You are here
வாங்க அறிவியல் பேசலாம் 

அச்சப்படுபவர் அறிவியல்வாதியே அல்ல

மேரி கியூரி

மேரி கியூரி. மேரி ஸ்க்லொடொஸ்கா கியூரி. இரு முறை அதிலும் வேறு வேறு துறைகளுக்கான நோபல் பரிசு பெற்ற ஒரே விஞ்ஞானி. தனது ஒரே குடும்பத்தில் அயர்னிகியூரி, பியரிகியூரி என நோபல் பாரம்பரியத்தை உருவாக்கியவர். 1867ல் நவம்பர் 7 அன்று வார்சாவில் (போலந்து) பிறந்தவர். அப்போது ரஷ்ய ஜார்பேரரசின் கீழ் இருந்த போலந்தில் பல்வேறு இடதுசாரி எழுச்சிகளுக்கு காரணமான குடும்பத்தில் பிறந்து ரகசியமாக நடத்தப்பட்ட வார்சா பல்கலைக்கழகத்தில் கற்று தனது சகோதரியோடு பாரீசுக்கு (பிரான்ஸ்) வேறு பெயரில் தப்பி அங்கு மிகுந்த போராட்டத்தின் நடுவில் கல்வியைத் தொடர்ந்தார் கியூரி. பெண் கல்விக்கும்  பெண் முன்னேற்றம், பங்களிப்பு இவை யாவைக்கும் முன் உதாரணமானவர். பகுத்தறிவுவாதி. பாதிரியார்களோ தேவாலயமோ செல்லாத சீர்திருத்த திருமணம் செய்து கொண்ட தைரியசாலியாக வரலாறு அவரைப் போற்றுகிறது. தாய் மொழிப் பற்று, இனப்பற்று, அரசியலில் சோஷலிசப் பற்று என பலவற்றுக்கு முன்னுதாரணம் கியூரி என்பது பலருக்கும் தெரியாது. தனது வாழ்நாளில் பத்தி¤ரிகையாளர்களையே சந்திக்காதவர். கொடுத்த ஒரே நேர்காணல் இதுதான். அமெரிக்கப் பெண்ணிய இதழ் லா மாட்டின் இதழின்  இதழாளர் … வில்லியம் பிரவுன் மெலோனி, 1920 மே மாதம்  எடுத்த நேர்காணல்.  முதல் பெண் அரசியல், ஆய்வுத் தேவை எதிர்கால உலகம் என்று பலவற்றைப் பற்றி திறந்த மனதோடு மேரி கியூரி விவாதிப்பதன் பதிவு இது.  கூடுமான வரை அப்படியே மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

தமிழில்: இரா. நடராசன்
நேர்காணல்: வில்லியம் பிரவுன் மெலோனி
நன்றி: தி ரேடியம் இன்ஸ்டிட்யூட்
இணையம் www.aip.org

கே: எப்படி இருக்கிறது உங்களது ரேடியம் இன்ஸ்டிட்யூட்?

ப: (முதல்) உலகப்போர் முடிந்துவிட்டதா என்பதே சந்தேகமாக இருக்கிறது. பேரழிவு. இப்போது தான் பணிகளைத் தொடர்கிறோம். எங்களிடம் எதுவுமே இல்லை. என்  கணவர்  பியரிக்கு லெஜியான் ஆஃப் ஹானர் (பிரான்சின் உயரிய விருது) வழங்கப்பட்டு அவர் மறுத்ததால் ஏற்பட்ட மனக் கசப்பிலிருந்து (பிரான்ஸ்) அரசாங்கமும் விடுபட வில்லை. பியரி இப்போது இல்லை எங்களுக்குத் தேவை விருதுகள் இல்லை, ஆய்வகம். இதை ஏன் உணர மறுக்கிறார்கள். ரேடியம் ஆய்வு முடிந்துவிட்டதாக நான் கருதவில்லை. புற்றுநோய் உட்பட பலவற்றின் மீதான  அதன் பரிசோதனை முற்றுப் பெறவில்லை. உலகின் முன்னணி கல்வியகமாக அதை வளர்த்தெடுத்த பியரியும் நானும் கண்டடைந்த கனவு நிறைவு பெறவேண்டும். அதற்கு இன்னும் நிறைய தொலைவு பயணிக்க வேண்டி உள்ளது.

