You are here

ஆணாதிக்கத்திற்கு எதிரான சித்தரிப்பு

( ஓல்காவின் சுஜாதா நாவல்தரும் அனுபவங்கள் )

image description

பேரா. ஆர். சந்திரா

தெலுங்கு எழுத்துலகில் பிரபலமாக விளங்கும் ஓல்கா, பெண்ணியக் கருத்துக்களை, யதார்த்தமான சூழலில் பொருத்திப் பதிவு செய்வதில் திறமையானவர். Ôசுஜாதா’ என்ற புதினமும் அதற்கு விதிவிலக்கல்ல. சுஜாதா என்ற முற்போக்கான சுயமாக சிந்திக்கும் பெண், அவளது சிநேகிதிகள் சாரதா, உஷா, ரமா ஆகியோரையும் அவர்கள் குடும்பங்களைச் சுற்றியும் கதை பின்னப்பட்டுள்ளது.

சுஜாதா பல ஆண்டுகள் கழித்து தனது நெருங்கிய சிநேகிதி சாரதாவை சந்திப்பதுடன் கதை துவங்குகிறது. எடுத்த எடுப்பிலேயே சாரதா நல்ல ஓவியர் என்ற அறிமுகம் நமக்கு கிடைத்து விடுகிறது. ஆனால் திருமணம் குழந்தைகள், குடும்பவேலை காரணமாக அவள் வரைவதை நிறுத்தி விட்டாள் என்பதை விட, நான் வரைவது அவருக்குப் பிடிக்காது” என்று சுஜாதாவிடம் கூறுவதன் மூலம் எவ்வளவு திறமைகள் இருப்பினும், திருமணமானவுடன், அவை பின் தள்ளப்படுகின்றன என்ற யதார்த்தம் சாரதாவின் வார்த்தைகள் மூலம் வெளிப்படுகிறது. சிநேகிதிகள் வீட்டுக்குப் போவது அவள் கணவன் சிவராமனுக்குப் பிடிக்காது. சாரதா கடைசியாக வரைந்த ஓவியம் தூங்கும் தனது குழந்தையின் சிரிப்பை வடித்ததாகும். (குழந்தை அழ, கணவன் திட்ட குழந்தை அழும் போது, வேண்டாத படம் வரைகிறாயா?) இங்க் கொட்டி, ஓவியம் பாழாக… குன்றிப் போனாள் சாரதா. மற்றொரு சிநேகிதி ரமா சங்கீதத்தை, குறிப்பாக பாலமுரளி கிருஷ்ணாவின் பாட்டை ரசிப்பவள். திருமணமாகி குழந்தை பிறந்தவுடன் வீடு, குழந்தைகள், சௌகரியமான வாழ்க்கைதான் முக்கியமென மாறிப் போயிருந்தாள். வலுக்கட்டாயமாக சுஜாதா, அவளை பாலமுரளி கச்சேரிக்கு அழைத்துச்சென்றும், பாதியிலேயே வீட்டிற்கு சென்று விட்டாள். பால் திரிந்து விடும் என்று காரணம் கூறுகிறாள். சுஜாதா மூலம் கதாசிரியர் சமையலறை பெண்களை எப்படி கட்டிப் போடுகிறது என்பதை விமர்சிக்கிறார். பெண்களின் ரசனையைக் கொன்று போட்டுவிடும் சக்தி அந்த சமையல் அறைக்கு எப்படி வந்தது? தினமும் சப்பாத்தி டிபனா? எனக்கு மிக்சர் வேண்டுமென அடம்பிடிக்கும் மகன், கிளப்பிற்கு ஓடும் கணவன்.. ரமாவை சங்கீதத்தை ரசிப்பதிலிருந்து வெகுதூரம் தள்ளி வைத்திருந்தது. சமையல் அறைக்கும் கலைக்கும் ரொம்ப தூரம்என்று சுஜாதாவுக்குத் தோன்றியது” (பக்.22) என்பது, எழுத்தாளர் அம்பையின் வீட்டின் மூலையில் ஒரு சமையலறையை நினைவுபடுத்தியது. பெண்களின் மூளையை அரிசி, பருப்பு, மசாலா என்பவை ஆக்கிரமிக்காமலிருந்தால்,  பெண்களும் கவிதை எழுத இயலும் குகைக்குள் ஓவியம் தீட்ட இயலும் என்றும் தனது சாதனையாக இப்பெண்கள் எவ்வளவு வடை, தோசைகள் சுட்னர் என்பதுதான் தெரியுமென அம்பை சாடியிருப்பார். ஓல்காவின் எழுத்துக்களில் அந்த கோபத்தைக் காண முடிகிறது. உண்மை தான்! சமையலறைகள் பெண்களை எந்த அளவுக்கு இருட்டில் கட்டிப்போட்டு வைத்துள்ளன என்பது முக்கியமான கேள்வி.

