வாசிப்பு எனக்கு சுவாசமென ஆகிப்போன காலமது!

புத்தகங்கள் சூழ்ந்தவீடு-28

இருபத்து மூன்று அடி நீளமும், பதினைந்தடி அகலமுமுடைய மண் சுவற்றிற்கு மேல் மஞ்சம்புல் வேய்ந்த கூரைவீடு அது. வீட்டிற்கு வெளியேயும், உள்ளேயும் குளிர்ச்சி தங்கியிருக்கும். வீட்டின் நீளம் ஏழடி சமையலறையும், ஆறடி வரவேற்பறையும், மீதியுள்ளது படுக்கையறையுமாக மூன்றாகப் பகுக்கப்பட்டிருந்தது. சமையலறையில் மண்ணாலான ஓர் உறை (குதிர்) இருந்தது. அதனருகே பாய்போட்டு விறகடுப்பிலிருந்து சுடச்சுட கிடைக்கும் தோசையும், மல்லாட்டை சட்னியும், மீன் கொழம்பும் எப்போதும் யாருக்கும் கிடைக்கும்.

அப்பா ஹாலில் ஒரு ஈசிச்சேரிலேயே அவர் வாழ்வைச் சுருக்கிக் கொண்டார். அதிலேயே படிப்பு, தூக்கம் எல்லாமும்.

படுக்கையறை என அழைக்கப்பட்ட அந்தச் சிறு அறையில் ஒரு பழங்காலத்துப் பூவரசு மரக்கட்டில். மீதி இடங்களில் எப்போதும் பச்சை மல்லாட்டை உலர்த்தப் பட்டிருக்கும். அதன்மீது விரிக்கப்பட்ட பழம்பாயில் படுத்துக் கொண்டுதான் நான் முதன்முதலில் ஜெயகாந்தனின் ‘ஒரு மனிதனும் சில எருமைமாடுகளும்’ நாவலை ராணிமுத்து மாத இதழில் வாசித்தேன். அது என் அன்றாடங்களை முற்றிலும் சிதைத்தது. அதில் வந்த ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர், ஒரு பெண் எல்லாம் என் பத்தாம் வகுப்பு இறுதித் தேர்வுக்குக் குறுக்கீடு செய்தார்கள். ஆனால் நான் அவர்களைத் தான் எனக்கு நெருக்கமானவர்களாக்கினேன். அது ஓர் அந்தரங்க உறவு. அப்பா அம்மாவுக்குப் பாடப்புத்தகங்களைப் படிப்பது போலவும், மனதுக்கு அவர்களையும் சேர்த்துப் படித்தேன். இளம் பையனுக்குக் கிடைக்கும் பெண்ருசி போல வாசிப்பு எனக்குள் பரவி என்னென்னவோ செய்தது. வாசிப்பு ஒரு சங்கிலியின் நுனிபோல. அதைத் தொட்டால் அது உங்களை அதன் மறுமுனைவரை அழைத்துப் போகும். என்னையும் அழைத்துப் போனது.

வண்ணதாசன், வண்ணநிலவன் இருவருமே போட்டிபோட்டு என்னை ஆக்ரமித்தார்கள். ‘சமவெளி’, ‘பெயர்தெரியாத ஒரு பறவை’, ‘கலைக்க முடியாத ஒப்பனைகள்’, ‘தோட்டத்திற்கு வெளியேயும் சிலபூக்கள்’ இத்தொகுப்புகள் என்னிடமே எப்போதும் நிலைத்திருந்தன. என் காதல் கடிதங்களை ஒளித்து வைக்கும் மறைவிடங்களுமானது அவை. நீண்ட நாட்கள் தனிமையில் மறைத்து வைக்கப்பட்டு மிகுந்த தயக்கத்தோடு பரிமாறப்பட்ட முதல் காதல் கடிதம் நிராகரிப்பின்றி ஏற்றுக் கொள்ளப்பட்டது.

