You are here

பக்தி இலக்கிய வாசிப்பில் ஒரு முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ள சித்திரம்பேசேல்

தொகுப்பு: நட்ராஜ்

மீனாவின் “சித்திரம் பேசேல்” நூல் சென்ற அக்டோபர் 13 அன்று சென்னை அகநாழிகை புத்தக நிலையத்தில் விமர்சன ஆய்வுக்குட்படுத்தப்பட்டது. இலக்கிய ஆர்வலர்கள் நிறைந்த அக்கூட்டத்தில் விமர்சித்து ஒலித்த குரல்கள் கீழே:

வெளி ரங்கராஜன் : மீனாவின் இப்பிரதி தமிழ் இலக்கிய, பண்பாட்டு அரசியல் வெளிகளில் உருவாக்கப்பட்ட பிம்பங்களை தீவிர மறு பரிசீலனைக்கு உட்படுத்தும் ஒரு நவீன குரலாக வெளிப்பட்டுள்ளது. வ.வே.சு அய்யர் போன்ற நமது இலக்கிய ஆளுமைகளின் வரலாற்றுப் பிழைகளைத் தனிமைப்படுத்திப் பார்க்காமல், அந்த ஓரம்சத்தின் அடிப்படையில் அவர்களின் ஒட்டு மொத்தச் செயற்பாடுகளை எடைபோடும் அளவுகோலின் அபாயங்களை கவனத்திற்குக் கொண்டு வருவது இந்நூலின் அடுத்த சிறப்பு. அழகியல் தனித்து இயங்காமல் நுண் அரசியல் தளங்களுக்குள் ஊடுருவி எதிர்ப்புணர்வைப் பதிவு செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைக்கிறது மீனாவின் எழுத்துக்கள்.

எஸ்.சண்முகம்: இந்நூலிலுள்ள ராதிகா சாந்தவனம் கட்டுரையை முன்வைத்து ஒன்றைக் கூற விரும்புகிறேன். பெண்கள் எழுதக் கூடிய பிரதிகளில் உடல் என்பது பிரதிக்குள் இயங்குகிறதா, வெளியே இயங்குகிறதா என்கிற கேள்வி முக்கியமானது. இதுபோன்ற பக்தி இலக்கியக் கவிதைகளை நாம் அணுகும்போது இவற்றை ஒரு அடையாளக் குறியீடுகளாக வாசிப்பதைத் தவிர்த்து, பிரதிக்கும் உடலுக்கும் இடையே உள்ள வெளியை நாம் காண வேண்டும். மீனாவின் ‘சித்திரம் பேசேல்’ நூலின் மூலம் பக்தி இலக்கிய வாசிப்பில் ஒரு புதிய மாற்றம் நிகழ்ந்துள்ளது.

வாசுதேவன்: இன்றைய அறிவுத்துறைச் செயற்பாடு பல்வேறு சிக்கலான ஆய்வுத் துறைகள் மோதும் களமாக உள்ளது என்பதற்கு இந்நூல் ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இலக்கியம், அரசியல், ஊடகம், பெண்ணியமெனப் பல்வேறு ஆய்வுத் துறைகளையும் உள்ளடக்கியுள்ளன மீனாவின் எழுத்துக்கள். ஆண்டாளிடமும் கூட பாலியல் உணர்வுகள் வெளிப்பட்டபோதும், அது காதல், கணவன் என்கிற ஒழுக்க வரையறைகளைத் தாண்டவில்லை. ஆனால் ராதிகாசாந்தவனத்தின் ராதை ஒழுக்க விதிகளை மீறிய ஒரு வீஸீநீமீstuஷீus உறவை முன்வைத்து பீமீsவீக்ஷீமீ ஐ உன்னதப்படுத்துகிறது என்றால், அதன் ஆசிரியர் முத்துப் பழனி தேவதாசி மரபில் வந்தவர் என்பதால்தான் அது சாத்தியமாகிறது என்பதை நிறுவுகிறார் மீனா,

