வாசகர்கள் கருத்து

எழுத்தாளர்களை உருவாக்க எங்கும் பயிற்சி வகுப்போ, பட்டயப் படிப்போ இருப்பதாகத் தெரியவில்லை. (பத்திரிக்கையாளராக, படைப்பாளியாக விஷ§வல் கம்யூனிகேஷன், இதழியல் படிப்புக்கள் இருப்பது வேறு விஷயம்.) வருவாய் போதாத தொழில் என்பதால் எழுத்தாளரைக் குடும்பத்திலும் அங்கீகரிப்பதில்லை. இந்நிலையில் எழுத்தாளராகும் விதம், அதற்கான வாழ்வியல் சூழலை உருவாக்கும் முறை, சக எழுத்தாளர்களோடு பழகும் தன்மையென அஞ்சல் வழி கல்விபோல கற்றுத் தரும் பகுதிகளாக முதல் பிரவேசம், என் சக பயணிகள், புத்தகம் சூழ்ந்த வீடு தொடர்கள் அமைகின்றன.

அ. யாழினிபர்வதம், சென்னை.

புதிய புத்தகம் பேசுது, அக்.13 இதழ் கிடைத்தது. இவ்விதழ் விழிப்புணர்வு கொள்ள வைக்கும் அறிவியல் சிந்தனைகளை உள்ளடக்கி வெளிவந்திருக்கிறது. அறிவியல் படிப்பும் அறிவியல் சிந்தனையும் தலையங்கம் இத்தருணத்தில் மிக அவசியமாகப் படுகிறது. பெரிய படிப்பு படித்தவர்களே இன்று மூட நம்பிக்கையில் மூழ்கி முடமாகிக் கொண்டிருக்கும் அவலத்தை எண்ணாமலிருக்க முடியவில்லை. சிவில் முதுகலைப் பொறியாளர் படையல் போட்ட பிறகே, கட்டிட வேலையையோ, வீடு கட்டுவதையோ தொடங்குகிறார். வாஸ்து பார்த்துத்தான் அறைகளை ஒதுக்குகிறார். சனி மூலை பக்கம் இருக்கக்கூடாது என்று பணம் போட்டு வீடோ கட்டிடமோ கட்டும் சொந்தக்காரரிடம் பணத்தைக் கறக்க முட்டாளாக்கும் நிலை தமிழகத்தில்தான் நடக்கிறது. ஆக்க சக்தியை உருவாக்கும் அறிவு ஜீவி தன்னலத்தை முன் வைத்து, மக்களை மடையனாக்கும் சூழல் உருவாகி வருவது அன்றாடக் காட்சியாகி விட்டது. ஆறாவது அறிவைப் பயன்படுத்து, ஏன்? எதற்கு? எப்படி? என்று கேட்டு தெரிந்து கொள் புரிந்து கொள் என்று சொன்ன தலைவர்கள் அறிவுலக ஜாம்பவான்கள் மீள வந்தாலும் பயன் விளையும் என்று நம்ப முடியாது எல்லாம் தெரிந்தவர்களுக்கு எதுவும் மண்டையில் ஏறாது. அதற்காக வாளாவிருக்கவும் முடியாது. எழுதுங்கள், மாற்ற முடியும் எனும் நம்பிக்கையில்!

நவீன்குமார், நடுவிக்கோட்டை.

மறக்கப்பட்ட வரலாறுகளும் மறுக்கப்பட்ட படைப்பாளர்களும், குறித்து கமலாலயன் எழுதிய கட்டுரை வரலாற்றை அறியத் தூண்டுகிறது.

 ஹிக்ஸ்போஸான் வரை, இயற்பியலின் கதை, 100க்கு 100 அறிவியல், நேனோ தொழில் நுட்பம், நீங்களும் விஞ்ஞானி ஆகவேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா? கணிதத்தின் கதை, விண் வெளிக்கு ஒரு புற வழிச் சாலை என்னும் புத்தகங்கள் மூலம் அறிவியலின் முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளார் ஆயிஷா நடராசன். அறிமுகமே எனினும் ஆவலை உண்டாக்குகின்றன. இதில் கணிதத்தின் கதையை அறிமுகம் செய்த ச.சுப்பாராவ் கணிதத்திற்கும் இலக்கியத்திற்கும் திருமணம் என்பது சுவையானது.

மனித வாழ்வில் அறிவியலைப் புறந்தள்ளி எதுவும் நடப்பதில்லை என நேர்காணல் மூலம் தெரிவித்துள்ளார் சி. இராமலிங்கம்,

சா. கந்தசாமியும் ஆர். பெரியசாமி எழுதிய பிளேட்டோ தத்துவப் பயணம் என்னும் நூலை அறிமுகம் செய்துள்ளார். தன் சமூகத்திற்கு அப்பாலும் சிந்தித்தவர் பிளேட்டோ என்கிறார். பிளேட்டோவின் தத்துவத்தை அறியச் செய்துள்ளார்.

வாங்க அறிவியல் பேசலாம் பகுதியில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் உரையாடலைத் தொகுத்துத் தந்து வாசகர்களுடன் உரையாடியுள்ளார் இரா. நடராசன். ஆத்திக வாதமா? நாத்திக வாதமா? உங்கள் நிலைப் பாடு என்ன? என்னும் கேள்விக்கு ஐன்ஸ்டீன்  நான் ஒரு அறிவியல் வாதி என்பது குறிப்பிடத் தக்கது.

