You are here
தலையங்கம் 

முதலில் பெண்… பெண்ணே முதல்!

பிளேட்டோ குறிப்பிடுவதுபோல உலகின் முதல் குடியரசை ஜனநாயகப் பொருளில் நிர்மாணித்தவர் ஒரு பெண், அஸ்டாசியா… கி.பி. முதலாம் நூற்றாண்டில் வசித்த மரியாவை உலகின் முதல் விஞ்ஞானியாக வரலாறு போற்றுகிறது. நவீன உலகின் முதல் கணித மேதை ஒரு பெண் – ஹிப்பாஷியா. முதல் கவிஞர் கி.மு.600களில் வசித்து அச்சாக்கப் பாடல்களுக்கு வழி வகுத்த கிரேக்க கவிதாயினி சாப்போ. உலகின் முதல் மத போதகர் புத்தருக்கு முன்பே தத்துவப் புதையலாகத் திகழ்ந்தவர் ஹில்டெகார்ட். தனது மண்ணிற்காக உயிர் நீத்த தியாகிகள் என ஒரு பட்டியல் உலக அளவில் தயாரானால் முதல் பெயர் பிரான்ஸ் நாட்டிற்காக 1412-ல் உயிரோடு எரிக்கப்பட்ட வீராங்கனை ஜோன் ஆஃப் ஆர்க்! உலகில் பெண் விடுதலைக்கான முதல் குரல் எல்லாரும் சொல்வதுபோல ஆணுடையதல்ல.  எ வின்டிகேஷன் ஆஃப் தி  ரைட்ஸ் ஆப் உமன் (A Vindication of the Rights of Woman) புத்தகத்தின் மூலம் 1792ல் பிரெஞ்சுப் புரட்சியின் ஒரு குரலாக முழங்கியவர் மேரி உல்ஸ்டோன் கிராட் எனும் பெண் வீராங்கனை. உலகின் முதல் அறிவியல் புனைகதையை எழுதியவர் ஒரு பெண்; மேரி ஷெல்லி. புதினம் பிராங்கைன்ஸ்டீன். மேல்தட்டு மக்களே வாசித்து வந்த நாவல்  இலக்கியத்தை நடுத்தர வர்க்கத்தின் அடையாளமாக்கி அமெரிக்க கருப்பின மக்களின் அடிமை நிலையை உலகம் உணர வைத்துப் பெரும் எழுச்சிப் போராட்டத்திற்கு வித்திட்டவர் ஒரு பெண். ஹாரியட் பிரீச்சர் ஸ்டவ் (அங்கிள் டாம்ஸ் கேபின்) ஏன் உலகின் முதல் நாவல் கி.பி.999ல் ஜப்பானிய மொழியில்தான் வெளிவந்தது. ‘ஜென்ஜியின் வாழ்க்கை கதை’  எழுதியவர் ஒரு பெண், முராசாகி ஷிகிபு.

மருத்துவர்கள் ரகசியமாக தங்களுக்குள் வைத்து அடைத்த மருத்துவ உண்மைகளை சாதாரண மக்கள் வாசிக்கும் மருத்துவ நூல்களாக முதலில் வெளிக்கொணர்ந்தவர் இத்தாலியப் பெண் மருத்துவர் ட்ரோடா ட்ரோடுவா. நவீன கணித சாம்ராஜ்யத்திற்கு வித்திட்டு பிரெஞ்சு புரட்சியின் உலகளாவிய குரலாகவும் விளங்கியவர் சோஃபி ஜெர்மெய்ன். நாடகம் மக்கள் சக்தியாக மாறிட பெரிய இயக்கத்தை முன் வைத்து பிரெஞ்சு புரட்சியின் பெண் விடுதலைக் குரலாகி புரட்சிக்குப் பிந்தைய அரசால் முதலில் கெலட்டினில் தலை வாங்கப்பட்டவர் ஒலிம்ப் டி கெவுகஸ்.  குழந்தைகள் உரிமை குறித்த  முதல் பிரகடனத்தை சோவியத் கமிசாருக்கு சமர்ப்பித்து உலகிற்கே புதியவழி காட்டியவர் தலைவர் லெனினின் துணைவியார் குரூப்ஸ்கயா. கணினியியலின் முதல் விதையைத் தொடங்கி அதன் ஆசிரியராக இருந்தவரும் பெண், அமெரிக்க கருப்பினப் போராளி லூசிஸ்டோன்.

முதலில் பெண்… பெண்ணே முதல்! ஹெலன் கெல்லர், நைட்டிங்கேல், அன்னைதெரசா, மரியா மாண்டசொரி என நீளும் அந்த வரலாறு உலகிற்கு வாழ வழிகாட்டும் சரிதையாக மிளிர்கிறது. உலகப் பெண்கள் தினத்தில் அப்பாதை வழி தோழமை கொள்வோம். பெண்மை வாழ்க வென்று.. பெண்மை வெல்கவென்று கூவிடுவோம்!

– ஆசிரியர் குழு.

Related posts