அ.மார்க்ஸ்: மீனாவின் நூல் முழுவதும் காணக் கிடைப்பது இரண்டு அம்சங்கள். ஒன்று கலாச்சாரம் குறித்த விமர்சனமும் கலாச்சார மீறல்களைக் கொண்டாடுவதும். கலாச்சாரத்தின் வன்முறையால் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்படுபவர்கள் என்கிற வகையில் ஒரு பெண்ணியப் பிரதி வேறெப்படி இருக்க இயலும்? அடுத்த அம்சம், நமது சமூகம் ஒரு பன்மைச் சமூகம், ஆனால் அந்தப் பன்மைப் பண்பைக் குறிவைத்துத் தாக்கும் ஒரு பாசிச அரசியல் தலை எடுக்கும் அபாயம் குறித்த ஒரு கரிசனமும் பதட்டமும் நூல் முழுக்க வெளிப்படுகிறது. மீனாவுக்குக் கைவந்துள்ள மொழி ஆளுமை அவரது இலக்கியக் கட்டுரைகளை மட்டுமின்றி அரசியல் கட்டுரைகளையும் மெருகூட்டுகிறது.

பிரபஞ்சன்: வ.வே.சு அய்யர் குறித்த மீனாவின் வாசிப்பு முக்கியமானது. அவரது அரசியல் அணுகல்முறை ஆயுதப் புரட்சியிலிருந்து 1915 வாக்கில் மாற்றம் அடைகிறது என்பதையும், அதுவரை சாவர்கரின் வழியைப் பின்பற்றியவர், அதன்பின் காந்தியப் பாதைக்குத் திரும்புகிறார் என்பதையும் மிகச் சரியாக நிறுவுகிறார். ஊடகங்கள் குறித்த அவரது கட்டுரைகள் அரசியல் தெளிவுடன் அமைந்துள்ளன. மீனாவின் ராதிகா சாந்தவனத்தின் மொழிபெயர்ப்பைப் படிக்கும்போது, இதுவரை அந்நூல் தமிழில் பெயர்க்கப்படாதது கவலை அளிக்கிறது. யாரேனும் அதைத் தெலுங்கிலிருந்து தமிழில் பெயர்த்தால் அதை வெளியிட நான் ஏற்பாடு செய்கிறேன்.

தமிழச்சி தங்கபாண்டியன்: மீனா வெறும் கருத்துச் சொல்லி அல்ல. அறிவின் துணை, தர்க்கத்தின் உதவி, அறத்தின் பொறி ஆகியவற்றோடு அவர் இந்நூலில் பயணித்துள்ளார். சிறுபான்மையினர் பிரச்சினை, மரண தண்டனை ஆகிய சமகாலப் பிரச்சினைகள் மட்டுமின்றி, தட்டையான பார்வைகள் எப்படி வரலாற்று ஆளுமைகளைச் சிதைத்து விடுகின்றன என்பதையும் அவரது எழுத்துக்கள் வெளிக் கொணர்கின்றன. மீனாவின் பரந்துபட்ட இலக்கிய தளத்தில் ‘கைனோ கிரிடிசிசம்’, ‘மைனாரிடி டிஸ்கோர்ஸ்’, ‘போஸ்ட் கலோனியலிசம்’ முதலான கூறுகளைக் காண முடிகிறது.

அரங்கு நிறைந்த இக்கூட்டத்தை நெறிப்படுத்தினார் கவிஞர் அகநாழிகை பொன் வாசுதேவன். இறுதியாக ஏற்புரை வழங்கிய மீனா, சென்ற நான்காண்டுகளுக்கு முன்பு வரை தான் இதுபோன்ற அவைகளில் முன் வரிசையில் அமரக்கூடத் தயங்குகிற பெண்ணாக இருந்ததை நினைவுகூர்ந்தார், எழுத்துக்களில் கூடியவரை எளிமையோடும் நேர்மையோடும் மனதிற்பட்ட உண்மைகளைப் பேச விரும்புவதாகவும் முன் முடிவுகளைக் கைவிட்டு பன்மைத்துவ விமர்சனப் பாங்கைக் கைக்கொள்ள விரும்புவதாகவும் கூறினார். அம்பை மீதான மீனாவின் விமர்சனத்தை ஏற்க இயலாது எனக் கூறிய ரெங்கராஜனுக்கும், காந்தியின் இந்து மதச் சிந்தனைகளையும் சாவர்க்கர் போன்றோரின் இந்துத்துவச் சிந்தனைகளையும் பிரிக்கும் கோடு மெல்லியதுதான் எனக் கூறிய தமிழச்சியின் விமர்சனத்திற்கும் தனது விளக்கங்களையும் அளித்தார்.

 

Related posts

Leave a Comment