கே: இப்போது உங்கள் வாழ்வின் மைய நீரோட்டம் ஆய்வுகள் அல்ல. கல்வியகத்தைக் கட்டி எழுப்புதல் என்று சொல்லலாமா?

ப: மிகச் சுலபமாக சொல்லிவிட்டீர்கள். ஆனால் ஆய்வுகளைத் தொடருவதும் கல்வியகத்தை திறம்பட செயலாக்க ஊக்குவிப்பதற்கும் எந்தவித்தியாசமும் இல்லை. ஆரம்ப கால எனது அனுபவம் சொல்கிறது. வாழ்க்கை என்பது ஆய்வகத்திற்கு வெளியே இல்லை. எங்கள் கல்வியகத்திலிருந்து இன்றுவரை சுமார் 171 ஆய்வுக் கட்டுரைகள் கதிர் வீச்சு பற்றி வெளிவந்துள்ளன.  இன்னும் பலர் முன் வருகிறார்கள். பெண்கள் இன்னமும் கூட ஆய்வுகளை நோக்கி அறிவியலை நோக்கி வர வேண்டியுள்ளது. மற்றைய துறைகளில் ரேடியம் பயனாவது வியாபார வர்த்தக நோக்கம் கொண்டதாக அதை மாற்றிவிடும். மருத்துவத்தில் அதன் பயன்பாட்டைத் தொடர்ந்து முழு ஈடுபாட்டோடு ஆக்க வேண்டும். அதற்கு கல்வியகம் சிறந்த ஆய்வகத்தைக் கொண்டிருக்க வேண்டும்.

கே: உங்கள் வாழ்வில் எந்த நாட்களை மிக அற்புதமான நாட்களாக கருதுகிறீர்கள்?

இதற்கு பதிலளிப்பது கஷ்டம். என் கணவரும் நானும் இணைந்து ஆய்வு வேலை செய்த நாட்களை சொல்லலாம். இரவு பகல் வித்தியாசமின்றி நகர்ந்த நாட்கள் அவை. கதிர்வீச்சின் வேதிப்பொருட்களை அலைக்கழிவுகளிலிருந்து பிரித்தெடுக்கும் மிகக் கடினமான வேலை. எங்களிடம் சுத்தமாகப் பணம் இல்லை. எந்த வேலையாளும் இல்லாமல், பெரும்பாலும் கடும் வெப்பமும் கொடுமையான குளிரும் தாக்கிய நாட்களில் நாங்கள் வெறும் கைகளால் உழைத்தோம். ஆனால் அவ்விதம் கதிர்வீச்சை வெளியிட்ட அந்த வேதிப் பொருட்களை சேகரித்து வைத்து நள்ளிரவில் அழகிய ஒளி வீசிய அந்த ஆய்வகத்திற்கு நாங்கள் செல்வோம்.. அங்கே அவற்றின் ஒளியை கும்மிருட்டில் ரசிப்போம். எங்கள் வேலை தான் பெரிது. நாங்கள் வேறு எதையுமே யோசித்ததும் இல்லை. என் திருமண கவுனில் நான் ஆய்வகத்தில் இருப்பேன். ஆய்வக கவுன் என்று எனக்குத் தனியாக ஏதும் கிடையாது. பியரிக்கும் அப்படித்தான். ஆய்வகத்திற்கு விஜயம்  செய்த பெக்குரல், லுப்மன் போன்றோர் தவிர வேறு தொடர்பில்லை. பாரீசில் அந்த நாட்களில் யாருக்குமே எங்களைத் தெரியாது.

கே: உங்கள் ஆரம்பகால ஆய்வுகளைப் பற்றிச் சொல்லுங்கள்.

