You are here

கல்வியின் நோக்கம் வாசிப்பு! வாசிப்பின் நோக்கம் கல்வி!

மக்கள் கல்வியில் தலையீடு செய்து பெரிய சூன்யத்தை, அழிவை உண்டாக்கி, வெற்று வெறுப்பை, வெறியைத் தூண்டும் விதமாக இரண்டு காரியங்களை இன்றைய ஆட்சியாளர்கள் செய்து வருகிறார்கள். ஒன்று உழைக்கும் மக்களின் பொது வாசிப்பை பேரழிவுக்கு உட்படுத்தும் விதமாக நூலகத் துறையை முடங்கவைப்பது; இரண்டாவது வாட்ஸ்-அப் போன்ற தகவல் தொழில்நுட்ப ஊடக அம்சங்களின் மூலம் துவேஷத்தை விதைக்கும் பொய்த் தகவல்களை வெகு ஜனங்களுக்கு இடையே தூவி பீதியைக் கிளப்பிவிடுதல்.

இவை சமூகத்தை சீர்குலைக்கும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டவை. கருத்துத் திணிப்பு பொதுக் கல்வி அல்ல. கோடி கோடியாக அரசும் ஆட்சியில் இருக்கும் மதவாத கட்சியும் இதற்காக செலவு செய்கின்றன. இந்திய மக்களின் மனதை இருளடையச் செய்து மதக்கலவரங்கள் மூலம் மனிதநேயத்தைக் கொன்றிட இரத்த ஆறுகளை உற்பத்தி செய்ய அவர்கள் அந்தச் செலவை திட்டமிட்டு செய்கிறார்கள்.

ட்விட்டர், இன்ஸ்டோகிராம், வாட்ஸ்-அப், முகநூல் என்று அத்தனை ஊடக வடிவங்களையும் பயன்படுத்தி பொய்த் தகவல்கள் உருவாக்க தனியே பயிற்சி கொடுத்து ஒரு விஷப் படை உருவாக்கப்பட்டுள்ளது.

மதச்சார்பின்மை, மனிதநேயம், உழைக்கும் மக்கள் ஒன்றுபடுதல்… ஒன்று கூடுதல் இவற்றைத் தடுத்து அழிக்கவே முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வரலாற்றின் திரிபுவாதத்தை உருவாக்கி பிரச்சார உத்தி மூலம், இந்த புதிய பேராபத்து இந்தியாவை தற்போது சூழ்ந்துள்ளது. இந்தச் சூழல் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட போலியான சூழல்.
மக்கள் கல்வியை கையெடுப்பதன் மூலமே நாம் இதை உடைத்தெறிய முடியும். அதற்கான சரியான ஆயுதங்கள் புத்தகங்களே. உழைக்கும் மக்கள் அறிவுத்தாகம் கொண்டு இருக்கிறார்கள்.

ஏனெனில் அவர்களது வாழ்வு வளம் பெற அது அவர்களுக்குத் தேவை. எனவே, அறிவைப் பெறுதல் மட்டுமே விடுதலையின் முதல்படி என்பதை உணர்ந்து இருக்கிறார்கள். தேடித்தேடி எதையும் வாசிக்க அவர்கள் துடிக்கிறார்கள். அவர்களிடம் புத்தகங்களைக் கொண்டு சேர்ப்பது நம் பணி. கல்வியை பொதுமையாக்கி, மக்களின் வளமாக மாற்ற அதுவே வழி! மக்களை பொய் – கருத்துத் திணிப்பில் இருந்து மீட்க, பிரச்சார துவேஷத்திடமிருந்து காத்திட.. அறிவாயுதம் ஏற்றுவதே சிறந்த வழி. கல்வியின் தொடர்ச்சி வாசிப்பே ஆகும்.

வாசிப்பின் தொடர்ச்சிதான் நிலையான கல்வி. இந்தியனின் கழுத்தை நெரிக்கும் காவி – பாசிச கார்பரேட் மரணக்கயிறை சிதைத்து நம்மை மீட்கும் சக்தி மக்கள் லட்சக்கணக்கில் வந்து திரளும் புத்தகத் திருவிழாக்களிடம் உள்ளது. அவற்றை சிறப்பாக, செழுமையாக, முழு மூச்சுடன் நம் களமாக அமைத்துக் கொள்தலே மக்கள் கல்வியின் இன்றைய வடிவம். ஊடகப் பொய்களை அழித்தொழிப்போம்… மக்கள் வாசிப்பின் மூலம் வாகை சூடுவோம்.
-ஆசிரியர்குழு

Related posts

Leave a Comment