You are here
Melapalayam நூல் அறிமுகம் 

மேலப்பாளையம்: ஊரின் திருப்பெயரால்… – எஸ்.ஜி.ரமேஷ்பாபு

கிச்சான புகாரி மற்றும் அவரது நண்பர்கள் சாதாரண வழக்கில் கைது செய்யப்பட்டார்கள். அவர்களை சங்கிலியால் பிணைத்து, தெருவில் அழைத்துச்செல்லும் போது இந்து ஆலயங்களுக்கு முன்னால் விழுந்து வணங்கச்சொல்லி அடித்தது காவல்துறை.

“நாகர்கோவில் செல்ல பேருந்துக்காக நின்றிருந்த என்னை பெயர் மற்றும் ஊர் கேட்டதும், அடித்து ஆட்டோவில் ஏற்றி காவல் நிலையம் கொண்டு சென்று “அல் – உம்மா தீவிரவாதியா நீ, துலுக்கப்பயலே, மாட்டுக்கறி தின்னு உங்களுக்கெல்லாம் கொழுப்பு அதிகமாயிடுச்சுடா” என அடித்து நொறுக்கினர்” – அப்துல்லாஹ் (வயது 24)
“சித்தரஞ்சன்னு ஒரு ஆய்வாளர். எங்கள் ஊர் முஸ்லிம் சிறுவர்களை பிடித்து காவல் நிலையம் அழைத்துச்செல்வார். குண்டு கேஸ் போடாம இருக்கனும்னா 10,000 பணம் கொடுங்கன்னு மிரட்டுவார். பணம் இல்லை என்றால் தீவிரவாத வழக்கு போடுவார்” – முத்து வாப்பா.

“வேலைக்கு போக நின்ன என்ன பிடிச்சிகிட்டு போயி ஸ்டேஷ்ன்ல வச்சு, எங்க அப்பாகிட்ட 25000 பணம் கேட்டார். அப்பா சமையல்காரர். கொடுக்க முடியல. தேசிய பாதுகாப்பு சட்டத்துல உள்ள போட்டுட்டாங்க” – ஷா ஆலாம் தங்ஙன் (வயது 19)
“என் அப்பாவி பிள்ளை மேல தொடர்ந்து கேசு போடுறாங்க. வாய்தா, வாய்தான்னு அலைய முடியல. பீடி சுத்தி பொழைக்கிறேன். செலவுக்கு பணம் இல்லை. சொந்த வீடு இருந்தா அது மேல கடன் வாங்கலாம். கச்சாத்த (பீடி கம்பெனி பாஸ் புக்) ரத்து பண்ணியிருக்கேன். (பாஸ் புக்கை ரத்து செய்துவிட்டால், பீடி சுற்றும் போழுது பிடிக்கப்படும் பி.எப் பணம் கிடைக்கும்) அந்த காசதான் நம்பி இருக்கேன்” – ரபீயா பீவி (வயது 64)

“என் 17 வயது பையன தேடி போலீஸ் வந்தது. நான் காலையில் காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரிக்க ஒப்படைத்தேன். ஒரு வாரம் தகவல் இல்லை. பிறகு ரயில் தண்டவாளம் அருகில் வைத்து வெடிகுண்டுகளோட பிடித்ததா பேப்பர்ல செய்தி வந்தது. அதிர்ச்சியில் அவன் வாப்பா இறந்துட்டார். அவங்க அம்மா நோயாளியா கிடக்கா” – ரபீயா பீவி

“நள்ளிரவு 12 மணிக்கு போலீஸ் வந்தாங்க. அப்போ எங்க வாப்பா இறந்து எங்க அம்மா இத்தாவுல இருந்தாங்க (இஸ்லாமிய சட்டப்படி கணவன் இறந்த பின் அடுத்த ஆடவர் கண்களில் படாமல் நான்கு மாதம் வாழவேண்டும் என்பது அவர்களது சடங்கு) அதையும் கேட்காம போலீஸ் வீடு பூந்து அநியாயம் பன்னாங்க” – நூர் முகமது (வயது 22)