எல்லாம் 1867ல் தொடங்கியது என்று சொல்லலாம். அயர்னி (கியூரி) முதல் மகள் பிறந்த வருடம். என் குடும்பத்தின் மிகக் கடினமான அந்த நாட்களில் என் கணவர் வேலை பார்த்த அதே எக்கோல் கல்வியகத்தில் விரிவுரையாளர் ஆக்கப்பட்டேன். எங்களிடம் ஆய்வகம் என்று எதுவுமே கிடையாது. வசிக்க இடம் கிடையாது. கல்வியகத்தின் ஒரு மூலைத் தடுப்பில் வசித்தோம். இயற்பியல் துறைக்கு கிட்டத்தில் பாழடைந்த கொட்டகையில் ஆய்வுப் பணியைத் தொடர்ந்தோம். அந்த தகரக் கொட்டகையில் நாங்கள் பயன்படுத்துவதற்கு முன் மருத்துவ மாணவர்கள் விலங்குகளை  உறுப்பு அறுப்பு செய்து கற்க பயன்படுத்தி வந்தார்கள். பியரியின் எலெக்ட்ரோமீட்டர் (மின் சக்தியைக் கண்டுபிடிக்கும் கருவி) பயன்படுத்தி பிட்ச் பிளெண்ட் யுரேனியத்தை விட அதிக மின்னூட்டக் கதிர் ஏற்படுத்துவதைக் கண்டு டார்பனைட், தோரியம் போன்றவையும் அதே தன்மை   கொண்டவை என்பதை நான் அறிந்தேன். தனது கிரிஸ்டல் கல் ஆய்வுகளைக் கைவிட்டு என் கணவர் எனது ஆய்வில் இணைகிறார். விரைவில் அந்த மின்னூட்ட அதிர்வலைகளுக்கு கதிர் வீச்சு எனப் பெயரிடுகிறோம். ஏப்ரல் 12 -1898 இதழ் அகாடமேயில் எனது பேராசிரியர் கப்ரியேல் லிப்மன் உதவியோடு எனது ஆய்வுக் கட்டுரை வெளிவருகிறது. ஆனால் பலர் இதேபோன்ற ஆய்வில் ஈடுபட்டிருந்தனர். சில்வானஸ் தாம்சன், ஜெர்ஹார்டு ஷிமித் இப்படி. ஆனால் எங்களது ஆய்வு  அத்தோடு முடியவில்லை. அது ஒரு தொடக்கம்தான். ரேடியம், பொலோனியம் என நான் தொடர்ந்து உழைத்தே வருகிறேன். 1902ல் ரேடியம் அடையப்பட்டது. எங்கள் திருமணவாழ்வின் உச்சகட்ட வெற்றி. 1898 முதல் 1902க்குள் நாங்கள் கூட்டாகவும் தனித்தனியாகவும் முப்பத்தி இரண்டு ஆய்வுக் கட்டுரைகளை வெளியி¢ட்டிருந்தோம். ஏறக்குறைய ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு புதிய விஷயத்தை   செய்து மழை பெய்தால் ஒழுகிய அந்த தகரக் கொட்டகை ஆய்வகத்தில் கண்டுபிடித்தபடி இருந்தோம். அந்த வேகம் இன்று இல்லை. ஆனால் அதே உத்வேகம் மனதில் உள்ளது.

கே: 1903ல் நோபல் பரிசு பெற நேரில் போகாத நீங்கள் 1911ல் வேதியியலுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட போது நேரில் போனது ஏன்?

கடினமான பணிச்சுமையே முதல் நோபல் பெற நாங்கள் போகாததற்கு காரணம். எங்கெங்கோ அலைந்து திரிந்து பிட்ச் பிளெண்ட் கழிவு ஒரு வண்டி வந்து இறங்கி இருந்தது. பிரிப்பு முறையும் மிக சிக்கலானது. ஒரு டன் பிட்ச் பிளெண்ட் கழிவிலிருந்து வடித்துக் கரைத்தல் முறையில் உங்களுக்கு வெறும் அரை கிராம் ரேடியம் குளோரைட் தான் கிடைக்கும். அப்படி அது கிடைத்தால் அந்த நாட்களில் அது நோபல் பரிசை விட பெரிய விஷயமாக இருந்தது.

