You are here

கிளிப்பேச்சு

இருப்புப் பாதையில் கருங்கல் ஜல்லிகள்
இருப்புப் பாதையில் கருங்கல் ஜல்லிகள் நிறைப்பது ஏன் தெரியுமா? இருப்புப் பாதையில் மிகப் பெரும் எடையுள்ள ரயில் வண்டிகள் தொடர்ந்து செல்லும்போது ஏற்படும் அழுத்தங்களைத் தாங்கிக்கொண்டு, இருப்புப் பாதையின் மட்டம் (Level) மாறாமல் இருப்பதற்கு கருங்கல் ஜல்லி உதவுகிறது.
இருப்புப் பாதைகளுக்குக் குறுக்காகப் பிணைத்திருக்கும் கட்டைகளை ஸ்லீப்பர் (Sleeper) கட்டைகள் என்று சொல்வார்கள். இந்த ஸ்லீப்பர் கட்டைகளின் மீது கருங்கல் ஜல்லிகளைத் திணித்துக் கெட்டித்து, இருப்புப் பாதையைச் சீராக அமைப்பது வழக்கம். இந்தச் சம மட்டமான அமைப்பில் மாற்றம் ஏதும் வந்திருக்கிறதா என்று அடிக்கடி பரிசோதிப்பார்கள். தேவைப்பட்டால் தண்டவாளத்தின் அடியில் கூடுதல் ஜல்லிகளைக் கெட்டிக்கவும் வேண்டியிருக்கும். ரயில் வண்டிகள் செல்லும்போது ஏற்படும் குலுங்கல்களையும் அதிர்ச்சிகளையும் அழுத்தங்களையும் தாங்கிக்கொண்டு ரயில் பாதையின் சீரான நிலையைக் காப்பதற்கு கருங்கல் ஜல்லிகளால் முடியும். எனவேதான் இருப்புப் பாதைகளில் இவை பயன்படுத்தப்படுகின்றன.
கருங்கல் ஜல்லிகள் கிடைக்காத இடங்களில் எரிமலைகளிலிருந்து வரும் லாவாவின் (Lava: எரிமலைக் குழம்பு) சிதைவுகளை இந்தத் தேவைக்காகப் பயன்படுத்துவார்கள். இருப்புப் பாதைகளுக்கிடையே இவ்வாறு கெட்டிக்கப்படும் கருங்கல் ஜல்லிகளை ‘பலாஸ்ட்’ (Ballast: நிலைப்படுத்துவது) என்று சொல்வார்கள்.