“என் பையன திருச்சி மலைக்கு கொண்டுபோயி மரத்தில் தலைகீழா கட்டி தொங்கவிட்டு அடிச்சிருக்காங்க. வாயில் பண்ணை வைத்து 20 கழிகள் உடைய உடைய அடித்து நொறுக்கி வழக்கு போட்டிருக்காங்க. 15 நாள் கழித்துதான் என்ன வழக்கின்னே தெரியும்.” – காஜா மொய்தின்

“என் இரண்டு பிள்ளைகளையும் போலீஸ் அடிச்ச அடியில் பெரியவன் பெயில்ல வந்து ஊரவிட்டே ஓடி போயிட்டான். இதுவரை என்ன ஆனான்னே தெரியல்ல” – மைதின் பாத்திமான் (வயது 48) இன்னும் இப்படியான வாக்கு மூலங்கள் படிப்பவரை கொதிக்க வைக்கின்றன. ஏன் இந்த கொடூரங்கள்? எந்த பின்னணியில் காவல்துறை இப்படி நரவேட்டையாடுகிறது? இஸ்லாமியர்களை மட்டும் குறிவைத்து வேட்டையாட என்ன காரணம்? இவையெல்லாம் எங்கு நடந்தது? ஏன் பொதுவெளி சமூகத்தின் கவனத்தை இவை ஈர்க்க மறுத்தன? நமது ஊடகங்கள் கட்டமைத்த தீவிரவாதம் எனும் பொது மாயை இவற்றை மறைத்தது எப்படி? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பும் ஒரு புத்தகத்தின் சில பக்கங்கள்தான் மேலே கண்டவை. புனைவையும் மிஞ்சும் உண்மை. நெருப்பாய் தகிக்கிறது.

இவையெல்லாம் நடந்தது 1992 வரை வெளி உலகம் அறியாத திருநெல்வேலி அருகில் உள்ள மேலப்பாளையம் என்ற ஊரில்தான். இந்திய நாடு முழுவதும் 1992ல் நிகழ்ந்த பாபர் மசூதி இடிப்புதான் முஸ்லிம்களின் இன அடையாள தேடலையும், இனத்திரட்டலின் தேவையையும் மீண்டும் உருவாக்கியது. இந்துத்துவ அணிதிரட்டலின் தேவையை முன்வைத்து கட்டமைக்கப்பட்ட தீவிரவாதம் என்ற சொல்லாடல், இந்துவாக அடையாளப்படுத்தப்பட்ட கோவை கிருத்துவ காவலர் “அந்தோனி செல்வராஜ்” கொலையை தொடர்ந்த கலவரமும், கோவை குண்டுவெடிப்பின் பின்னணியும் எங்கு இருக்கும் முஸ்லிம்களையும் வேட்டையாடும் உரிமையை காவல்துறைக்கு வழங்கியது பொதுவாக நம்பப்படும் “மதச்சார்பற்ற கவல்துறை” இந்துஅடிப்படைவாத கருத்துகளை எப்படி உட்செறித்து தனது தடிகளால் உமிழ்ந்தது. என்பது கடந்த கால வரலாறுகளை படித்து அறியவேண்டிய தேவை சமகால தேவையாய் எழுந்துள்ளது.

அப்படி காவி வெறியூட்டப்பட்ட காவலர்கள் கோவையிலும், மேலப்பாளையம் உள்ளிட்ட இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதிகளிலும் செய்த அட்டூழியங்களை தொடர்ந்து படித்துவந்தாலும், அப்பகுதியில் வாழும் மக்களின் வரலாற்றோடு படிக்கும் போதுதான் அவர்கள் மீதான நம்பிக்கையும், அவர்கள் கோரிக்கைகளின் நியாயமும் பிடிபடும். அப்படி அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் இது. .
* * * * * *
கி.பி. 1781ல் ஆங்கிலேயரை எதிர்த்த ஹைதர் அலி இரண்டாம் மைசூர் போர் புரிந்த நினைவு போர்கொடி கம்பமும், கல்லறைகளும் இன்றும் அழியாச் சின்னங்களாக இருக்கும், ஆசியாவின் முதல் இரும்பு தொழிற்சாலை நிறுவப்பட்டிருந்த, வங்காள வளைகுடா கடலோரத்தில் அமைந்துள்ள மஹ்மூதுபந்தர் என்னும் போர்டோநோவோ, (புதிய துறைமுக நகரம்) என்றும்,முத்துகிருஷ்ணபுரி என்றும் அறியப்படும் ஊரின் பெயர் பரங்கிப்பேட்டை. முஸ்லிம்கள் அடர்த்தியாக வாழும் இங்குதான் நான் பிறந்தேன். எனது தாயும் தந்தையும் அரசு பணி நிமித்தமாக பிறகு சிதம்பரம் சென்றாலும் எனது பால்யகால நினைவுகளில் பரங்கிப்பேட்டைக்கு ஓர் இடமுண்டு.

ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் பணி நிமித்தமாக இவ்வூரின் குறுக்கும் நெடுக்குமாக பல நூறு முறை நடந்திருக்கிறேன். நூற்றுக்கணக்காக இஸ்லாமிய நண்பர்களை பெற்றிருக்கிறேன். ஆனால் இங்கு வாழும் இஸ்லாமியர்களிடையே உள்ள பிரிவுகள், இங்கு இஸ்லாம் வந்தது தொடர்பாக அவர்களிடையே வழங்கி வரும் நம்பிக்கைகள், அவர்களின் இன்றைய பொருளாதார நிலை, தொழில், பேச்சுமொழி, உடை, கல்வி, பிறப்பு முதல் திருமணம் ஊடாக இறப்பு வரையிலான வாழ்க்கைச் சடங்குகள், பண்டிகைகள், வழிபாட்டு முறைகள், திருவிழாக்கள், பிற சாதியினருடனான உறவு, பெண்களின் நிலை என எனக்கு இவ்வூர் குறித்தும் இங்கு வாழும் இஸ்லாமியர்கள் குறித்தும் எவ்வுளவு தெரியும்?
பே.சாந்தி எழுதிய “மேலப்பாளையம் முஸ்லீம்கள்” என்ற புத்தகத்தை படித்ததும் என்னுள் எழுந்த குற்ற உணர்ச்சியை என்னால் மறைக்க முடியவில்லை.

விதிவிலக்காக இடதுசாரிகள் தவிர இஸ்லாமியர்கள் பிரச்சினையை இஸ்லாமியர்களே பேசிவரும் இச்சூழலில் இந்நூல் ஆசிரியர் தமிழகத்தின் தென்கோடியில் பல்வேறு இன்னல்களுடன் வாழ்ந்துவரும் ஒரு முஸ்லிம் சமூகம் குறித்த இனவரைவியல் ஆய்வை செய்துள்ளதை நிச்சயம் பாராட்டியே ஆகவேண்டும்.
திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றுக்கு மேல் பக்கத்தில் திருநெல்வேலி சந்திப்பிலிருந்து 6 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள மேலப்பாளையம், 200 தெருக்களில் ஒரு லட்சத்திற்கு அதிகமான முஸ்லிம்கள் வாழ்ந்துவரும் பகுதியாகும். இங்கு ஷாபி, ஹனாபி என்ற இரு பிரிவினர் வசித்துவருகின்றனர். வழிபாடுகள் மற்றும் தொழுகைகளில் சில வேறுபாடுகள் இருப்பினும் வாழ்நிலையில் இரு பிரிவினருக்கும் பெரிய வேறுபாடுகள் கிடையாது.

அரபு வணிகர்கள் மூலம் தென்னிந்தியாவின் கடற்கரையை இஸ்லாம் மார்க்கம் எட்டியது. “கோட்டமில்லா மாணிக்க வாசகர் முன் / குதிரை ராவுத்தனாக நின்று”-9 ஆம் நூற்றாண்டில் திருப்பெருந்துறை புராணச் செய்யுள், இஸ்லாமிய வியாபாரத்தின் சாட்சியாக திகழ்கிறது. தர்வேகா, மாயாட்டி, பள்ளி, கட்டை, சப்பாணி முகமது, லெப்பை எனும் ஏழு குடும்பத்தினர் மலபார் கடற்கரையிலிருந்து தரை மார்க்கமாக் வந்தபோது எதிர்ப்பட்ட தாமிரபரணி கரையில் அமைந்த இவ்வூரில் தங்கி வியாபாரத்துடன் மார்க்க பிரச்சாரத்திலும் ஈடுபட்டனர்.