என் கணவர் (சாலை விபத்தில்) இறந்த பிறகு  நான் வேலையே வாழ்வென்று என்னை மேலும் சுருக்கிக் கொண்டேன். பொலோனியம், ரேடியம் என தீவிரமாக கண்டுபிடிப்புகளில் என்னை முழுமையாக ஐக்கியப்படுத்தினேன். 1911 நோபல் நிகழ்வுக்கு நான் நேரில் என் மகள்களுடன் கலந்து கொண்டேன். ஒன்று, என் பற்றிய அவதூறுகளை உலகம் பரப்பிக் கொண்டிருந்தது. ஒருவர் பெண் என்பதால் வெளி உலகத் தொடர்பை விரும்பாதவர் என்பதால் பத்திரிகையாளர்கள் உட்பட யாரையுமே சந்திக்க அனுமதிக்காதவர் என்பதால் பரப்பப்பட்ட அவதுறுகள் அவை. நான் நேரில் செல்ல மிகவும் தயங்கினேன்.  என் மகள்கள் இருவரும் தந்த நிர்பந்தம். மேலும் நான் எங்கள் ரேடியம்  கல்வியகத்திற்கு உதவிக்கரம் எங்கிருந்து கிடைத்தாலும் பயன்படுத்தும் திறந்த மனநிலைக்கு வந்துவிட்டிருந்தேன். இரு நோபலுக்கும் இடையில் ஒரு பெண் என்கிற முறையில் நான்

விஞ்ஞானியாக ஏற்கப்பட்டேன். அதற்காக பலவற்றைப் போராடிப் பெற்று இருக்கிறேன். இதை சொல்ல தயக்கமே இல்லை.

கே: பெண்  விஞ்ஞானியாக நீங்கள் சந்தித்த சோதனைகள் என்ன?

அவற்றை பிரஸ்தாபிக்க வேண்டுமா என்ன? முதலில் நோபல் பரிசு அறிவிக்கப்படும் வரை எனக்கு பிஎச்.டி. பட்டம் வழங்கப்படவே இல்லை. 1903 ஜுன் மாதம் நானும் என் கணவரும் லண்டன் ராயல் கல்வியகத்திற்கு ஆய்வுகளை விளக்க அழைக்கப்பட்டோம். ராயல் கல்வியகம், ஒரு பெண் என்பதால் என்னைப் பேச அனுமதிக்கவில்லை. எங்கள் ஆய்வு முழுவதையும் என் கணவரே விளக்க அனுமதிக்கப்பட்டார். பின்நாட்களில் கல்வியகம் எனக்கு உறுப்பினர் அந்தஸ்த்து வழங்க முன் வந்தபோது அதை மறுத்தேன். உங்கள் அமெரிக்கா முழுதும் ரேடியம் விளக்கொளிமுதல் முகப்பூச்சு ஆடை ஆபரணம் என பெரிய தொழிலாக உருவெடுத்ததே… நானும் என் கணவரும் கண்டுபிடிப்பை முறைப்படி பதிவு செய்யவில்லை, உரிமம் பெறவில்லை என்று அமெரிக்கர்கள் கேலிசெய்தார்களே…  எங்கள் ஆய்வகத்தில் இருக்கும் ஒவ்வொரு கிராம் ரேடியத்திற்கும் இணையாக  பத்து மடங்கு அமெரிக்கர்களிடம் அதிகம் உள்ளது, என்பது வரை பல்வேறு வகை அரசியலை என் வாழ்க்கை சந்தித்து வருகிறது.

கே: உங்களது போலந்து நாட்டுப் பற்று பற்றி சொல்லுங்கள். பொலோனியம் என பெயரிட்டதை போலந்து நாட்டவர்கள் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள்?

