You are here

வாசிப்பை வசப்படுத்தும் மாணவனே… வாழ்வு வளமாகும்

வாசிப்பை வசப்படுத்தும் மாணவனே… வாழ்வு வளமாகும்.
இன்று கல்வியின் முகம் மாறி இருக்கிறது. ஆனால் இதை உணர்ந்தவர் சிலரே. இருபத்தோராம் நூற்றாண்டுக்கான கல்வி குறித்து பேசும் யுனெஸ்கோவின் கல்வி ஆவணம். படித்தல், எழுதுதல் மற்றும் கணக்கிடுதல் (Reading, Writing and Arithmetic) எனும் பழைய அடிப்படையை பின்னுக்கு நகர்த்தி, கற்றலின் நோக்கம், அறிந்து கொள்ள கற்றல் (Learing to Do) மாற்றங்களில் நிலை கொள்ள (Learning to Be) மற்றும் ஒன்று கூடி வாழ கற்றல் (Learning to Live together) என்று அறிவித்துள்ளது. படைப்பாக்கம், சுய சிந்தனை, தலைமைப் பண்பு, தகவல் பரிமாற்றம், சுய சார்பு, மாற்று கலாச்சாரங்களை அறிதல் போன்ற பண்புகளை வளர்க்கவே கல்வி என அது கல்வியின் நோக்கங்களை வரையறுக்கிறது. 1996ன் டெலார் கமிட்டி அறிக்கை திறன்களின் (Competencies) அடிப்படையில் 21ம் நூற்றாண்டு கல்வி அணுகப்பட வேண்டும் என பரிந்துரைத்தது.

தனிமனித திறன்கள், சமுகவியல் சார்ந்த திறன்கள், கற்றல் திறன்கள் இவையே இன்றைய உலகளாவிய கல்வியின் அடிப்படைகள். சமீபத்தில் மாற்றம் கண்ட தமிழக பள்ளிப் பாடநூல் குழுவும் இவற்றை கணக்கில் எடுத்துக் கொண்டு அதற்கேற்பவே பாடநூல்களை தயாரித்தன.

இந்த குழந்தைகள் தினத்தில் நாம் இத்தகைய மாற்றங்களை ஏற்று, உணர்ந்து நமது கல்வியின் இறுகிப் போன பழைய முரட்டு முகத்தை கிழித்து விட்டு நேசத்தின் தோழமையின் மலர்ச்சி முகத்தைத் தேடலின் தெவிட்டாத சுகத்தை, அறிதலின் அற்புத அனுபவத்தை விதைக்க புத்தக வாசிப்பை குழந்தைகளின் வாழ்வில் ஒரு அங்கமாக்குவோம். வாசிப்பின் எல்லையற்ற சாகசம் அவர்களைச் சென்றடைய இல்லம் தோறும் அவர்கள் ஒரு நூலகத்தை அமைக்க பாரதி புத்தகாலயம், ‘புக்ஸ்ஸ்பார் சில்ரன்’ மூலம் எடுக்கும் சிறப்பான முயற்சிகளுக்கு கை கொடுப்போம்.

தமிழகம் முழுவதும் சிறார்களுக்கான புத்தகக் காட்சிகளை முன்னின்று தமிழ் நாடு அறிவியல் இயக்கம், தமுஎகச உட்பட பல்வேறு தோழமை அமைப்புகளோடு இணைந்து நடத்தும் முயற்சிகளை வரவேற்போம். திருவண்ணாமலை புத்தகக் கண்காட்சியை மாணவர்கள் பயன்படுத்த ஊக்குவிப்போம். கடலூரில் நடக்கும் நாடறிந்த தேசிய குழந்தை புத்தகத்திருவிழா எனும் அற்புத முயற்சிக்குத் தோள் கொடுப்போம். நமது இலக்கு குறைந்த பட்சம் ஒரு லட்சம் தமிழ் இல்லங்களில் சிறார் நூலகம். அதை அடைந்திட அயராது உழைப்பதில் எழுச்சி கொள்வோம். அனைவருக்கும் புதிய புத்தகம் பேசுது குழந்தைகள் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
– ஆசிரியர் குழு.

Related posts

Leave a Comment