சாரதா, ரமா இருவரிலிருந்து சற்றே மாறுபட்டவளாக, சுயத்தை இழக்க விரும்பாதவளாக உஷாவை சித்தரித்துள்ளார் நூலாசிரியர். நூல்களை நேசிக்கும், நூல்களைத் தனது சிறந்த, நிரந்தர நண்பர்களாகக் கருதும் உஷாவுக்கு, மூன்றாம்தர சினிமாக்களையும் மோசமான பாடல்களையும் விரும்பும் சேஷாத்ரி என்ற கணவன். வக்கிரமான அவனது ரசனையை வெறுக்கும் உஷா, நல்ல நூல்களை வாசிக்கும், நல்ல பாடல்களை விரும்பும் மனிதனாக கணவன் இருந்தால், இருவரின் எண்ணங்களும் ஒன்றாக இருந்து, அந்த ஒற்றுமையின் சந்தோஷத்தை அனுபவிக்க முடிந்தால் அது எவ்வளவு பெரிய அதிர்ஷ்டம்” என்பதன் மூலம், தம்பதிகள் மகிழ்ச்சியுடன் குடும்பம் நடத்த என்னென்ன தேவை என்பதை முன்வைக்கிறார். அத்துடன் மனைவி என்பவள் தனது இச்சைகளைத் தீர்த்து வைக்கவே உருவாக்கப்பட்டவள் என்ற ஆணாதிக்க கருத்தை சேஷாத்ரி மூலம் கூறி, மனைவியின் உணர்வுகள் ஆணாதிக்க சமுதாயத்தில் ஒடுக்கப்படுவதை உஷா-சுஜாதா உரையாடல்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

சுஜாதாவின் கணவன் பிரசாத் முற்போக்கு சிந்தனையாளன், சிநேகிதிகள் சுஜாதாவை சந்திக்க வரும்பொழுது, அவர்களுக்கு உணவு, தேநீர் தயாரித்து அளிப்பது, வீட்டு வேலைகளை ஆண்கள் பகிர்ந்து கொள்வதன் அவசியத்தை முன்னிறுத்துகிறது. அவர்கள் இருவரின் சந்திப்பு, திருமணம், உரையாடல்கள் சுவாரசியமாக உள்ளன. கணவன்-மனைவி இருவரும் நல்ல சிநேகிதர்களாக இருப்பதால், வீட்டிலும் வெளியிலும் சுதந்திரமாக சிந்தித்து, செயல்பட உதவுகிறது. சுஜாதாவின் சிநேகிதிகள் பிரசாத்துடன் பழகும் பொழுது அவன் எவ்வளவு வித்தியாசமானவன் என்பதை உணர்கின்றனர்.