போலிஷ் என் தாய் மொழி. என் குழந்தைகள் பாரீஸில் வளர்ந்தாலும் அவர்களுக்கு போலிஷ் மொழியில்தான் கல்வி புகட்டினேன். நாங்கள் வீட்டில் போலிஷ் மொழியில் தான் உரையாடுகிறோம். எங்கள் பொலோனிய இனம் தொடர்ந்து ஆக்கிரமிப்பாளர்களால் ஆளப்பட்டது. எங்கள் நாட்டை உலகம் அறிய, நான் பொலோனியம் என ஒரு வேதிப் பொருளுக்கு பெயரிட்டது என் வாழ்வின் லட்சியமும் நேர்கோட்டில் என் வேர்களின் தேடலைக் காட்டுகிறது என்பதைத் தவிர வேறெதுவும் இல்லை. இப்போதும் வார்சாவில் ரேடியம் கல்வியகத்தை நிர்மாணித்து பாரீஸிலும், வார்சாவிலுமாக வாழ்வதையே விரும்புகிறேன்.

கே: நீங்கள் யூதர் என்றும் நாத்திகர் என்றும் பரவலாக ஒரு பேச்சு உள்ளதே?

பிரெஞ்சு பத்திரிகையாளர்கள் மட்டுமல்ல. உலக அளவில் இப்படி ஒருவரைப் பற்றி ஒருவர் சான்று தர யாருக்கும் தகுதி கிடையாது. என் தந்தை ஒரு நாத்திகர்.  என்ன தவறு என்று தெரியவில்லை. நானும் என் கணவரும் சர்ச்சில் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதுதான் இவர்களுக்கு முக்கியமாகப்படுகிறது. எங்கள் அறிவியல் பங்களிப்புகள் பற்றி எந்தக் கவலையும் கிடையாது. நோபல் பெற்றால் பிரான்சின் பெரிய கதாநாயகி நான். பிரான்சின் உயரிய விருது பெற்றால் அந்நிய  தேச ஆள்.. நாத்திகப் பட்டம்.. எனக்கு எதிலும் நாட்டமில்லை. அதுபற்றி அச்சமும் இல்லை. நாத்திகம் குற்றமா  என்ன? அச்சப்படுபவர்  அறிவியல் வாதியே அல்ல.

கே: உலகப் போரில் உங்கள் எக்ஸ் கதிர் நடமாடும்  மருத்துவ மனை குறித்து சொல்லுங்கள்… ஃபெட்டிட் கியூரீஸ் வண்டி…

அறிவியல் கண்டுபிடிப்பு ஒன்று சாதாரண மக்களைச் சென்றடைய வைப்பதும் ஒரு முக்கிய அம்சம். பிரான்ஸ் படைகளின் செஞ்சிலுவை அமைப்பே இணைத்து போர்க்காலத்தில் காயம் பட்டவர்களுக்கும், குண்டு வீச்சில் கைகால், எலும்பு முறிந்தவர்களுக்கும் உதவிய வேலை. நான்காண்டுகள் ஒரு மிலிட்டரி டாக்டர் என் மகள்  அயர்னி இவர்களோடு காயம்பட்டோர்க்கு ஒரு மருத்துவத் தாதியாக செயல்பட்ட அந்த நாட்களில் கற்றதை இப்போது ஏராளமான பெண்களுக்கு பயிற்சியாக என் ஓய்வு நேரம் அனைத்திலும் செய்து வருகிறேன். பெண் அமைப்பு என்பது இது போன்ற சமூக நோய் எதிர்ப்பு போர் எதிர்ப்பு வேலைகளில் அரசியல் அணியாக ஒன்றுபட வேண்டும் என்பதே என் விருப்பம். பெண்கள் தங்களுக்கான இடத்தைப் போராடிப் பெறுவதற்கு நேரடியாக செயலில் இறங்குவதே ஒரே வழி.

Related posts