You are here
கட்டுரை 

நதிகள்

மழை பெய்யும்போது தெருவில் நீர் வழிந்தோடுவதைப் பார்த்திருப்பீர்கள். அப்படி நீர் ஓடுவதைப் பார்த்தே, நதி எப்படி உருவாகிறது என்று நீங்கள் அறிந்துகொள்ளலாம். மழை நீர் ஒன்று சேர்ந்து சிறுசிறு ஓடைகளாகிறது. இந்த ஓடைகள் மேலும் சில ஓடைகளுடன் சேர்ந்து ஒரு பெரிய நீரோட்டமாகிறது. இதைப்போலத்தான், மலைகளிலும் குன்றுகளிலும் பெய்யும் மழை நீர், பல சிறு ஓடைகளாக ஓடி, பிறகு ஒன்றாகச் சேர்ந்து ஒரு பெரிய நதியாக உருவாகிறது.

நதிகள் பெரும்பாலும் மலைகளில்தான் உற்பத்தியாகின்றன. சில சமயம் நீர் ஊற்றுகளும் ஆறாக ஓடுவது உண்டு. இமயமலைபோன்ற பகுதிகளில் சூரிய வெப்பத்தால் பனிக்கட்டிகள் உருகி, அந்த நீர் நதியாகப் பாய்கிறது. ஆகவே, பனிக்கட்டிகளும் நதிகளை உருவாக்குகின்றன.
பெரிய நதிகளுடன் வந்து கலக்கும் சிறு ஆறுகளுக்கு ‘உபநதிகள்’ (Tributary) என்று பெயர். பெரிய நதிகளிலிருந்து சில ஆறுகள் கிளையாகப் பிரிந்து செல்வதும் உண்டு. இந்த ஆறுகளைக் ‘கிளைநதிகள்’ (Branch (of a river)) என்கிறோம். ஒரு நதியின் கிளைநதிகளும் உபநதிகளும் பாயும் பரப்புகளை உள்ளடக்கியிருக்கும் நிலப் பகுதி ‘வடிநிலம்’ ((River) Basin; Delta) எனப்படும்.

நதிநீர் வேகமாக ஓடுவதற்கு நிலம் சரிவாக இருக்கவேண்டும். சரிவில் ஓடி வரும்போது நதிநீர், நிலப் பரப்பை அரித்துக்கொண்டே வரும். அரிக்கப்பட்ட பகுதி பள்ளத்தாக்கு எனப்படும். நதிநீர் வேகமாக ஓடும் இடத்தில் பள்ளத்தாக்கு ஆழமாக இருக்கும். நதிநீர் மெதுவாக ஓடும் இடத்தில் பள்ளத்தாக்கு அகலமாக இருக்கும். திடீரென சரிவு அதிகரிக்கும்போது நீர்வீழ்ச்சிகள் உண்டாகும்.

நதிநீர் பெரும்பாலும் கலங்கலாகவே இருக்கும். ஏனெனில் அதில் மண் அதிகமாகக் கலந்திருக்கும். நதிநீர் வேகம் குறைந்து மெதுவாகச் செல்லும்போது, மண் ஆற்றின் அடியில் படிந்துவிடும். இதற்கு ‘வண்டல்மண்’ (Silt) என்று பெயர். இது மிகவும் வளமான மண். வெள்ளம் பெருக்கெடுத்தால் நதிநீர் கரைகளை உடைத்துக்கொண்டு சமவெளிகளில் பாயும். வெள்ளம் வடியும்போது, சமவெளிகளில் வண்டல்மண் படியும். வண்டல்மண் படிந்த பகுதியில் பயிர்கள் செழித்து வளரும் (பெரிய வெள்ளப் பெருக்கு ஏற்படும்போது விவசாய நிலங்களில் உள்ள வளமான மண் ஆற்றோடு அடித்துச் செல்லப்பட்டுவிடுவதும் உண்டு).

நதி, கடலோடு கலக்கும் இடத்துக்கு ‘கழிமுகம்’ அல்லது ‘முகத்துவாரம்’ (Estuary) என்று பெயர். கழிமுகத்தில் வண்டல்மண் படிவதால் ஏற்படும் செழிப்பான பகுதியைக் ‘கழிமுகத் தீவு’ என்பார்கள்.