பெண்ணியக் கருத்துக்கள் மட்டுமின்றி, வேறுசில முக்கியமான சமூகப் பிரச்சனைகளையும் கதாசிரியர் கோடிட்டுக் காண்பிக்கிறார். எடுத்துக்காட்டாக சுஜாதாவும் அவளது சிநேகிதிகளும் தாங்கள் படித்த கல்லூரிக்கு அருகிலுள்ள ரோஜாதோட்டத்தைக் காண்பிக்க தம் குழந்தைகளுடன் செல்கின்றனர். ஆனால் தோட்டத்தைக் காணவில்லை. (பக்கம் 43) ஐந்து ஆண்டுகளில் பெரிய தோட்டம் மறைந்து, ஸ்பின்னிங் மில் முளைத்திருந்தது. குழந்தைகள் ‘பெரிய தோட்டம் எங்கே இருக்கு அத்தை?’ என கேட்க ‘பருத்தி வியாபாரம் ரோஜா தோட்டத்தை பலிவாங்கி விட்டது கண்ணுகளா’ என்று பிரசாத் பதிலளிப்பது, இன்று வயல்கள், தோட்டங்கள் மறைந்து, நிலம் இதர பயன்பாட்டுக்கு செல்வதை சுட்டிக்காட்டுகிறது. சுஜாதாவுக்கு குழந்தை பெற்றுக் கொள்ள தயக்கம். ஆனால் பிரசாத்துக்கு விருப்பம். இருவரின் உரையாடல்கள் மூலம், கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து குழந்தை வேண்டுமா, வேண்டாமா என்பதைத் தீர்மானிக்க வேண்டும் என்பதை கதாசிரியர் சுட்டிக் காட்டுகிறார். அதேபோல், ”ஆண் பிள்ளைகளுக்கு எந்த சட்டங்களும் இருக்காது உஷா…. பெண் குழந்தைகளுக்குத்தான் கட்டுப்பாடுகள்” என்பதன் மூலம் பெண்கள் இச்சமூகத்தில் வளர்க்கப்படுவதில்லை, வார்க்கப்படுகிறார்கள் என்ற கருத்து நன்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மூன்று சிநேகிதிகளில் ரமாவின் சிந்தனையோட்டத்தை மாற்ற முடியாதென சுஜாதா தெரிந்து கொள்கிறான். ஆனால் உஷா அப்படி அல்ல. அவள் கணவன் தன்னுடன் வேலை பார்க்கும் பெண்ணை ரகசியமாக திருமணம் செய்து கொண்டான் என்பது தெரிந்தவுடன், அவனை விவாகரத்து செய்கிறாள். ரமா அதை வம்பு பேச வாய்ப்பாகப் பார்க்கிறார். சாரதா உஷாவைப் பற்றி கவலைப்படுகிறாள் சுஜாதாவும், பிரசாத்தும், உஷாவுக்கு ஆதரவாக பேசி அவளுக்கு தைரியத்தை ஊட்டுகின்றனர். “ஒவ்வொரு விஷயத்திலும் அவனுக்குத்தான் முக்கியத்துவம்…. நான் ஒருத்தி இருப்பதையும், நான் வாழவேண்டும் என்பதையும் முந்தாநாள் சேஷாத்ரிதான் நினைவுபடுத்தினான்” என்று உஷா கூறுவது, பெண்கள் தங்கள் சுயத்தை இழக்கலாகாது என்ற கருத்தை வலியுறுத்துவதாக அமைகிறது காதல் இல்லாத வாழ்க்கை என்னை வாழ்க்கை. 99 சதம் பெண்கள் இயந்திரகதியில் வாழ வேண்டிய சூழல். அதை ஏற்கவும் பழகிக் கொள்கின்றனர். கணவனைப் பிரிந்தால் வேதனை இருக்குமா? வீட்டில் பழகிவிட்ட நாய்க்குட்டி காணவில்லை என்றாலே எப்படியோ இருக்குமே நமக்கு, சொந்தமென நினைத்த நபர் வேற்று மனிதனாகி விட்டால் வருத்தம் ஏன் இருக்காது? வாழ்க்கை என்றால் கணவன் ஒருத்தன் மட்டும்தானா என பல கேள்விகளை உஷா சாரதாவிடம் கேட்கிறாள். உஷா துணிச்சலாக முடிவெடுக்க அவள் ஒரு உழைக்கும் பெண்ணாக பொருளாதார சுதந்திரம் உள்ளதால்தான் சாரதாவுக்கு அத்தகைய முடிவெடுக்க நிறைய தயக்கம் பயம் உள்ளது. ஆனால் சுஜாதாவை பிரசாத்தை சந்தித்துப் பேசுவது சாரதாவையும் மாற்றுகிறது. கணவனைப் பார்த்து பயந்த சாரதா, துணிச்சலாக அவனிடம் பேசுவதுடன், அவன் ‘நான்தான் இந்த வீட்டு எஜமானன். என்னை கேட்காமல் நீ வெளியே போகக் கூடாது’ என மிரட்டுகிறான். சுஜாதாவுடன் பேசக்கூட தடை விதிக்கையில் கொதித்துப் போகிறாள் ‘இந்த வீட்டைக் கட்டிக் கொண்டு அழுங்கள்’ எனக் கூறி இரவு நேரத்தில் வீட்டிலிருந்து வெளியேறி, உஷா வீட்டிற்கு சாரதா செல்வது, சாது மிரண்டால் காடு கொள்ளாது என்ற வழக்கை நினைவூட்டுகிறது. உஷா கணவனைப் பிரிந்து வாழ்வது பற்றி கூறுவதுடன் நாவல் நிறைவுறுகிறது.

அநியாயங்களுக்கும் அக்கிரமங்களுக்கும் அடிபணிந்து கொண்டிருக்கிறோம். மரத்துப் போனால் தவிர உயிர்வாழ முடியாது என்பது போல் இருக்கிறது சமுதாயம்… இன்று நாம் எல்லோரும் நீரோவின் வாரிசுகள் தான்…. இப்படிப் பல இடங்களில் நமது உணர்வுகள் மழுங்கடிக்கப்படுவதை சாடுகிறார்.

எழுத்து நடை விறுவிறுப்பாக உள்ளது. பல இடங்களில் கவித்துவம் கொப்பளிக்கிறது. கதாபாத்திரங்கள் நாம் தினசரி சந்திக்கும் மனிதர்கள்தான். சுஜாதாவின் பேச்சு மாதர் அமைப்புக் கூட்டங்களில் அடிக்கடி வெளிப்படுத்தப்படும் கருத்துக்களை அப்படியே பிரதிபலிப்பதாக உள்ளது. வீட்டில் ஆண்-பெண் வேலைப் பிரிவினை பெண் ஒரு மனுஷியாகவே கருதப்படாத நிலை என அனைத்தும் தெளிவாக உரையாடல்கள் மூலம் வெளிப்படுகின்றன. ஒரு புதினம் என்பதைவிட, ஒரு பெண்கள் கூட்டத்தின் அனுபவப் பகிர்வு போன்ற உணர்வு ஏற்படுகிறது. கண்டிப்பாக ஆண்கள் / கணவன்மார்கள் படிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் அழகான புதினம்.

Related posts