பாராலிம்பிக்ஸ் (Paralympics)
1948 – ஆம் ஆண்டு. ஜெர்மனியில் பிறந்த சர் லுட்விக் கட்மான் (Sir Ludwig Guttmann) இங்கிலாந்தில் உள்ள ஸ்டோக் மான்டிவில்லி மருத்துவமனையின் (Stoke Mandeville Hospital) நரம்பியல் நிபுணராக இருந்தார். இவர், இரண்டாம் உலகப் போரில் முதுகெலும்பில் அடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்காக ஒரு விளையாட்டுப் போட்டி ஏற்பாடு செய்தார். பிறகு ஒவ்வொரு வருடமும் இந்தப் போட்டி தொடர்ந்து நடந்தது. இந்த விளையாட்டுப் போட்டியைப் பற்றிக் கொஞ்சம் கொஞ்சமாக மற்ற நாடுகளிலும் செய்தி பரவியது. அப்படி அது ஒரு சர்வதேச விளையாட்டுப் போட்டியாக மாறியது. விரைவிலேயே இது மாற்றுத் திறன் படைத்தவர்களுக்கான (உடல் ஊனமுற்றவர்களுக்கான) ஒலிம்பிக் என்று அங்கீகரிக்கப்பட்டது. 1960ல் ரோமில் முதல் போட்டி நடந்தது. பங்கு பெற்ற அனைத்து விளையாட்டு வீரர்களும் மாற்றுத் திறனாளிகள். சிலர் கால்களை இழந்தவர்கள். சிலர் கைகளை இழந்தவர்கள். சில விளையாட்டு வீரர்கள் பார்வையற்றவர்கள் போலியோ நோயின் பாதிப்பால் இடுப்புக்குக் கீழே உடல் உறுப்புகள் இயங்காத நிலையிலிருப்பவர்களும் உண்டு. ‘பாரா’ எனும் கிரேக்க வார்த்தைக்கு ‘சமம்’ (Parallel) என்று பொருள். 1976 முதல் ‘பாராலிம்பிக்ஸ் வின்டர் கேம்’ஸும் வழக்கமாக நடைபெற்று வருகின்றன.
இப்போது மாற்றுத் திறன் படைத்தவர்களை ஆறு விதமாகப் பிரித்து, போட்டிகளில் பங்கேற்கச் செய்கிறார்கள். பாராலிம்பிக்ஸையும் ஒலிம்பிக்ஸைப்போல நான்கு வருடத்துக்கு ஒரு முறைதான் நடத்துகிறார்கள். 1988 முதல், ஒலிம்பிக்ஸ் நடத்துகிற அதே நகரத்திலேயே பாராலிம்பிக்ஸையும் நடத்துகிறார்கள். இன்று, ஒலிம்பிக்கிற்கு அடுத்த இடத்தில் இருக்கும் விளையாட்டுப் போட்டியாக பாராலிம்பிக்ஸ் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. இந்தப் போட்டி 22 விளையாட்டுப் பிரிவுகளில் நடக்கிறது.

மொழி
நாம் பேசிக்கொள்வதற்கு ஒரு மொழி இருக்கிறது. இதுபோன்று பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் மொழி உண்டு. ஆனால் அந்த மொழியில், நம் மொழியில் இருப்பதுபோன்று வார்த்தைகள் இல்லை. பறவைகளில் மிகுந்த மொழி அறிவு பெற்றவை காகங்கள்தான். கருத்துப் பரிமாற்றம் நடத்துவதற்கான முன்னூறுக்கும் அதிகமான வித்தியாசமான ஓசைகளை ஏற்படுத்துவதற்கு காகங்களால் முடியும். ஒவ்வொரு நாட்டுக் காகங்களுக்கும் ஒவ்வொரு மொழி இருக்கிறது. ஒரு நாட்டுக் காகம் மற்றொரு நாட்டுக்குச் சென்றால் மொழி புரியாமல் குழம்பிப்போகும். ஆனால், வெகு தொலைவு பறந்து வேறு நாடுகளுக்குச் செல்லும் பழக்கமுள்ள காகங்கள், பல காக்கை மொழிகளைத் தெரிந்துவைத்திருக்கின்றன.
‘கிராக்கிள்’ (Grackle) என்று ஒரு பறவை இருக்கிறது. இது காக்கையைப்போன்று இருக்கும். இரண்டு ஆண் கிராக்கிள்கள் பார்த்துக்கொண்டால் அவை கண்களை விரைவாக மூடித் திறக்கும். ஒரு சண்டைக்கான ஆயத்தம்தான் இது. சில சமயம் இறக்கையை கீழே தாழ்த்தி, தான் சண்டையிடத் தயாராக இருப்பதை அறிவிக்கும். அணில்கள் ஏதாவது ஆபத்தை உணர்ந்துகொண்டால், உயரமான மரத்தில் ஏறி வாலையும் காதுகளையும் தூக்கிக்கொண்டு உரக்கக் கத்தும். இரண்டு மனிதக் குரங்குகள் சந்தித்துக்கொண்டால், ஒன்றின் கையை இன்னொன்று தொடும். இதுதான் அவை வணக்கம் சொல்லிக்கொள்ளும் முறை.