இந்தியாவில் ஓடும் நதிகளை, ‘இமய நதிகள்’ என்றும் ‘தீபகற்ப நதிகள்’ (Peninsular rivers) என்றும் இரண்டு வகையாகப் பிரிக்கலாம். இமய நதிகள், இமய மலையில் உருவாகின்றன. சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா ஆகியவை இமய நதிகளில் முக்கியமானவை. இவற்றில் மழைக்காலத்தில் மழை நீர் ஓடும். கோடையில் பனிக்கட்டிகள் உருகி இந்த நதிகளில் நீர் ஓடும். ஆண்டு முழுவதும் இவற்றில் நீர் ஓடுவதால் இவற்றை ‘ஜீவநதிகள்’ (Perennial rivers) என்று கூறுகிறார்கள். ஜீவநதிகள் என்றால், என்றும் நீர் வற்றாமல் உயிர்ப்புடன் இருக்கும் நதிகள் என்று அர்த்தம். தீபகற்ப நதிகள் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் (Western Ghats) உருவாகின்றன. கிருஷ்ணா, கோதாவரி, காவிரி, வைகை, தாமிரபரணி முதலியவை தீபகற்ப நதிகளில் முக்கியமானவை.

மிகப் பழைய நாகரிகங்கள் யாவும் நதிக்கரைகளில்தான் வளர்ந்திருக்கின்றன. ஏனெனில், மக்கள் வாழ்க்கைக்குத் தேவையான பல பொருட்களும் நதிக்கரைகளில் சுலபமாகக் கிடைத்தன. முக்கியமாக, நதிநீர் குடிநீராகப் பயன்படுகிறது. நதிநீர் விவசாயத்திற்கு உதவுகிறது. போக்குவரத்துக்கு நதி மிகவும் உதவியாக இருக்கிறது. நதிகளில் மீன்களும் அதிகமாகக் கிடைக்கும். நதிநீரைக் கொண்டு மின்சாரமும் உற்பத்தி செய்கிறார்கள். இவ்வாறு, நதிகள் மக்களுக்குப் பல வழிகளில் பயன்படுகின்றன. உலகத்தின் முக்கியமான பல நகரங்கள் நதிக்கரைகளில்தான் உள்ளன.

