You are here

பேராசிரியர் என்.சுப்ரமண்யன் – தமிழ் அறிவுலகின் ஓர் நட்சத்திரம்

அஞ்சலி

வே.தூயவன்

அறிவுலகம் கொண்டாடியிருக்க வேண்டிய, ஆனால் கொண்டாடப்படாத பேரறிஞர் என். சுப்ரமண்யன் மறைந்துவிட்டார். இன்னும் சில மாதங்கள் கடந்திருந்தால் அவருக்கு நூற்றாண்டு கொண்டாடியிருக்கலாம். ஆனால் அகவை 99 நடந்து கொண்டிக்கும்போதே அக்டோபர் 22ம் தேதி அவர் இந்த உலகை விட்டு நீங்கிவிட்டார். உடுமலைப்பேட்டையில் தனது இளைய மகன் சுந்தரேசன் வீட்டில் 22ம் தேதி காலை 10 மணியளவில் அவர் உறங்கிக் கொண்டிருந்த நிலையிலேயே நிரந்தரத் துயில் கொண்டுவிட்டார்.

கடலூர் நகரில் பலராம் ஐயர் என்ற தமிழறிஞரின் மகனாக 1915ம் ஆண்டு பிறந்தவர் என்.சுப்ரமண்யன்.  வீட்டில், அவர் தந்தை தமிழறிஞர்கள் பலரோடும் உறவாடக் கேட்டு, அவர் எடுத்துவரச் சொல்லும் செம்மொழித் தமிழ் நூல்களை, அலமாரியில் இருந்து எடுத்து வந்து தந்தையிடம் கொடுக்கும் பணி சுப்ரமண்யனுடையது. நன்னூல் சூத்திரம், தொல்காப்பிய உரைகள் என எத்தனை எத்தனையோ தமிழ்ப் புத்தகங்களை எழுதப் படிக்கத் தெரியாவிட்டாலும் சின்னஞ்சிறு சிறுவனான சுப்ரமண்யன், புத்தக அட்டையை அடையாளம் வைத்து சரியான புத்தகத்தை அப்பாவிடம் சேர்ப்பார். தமிழ்த் தாத்தா உ.வே.சா உள்ளிட்ட பெரும் அறிஞர்களுடன் அவரது அப்பா உரையாடக் கேட்டு வளர்ந்தவர் சுப்ரமண்யன்.

 படித்துப் பட்டம் பெற்ற சுப்ரமண்யன் அடுத்து மேல் படிப்புக்குப் போக முடியாத நிலை. தேர்வெழுதி சார் பதிவாளராக பணிக்குச் சேர்ந்தார். பொள்ளாச்சி, ஆத்தூர் உள்பட பல்வேறு ஊர்களில் 10 ஆண்டு காலம் பதிவுத் துறையில் பணியாற்றினார். ஒரு கட்டத்தில் சென்னை ஜெயின் கல்லூரியில் விரிவுரையாளர் பணி கிடைத்தது.  40 வயதை நெருங்கும்போதுதான் புத்தகம் எழுதுவதில் ஈடுபட்டார். ஆனால் பணிஓய்வுக்குப் பின்பும் ஓய்வின்றி எழுதித் தள்ளியவர். 99 வயது வரையும் எழுதிக் கொண்டே இருந்தார்.

வரலாற்றுத் துறைக்கு அவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. சங்க கால வாழ்வியல் மட்டுமின்றி இந்திய வரலாறு குறித்தும் சிறந்த நூலை எழுதியிருக்கிறார். அது தவிர கல்லூரி மலருக்காக சில மணி நேரங்களில் எழுதிய கட்டுரை “இந்து முக்காலி!” அதைப் படித்துப் பார்த்த நீலகண்ட சாஸ்திரி, வேறெதுவும் பேசாமல் அதை வாங்கிச் சென்றுவிட்டார். அப்படியே கல்லூரி மலரில் வந்தது. இக்கட்டுரையை இங்கிலாந்து நாட்டு வரலாற்றாசிரியர் டெர்ரட் என்பவர் படித்துப் பார்த்து அந்த கட்டுரையின் அடிப்படையிலேயே ஒரு சர்வதேச மாநாட்டை இங்கிலாந்து நாட்டு பல்கலைக்கழகம் ஒன்றில் நடத்தியிருக்கிறார். இதில் அமெரிக்கா, கனடா, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பல ஐரோப்பிய, ஆசிய நாடுகளைச் சேர்ந்த அறிஞர்கள் பங்கேற்றிருக்கின்றனர். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்து முக்காலி (பிவீஸீபீu ஜிக்ஷீவீஜீஷீபீ) நூலை, பேராசிரியர் சுப்ரமண்யனின் தமிழாக்கத்திலேயே திராவிடர் கழகம் வெளியிட்டு இன்றும் விற்பனை செய்து வருகின்றனர்.

இந்திய சாதிய சமூக அமைப்பு பற்றிய நுட்பமான பார்வை கொண்டவர் சுப்ரமண்யன். பிறப்பால் பிராமண சாதியைச் சேர்ந்தவராக இருந்தபோதும் இந்திய சமூக அமைப்பை மனரீதியாக ஒப்பாதவர்!  தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் இதுவரை 185 நூல்கள், 170 ஆய்வுக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். அகில இந்திய வானொலி உள்பட பல்வேறு இடங்களில் ஏராளமான சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளார். வரலாற்று ஆய்வு மட்டுமின்றி, சிறுகதை, நாடகம், மரபுக் கவிதை, புதுக்கவிதை, மொழி பெயர்ப்பு, சுயசரிதை என எழுதிக்குவித்த நூல்கள் வடிவில் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

அவர் எழுதிய நூல்களில் சங்ககால வாழ்வியல், இந்து முக்காலி, இந்திய வரலாறு, தாமஸ் கார்லைனின் “பிரெஞ்சு புரட்சி” தமிழாக்கம், விக்டர் ஹ§யூகோவின் லெஸ் மிஸரபில் நாவல் (தியாகம்) பாரதியாரின் சைக்கோ பயாகிராஃபி என்ற ஆங்கில நூல், ஒளவையார், சாக்ரடீஸ் என சிறந்த நூல்களை சொல்லிக் கொண்டே போகலாம். செம்மொழித் தமிழ் மாநாட்டின் போது தீக்கதிர் நாளேடு வெளியிட்ட செம்மொழி மாநாட்டுச் சிறப்பு மலரை கோவையில் வெளியிட்டுச் சிறப்புரை ஆற்றிப் பெருமை சேர்த்தார்.

சுப்ரமண்யன் தமிழ் அறிவுலகின் ஓர் நட்சத்திரம். ஒரு சான்றான்மை மிக்க அறிவுத் தலைமுறை, பேராசிரியர், வித்வான், நயினார் சுப்ரமண்யன் அவர்களது மறைவோடு முற்றுப் பெற்று விட்டது! இவர் ஒரு காலத்தின் குறியீடு!

Related posts

Leave a Comment