ஒளியாண்டு
ஒளியாண்டு எனும்போது, அது நேரத்தை அளப்பதற்கான ஓர் அளவு என்று தோன்றும். உண்மையில் அது தூரத்தைக் குறிப்பதற்கானது. சாதாரண தூரத்தை அல்ல, நட்சத்திரங்களுக்கும் கிரகங்களுக்குமிடையிலான மிகமிகமிகவும் தொலைவான தூரத்தை அளப்பதற்கான வழிமுறைதான் இது. எப்படி இந்த ஒளியாண்டை அளக்கிறார்கள்?
பூமியிலிருந்து சந்திரனுக்குள்ள தூரத்தை அளப்பதற்கு விஞ்ஞானிகள் ஒரு முறையைக் கையாள்கிறார்கள். ஒரு நொடியில் ஒளிக் கதிர் பயணிக்கும் தூரம், ஒரு லட்சத்து எண்பத்து ஆறாயிரம் (186,000) மைல் ஆகும்! அப்படியென்றால் ஒளி, ஒரு வருடத்துக்கு எவ்வளவு தூரம் பயணிக்கும்? அந்த மிகப் பெரும் தூரம்தான் ஒரு ஒளியாண்டு (Light year). ஒரு ஒளியாண்டுத் தூரம் என்பது, 94.6 லட்சம் கோடி கிலோமீட்டராகும்.
சூரியனிலிருந்து ஒளி பூமியை வந்தடைவதற்கு 8 நிமிடங்கள் தேவைப்படும். ஆனால், சூரியனுக்கு அப்பால் உள்ள நட்சத்திரத்திலிருந்து ஒளி பூமிக்கு வந்து சேர்வதற்கு நான்கு ஒளியாண்டுகள் தேவைப்படும்! அதாவது அந்த நட்சத்திரம் இப்போது இல்லாமல்போய்விட்டது என்று வைத்துக்கொள்ளுங்கள், ஆயினும் அடுத்த நான்கு வருட காலம் அதை நாம் பார்த்துக்கொண்டிருப்போம்!

ஓசைகள்
பெரிய ஓசைகள் மனிதர்களின் உடல் நலத்தையும் மன நலத்தையும் பெரிதும் பாதிக்கின்றன. ஓசை ஒரு அளவுவரை ஆரோக்கியகரமாகும். குறைந்த அளவுடைய ஓசை, கவனத்தை ஒருமுகப்படுத்துவதற்கும் ஓய்வு எடுப்பதற்கும் வேலை செய்வதற்கும் தடையாக இருக்காது. அமைதியான சூழ்நிலையைவிட தாலாட்டுப் பாடல்தான் குழந்தையைத் தூங்கவைக்க உதவுகிறது. நகரச் சாலைகளிலிருந்து வரும் பேரோசைகள் உடல் நலத்துக்கு ஏற்றதல்ல. வாகனங்களும் சைரன்களும் கட்டடம் கட்டும்போது வரும் ஓசைகளும் ஒலி பெருக்கிச் சப்தங்களும் ஒலி மாசுபாட்டை ஏற்படுத்துகின்றன. நகரத்தில் வசிப்பவர்கள் வழக்கமாக இதுபோன்ற ஓசைகளைக் கேட்டுவருவதால் இது அவர்களுக்குப் பழகிப்போயிருக்கும். ஆயினும் இது மன நலத்துக்கும் உடல் நலத்துக்கும் தீங்கானது.
‘டெசிபல்’(Decibel) எனும் வார்த்தை ஒலியின் அளவைக் குறிக்கிறது. 90 டெசிபலுக்கு அதிகமான ஓசை ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது. 95 டெசிபலுக்கு மேலான ஓசையை வருடக்கணக்காகக் கேட்டுவரும் பட்சத்தில் காதுகள் கேட்கும் திறனை இழந்துவிடும். தொடர்ச்சியான சத்தம் தூக்கத்தைத் தடை செய்கிறது. 130 டெசிபலுக்கு மேலான ஓசை காதுகளுக்கு வலி தருகிறது. மன அமைதியைக் குலைக்கிறது. இதனால்தான் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேற்பட்ட ஓசைகளை ஏற்படுத்தாதவாறு சட்டத்தின் மூலம் தடை செய்திருக்கிறார்கள்.
இலைகள் சலசலக்கும் ஓசை – 10 டெசிபல், ரகசியம் பேசும் குரல் – 20 டெசிபல், மெதுவான உரையாடல் – 40 டெசிபல், கூட்டமான ஒரு கடையில் உள்ள ஓசை – 60 டெசிபல், நகரத் தெருக்களின் ஓசை – 70 டெசிபல், தொழிற்சாலையின் ஓசை – 100 டெசிபல், ஒலிபெருக்கி ஓசை – 110 டெசிபல், விமானத்தின் ஓசை – 120 டெசிபல்.