வியட்நாமின் ‘ஹானோயி’ நகரம், ‘சிவப்பு நதி’ யின் கரையில் இருக்கிறது (City of ‘Hanoi’ is on the banks of ‘Red river’ in Vietnam).
தாய்லாந்தின் ‘பாங்காக்’ நகரம், ‘சாவோப்ராயா’ நதியின் கரையில் இருக்கிறது (City of ‘Bangkok’ is on the banks of river ‘Chaophraya’ in Thailand).
இராக்கின் ‘பாக்தாத்’ நகரம், ‘டைக்ரிஸ்’ நதியின் கரையில் இருக்கிறது (City of ‘Baghdad’ is on the banks of river ‘Tigris’ in Iraq).
எகிப்தின் ‘அலெக்ஸாண்டிரியா’ நகரம், ‘நைல்’ நதியின் கரையில் இருக்கிறது (City of ‘Alexandria’ is on the banks of river ‘Nile’ in Egypt).
எகிப்தின் ‘கெய்ரோ’ நகரம், ‘நைல்’ நதியின் கரையில் இருக்கிறது (City of ‘Cairo’ is on the banks of river ‘Nile’ in Egypt).
சீனாவின் ‘ஹாங்காங்’ நகரம், ‘பேர்ல்’ நதியின் கரையில் இருக்கிறது (City of ‘HongKong’ is on the banks of river ‘Pearl’ in China).
ரஷ்யாவின் ‘மாஸ்கோ’ நகரம், ‘மோஸ்க்வா’ நதியின் கரையில் இருக்கிறது (City of ‘Moscow’ is on the banks of river ‘Moskva’ in Russia).
சிரியாவின் ‘டமாஸ்கஸ்’ நகரம், ‘பராதா’ நதியின் கரையில் இருக்கிறது (City of ‘Damascus’ is on the banks of river ‘Barada’ in Syria).
இந்தோனேஷியாவின் ‘ஜகார்த்தா’ நகரம், ‘சிலியுங்’ நதியின் கரையில் இருக்கிறது. (City of ‘Jakarta’ is on the banks of river ‘Ci Liwung’ in Indonesia).
இங்கிலாந்தின் ‘லண்டன்’ நகரம், ‘தேம்ஸ்’ நதியின் கரையில் இருக்கிறது (City of ‘London’ is on the banks of river ‘Thames’ in England).
ஸ்பெயினின் ‘மாட்ரிட்’ நகரம், ‘மான்ஸநாரஸ்’ நதியின் கரையில் இருக்கிறது. City of ‘Madrid’ is on the banks of river ‘Manzanares’ in Spain).
அயர்லாந்தின் ‘டப்ளின்’ நகரம், ‘லிஃபே’ நதியின் கரையில் இருக்கிறது (City of ‘Dublin’ is on the banks of river ‘Liffey’ in Ireland).
ஃபிரான்ஸின் ‘பாரீஸ்’ நகரம், ‘ஸீன்’ நதியின் கரையில் இருக்கிறது (City of ‘Paris’ is on the banks of river ‘Seine’ in France).
ஆஸ்திரேலியாவின் ‘மெல்போன்’ நகரம், ‘யாரா’ நதியின் கரையில் இருக்கிறது (City of ‘Melbourne’ is on the banks of river ‘Yarra’ in Australia).
உலகின் மிக உயரமான நீர்வீழ்ச்சி, தெற்கு அமெரிக்க நாடான ‘வெனிசுலா’ (Venezuela) வில் உள்ள ‘ஏஞ்சல்’ (Angel) நீர்வீழ்ச்சியாகும்.

வடகிழக்கு ஆப்பிரிக்காவில் ஓடும் நைல் நதி, ‘தான்சானியா’(Tanzania), ‘உகாண்டா’(Uganda),‘ருவாண்டா’ (Rwanda), ‘புருண்டி’ (Burundi), ‘காங்கோ’ (Congo), ‘கென்யா’(Kenya), ‘எத்தியோப்பியா’(Ethiopia), ‘எரித்திரியா’ (Eritrea), ‘தெற்கு சூடான்’(South Sudan), ‘சூடான்’ (Sudan), ‘எகிப்து’ (Egypt) ஆகிய பதினொரு நாடுகள் வழியாகப் பாய்கிறது. ஆசியாவில் உள்ள நீளமான நதி, சீனாவின் ‘யாங்ட்ஸி’ நதி (Yangtze). இது, உலகில் உள்ள நீளமான நதிகளில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இதன் நீளம், 6300 கிலோமீட்டர். இதற்கு எழுநூறுக்கும் மேற்பட்ட கிளை ஆறுகள் இருக்கின்றன. உலகின் நீளமான நதிகளில் நான்காவது இடத்தில் இருக்கும் நதி, அமெரிக்காவில் உள்ள ‘மிஸ்ஸிஸிப்பி’ நதி (Mississippi). இதற்கு நாற்பத்தி இரண்டு கிளை ஆறுகள் இருக்கின்றன.

உலகத்தில் மொத்தமுள்ள நதிநீரில் ஐந்தில் ஒரு பங்கு, தென் அமெரிக்காவில் ஓடும் ‘அமேசான்’ நதியில் (Amazon) உள்ளது. இந்த நதி, 6448 கிலோமீட்டர் நீளமுள்ளது. இரண்டாயிரத்துக்கும் அதிகமான மீன் இனங்கள் இங்கே இருக்கின்றன. உலகத்திலேயே பெரிய நதி அமேசான் நதிதான் என்று சொல்கிறார்கள். வேறு பலர், நைல் நதிதான் உலகத்திலேயே பெரிய நதி என்று சொல்கிறார்கள். இந்த விஷயத்தில் கருத்து வேறுபாடு உள்ளது. பெரிய நதி என்பதன் மூலம் நாம் எதைக் குறிப்பிடுகிறோம் என்பதுதான் முக்கியமானது.