  கடன் கேட்கத் தயங்கினாலும் புத்தகம் கடன் கேட்க நான் தயங்கியதேயில்லை என்று அழகிய பெரியவன் கூறியிருப்பதன் மூலம் புத்தகங்களின் மீதான அவரின் காதலை அறிய முடிகிறது.

நா. விச்வநாதன் மெல்ல பனித் திரையை விலக்கி திருநங்கைகளின் வலியை உணரச் செய்துள்ளார். இலக்கண நூல்கள் அரவாணிகளை அஃறிணையாகவே பாவித்துள்ளது என்கிறார்.

சற்றே இடைவெளிக்குப் பிறகு எழுத்தாளர் ச. தமிழ்ச் செல்வனின் சக பயணியாக கவிஞர் நவ கவியைத் தரிசிக்க முடிந்தது.

 இரா. கதைப்பித்தனின் தவிப்பின் காலம் அருமையாக இருந்தது. முதல் தொகுப்பே ஆகச் சிறந்த படைப்பாளர்களால் வெளியிடப்பட்டதும் பேசப் பட்டதும் மிகச் சிறப்பான அம்சம். கதைப் பித்தனின் கதைக்காகவே பல பித்தர்கள் உருவாகி உள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.

பொன். குமார், சேலம்.

எனது முதல் பிரவேசம் கட்டுரையை பொருத்தமான தலைப்புடன் சிறப்பாகப் பிரசுரித்தற்காக என் இதயங்கனிந்த நன்றியை தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். வழக்கம்போல அறிவியல் சம்பந்தமான கட்டுரைகளைத் தாங்கி வந்திருக்கிற இந்த இதழில் எல்லாக் கட்டுரைகளும் அருமையாக வந்திருக்கின்றன.

இரா.கதைப்பித்தன், இராஜபாளையம்.

அறிவியல் விழிப்புணர்வு சிறப்பாக மலர்ந்திருக்கும் இம்மாத இதழை ஆரவாரத்துடன் வரவேற்க கடமைப்பட்டுள்ளோம். தலையங்கத்தில் குறிப்பிட்டபடி பில்லிசூனியம் முதல் ÔமோடிÕ மஸ்தான் வரை மூட நம்பிக்கைகள் மலிந்துப் போயுள்ள இச்சூழலில் அறிவியல் இதழ்களைப் பற்றி பேசும் புத்தகங்கள் காலத்தின் கட்டாயம்.

மிக முக்கியமான ஐந்து புத்தகங்களைப் பற்றி கமலாலயன் அறிமுகப்படுத்தியது நன்று. வரலாறுகளை அறிந்து கொள்வதில், அதைப் படைத்தவர்களைப் பற்றி தெரிந்து கொள்வதில் நமக்கு ஆர்வமில்லை என்று கட்டுரையாளர் சுட்டிக் காட்டுவதிலுள்ள உண்மை நம்மை நெளியச் செய்கின்றது. ஆனால் பாருங்கள். அரசு இதையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டாமென்று வரலாற்றுப் படிப்புகளை எடுத்து விட்டது. இதற்கு நாமென்ன செய்தோமென்றும் கேட்கத் தோன்றுகிறது.

 காதம்பரியைப் பற்றி கீரனூரார் அட்சரநதியில் தவழவிட்ட கருத்து பேழைகள் அழகாக எங்கள் மனதில் இன்னமும் மிதந்து கொண்டிருக்கிறது. தஞ்சை சுகன் விழாவில் அவரைச்  சந்தித்து அளவளாவியுள்ளேன். மிகவும் அற்புத மனிதரவர். கருத்துலகம் கவனிக்க மறந்த எழுத்து வேந்தர்களில் இவரும் ஒருவர். மிகுவாக விரிந்த கடலின் ஆழம் நமது கண்களுக்குத் தெரிவதில்லை. காதம்பரியாரின் எழுத்தாழம் அப்படியான ஒன்று.

மனிதனுடைய வாழ்க்கையில் அறிவியலைப் புறந்தள்ளி எந்தவொரு நிகழ்வும் நடைபெறுவதில்லை என்ற கருத்தினை தனது நேர்காணலின் வழியாக பதிவு செய்த இராமலிங்கம் அவர்களின் கருத்து அலாதியானது. மனிதனின் உயிராகவும் உடமையாகவுமிருப்பது அறிவியல் சாதனங்களும் அதன் பரிணாம வளர்ச்சிகளும்தான். கொங்குநாடன் சரியான வினாக்களைத் தொடுத்திருந்தார், வாழ்த்துகள்.

சிவகவியென்றால் எம்.கே.டி. நவகவியென்றால் யாரோடி..? என்று வினவுபவர்களுக்கு சரியான அறிமுகத்தைத் தந்துள்ளார் தமிழ்ச்செல்வன். ஆசுகவியைப் போல எதைப் பற்றியும் பாடும் திறன் வாய்ந்தவர் நவகவியென்பது தமிழ் எடுத்துக் காட்டிய வரிகளிருந்து தெளிவாகிறது.

அழகிய பெரியவனின் புத்தகப் பதிவுகள் நன்றாக வந்துள்ளது. திருடி வந்த நூல்கள் என்ற பதம் உண்மையின் நேர்த்தியைப் பறைச் சாற்றியுள்ளது. இரா.கதைப்பித்தனின் முதல்பிரவேசம், பல ஆளுமைகள் அவரது முதல் நூலுக்கு உழைத்த வரலாற்றைச் சொல்லியது. தவிப்பின் காலம் என்று தலைப்பிட்டது கூட ஒரு கதையின் தலைப்பாகத்தான் பரிணமித்தது.

சூர்யநிலா, சேலம் -9