இவர்கள் இங்குள்ள பெண்களையே திருமணம் செய்து கொண்டனர். மூப்பனார், முதலியார் குடும்பத்தை சார்ந்தவர்களே அதிகமாக இம்மதத்தை துவக்கத்தில் தழுவினர். சமணர்கள் மீது சைவ வைணவ தாக்குதலும், கழுவேற்றலும் நடைபெற்ற அக்காலத்தில் நிறைய சமணர்கள் இஸ்லாம் மதத்தைத் தழுவியதாகவும் தகவல் உண்டு.

இவ்வூர் மக்களின் பிரதான தொழிலாக நெசவு இருந்தது. இங்கிருந்து வெளிநாடுகளுக்கு ஒரு சமயத்தில் துணிகளை ஏற்றுமதி செய்து வந்தனர். அதுமட்டுமல்ல வெளிநாடுகளில் ஈட்டிய செல்வத்தால் பெரும் நிலடைமையாளராகவும் இருந்தனர். ஆனால் நில உச்சவரம்பு சட்டத்தின் பின் பலர் நிலங்களை இழந்தனர். விசைத்தறி வருகையாலும், நூல் விலையேற்றத்தாலும் தொழில் மிகவும் நசிந்து போனது. 1965 முதல் 1980 வரை அவர்களது வாழ்க்கை மிகப்பெரிய போராட்டத்தை சந்தித்தது. அதன் பின் கேரளத்திலிருந்து பீடி கம்பெனிகள் மேலப்பாளையத்தினுள் நுழையத்துவங்கின. பீடி சுற்றுதலே தற்போதைய தொழிலாகவும் நிலைபெற்றது. ஒரு நாளைக்கு 40 லட்சம் ரூபாய் வரை புழங்குகிறது.

இவ்வூர் மக்களின் தாய்மொழி தமிழெனினும் சற்று கொச்சை வழக்கானது. அரபு, மலையாளம் கலந்து பேசும் வழக்கமுடையவர்கள். இவர்களின் ஆடையலங்காரம் மலபார் முஸ்லிம் மக்களின் ஆடையை ஒத்திருக்கும், இவ்வூர் பெண்கள் வெளியூர் தாண்டியதில்லை. இவ்வூர் மக்கள் தங்களுக்குள்ளாகவே திருமண பந்தங்களை முடித்துக்கொள்கின்றனர்.இதற்கான காரணமாய் இவ்வூர் கலாச்சாரமும், வாழ்க்கை மற்றும் மொழிச்சூழல் முற்றிலும் மாறுபட்டதாகும்.கல்யாண சந்தையில் ஒரு பெண் எவ்வளவு பீடி சுற்றுவாள் என்பது முக்கிய தகுதியாகிறது ஏனெனில் அவளின் சம்பாத்தியமே பெரும்பாலான குடும்பங்களின் ஆதாரமாக இருக்கிறது
குழந்தை பிறப்பது முதல் மார்க்க கல்வி துவங்கி பெண்கள் பூப்படைவது வரை வாழ்க்கை வட்ட சடங்குகளால் சூழப்பெற்றுள்ளது. திருமணம் மிகப்பெரிய செலவு பிடிக்கும் நிகழ்வாகிறது. விருந்து படைக்க தங்கள் வீட்டை விற்றவர்களும் இங்கு உண்டு. திருமண விருந்துடன் செலவு முடிவதில்லை. மாப்பிள்ளை வீட்டிலிருந்து மஹர் எனும் சீர் கொடுத்து பெண்களை திருமணம் முடிக்கும் முறை பெயரளவே உள்ளது. வரதட்சணை பெரிய பிரச்சினையாக உள்ளது.டீக்கடையில் வேலை செய்யும் மாப்பிள்ளைக்கு இங்கு 75 ஆயிரம் வரதட்சணை கொடுக்க வேண்டும். வெளிநாடு மாப்பிள்ளை எனில் கிராக்கி அதிகமாகும். அத்தோடு முடிவதில்லை விஷயம், நோம்பு சீர், சூல் சீர் என செலவுகள் தொடரும்.