ஒரு கணக்கெடுப்பின்படி, நைல் நதியின் நீளம் 6670 கிலோமீட்டர். அமேசான் நதியின் நீளம் 6448 கிலோமீட்டர். சில ஆவணங்களில் அமேசான் நதியின் நீளம் 6750 கிலோமீட்டர் என்றும் காணப்படுகிறது. அமேசான் நதி கடலை நெருங்கும்போது அதற்கு ஒரு கிளை நதி உண்டு. இது, ‘பாரா’ (Para River) எனும் மற்றொரு நதியைச் சென்றடையும். இந்த நதி வழியாக, அட்லாண்டிக் கடலை அடையும் தூரத்தைக் கணக்கிடும்போதுதான், அமேசானுக்கு 6750 கிலோமீட்டர் நீளம் வருகிறது. ஆனால் அந்த நதி, அமேசானின் கிளை நதி அல்ல. நீரியலின்படி (Hydrology) அது, ‘டோக்காட்டின்ஸ்’ (Tocantins) பகுதியில் இருக்கிறது. எனவே, அமேசான் நதி அட்லாண்டிக்கை அடைவது, ‘தோ – நார்த்’ (D – North) எனும் கால்வாய் வழியாகத்தான். அந்த வழியில் உள்ள நீளத்தைத்தான், அமேசான் நதியின் சரியான நீளமாகக் கொள்ளவேண்டும். அமேசான், 6448 கிலோமீட்டர் நீளமுடையது என்று சொல்வதற்கு இதுதான் காரணம்.

ஆனால், மிகப் பெரிய நதி எது என்று முடிவு செய்வதற்கு, நாம் நதிகளின் நீளத்தை மட்டும் கணக்கிலெடுப்பது அறிவியல் பூர்வமானது அல்ல. நதி உட்கொள்கிற நீரின் அளவு, நதியின் பரப்பளவு, நதி பயணிக்கும் பகுதியின் நீளம் எனும் அம்சங்களையும் நாம் பரிசீலிக்கவேண்டும். இந்தத் தன்மைகளின்படி ஆராய்ந்து பார்க்கும்போது அமேசான் நதிதான் முதலிடத்தில் இருக்கிறது. சாதாரண நேரங்களில் அமேசான் நதி வழியாக ஒரு வினாடிக்கு 42,00,000 கன மீட்டர் தண்ணீர் செல்கிறது. வெள்ளப் பெருக்கு ஏற்படுகிற சந்தர்ப்பங்களில் இது வினாடிக்கு 70,00,000 கன மீட்டராக அதிகரிக்கிறது. நைல் நதி உட்பட வேறு எந்த நதியிலும் இந்த அளவு நீர்ப்போக்கு ஏற்படுவது கிடையாது. பரப்பளவிலும் அமேசான் நதிதான் முதலிடத்தில் இருக்கிறது. இதன் பரப்பளவு ஏறத்தாழ 27,20,000 சதுர மைலாகும். உலகின் மற்ற எல்லா நதிகளையும்விட இந்த நதிதான் அதிகமான கிளை நதிகளைக் கொண்டிருக்கிறது. இதற்கு 15,000 கிளை நதிகள் உண்டு. நீளத்தைப் பற்றிய விஷயத்தில் விவாதம் இருந்தாலும் உலகத்திலேயே பெரிய நதி அமேசான் நதிதான் என்பதில் சந்தேகம் இல்லை.