வாசிப்பு எனக்கு சுவாசமென ஆகிப்போன காலமது. வாசலில் ஈரப்பனியில் நனைந்து புத்தகம் நனைய நனைய நான்காவது முறையாக அன்றைய இரவில் ‘மிச்சம்’ கதையை வாசித்திருந்தேன். அதில்வரும் வேசியோடு, அப்பையனோடு சேர்ந்து பஸ் ஸ்டாண்டைசுற்றினேன். யார் யாரோ குடித்து முடித்த மிச்சமிருந்த எச்சில் கலர் பானங்களை அருந்தினேன். அலைவுற்றேன். அக்கதை என்னை நிலைகுலைத்தது, அதுவரையிலான என் தேடல்கள் வெறி கொண்டெழுந்தன. சைக்கிள் மிதித்து எட்டு கிலோமீட்டருக்கும் அப்பாலிருந்த வேளானந்தல் ரயில்வே ஸ்டேஷன் முன் போய் நின்றேன். இரவு பெய்த மழையில் அப்போதுதான் துளிர்த்த ஒரு செடியின் தளிர்போல அங்கு ஒருவர் இருந்தார். அவர் பெயர் உதயஷங்கர். அந்த சீமைஓடு வேய்ந்த பழைய ரயில்வே குவார்ட்டஸில் வயதான ஒருவரின் படம் மாட்டப்பட்டிருந்தது.

‘‘இது யாரு ஷங்கர்?’’

‘‘என் சித்தப்பா’’

“இல்லையே” எனக் குழப்பத்தோடே திரும்பினேன். அன்றிரவே அவர் உதயஷங்கரின் சித்தப்பா அல்ல, அது புதுமைப்பித்தன் என்பதைக் கண்டறிந்தேன்.

கோபத்தோடு மீண்டும் சைக்கிள் மிதித்தேன். மூச்சுவாங்க மூச்சுவாங்க,

‘‘அது உங்க சித்தப்பா இல்ல. நீங்க பொய் சொல்றீங்க, அது புதுமைப்பித்தன்’’ என்றேன். அவர் சிரித்துக் கொண்டே புதுமைப்பித்தனின் முழுத் தொகுப்பை எடுத்து என் முன் நீட்டினார். பொன்னகரமும், கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும், அங்கேயே படித்து முடித்தேன். ஒரு நீண்ட கூட்ஸ் ரயில் வண்டி இடையே சடசடத்துப் போன சத்தம் மட்டும் கேட்டது. அன்றிரவு முழுக்க புதுமைப் பித்தனுடனிருந்தேன். வாழ்வின் அல்லல்களில் அவன் என்னை முக்கி எடுத்தான். உடம்பெல்லாம் சேறும் சகதியுமாக அப்படியே கிடந்தேன். நீண்ட நாட்கள் யாரையும் என் மனவுலகில் அனுமதிக்காமலிருந்தேன். அப்போது புதுமைப்பித்தன் மட்டும் எனக்கு போதுமானதாக இருந்தான். இரை செரித்து முடிந்தபின் வலையிலிருந்து வெளிவரும் ஒரு பாம்பைப் போல நான் வெளிவந்தேன். என் முன்னால் ‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’ இருந்தது. அம்பை தான் என்னை இந்தியாவின் பல மாநிலங்களில் பிரிந்து வாழ்ந்தாலும் சமையலறைப் புழுக்கங்களில் வெந்துதணியும் பெண்களைக் காட்டினார்.

அதுவரை பெண்கள் எனக்கு ஈர்ப்பானவர்கள், அழகானவர்கள், வாசனை மிக்கவர்கள், ஸ்பரிசம் வேண்டி தவமிருக்கும் உடல்கள். இதையெல்லாம் தலைகீழாய்ப் புரட்டிப் போட்டன அம்பையின் கதைகள்.