திருக்குர்ஆன் அருளப்பட்ட மாதத்தில் கடைப்பிடிக்கப்படும் ரமலான் நோம்பும், ஈகைத் திருநாளான பக்ரீத்தும், நபிகள் பெருமானின் கந்தூரி எனப்படும் ஊர் கந்தூரியும், தர்கா வழிபாடுகளும், சந்தனக்கூடு உள்ளிட்ட விழாக்களும் இங்கு கொண்டாடப்படுகின்றன. மேலப்பாளையம் முஸ்லிம்கள் பிற சாதியினருடன் இணக்கமான உறவையே கைகொண்டுள்ளனர். இவ்வூரை சுற்றி தேவர், பள்ளர், கோனார், ஆசாரி சாதியினர் வாழ்ந்துவருகின்றனர். இவர்களுடன் உறவு சொல்லியே அழைக்கின்றனர். ஆசாரி இவர்களுக்கு சின்னையா முறை. ஆசாரி முஸ்லிம்களை சின்னையா என்றும், பெண்களை சித்தி எனவும் அழைக்கின்றனர். அதைப்போலவே தேவர், கோனார், நாயுடு, நாயக்கர், ரெட்டியார் போன்றோரை மாமா என்றே அழைக்கின்றனர். காரணம் மதுரை கள்ளழகருக்கும், துலுக்க நாச்சியாருக்குமிடையில் உள்ள உறவை போல ஒருவகை உறவு ஊடாடுகிறது.
* * * * * *
இத்தகைய சமூக, பொருளாதார, கலாச்சர வாழ்க்கைச் சூழலும், பரஸ்பர அன்பும் நிறைந்த ஊரில்தான் தீவிரவாதிகளை உருவாக்க காவல்துறை பல நாடகங்களை நடத்தியது. பீடி சுற்றியும், டீக்கடைகளில் வேலைசெய்தும் தனது வயிற்றுப்பாட்டை ஓட்டிவரும் எளிய மனிதர்கள் மீது அதிகாரம் தனது கொடுங்கரங்களை வீசினால் என்னாகும் என்பதற்கு மேலப்பாளையம் முஸ்லிம் இளைஞர்கள் ஒரு சிறிய உதாரணம். இஸ்லாமிய சமூகத்தையே மீண்டும் மீண்டும் தீவிரவாதிகளாக சித்தரித்து, அந்த பிம்பத்தை கட்டமைத்துவிட்டால் இவர்களுக்காக யாரும் குரல் கொடுக்கமாட்டார்கள் என்ற உண்மையை குஜராத்தில் பரிசோதித்து, அதில் வெற்றியடைந்த காவி பயங்கரவாதிகள் தமிழக மண்ணில் அதை நடத்திப் பார்க்க முன்னோட்டமாகவே மேலப்பாளையங்களை உருவாக்குகின்றனர்.

எதையுமே முழுமையாக ஆராயாமல் உணர்ச்சி மேலிட ஏற்றுக்கொள்ளும் ஒரு சமூகத்தில் இந்து மதவெறியர்கள் வெற்றுப் பொய்களால் உருவாக்கப்படுவதை புரிந்துகொள்ள இத்தகைய புத்தகங்கள் அவசியம். “ஊர், வீடு என்பவையெல்லாம் பாதுகாப்பின் குறியீடுகளாக அமைவதற்கு பதிலாக அவையே ஆபத்தின் ஊற்றுக் கண்ணாக மாறும் கொடுமை முஸ்லிம் மனங்களை எப்படி பாதிக்கப்படும் என்பதை” மிகவும் அக்கரையுடன், தர்க்கபூர்வமாக அ.மார்க்ஸ் எழுதியுள்ள முன்னுரை விளக்குகிறது. “இலக்கியச்சோலை” வெளியிட்டு சிறு வட்டத்திற்குள் உலாவும் இந்த நூலின் பேருண்மையை தமிழ்ச் சமூகம் முழுவதும் கொண்டுசெல்ல வேண்டும்.

Related posts

Leave a Comment