நீங்கள் மேட்டூர் அணை, பவானி சாகர் அணை, சாத்தனூர் அணை முதலான பல அணைகளில் ஒன்றையாவது பார்த்திருப்பீர்கள். இந்த அணைகளை எதற்காகக் கட்டியிருக்கிறார்கள் என்று உங்களுக்கு நன்றாகவே தெரியும். இருந்தாலும் மீண்டும் தெரிந்துகொள்ளுங்கள். நதிகளில் சில பருவங்களில்தான் வெள்ளம் பெருக்கெடுத்து வரும். மழையில்லாத காலங்களில் நதிகளில் தண்ணீர் மிகவும் குறைந்துபோகும். வெள்ளம் பெருகி வரும்போது அதை அப்படியே விட்டுவிட்டால் அது கடலில் போய் கலந்துவிடும். அந்த வெள்ளம் விவசாயம் முதலான தேவைகளுக்கு அதிகமாகப் பயன்படாமல்போய்விடும். அந்த வெள்ளத்தைத் தடுத்து ஒரு இடத்திலேயே தேக்கி வைத்துவிட்டால், நதியில் தண்ணீர் குறைகிற காலங்களில், தேக்கி வைத்த நீரைப் பயன்படுத்திக்கொள்ளலாம், அல்லவா? அணைகளால் கிடைக்கும் ஒரு நன்மை இது.
அணைகள் பல வகையில் நமக்குப் பயன்படுகின்றன. நதியிலிருந்து வயல்களுக்குத் தண்ணீர் கொண்டு செல்லும் கால்வாய்கள் சில இடங்களில் நதியின் மட்டத்தைவிட உயரமாக இருக்கும். அப்போது நதியில் தண்ணீர் குறைந்தால், கால்வாய்களில் தண்ணீர் ஏறாது. அப்போது வயல்களுக்குத் தண்ணீர் கிடைக்காது. இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு, நதியின் நீர் மட்டத்தை உயர்த்தி, கால்வாயில் எப்போதும் தண்ணீர் ஓடச் செய்வார்கள். இதற்காகவும் நதியின் குறுக்கே அணை கட்டுவது உண்டு. நகரங்களிலும் கிராமங்களிலும் உள்ள மக்களுக்குக் குடிதண்ணீர் வழங்கவும் நதிகளில் அணைகள் கட்டப்படுகின்றன.

மழைக்காலங்களில் நதிகளில் வெள்ளம் பெருகும்போது சில நதிகளின் கரைகள் உடைந்துபோவதுண்டு. அப்போது கரையோர ஊர்கள் வெள்ளத்தில் மூழ்கிவிடும். நதியின் ஏற்ற இடத்தில் அணை கட்டித் தண்ணீரைத் தேக்கிவிட்டால் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படாது. தேங்கிய தண்ணீர், விவசாயத்துக்குப் பயன்படும்.

நதிகளில் பெரிய வெள்ளம் வரும்போது, தண்ணீரின் வேகம் மிக அதிகமாக இருக்கும். நதிகரையில் உள்ள நிலங்கள் அரிக்கப்பட்டுவிடும். விவசாய நிலங்களில் உள்ள வளமான மண் ஆற்றோடு போய்விடும். அதனால், நிலம் விவசாயத்துக்குப் பயன்படாமல்போய்விடும். இப்படி மண் அரிப்பு ஏற்படுவதைத் தடுப்பதற்காகவும், அணைகள் கட்டித் தண்ணீரின் வேகத்தைக் குறைக்கவேண்டியிருக்கிறது.

அணையின் அடியில் தண்ணீரின் அழுத்தம் மிக அதிகமாக இருக்கும். மதகின் கதவைத் திறந்தால் தண்ணீர் மிகவும் வேகமாக வெளியே பாயும். அந்த சக்தியைப் பயன்படு்த்தி பெரிய சக்கரங்களைச் சுழலவிட்டு மின்சாரம் உற்பத்தி செய்கிறார்கள்.

இப்படிப் பல நோக்கங்களுடன் அணைகள் கட்டுகிறார்கள். அணை கட்டவேண்டிய இடத்தின் அமைப்பு, நதியின் வேகம், அருகில் கிடைக்கும் மூலப் பொருட்கள் ஆகியவற்றை ஆராய்ந்து, அவற்றிற்கு ஏற்றவாறு அணையை அமைப்பார்கள். அணைகளை முக்கியமாக, மண்ணாலும் கல்லாலும் சிமென்டுக் காங்கிரீட்டாலும் கட்டுகிறார்கள்.

உலகில் கட்டப்பட்டுள்ள அணைகளில் மிகவும் உயரமானது, சுவிட்சர்லாந்தில் (Switzerland) உள்ள ‘மௌவாய்சின்’ (Mauvoisin Dam) அணையாகும். அதன் உயரம் 820 அடி.

Related posts

Leave a Comment