அப்போதிலிருந்து இன்றுவரை என் வீட்டிற்கு நூலக அறையென்று தனியே இல்லை. புத்தக அலமாரியில்லை. புத்தகங்கள் வரும் போகும். நான் ஜெயகாந்தனின் கங்காவை என்னிடமிருந்து பாதியில் பறிகொடுத்தேன். ஆனால் எட்டித் தொட்டுவிடும் தூரத்தில்தான் அவள் எப்போதும் இருந்தாள்.

கதைகள் எனக்குப் பிடித்திருந்தால் அந்தப் படைப்பாளிக்குக் கடிதம் எழுதுவேன். பதிலுக்கு மிக நீண்ட கடிதங்கள் வண்ணதாசன், சுந்தர ராமசாமி, மேலாண்மைப் பொன்னுசாமியிடமிருந்தும் வரும். பிரமிள் தொடர்ந்து நூற்றுக்கணக்கில் போஸ்ட் கார்டு எழுதிப் போடுவார். பதிலுக்கு அவருக்கு மட்டும் எதுவும் எழுத மாட்டேன். அவர் கடிதங்கள் எனக்கு இன்றுவரை புரிந்ததில்லை. தன்வீட்டு ஓனரம்மா ஒரு பன்றி மேய்ப்பவளென்றும், அவள் தன்னைத் தொடர்ந்து இம்சிப்பதாகவும், ‘முன்றில்’ மகாதேவனிடம் சொல்லி அவளுக்கொரு வக்கீல் நோட்டீஸ் அனுப்ப இருப்பதாகவும், இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன என்றும் கேட்டிருப்பார், என்ன பதிலெழுதுவது எனப் புரியாமல் அக்கார்டை பலமுறை படித்து சட்டைப் பைக்குள்ளேயே வைத்திருப்பேன்.

சு.ரா. நான் அந்த வருடம் படிக்க வேண்டிய புத்தகப் பட்டியலை ஒரு இன்லேண்ட் கடிதத்தில் டைப் செய்து அனுப்புவார். அப்படி நான் அடைந்தது தான் ‘ஒற்றை வைக்கோல் புரட்சி’, ‘டாக்டரில்லாத வீட்டில்’.

‘பள்ளமும்’ ‘பசுவய்யா கவிதைகளும்’ எனக்கு ஒரு சேரக் கிடைத்தன. ஒரு இளம் வாசகனை இவ்விரு புத்தகங்களுமே சவாலுக்கழைத்தன. இவர் உரைநடை எழுதுபவரா? கவிஞனா? என ஒரு தீர்வுக்கு வர முடியாமல் தவித்தேன். சு.ரா.வின் ‘ரத்னாபாயின் ஆங்கிலம்’ இன்றளவும் என்னை பிரமிப்புக்குள்ளாக்கிய கதை. ரத்னாபாய் என்கிற அப்பெண் தன் மொழியின் லாவகத்துக்காகத் தன் உயிரையே தந்துவிடத் துடிக்கும் மனம் என்னை நிலைகுலைய வைத்தது. பின்னாளில்தான் அவர் படைத்த ரத்னாபாய் அவர்தான் என்பதை அறிய முடிந்தது.

ஒவ்வொரு வருடமும் எனக்கு டைபாய்டு காய்ச்சல் வரவேண்டுமென வேண்டிக் கொள்வேன். இருபத்தியோரு நாட்கள் கோரைப்பாயில் அம்மா காலழுத்திவிட, படுத்துக் கிடந்துதான் தமிழின் ஆகச்சிறந்த படைப்புகளை வாசித்திருக்கிறேன். அப்படி ஒரு டைபாய்ட் காய்ச்சல் காலத்தில் வாசிக்கப் பட்டதுதான் கல்குதிரை கொண்டுவந்த ‘நூற்றாண்டு காலத்தனிமை’.

