You are here
Rajakumari Veedu நூல் அறிமுகம் 

ராஜகுமாரி வீடு வழியில் இருந்தது – உமா மோகன்

நூலின் பெயர் : ராஜகுமாரி வீடு வழியில் இருந்தது

ஆசிரியர் : உமா மோகன்

பதிப்பகம் :  டிஸ்கவரி பேலஸ்

விலை ரூ.100

உமாமோகன் எனும் தோழமையை அவரது வாழ்வை விட எழுத்துக்கள் வழியே அதிகம் உணர்ந்து வியக்கின்றவர்களில் ஒருவன் நான். அவரது கதைகள் தரும் அதிர்ச்சியும், ஈர்ப்பும் தீர பல நாட்களாகும். கதை சொல்வதில் கல்கி முதல் அம்பை வரை பலரது சாயல்களையும் சாட்டைகளையும் வரலாற்றிலிருந்து தன் ரத்த நாளங்களில் ஏற்றிக் கொண்டு தன் பேனாவின் வழி வெளிவந்துள்ளார். கதைகளே எழுதலாம் தனித்துவம் மின்னுகிறது.

இந்தத் தொகுப்பில் 12 கதைகள் உள்ளன. சிறுகதை என்பது ஒரு சாமர்த்தியமான வடிவம். அதை வசமாக்கி உள்ளார்ந்த செய்திகளை பிசிறு இல்லாமல் தருவது தனி திறமை. ஒரு பயணம்போல புதிய வீதிகளை புதிய ஊர்களை கடக்கும் அதே சமயம் பழையனவற்றை உடைத்தெறியும் உத்தியை உமாமோகன் கற்றுக் கொண்டிருக்கிறார்.

கபடற்ற ஒரு பாதை மாதிரியே தெரிந்தாலும், சட்டென நம்மைத் தூண்டில்போட்டு ஒரே இடத்தில் பிரச்சனையில் சிக்கவைக்கும் சக்தியாக சும்மா ரயில்வே கேட் தாண்டும் நம்மை ராஜகுமாரி வீட்டில் சிக்கி அதிர்வுகளை அனுபவிக்க வைக்கிறார் உமா. வள்ளிக்குட்டி எனும் ஜோதிகாவின் அம்மாவும் கஜி கஜி புடவையும் கவிதை கதை அல்ல. சாயம்போவது புடவைமட்டுமல்ல. நம் சாவுச் சடங்குகளும் மனித அழுக்குகளும் சேர்ந்து தான் என தோன்றும் போது கதை முடிந்துவிடுகிறது.

சக்கர மூக்குத்தி கதையை வாசித்தவன் அதற்குமேல் தாண்டிச் செல்ல முடியாமல் தடைப்பட்டு நெக்குறுகி அந்தக் கதைக்கு உள்ளேயே அகப்பட்டுக் கிடக்கிறேன். மனித நேயம் என்பது பெண் எனும் பிறவி எடுத்து தான் இன்று வளைய வந்து கொண்டிருக்கிறது என்பதைக் காட்ட வேறு வாசிப்பே வேண்டாம்.
இந்தத் தொகுப்பு வானொலி உமாவை கவிஞர் உமாவை பின்னுக்குத் தள்ளி விட்டு அவரை சிறந்த சிறுகதை சிற்பியாய் நம் முன் நிறுத்துகிறது

Related posts

Leave a Comment