதி ஒன்றையும் சேர்த்து ஒரு தொகுதியாக தமிழில் அற்புதமான வடிவமைப்பில் பாரதி புத்தகாலயம் நமக்கு இப்போது தந்திருக்கிறது. நமது பார்வையை அகலமாக்கிக் கொள்ள உதவும் சிறுநூல் தொகையிது.

* * *

யானை, அணில், வாலறுந்த குரங்கு, ஐந்து பூனைக் குட்டிகள், கடுவன் பூனை, அம்மாப்பூனை, மாடப்புறா, நல்ல நாய், கொக்கு, கொசு, மரங்கொத்தி, காக்கா, புலி, ஆமை என இக்கதைகளின் நாயகர்களாக வரும் உயிரினங்கள் எல்லாமே குழந்தைகளுடைய மன உலகிற்கு மிக நெருக்கமானவை. மேற்கண்ட விலங்குகளுடன் வாழை மரமும், காய்ந்த இலையும், மண்ணாங்கட்டியும், மாடப்புறாவின் முட்டைகளும் கூட பாத்திரங்களாக வருகின்றன. மனிதர்களும் இருக்கிறார்கள். மல்லன், மகாதேவன் தையற்காரன், பாலன், வேடன், வாத்தியார் ஆகிய மனிதப் பிராணிகளுகம் மேற்கண்ட விலங்குகளுடன் கதைகளினூடே வருகிறார்கள்.

வாலு போயி, கத்தி வந்தது டும், டும், டும்’ என்ற வரியும், கதையும் தமிழ்க் குழந்தைகட்குப் பரிச்சயமானதுதான். வாலறுத்துக்கொள்ள விரும்பிய குரங்கின் குணம் மாறியதன் விளைவை இக்கதையில் மிக ரசிக்கத்தக்க சித்தரிப்பில் வாசிக்கிறோம். இதே போல ‘புலி வருது…புலி வருது’ என்று பலமுறை ஏமாற்றியவன், ஒரு நாள் நிஜமாகவே புலி வந்த போது உதவி கேட்டுக் கூப்பாடு போட்ட போது பயனில்லாமற் போகிறது. இதுவும் நமக்குப் பரிச்சயமானதுதான். ஆனால், இவற்றைச் சொல்லியிருக்கிற விதமும், வசீகரமான சித்திரங்களும் சேர்ந்து, புதியதான ஒரு வாசிப்பு அனுபவத்தை நமக்குத் தருகின்றன.

கொள்ளு பிறந்த கதையொன்றும், ஆமை – குரங்கு சேர்ந்து வாழை மரம் நட்ட கதையும் தெரியுமா உங்களுக்கு? சுஜா சூசன் ஜார்ஜின் கதைக்கு சுதிஷ் கோட்டேப்புரத்தின் படங்களும், உதயசங்கரின் தமிழாக்கமும் உயிர்த்துடிப்பைத் தந்திருக்கின்றன. இதே போல் யானையும் – அணிலும் ஆளுக்கொரு பலாமரம் நட்டு வைத்து வளர்க்கத் தொடங்குகின்றன. என்ன நடந்தது என்றறிய இ.என். ஷீஜாவின் கதையை வாசித்துப் பாருங்கள்.

‘மல்லனும் – மகாதேவனும்’ கதை கெ.டி. ராதாகிருஷ்ணன் எழுதியது. ஆபத்துக் காலத்தில் கைவிட்டு விட்டுத் தப்பியோடி விடுகிறவன் நல்ல நண்பனல்ல என்று மகாதேவனின் காதினுள் கரடி சொன்னதாம். நாம் அறிந்த இக்கதையை ஆர்வமூட்டும் வேறொரு வடிவத்தில் வாசிக்கிறோம்.