இன்றளவும் வரும் புத்தகங்களில் என்னைப் பொறாமைப்பட வைத்தது பால்ராஜ் கென்னடி என்ற ரைஸ்மில் ஓனரின் மகன் தயாரித்த ‘வீடு’ தொகுப்பு தான். தன் திருமணத்திற்கு வரும் படைப்பாளிகளுக்கு தருவதற்கென தன் தகப்பனிடம் போராடிப் பணம் பெற்று அதை அன்னம் மீராவிடம் கொடுத்து டைப்பிங் மிஷினில் அச்சேற்றியிருப்பார். அப்புத்தகத்தை நீண்டநாட்கள் கையில் அழகுக்காக, அதன் நேர்த்திக்காக, அதன் அச்சு வாசனைக்காக படிக்காமல் வைத்திருந்தேன். அப்படி நான் வாசிக்காமல் கையிலேயே வைத்துத் திரிந்த இன்னொரு புத்தகம் தமிழ்ச்செல்வனின் ‘வெயிலோடு போய்’. இசக்கி அண்ணாச்சியின் புகைப்பட நேர்த்தி அப்புத்தகப் புரட்டலை என் கைபிடித்து தடுத்து நிறுத்தி அதன் மேலேயே நிலைநிறுத்தியது. திருமணமாகி ஷைலஜா என் வீட்டிற்கு வந்த முதல்நாள் அதுவரை அவள் வாசிப்பிலிருந்த அனைத்து புத்தகங்களையும் ஒரே நாளில் கைவிட்டாள். ஒரு புது வாசிப்பை, புது பிரதியைத்தேடி அலைவுறும் மனம் அப்போது ஆரம்பித்ததுதான் அவளுக்கு.

திருமண விருந்தின் பொருட்டு கோவில்பட்டிக்குக் கோணங்கி வீட்டிற்குப் போயிருந்தோம். நாடோடிக் கால்கள் அப்போது அங்கில்லை. மாடியில் உள்ள அவன் அறைக்குள் புகுந்து விருப்பத்திற்குரிய பல புத்தகங்களை அள்ளிக் கொண்டுவந்தோம். ந.முத்துசாமியின் ‘அன்று பூட்டிய வண்டி’யை அப்படித்தான் நகர்த்தி திருவண்ணாமலைக்குக் கொண்டுவந்தோம். வந்து சேர்ந்த இரண்டுநாள் கழித்து கோணங்கியிடமிருந்து பத்து போஸ்ட் கார்டுகள் ஒருசேர வந்தன.

“இப்புத்தகங்கள் இல்லாத அறை என்னைத் தற்கொலைக்கழைக்கிறது. புத்தகங்கள் மீண்டும் அதனதன் இடத்திற்கு வரவில்லையெனில் நான் உத்திரத்தில் தொங்குவேன்”

நான் அதிர்வடைந்தேன். தன் சேகரிப்பிலிருந்து புத்தகக் குறைவிற்கு உயிரைக் கொடுக்கத் துணியும் ஒரு கலைஞனின் மனம் என்னைத் துன்புறுத்தியது. அப்புத்தகங்களோடு பஸ் ஏறி கோவில்பட்டிக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்த எனக்கொரு தொலைபேசி அழைப்பு கோணங்கியிடமிருந்து வந்தது. ‘பரவாயில்லை மனம் நிதானமடைந்துவிட்டது. அப்புத்தகங்களை நீயே வச்சுக்கோ’

கோணங்கியைத் தற்கொலைக்குத் தூண்டிய அப்புத்தகங்கள் என்னால் வாசிக்கப்படாமலேயே நீண்ட நாட்கள் அறையில் கிடந்தன.

இன்றுவரை புத்தகத் தனியறையிலும், அலமாரி களிலும் ஏனோ மனம் லயிக்கவில்லை எனக்கு. அது சமையறையிலும், படுக்கையறையிலும், வரவேற்பறையிலும், கழிப்பறைகளிலும் கூட இறைந்து கிடப்பதையே விரும்புகிறது.