அமெரிக்கச் சிள்வண்டு
அமெரிக்கச் சிள்வண்டு (American cicada) எனும் வண்டு, முட்டையிலிருந்து வெளிவந்து முழு வளர்ச்சியடைந்து மண்ணுக்கு அடியிலிருந்து வெளியே வருவதற்கு 17 வருடம் ஆகும்!

ஜப்பானிய வணக்கம்
இருவர் சந்தித்துக்கொண்டால் மரியாதையுடன் தலை குனியும் வழக்கம் ஜப்பானில் இருக்கிறது. அதிக மரியாதையைக் காட்டுவதற்கு அதிகமாகத் தலை குனிவார்கள். அப்படிச் செய்யும்போது தலைகள் மோதிக்கொள்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதனால், விருந்தினர்களை வணங்கும்போது நினைவு வைத்திருக்க வேண்டிய விஷயங்களைப் பற்றி ஆரம்ப வகுப்புகளிலேயே சொல்லிக்கொடுக்கிறார்கள்.

துணிச்சல்

அமேசானில் உள்ள சில பழங்குடி மக்கள், வித்தியாசமான வகையில் தங்கள் துணிச்சலை வெளிப்படுத்துகிறார்கள். கடிக்கும் எறும்புகள் நிறைத்த கையுறைகளை அணிந்து நீண்ட நேரம் நிற்பார்கள்!

Butterfly
வண்ணத்துப்பூச்சிக்கு ஆங்கிலத்தில் ‘Butterfly’ என்ற பெயர் எப்படி வந்தது என்பதற்குப் பல கதைகள் இருக்கின்றன. பூதங்கள்தான் வண்ணத்துப்பூச்சிகளாக மாறுவேடமிட்டு வருகின்றன என்றும் அவை வெண்ணெயும் (Butter) பாலும் திருடும் என்றும் பழைய காலத்தில் ஆங்கிலேயர்கள் நம்பிக்கொண்டிருந்தார்களாம். அதனால்தான், வெண்ணெய் திருடும் ‘Fly’ (பூச்சி) ‘Butterfly’ என்று அழைக்கப்பட்டது என்று சிலர் கருதுகிறார்கள். வணணத்துப்பூச்சிகளின் உணவு வெண்ணெய்தான் எனும் நம்பிக்கையும் அந்தக் காலத்தில் இருந்தது. வெண்ணெயின் நிறத்திலிருக்கும் வண்ணத்துப்பூச்சியைப் பார்த்துவிட்டு யாரோ இப்படிப் பெயர் வைத்துவிட்டார்கள் என்றும் சொல்கிறார்கள். இவை எதுவுமல்ல, வண்ணத்துப்பூச்சியின் சிறகுகளிலும் உடலிலும் உள்ள வெண்ணெய் நிறமுடைய பொடிதான் ‘Butterfly’ எனும் பெயர் கிடைப்பதற்குக் காரணம் என்ற வாதமும் உண்டு!

 

Related posts

Leave a Comment