கடுவன் (ஆண்) பூனை தின்று ஏப்பம் விட்டு விட்ட தன்னுடைய ஐந்து பூனைக் குழந்தைகளை அம்மாப் பூனை மீட்டு விடுகிறது. அந்த அன்புமயமான அம்மா, தன் குட்டிகளுக்கு என்று கட்டியெழுப்புகிற வீட்டைப் போய்ப் பாருங்கள், பிரமித்துப் போவீர்கள். பி.பி. ராமச்சந்திரனின் கற்பனை அபாரமானதாய் இருக்கிறது இக்கதையில்.

மண்ணாங்கட்டியும், காய்ந்த இலையும் இணைபிரியா நண்பர்கள். காசிக்குப் போகிற அவர்களின் பிரயாண வழியில், திடீரென ஒருநாள் மழை வருகிறது. மற்றொரு நாளிலோ காற்று சுழன்றடிக்கிறது. இந்த நாட்களில், இருவரும் ஒருவரையொருவர் பாதுகாத்துக் கொள்ள முடிகிறது. ஆனால், பெருமழையும்- புயற்காற்றும் ஒன்றாய்ச் சேர்ந்தே வரும்போது…? எளிய மனிதர்களின் வாழ்க்கைச் சோகங்களைச் சொல்லும் உருவகக் கதையோ இது என்று கூட நமக்குத் தோன்றும். விமலா மேனனின் கதையில், மிகக் குறைவான வார்த்தைகள். நம்மைச் சிந்திக்க வைக்கும் உயிரோவியங்கள்!

மாடப்புறாவின் முட்டைகள் தொலைந்து போய் விட்டன. அவற்றைத் தேடித் தருமாறு உதவிகோரி அலைகிறது மாடப்புறா. ‘ஒண்ணும் முடியாது’ங்கிற பதில்களே முதலில் கிடைக்கின்றன. இக்கதையில் ஜெ.தேவிகா பயன்படுத்தும் உத்தி, குழந்தைகளின் நினைவாற்றலையும், வரிசைப்படுத்துதல் திறனையும் செழுமைப்படுத்த உதவுவதாக அமைந்துள்ளது.

‘யானை வழி’ கதையல்ல; யானையைப் பற்றி நம்மிடையே உலா வரும் நம்பிக்கைகளின் கதை. நாமறிந்த – அறியாத பல செய்திகளை, நாட்டார் வழக்காற்றுச் சொலவடைகள் பழமொழிகளின் மூலம் தருகிறார் டி.வினயச்சந்திரன். ‘நலலநாய்’ – கதை நாயைப் பற்றிய பல செய்திகளின் கதை வடிவம்; வினயச் சந்திரனுடையதுதான் இதுவும்.

யானையை ஊசியால் குத்தும் தையற்காரனுக்கு அந்த யானை தரும் தண்டனையைப் பாருங்கள், அசந்து போவீர்கள்! ராமகிருஷ்ணன் குமரநல்லூரின் ‘என்னுடைய காக்கா’ நம் எல்லாரின் காக்காவும் மாறும் விந்தை ஒரு நூலில் நிகழ்கிறது. இவரது மற்றொரு கதை, கொக்கு – கொசு – மரங்கொத்தி மூன்றுமாகச் சேர்ந்து உப்பு விற்கப்போன போது நடந்த கதையைச் சொல்லுகிறது.,

‘சின்னத் தேனீ பாடுது’ உதயசங்கரே எழுதிய குழந்தைப் பாடல்களின் தொகுப்பு. நெஞ்சையள்ளும் வசீகரமான ஓவியங்களை விஜயேந்திரன் வரைந்திருக்கிறார். கருத்தைக் கவரும் சிந்தனைகளை, எளிய – இனிய ஓசைநயத்துடன் பாடல்களாக்கித் தந்திருக்கிறார் உதயசங்கர்.