நான் எழுதத் துவங்கிய காலத்தில் திருவண்ணா மலையில் ஒரு பெரும் செல்வந்தராயிருந்த ஒருவர் வீட்டிற்கு என்னை விருந்திற்கு அழைத்திருந்தார். அவர் வீட்டு ஹாலில் உட்கார்ந்து கவனித்தபோதுதான் அந்த பிரமாண்டத்தைக் கவனித்தேன். அவ்வறை முழுக்கத் தேக்கினால் செய்யப்பட்டு பாலீஷ் செய்யப்பட்ட அலமாரிகள்; பார்க்கும் எவரையும் பொறாமைப்படுத்தும். உள்ளே இரண்டே இரண்டு அளவுகளில் காலிக்கோ பைண்ட் செய்யப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள். ஒரே மாதிரி ஒரே அளவில், ஒரே நிறத்தில் நான் பிரமித்துப் போனேன். மெல்ல எழுந்து அந்த அலமாரியின் கண்ணாடியைத் திறந்து ஒரு புத்தக பைண்டிங்கைக் கையிலெடுத்தேன்.

பத்துவார ஆனந்தவிகடன் சேர்த்து பைண்ட் செய்யப்பட்டிருந்தது. மன அதிர்வு விலகுவதற்கு சிறு அளவிலான இன்னொரு புத்தக பைண்டிங்கைத் திறந்தேன். பத்துவாரக் குமுதம் இதழ்களின் கலவை அது.

அவர் மிகுந்த பெருமிதத்தோடு ஒரு வளரும் எழுத்தாளனான என்னை நெருங்கி, “பாத்தீங்களா தம்பி, எத்தன ஈடுபாடு எனக்கு புத்தகங்களின் மேல்” என்றார். நான் இன்னும் கொஞ்சநேரம் அமைதி காத்திருந்தால் ஒரு நல்ல விருந்து சாப்பாட்டை இழந்திருக்கமாட்டேன்.

எண்கள் இடப்பட்டு, வரிசை பிரிக்கப்பட்டு, அளவெடுக்கப்பட்டு அடுக்கப்படும் புத்தக அலமாரிகளை நான் வெறுக்கிறேன். அவை இறைந்து கிடக்க வேண்டியவை, திருடப்பட வேண்டியவை, உடையவனைத் தற்கொலைக்குத் தூண்டிவிடுபவை. எல்லாவற்றிற்கும் மேல் பறிபோகக் கூடியவை. கால் முளைத்து வீட்டைவிட்டு வெளியேறி இன்னொருவனின் மனக்கதவை ஓங்கித் தட்டி உள்ளே அடைக்கலம் கேட்கக் கூடியவை.

இத்தனை ஆண்டுகளில் புனைவுகளின் மீதே மனம் சாய்ந்திருக்கிறது. வரலாறு, தத்துவம், அரசியல் இவற்றின்மீது அது இடம் மாற மறுக்கிறது. ஒரு படைப்பிலக்கியவாதிக்கு இவற்றின் மீதான அபாரக் களைப்பும், அவதானிப்பும் அவசியமென அறிந்தும் அதை மறுதலித்தே வந்திருக்கிறது.

சென்ற வாரம் சென்னை டிஸ்கவரி புக் பேலஸ்க்கு முதன்முறையாய் போயிருந்தேன். அக்கடையின் ஒழுங்கு பிடித்திருந்தது. அங்கிருந்து வண்ணநிலவன் கதைகளையும், ஜெயமோகன் சிறுகதைகளையும் ஆர்வமாய் வாங்கினேன்.

“இது நம்ப கடையிலேயே இருக்கு பவா” – கூட வந்த நண்பர் சொன்னார். “தெரியும் தோழர். அது அங்கேயே இருக்கட்டும், காசுகொடுத்து பில்போட்டு, கேரிபேக்கில் இருநூறு கிலோமீட்டர் சுமந்து கொண்டுபோய், பயணம் முடிந்து நடு ராத்திரியிலேயே பிரித்து, படிக்கிற சுகம் வேண்டுமெனக்கு” ஷைலஜாவைத் தவிர மற்ற எல்லோரும் விநோதமாகப் பார்த்தார்கள் என்னை.

பவா செல்லதுரை