‘காலைப்பொழுது’ பாடல் முன் வைக்கிற சிந்தனை இது:

‘‘நேற்று என்பது மறைகிறது
இன்று புதிதாய்ப் பிறக்கிறது…
நாளைய பொழுதும் நம்கையில்
நிமிர்ந்தே நடப்போம் வாருங்கள்:
‘எங்கும் இயற்கை’ பாடல் எழுப்பும் கேள்வி இது.
‘எங்கும் இயற்கை பொங்குது – இதில்
பிரிவினை எங்கே வந்தது?’

குட்டிப்பாப்பா சொல்லும் நல்ல வார்த்தை, குயிலக்காவின் மனதில் நம்பிக்கையை மலர வைப்பதாக அமைகிறது. சட்டச்சட சடசடவெனப் பறக்கும் சிட்டுக் குருவியும், டக்டக் டக்டக் புகைவண்டியும் குழந்தைகள் வாய்விட்டுப் பாடி மகிழ ஏற்ற சந்தங்களுடன் எழுதப்பட்டவை. ‘எங்க ஊரு காக்கா’ – போல எல்லா ஊரு காக்காவும் ‘சோக்கா’ இருக்கச் சொல்லும் பாடல் சுவையானது. குழந்தைகளின் உலகம், இன்று புத்தம்புதிய கற்பனைகளுடன் – அழகியல் உணர்வுகளும் நிரம்பியதாக ஆகி வருகிறது. அதை மேலும் வளமாக்கி, கவின்மிகு உலகாக்கிட மேற்கண்ட 14 கதை நூல்களும், இப்பாடல் நூலும் நிச்சயம் உதவுமென்பதில் ஐயமில்லை.

டி.ஆர்.ராஜேஷ், சுதீர், தேவப்ரகாஷ், ஸஜித் முரளீதரன், கோபு பட்டித்தரா, அருண் ஆலஞ்சேரி, சுதீஷ் கோட்டேப்புரம் – ஆகியோர் வரைந்துள்ள வண்ண ஓவியங்கள், நம்மையும் குழந்தைகளாக்கி இக் கதைகளின் உலகிற்குள் அழைத்துப் போய்த் திணறடித்து விடுகின்றன.

இக்கதைகளை உருவாக்கிய படைப்பாளிகளைப் பற்றிய குறிப்புகள், நமக்குப் பல வழிகாட்டல் செய்திகளைச் சொல்லுகின்றன. சுஜா சூஸன் ஜார்ஜ், இ.என்.ஷீஜா, கெ.டி. ராதாகிருஷ்ணன், பி.பி.ராமச்சந்திரன், விமலா மேனன், ஜெ. தேவிகா, டி.வினயச் சந்திரன், ராமகிருஷ்ணன் குமரநல்லூர்.

இவர்கள் பள்ளி கல்லூரிகளின் ஆசிரியர்கள். நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர்கள். ‘யுரேகா’ என்ற மலையாள சிறார் இதழின் ஆசிரியர்களாக இருந்தவர்களும் – இருக்கிறவர்களுமாவர். கேரள சாஸ்திர சாகித்ய பரிஷத் (கே.எஸ்.எஸ்.பி.) தின் முன்னணிச் செயற்பாட்டாளர்கள். புகழ்பெற்ற மலையாளக் கவிஞர்கள். கேரள சாகித்ய அகாடமி, கேரள குழந்தை இலக்கியக் கழகம், சங்கம்புழா, வி.கே. உன்னிகிருஷ்ணன், கைரளி நூல் அறக்கட்டளை போன்ற பல அமைப்புகளின் விருதுகளையும்  பரிசுகளையும் பெற்றவர்கள். இந்த எல்லாச் சிறப்புகளோடு கூட முக்கியமான ஒரு சிறப்புத்  தகுதியுடையவர்கள் இவர்கள் – அது : குழந்தை மனங்கொண்டவர்களாய், குழந்தைகளுக்காக இலக்கியம் படைக்க முன் வந்திருப்பவர்கள் என்பதுதான்! இவர்கள் அனைவரையும் தமிழுக்கு அறிமுகம் செய்தற்காக உதயசங்கரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!

Related posts